Tamil Arts Volume33 இராஜராஜ சோழனின் சேனாபதி கிருஷ்ணன் இராமன் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
Contents | பஞ்ச வண்ணக் குதிரை | தமிழரின் தொன்மை | Home

சோழர்கள் வரலாற்றில் தந்தையும் மகனும் சோழமன்னர்களுக்குக் கீழ் சிறந்த பதவிகளில் பணியாற்றி பெருமை சேர்த்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர் நராக்கண் மும்முடி சோழ பிரும்ம மாராயன் என்னும் கிருஷ்ணன் ராமன் அவன் மகன் நராக்கண் கொற்றன் அருள்மொழி ஆகிய உத்தமசோழபிரம்ம மாராயன். இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் என்னும் முப்பெரும் மன்னர்களிடமும் பணிபுரிந்தவர் மும்முடி சோழ பிரம்ம மாராயன். மும்முடி சோழ பிரம்ம மாராயன் என்பது இவருக்கு வழங்கிய பட்டப்பெயர். பிரம்ம மாராயன் என்பதால் இவர் அந்தணர் என்பது புலனாகிறது. நராக்கண் என்பது குடிப்பெயர். இக்கிருஷ்ணன் இராமன் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு, வெண்ணாட்டு அமண்குடியாகிய கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்தில் பிறந்தவர். அமண்குடி எனும் ஊர் தற்போது (கும்பகோணத்திற்கருகில்) அம்மங்குடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கி.பி. 1009இல் வெட்டப்பட்ட முதல் இராஜராஜனின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் கிருஷ்ணன், இராமன், தொடர்ந்து இராஜராஜனது கல்வெட்டுக்கள், இராஜேந்திரனது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டு இறுதியாக கி.பி. 1041இல் வெட்டப்பட்ட இராஜாதிராஜனின் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். எனவே, கி.பி. 985 முதல் கி.பி. 1054 வரை ஆட்சிபுரிந்த இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் காலம் வரை மும்முடிச் சோழ பிரம்ம மாராயனின் அரசியல் பணி தொடர்ந்தது என்பதை அறியலாம். தஞ்சை பெருங்கோயிலை தன் பெயரில் எடுத்த இராஜராஜன், இத்திருக்கோயிலின் திருச்சுற்றாலையை தனது சேனாபதி கிருஷ்ணன் இராமனைக் கொண்டு எடுக்கச் செய்தான். இதனை இத்திருச்சுற்றாலைத் தூண்களில் உள்ள கல்வெட்டு ‘‘…. உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் ஸேநாபதி சோழ மண்டலத்து உய்யகொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமண்குடியான் கோளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழப் பிரம மாராயன்’’ என்று கூறுகிறது. இவர் தஞ்சை பெருங்கோயில் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்ததோடல்லாமல் இவரது பிறந்த ஊரான அம்மன்குடியில் ‘‘இராஜராஜேச்சரம்’’ எனும் பெயரில் ஒரு சிறந்த சிவாலயமும் எடுப்பித்தார். இப்பணிகளால் இவர் எந்த அளவுக்கு இராஜராஜனால் மதிக்கப்பட்டார் என்பது நன்கு புலனாகும். கிருஷ்ணன் இராமன் இராஜராஜதேவரின் படைத்தலைவராக சேனாபதி பதவி மட்டுமின்றி, பெருந்தரத்து அதிகாரியான திருமந்திர ஓலை நாயகம் எனும் தலைமைச் செயலர் பதவியையும் வகித்தார் என்பதை கல்வெட்டுகள், செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது. நாகப்பட்டினத்தில் கடாரத்து மன்னன் விஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்ட பெளத்த விகாரைக்கு இராஜராஜன் ஆனைமங்கலம் எனும் ஊர் உள்ளிட்ட 90 வேலி நிலத்தை அறக்கொடையாக நல்கினான். இச்சாசனம் 36 செப்பேடுகளில் கிரந்தம் மற்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதனை ஆனைமங்கலம் செப்பேடுகள் என அழைப்பர். வரலாற்றுச் சிறப்புடைய இச்செப்பேட்டுச் சாசனத்தில் கையொப்பமிட்டவர்களாகக் குறிப்பிடப்படும் பெரும்தரத்து அதிகாரிகளில் கிருஷ்ணன் இராமனும் ஒருவர். இச்செப்பேடு தற்போது ஹாலந்து நாட்டில் லெய்டன் காட்சியகத்திலுள்ளது. உக்கலில் இராஜராஜனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்று கல்வெட்டாகக் காணப்படுகிறது. இராஜராஜசோழன் கி.பி. 1009இல் தஞ்சாவூர் பெரிய செண்டு வாயில் சித்ரகூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி இருந்து திருவாணை ஒன்று போக்கினான். இந்த ஆணையின்படி சோழநாட்டிலும், பிற மண்டலங்களிலும், பிரமதேய மற்றும் வைகானச ஸ்ரமண ஊர்களிலும் நிலம் உடையவர்கள் தன்னுடைய ஆட்சியில் 16ஆம் ஆண்டுக்கும் 23ஆம் ஆண்டுக்கும் இடையில் ஊர் சபை விதித்த வரியையும் (ஊரிடு வாசிப்பாடு) அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியையும் செலுத்தாமல், இரண்டாண்டு நிரம்பி, மூன்றாவது ஆண்டு தொடங்கியிருக்குமானால், ஊர்ச் சபையார் நிலத்துக்கு உரியவனை வெளியேற்றி நிலத்தை ஊர்ச் சபையார் நிலமாக்கி விற்றுக் கொள்ளவும், இந்த உரிமையை இனி வரும் ஆண்டுகளில் பெறவும் உத்தரவு பிறப்பித்தான். இச்சிறப்பினை ‘‘திருவாய் மொழிந்தருளியபடி திருமந்திர ஓலை இராஜகேசரி நல்லூர் கிழவன் எழுத்தினாலும், திருமந்திர ஓலை நாயகன் மும்முடி சோழ பிரம்மராயனும், மும்முடி சோழ போசனும் ஒப்பிட்டு புகுந்த கேழ்விப்படி 24ஆம் ஆண்டு நாள் 143னால் வரியிலிட்டது’’ என்று கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணன் இராமன் எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தார் என்பதை அறிய முடிகிறது. இராஜராஜனின் தமக்கையான குந்தவையார் தாதாபுரத்தில் எடுத்த குந்தவை விண்ணகரம் எனும் திருக்கோயிலுக்கு கிருஷ்ணன் இராமன் நிர்வாகப் பொறுப்பாளனாக இருந்ததைத் தாதாபுரம் கல்வெட்டு கூறுகிறது. திருநாகேஸ்வரம், திருவெண்காடு, திருமழபாடி போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக அவ்வூர் திருக்கோயில்களுக்கு கிருஷ்ணன் இராமன் செய்த அறப்பணிகளை அறிய முடிகிறது. தஞ்சைப் பெருங்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் (உமையொருபாகன்) திருமேனி ஒன்றை செம்பில் செய்வித்தான். இது மூன்று கரங்களைப் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு கரம் மட்டும் உடைய இடப்புறம் உயைமவள் பாகமாக உள்ளதால் இச்செம்புத் திருமேனியில் இப்பகுதி மட்டும் பித்தளை பூசப்பட்டு திகழ்ந்தது. இத்திருமேனி ரத்னன்யாசம் செய்யப்பட்டு பீடத்தில் பதிக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. கிருஷ்ணன் இராமன் அளித்த செப்புத் திருமேனிக்குப் பல அணிகலன்களையும் அளித்தார். 121 முத்துக்கள், ஏழு குரு முத்துக்கள், பளிங்கு வயிரம் பதினொன்றும் இழைக்கப்பட்ட ஸ்ரீமுடி ஒன்று, 10 குறுமுத்து 26 பளிங்கு திருமாலை, வீரப்பட்டம், பாஹீவலையம், திருஉதரபந்தம், முப்பது பொற்பூக்கள், திருக்கைக்காரை திருவடிக்காரை, திருப்பட்டிகை போன்ற எண்ணிலா அணிகலன்களையும் அளித்துள்ள கிருஷ்ணன் இராமனின் கல்வட்டுக்களை நோக்கும்போது இவரது கலை உள்ளம் பற்றி அறிய முடிகிறது. இராஜராஜன் காலத்தில் மும்முடி சோழ பிரம்மராயன் என்றும், இராஜேந்திரன் காலத்தில் இராஜேந்திர சோழ பிரம்மராயன் எனறும் விருதுப் பெயர்கள் சூடிய கிருஷ்ணன் இராமனுக்கு, கிருஷ்ணன் கெளசலை, சரபன் தொண்டவை என்ற இரு மனைவியர் இருந்தனர். இவரது மகனான கொற்றன் அருள்மொழி எனும் உத்தம சோழ பிரம்ம மாராயன் இராஜேந்திர சோழனிடம் அதிகாரியாகப் பணிபுரிந்தான். கிருஷ்ணன் இராமன் பணி ஓய்வு பெற்றதும் ஜீவிதமாக ‘‘செண்ணை நாடு’’ என்ற பகுதியைப் பெற்றார். கி.பி. 1045இல் இவ்வாறு அளிக்கப்பட்ட ஜீவிதிப் பகுதியை முதல் இராஜாதிராஜன் உறுதி செய்தான் என்பதை கர்நாடக மாநில சங்கவரம் கல்வெட்டு கூறுகிறது. இவ்வாறு சோழ அரசியலில் வாழ்வாங்கு வாழ்ந்த கிருஷ்ணன் இராமனின் செப்புத் திருமேனி ஒன்று தற்போது தஞ்சைக் கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
Contents | பஞ்ச வண்ணக் குதிரை | தமிழரின் தொன்மை | Home