'சார்! எனக்குத் தெரிஞ்ச கிராமத்திலே தெய்வக் குதிரை எடுக்கறதுக்கு தயார் செய்துக் கிட்டிருக்காங்க. வர்ரீங்களா?" என்றார் நண்பர் குடவாசல் பாலு. "குதிரை எடுக்கறதா ? சரி போகலாமே" என்றேன். நண்பர் ஒருவர்- காருடன் தானும் வருவதாகக் கூறினார். தஞ்சாவூரிலிருந்து காரில் கிளம்பினோம். மன்னார்குடி சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் சென்றோம். சாலை பெரும்பாலும் பாமணியாற்றங்கரையிலேயே வளைந்து வளைந்து செல்கிறது. செல்லும்போதே வழியில் "சோழபாண்டி" என்றும், "சேரன்குளம்" என்றும் இரண்டு ஊர்கள் வந்தன. இரண்டும் வரலாற்றுத் தொடர்புடைய பெயர்களல்லவா ? இந்த மண்தான் அடிக்கு அடி எப்படி வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றுகிறது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். சார்! ஊர் வந்துவிட்டது என்றார். எதிரில் ஊரின் பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. கண்ணை மலர்த்திப் பார்த்தேன். ஊரின் பெயர் என்ன தெரியுமா? "பெருகவாழ்ந்தான்". எவ்வளவு இனிமையான பெயர். மன்னார்குடியிலிருந்து இவ்வூர் சரியாக 25 கல் தொலைவில் இருக்கிறது. இவ்வூரிலிருந்து கடற்கரை ஊரான முத்துப்பேட்டை 10 கல் தொலைவில் தான் இருக்கிறது. முதலில் குதிரைகளைப் பார்த்துவிட்டு பிறகுதான் மற்றவை என்றேன்.
(பெருகுவாழ்வான் ஊரில் உள்ள மண் குதிரை நிழற்படம் கிடைக்கப்படாமையால் மற்ற ஊர்களில் உள்ள மண் குதிரைகளின் நிழற் படம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.)
எங்கள் கார் நேராக ஒரு குடிசைப் பகுதியிடம் வந்து நின்றது. அந்த இடம் குயவர்கள் வாழும் பகுதி என்று பார்த்த உடனே புரிந்தது. அவ்வூரில் உள்ள ஐயனாரப்பனுக்கு மண்ணால் குதிரை செய்து பெரும் விழா எடுத்து ஒட்டமாக ஊரை வலம் வந்து கோயிலில் குதிரையை கொண்டுவந்து வைப்பதைத்தான் "குதிரை எடுக்கிறது” என்று நண்பர் கூறியிருக்கிறார். அங்கு மண்ணினால் 15 குதிரைகளின் பகுதிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் அவை எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது எழிலாக இருந்தது.
மண் குதிரை
இந்த 'தெய்வக் குதிரை' விழாவையும் குதிரை செய்யும் மரபையும் அறிய முற்பட்டபோது எவ்வளவு செய்திகள் கிடைத்தன! ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடத்துகிறார்கள். பங்குனி மாதம் முதல் திங்கள் கிழமையன்று அய்யனாரப்பனுக்கு 'பூச்சொரிஞ்சுட காப்புக்கட்டி குதிரை செய்ய ஆரம்பிக்கிறார்கள். குதிரை செய்பவர்கள் 'வேளார்ட என்றும், 'மண்ணுடையார்' என்றும் அழைக்கப்படும் குயவர் குடிமக்கல். இங்கு இவற்றைச் செய்யும் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. முத்துக்காரி வேளார், கோவிந்தசாமி வேளார் என்பவர்களே இம்மரபில் வயது முதிர்ந்தவர்கள். கோவிந்தசாமி வேளார் இந்தக் கலையை அழகாக எடுத்துக் கூறி வந்தார்.
இவ்வூரில் மக்கள் ஆறு வகையறாவாக உள்ளனர். வகையறா ஒன்றுக்கு ஒரு குதிரையாக ஆறு குதிரைகள் எடுக்கப்படும். இவை தவிர இவ்வூரையும், ஊரைச் சுற்றியும் சில பெரிய பண்ணைகள் உண்டு. குன்னியூர் பண்ணை, அய்யங்கார் பண்ணை, மடத்துப் பண்ணை என்று உள்ள பண்ணைகளும் ஒவ்வொரு குதிரை எடுக்கின்றனர். தவிர சுற்றியுள்ள கருணாவூர், இடைச்சி மூலை, ஒத்தத் தெரு ஆகிய ஊர்களும் ஊருக்கு ஒன்றாக அய்யனாரப்பனுக்கு 'குதிரை எடுக்கிறார்கள். அந்த அளவுக்கு திருக்காரியப்ப அய்யனார் என்னும் இவ்வய்யன் சக்தியும், பெருமையும் வாய்ந்தது. இந்தக் குதிரைகள் எல்லாம் சின்னக் குதிரைகள். சின்னக் குதிரைகள் என்றால் ஒவ்வொரு குதிரையும் ஆறடி உயரத்துக்கு மேல் இருக்கும். எல்லாவற்றிற்கும் சேர்ந்து பொதுவாக அமைவதுதான் ஒரு பெரிய குதிரை. அது 12 13 அடிக்கு மேலாக இருக்கும். சின்னக் குதிரைகள் செய்ய ஆறு நாள்களாவது ஆகும். பெரிய குதிரையை பத்து நாள்களில் செய்து முடிக்கிறார்கள். பச்சைக் களிமண்ணுடன் கருக்காயும், க..லமும் சேர்த்து கையினாலேயே இந்தக் குதிரையை உருவாக்குகிறார்கள். முழு உருவம் பெற்றவுடன் இவற்றை சூளையில் வைத்துச் சுடுகிறார்கள். அந்தப் பெரிய குதிரையை வைத்துட, சுட தனியாக ஒரு பெரிய சூளை உள்ளது. அக்குதிரையைத் தூக்கி சூளையில் வைக்க சுமார் 50 பேராவது வேண்டும். இரவில் சுட ஆரம்பிக்கிறார்கள். மூன்று, நான்கு மணி நேரத்திற்குள் குதிரை நன்கு சுடப்பட்டுள்ளது என அனுபவ முதிர்ச்சியால் அறிகிறார்கள். மறுநாள் காலையில் குதிரை சூளையிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறது. கழி முதலிய வைத்துக்கட்ட வேண்டும். ஆதலால் கால் பகுதிகளில் மட்டும் களிமண், கத்தாழை நார் முதலியன வைத்துப் பக்குவமாகப் பூசுகிறார்கள்.
"மறுநாள் நாங்க கலர் கொடுப்போம்" என்றார் கோவிந்தசாமி வேளார் 'கலர் கொடுப்பேன்' என்பது இக்காலப் பேச்சு. 'முன் காலத்தில் என்ன சொல்லுவீங்க' என்று கேட்டேன். “வண்ணம் வக்கிறது என்று சொல்லுவோம்" என்றார் வேளார். எவ்வளவு அருமையான சொல் வழக்கு. 'என்ன வண்ணம் வக்கிறீங்க ?' என்று கேட்டேன். இப்பல்லாம் ஆயில் கலர் கொடுக்கிறோம். முன்னெல்லாம் மஞ்சள் காவி, சேப்புக்காவி, பச்சை, பூ நீலம் என அஞ்சு வண்ணம் கொடுப்போம். கருப்பு வண்ணத்துக்குக்குக் கொட்டாங்குச்சியைச் சுட்டு, சாதத்தோடு கலந்து, வெண்ணையா அரைச்சுப் பூசுவோம். பிடிப்பு இருக்கும். முதல்லே குதிரை முழுதுக்கும் சுண்ணாம்பு பூசுவோம். கிளிஞ்சல் சுண்ணாம்புதான். கொஞ்சம் வஜ்ரம் சேத்துப்போம். அப்பத்தான் தொட்ட ஒட்டாது. இப்பல்லாம் ஆயில் கலராயிப் போச்சு" என்றார் கோவிந்தசாமி வேளார். அவர் முகத்தில் ஆண்டாண்டு காலமாகத் தாம் அறிந்த கலையின் அனுபவமும், 'அந்த மரபைத் தான் நான் கேட்கிறேன், இன்றைய மரபையல்ல' என்று உடனே அறிந்துகொள்ளும் புத்தி சாதுர்யமும், பெருமையும் பளிச்சிட்டுப் பிரகாசித்தன. ஏதோ கிராமத்துக்காரரிடம் பேசுகிறோம் என்ற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. ஒரு நல்ல முதிர்ந்த ஆராய்ச்சியாளரிடம் பேசுகிறோம் என்ற எண்ணந்தான் தோன்றியது.
குதிரைக்கு வண்ணம் வைத்தவுடன் திங்கள் கிழமையன்று அந்தத் திருவிழா உச்சக் கட்டத்தையடைகிறது. ஊரே திரளாகத் திரண்டு வந்து, 200க்கும் மேற்பட்டவர்கள் அந்தத் தெய்வக் குதிரையைத் தூக்குகிறார்கள். இரவு நேரம் தான திரிவிழா. தீவட்டி வெளிச்சத்தில் விழா சூடு பெறுகிறது. குதிரைகளின் கழுத்தில் எராளமான மாலைகள், தாரை, தப்பட்டை, மேளம், வாண வேடிக்கைகளோடு குதிரைகள் எழுகின்றன. குதிரைகளைத் தூக்கிவிட்டால் ஒரே ஒட்டமாக அப்பெருகவாழ்ந்தான் ஊரை வலமாக வந்து விடுவார்கள். பண்ணையார்கள் வீட்டெதிரே மட்டும் ஒரு விநாடி நிற்கும். அங்கும் குதிரைக்கு வேஷ்டி, மாலை போட்டுச் சிறப்புச் செய்வார்கள். வேளார் குடிசைப் பகுதியில் மண் குதிரையாக இருந்த அந்தக் குதிரை உயிர் பெற்று எழுந்து துடிப்போடு ஜாம் ஜாமென்று ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே விழாவாக வரும்போது தெய்வத்தன்மையே அந்தக் குதிரை வடிவிலே மக்களின் அன்பு வெள்ளத்திலே அசைந்தாடி வருவதுபோல்தான் இருக்கும். தப்பித் தவறி ஒருவர் கூட அதை மண்குதிரை என்று எண்ணவே மாட்டார்கள். "அய்யனாரப்பா” என்ற ஒலிதான் விண்ணையும் பிளக்கும். அந்தத் தெய்வக் குதிரையின் பின்னே சின்னக் குதிரைகள் வரிசையாக வரும். கடும் போரிலே மாபெரும். வெற்றி கண்டு, வெற்றி விழாவாக தெய்வத்துக்கு எடுத்த விழாவிலே வாகை சூடிய குதிரைகள் எல்லாம் அணிவகுத்துச் செல்வது போன்று கண்கொள்ளாக் காட்சியாக அது திகழும். 'பெருகு வாழ்ந்தான்' ஊரில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் முற்காலங்களில் நடந்த போர்களில் வீரம் விளைத்து வாகை சூடிய கள்ளர் குலப் பெருமக்கள் என்பது குறஇப்பிடத்தக்கது. அந்தத் தெய்வக் குதிரைகளின் வீறுநடை உயிர்த்தெழுந்து உலாவரும் ஒப்பற்ற பெருநடை என்பதில் ஐயமில்லை. ஊரை வலமாக வந்து குதிரைகள் அய்யனாரப்பன் கோயிலுக்கு அருகில் மண்ணடியில் வந்து இறங்குகின்றன.
இவ்விடத்தில் மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்குதான் மின்னடியானை அதாவது சாமியை வரவழைக்கிறார்கள். சாமி வருவது 'பறையர்' குலத்தவர் மீது தான். முற்காலங்களில் சமுதாயத்தில் இன்றியமையாத இடம் பெற்றிருந்தவர்கள் பறையர் குலத்தவர்கள். வீரம் சொறியும் போரேயாயினும், நாடு அல்லது வீட்டின் நலனாயினும், நல்லது அல்ல வாயினும் பறையறைந்து அறிவிப்பவரே பறையர் குலத்தோர். ஆதலின் அவர் மீதே தெய்வம் தோன்றி வருமாம். அக்குலத்தார் ஒருவர் மீது சாமியை வரவழைப்பர். அவர் சாமியாடி, ஒவ்வொரு குதிரையாக வந்து குதிரை சரியாக இருக்கிறதா என்று தட்டிப்பார்ப்பார். அப்பொழுது ஒவ்வொரு குதிரையிலிருந்தும் ஒரு மாலை எடுத்து அவர் கழுத்தில் போடப்படும். இவ்வாறு எல்லாக் குதிரைகளையும் அவர் பார்த்த பின்னர் கண் திறக்கப்படும். இதற்காக ஒரு சேவல் கொண்டுவரப்படும். அச்சேவலின் கால் நகத்தை வெட்டி எடுப்பார்கள். அந்த நகத்தால் அந்த ரத்தத்தில்தோய்த்து வேளார் குதிரைக்குக் கண் எழுதுவார். பிறகு குதிரைகளை மீண்டும் தோளிலே தூக்கிக்கொண்டு அய்யனாரப்பன் கோயிலை அடைகிறார்கள். அய்யனாரப்பனுக்கு சேவகர் ஒருவர் உண்டு. இவ்வூரில் அவர் "சேவகப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். அதுவும் களிமண்ணால் செய்து சுடப்பட்ட தெய்வ உருவம்தான். கடாவெட்டு உண்டு. முன்பு எல்லாம் பல கடாக்கள் வீழ்வதுண்டு. அய்யனாரப்பன் முன்குதிரை வைத்தவுடன், அவருக்கு விசேஷ தீபாரதனைகளும் நைவேத்தியமும் நடைபெறுகிறது. ஊர் ஊர் பஞ்சாயத்தார்களுக்கெல்லாம் 'கரைவழங்குவார்கள்'. 'கரை வழங்குவதென்றால், தேங்காய், வெற்றிலை, சீவல், பிரசாதம்' கொடுக்கிறது என்று விளக்குகிறார் கோவிந்தசாமி வேளார்.
அந்த அய்யனார் கோயிலுக்குப் போனேன். அடேயப்பா! அசந்து போய்விட்டேன். ஆண்டாண்டாக ஊரார் வைத்த குதிரைகள் எல்லாம் நூற்றுக்கணக்கில் அணிவகுத்து நிற்பதுபோல் அங்கு நிற்பதும், அவற்றில் பல மிகப்பெரிய குதிரையாக நிற்பதும் பிரமிக்க வைகக்கும்.
மண்ணிலே உருவம் செய்வதுதானே உலகிலேயே தோன்றிய மிகவும் பழமையான சிற்பக்கலை! இதை 'மண்ணீடு' என்றும் சொல்வோரை “மண்ணீட்டாளர்” என்றுமல்லவா நம் இலக்கியங்கள் கூறுகின்றன! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மண்ணுக்கும் உயிர்கொடுக்கும் மாபெரும் தெய்வக் கலையை இன்றும் நம் கிராமத்தில் காணமுடிகிறதே என்று இறுமாந்து போனேன்.
ஹிந்து மித்திரன் சித்திரை மாதம், 1998