காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழநாட்டில் சிறப்பான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 124-வது தலமாக விளங்குவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாய்மூர் திருத்தலம் ஆகும். இத்தலம் வழிபாட்டுச் சிறப்பனுடனும் வரலாற்றுச் சிறப்புடனும் விளங்குகிறது.
சப்தவிடங்கத்தலம்:
சிவபெருமான் தியாகராஜராக (விடங்கர் சோமஸ்கந்தர் வடிவமாக) ஏழுதிருக்கோயில்களில் சிறப்பாக வழிபடப்பெறுகின்றார். இதனை "சப்தவிடங்கத்தலம்” எனக் கூறுவர்.
“சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு காரார்மறைக்காடு காறாயில் - பேரான ஒத்த திருவாய்மூர்உகந்த திருக்கோளிலி சத்த விடங்கத்தலம்”
இங்கே இறைவன் ஆடிய நடனங்களும் சிறப்பானவை..
திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம்
திருநள்ளாறு - நகவிடங்கர் - உன் மத்த நடனம்
திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம்
திருவாரூர் - வீதிவிடங்கர் - அஜபா நடனம்
நாகப்பட்டினம் சுந்தரவிடங்கர் - பாராவாரதரங்க நடனம்
திருக்காரவாசல் - ஆதிவிடங்கர் - குக்குடநடனம்
திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்ச பாத நடனம்
திருவாய்மூர் திருத்தலத்தில் இறைவன் நீலவிடங்கராக எழுந்தருளி, கமல நடனம் புரிந்து அருள் செய்யும் அற்புத வடிவினைக் கண்டு வணங்கலாம்.
அமைவிடம்:
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் எட்டுக்குடிக்குப் பிரியும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவன் “வாய்மூர் நாதர்” என்றும் அம்மன் “பாலினும் நண்மொழியாள்” என்ற பெயருடன் போற்றி அழைக்கப்படுகின்றனர். இங்குள்ள தீர்த்தம் சூரியதீரத்தம் என அழைக்கப்படுகிறது. பலா மரம் தலமரமாக விளங்குகிறது. இந்தலம் “லீலாஹாஸ்யபுரம்” என்று வடமொழியில் குறிக்கப்படுகிறது.
திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயில் கிழக்கு நோக்கி மூன்று நிலை கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோயில் முன்பாக திருக்குளமும், அதன் கரையில் திருக்குள வினாயகர் சன்னிதியும் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு முன்னர் நந்தியும், கொடிமரமும், விநாயகப் பெருமானுடன் காட்சி தரும் பலி பீடத்தையும் வணங்கி உள்ளே செல்லலாம். திருச்சுற்றில் வினாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னிதி, மகாலட்சுமி சன்னிதிகள் அமைந்துள்ளன.
அஷ்ட (எட்டு) பைரவர் :
கிழக்குத் திருச்சுற்றில் சக்தி வாய்ந்த அஷ்ட பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. அகோர பைரவர், ஆனந்த பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், காலபைரவர், ஈசான பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய எட்டு பைரவ மூர்த்தங்கள் சிறப்பாக வழிபடப் பெறுகிறது. சித்திரை மாதம் முதலாம் வெள்ளிக்கிழமையில் பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெறுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் பைரவர்க்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் வில்வத்தாலும், மலர்களாலும் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கி வளம் பெருகும். தடைப்பட்ட திருமணம் கை கூடுகிறது. சனிக்கிழமைகளில் பைரவர் பூஜை செய்தால் இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்கும். ஆகவே இச்சன்னிதியில் பக்தர்களால் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
அஷ்ட (எட்டு) பைரவர்
இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இறைவனை வான்மீகி சித்தர் வழிபட்ட சிறப்பும் கூறப்படுகிறது.
மூலவர் திருவாய்மூர் சன்னிதியின் தென்புறம் தியாகராஜர் சன்னிதியும், வடபுறம் திருமறைக்காடர் சன்னிதியும், அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன.
சூரிய பூஜை :
இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய பகவான் நீராடி வழிபட்டதால் சூரிய தீர்த்தம் எனப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 12, 13 -ஆம் நாட்களில் சூரிய பகவான்
இறைவனையும் இறைவியையும் தனது கதிர் ஒளியினால் வழிபடும் சூரிய பூஜை இத்திருக் கோயிலில் நடைபெறுகிறது.
அப்பர்பெருமானும் ஞானசம்பந்தரும் இறைவனின் ஆடலைப் போற்றியது:
திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் இறைவனையும், இறைவியையும் போற்றிப்பாடி அருள் பெற்ற சிறப்புடன் இத்தலம் விளங்குகிறது. திருமறைக் காட்டில் (வேதாரண்பம்) திருநாவுக்கரசர் பதினோரு திருப்பாடல்கள் கொண்டு திருப்பதிகம் அருளிச் செய்யத் திருக்கதவும் திறந்தது.
திருஞான சம்பந்தர் முதல் திருப்பாட்டு அருளிச்செய்த உடனே திருக்கதவு மூடிக் கொண்டது. இதனால் மனம் வருந்தியவராய் திருநாவுக்கரசு சுவாமிகள், நித்திரை கொள்ளும் போது இறைவன் அவரிடம் திருவாய்மூரில் இருப்போம்! தொடர்ந்து வா! என அருளினார். அப்பொழுது,
“எங்கே என்னை இருந்து இடம் தேடிக் கொண்டுஅங்கே வந்து அடையாளம் அருளினார்தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்அங்கே வா என்று போனார் அது என்கொலோ” (5-ஆம் திருமுறை)
என்று துவங்கி,
“திறக்கப் பாடிய எண்ணினும் செந்தமிழ்உறைப்புப் பாடி அடைப்பித்தாருங்நின்றார்மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்பிறைக் கொள் செஞ்சடையார் இவர் பித்தரே”திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே”
என இறைவன் கருணையைப் போற்றினார்.
திருஞான சம்பந்தர் பெருமானும் அங்கே வருகின்றார். இருவரும் காண இறைவன் நடனமாடுகிறார். இதனைக் கண்ட நாவுக்கரசர் பெருமான் மகிழ்ந்து போற்றுகின்றார்.
பாட அடியார் பரவக் கண்டேன்பத்தர் கணங் கண்டேன் மொய்த்த் பூதம்ஆடல் முழவம் அதிரக் கண்டேன்அங்கை அனல் கண்டேன் கங்கையாளைக்கோடலரவார் சடையிற் கண்டேன்கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன்வாடல் தலையொன்று கையிற் கண்டேன்வாய்மூரடிகளை நான் கண்டவாறே. - 6 ஆம் திருமுறை
அம்பிகையுடன் இருந்து ஈசன் ஆடிய நடனக் காட்சியை காணப்பெற்ற திருஞான சம்பந்தர் பெருமானும் தமது பாடலில் போற்றுகின்றார்.
“தளிர் இளவளர் என உமை பாடத்தாளம் மிடவோர் தடில் வீசிக்கிளர் இள மணியர வரை யார்த்துஆடும் வேடக்கிறிமையார்விளர் இள முலையவர்க்கு அருள் நல்கிவெண்ணிறு அணிந்தோர் சென்னியின்மேல்வளர் இள மதியமொடு இவராணீர்வாய் மூர் அடிகள் வருவாரே.
மேலும் தமது பாடலில் இறைவனது ஆடலைப் போற்றி
“கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக்கண்ணியர் வீணையர் தாமும் அஃதேஎட்டுணை சாந்தமொடு உமை துணையாஇறைவனார் உறைவதொர் இடம் வினவில்பட்டிணை யகல் அல்குல் விரிகுழலார்பாவையர் பலி யெதிர் கொணர்ந்து பெய்யவட்டணை ஆடலொடு இவராணீர்வாய்மூர் அடிகள் வருவாரே” (- 2-ம் திருமுறை - 1208)
வட்டணை:
“வட்டணை” என்ற சொல் நடனத்தின் ஓர் அங்கம் என்பதை திருமுறை - திருப்பதிகப் பாடல்களின் மூலம் அறிகிறோம். திருவாலங்காடு காரைக்கால் அம்மையார் தமது மூத்தத் திருப்பதிகத்திலும், ஞானசம்பந்தர் பெருமானின் சீர்காழி திருப்பதிகத்திலும் இறைவனின் நடனத்தைப்பற்றி கூறும்பொழுது “வட்டணை” என்ற குறிப்பு காணப்படுகிறது.
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்சூழ்ந்து துணங்கையிட்டு ஒடி ஆடித்தழலுள் எரியும் தின்றணங்கு ஆடுகாட்டிற்காலுயா வட்டணை இட்டு நட்டம்அழல் உமிழ்ந்து ஒரிகதிக்க ஆடும்அப்பன் இடம் ஆலங்காடே.- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 2 (பாடல் 7)கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே
- மூன்றாம் திருமுறை - பாடல் : 806
திருவாய்மூர்:
நடனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் வட்டணை திருவாய்மூர் திருக்கோயில் கல்வெட்டுகளில் “வட்டணை” என்ற சொல் திருவாய்மூர் கோயில் கல்வெட்டுகள் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.
வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர்
காவிரியின் தென்கரைத் தலங்களில் 127-ல், திருவலம்புரம் 44-வது தலமாக விளங்குகிறது. குவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. மேலப்பெரும்பள்ளம் எனவும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோலிலில் எழுந்தருளிய இறைவனது வடிவத்தை - பிட்சாடனர் கோலத்துடன் காட்சி அளித்த இறைவனை அப்பர் பெருமான் தனது திருப்பதிகத்தில் "தெறித்ததொரு வீணையராய் செல்வார்” என்றும் “வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்பரமே புக்கங்னே மன்னனாரே” எனப் போற்றுகின்றார். அப்பர் பெருமானின் திருப்பதிகங்களை அடிப்படையாக வைத்து வடிக்கப்பட்ட பிட்சாடனர் திருமேனி இரண்டாம் ராஜாதிராஜ சோழனது 8-வது ஆட்சி ஆண்டில் (1163-1178) கல்வெட்டில் “வட்டணைகள் படர்ந்த நாயனார்” என்று இத்திருமேனி குறிக்கப்படுகிறது. பிட்சாடனர் வீணையை கையில் ஏந்தி நடந்து வரும் கோலம் மிகவும் எழிலாக நடன கோலத்தில் காட்சி அளிக்கிறது.
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்காலினாற் காய்ந்துகந்த காபா லியார்முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்திமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வெளவமறித்தொருகால் நோக்காதே மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. - அப்பர் 6.586பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவஇட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவிவிட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கிவேறோர் பதிபுகப் போவார் போலவட்டணைகள் படநடந்து மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. - அப்பர் 6.587
இக்கோயிலில் 35 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218), மூன்றாம் இராஜராஜ சோழன் (1216-1256) காலத்தைச் சேர்ந்தவையாகும்.
திருவாய்மூர் கல்வெட்டுதிருவாய்மூர் கல்வெட்டுதிருவாய்மூர் கல்வெட்டு
திருவாய்மூர் இராசேந்திரவளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்து திருவாய்முடையார் கோயில் என இக்கல்வெட்டுகளில் கோயில் அமைந்த பகுதி குறிப்பிடப்படுகிறது.
கோட்டூரைச் சேர்ந்த செம்பொற் ஜோதி வட்டணை ஆடல் உடையான் என்பவன் இக்கோயிலில் பலிபீடத்தில் அழகிய விநாயகர் பிள்ளையாரை நடனமாடும் கோலத்தில் (வட்டணை அமைதியில் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது) எழுந்தருளுவித்து அதன் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்தி மூன்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இக்கோயிலை "வட்டணை ஆடலுடையார் கோயில் திருவாய்மூருடையார்” என்றே கல்வெட்டு பெயரிட்டு அழைக்கிறது. மேலும் கொடை அளித்தவர் தனது பெயரிலும் “வட்டணை ஆடல் உடையான்” குறிப்பிட்டிருப்பதும் சிறப்பாக விளங்குகிறது.
சிற்றாமூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்த தேவன் திருவையாறு உடையான், அரையன் கம்பிக்காதன் பவடிக்குன்றன், வீரராஜேந்திர பல்லவரையன் ஆகியோர் இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த “வட்டணை ஆடல் உடையார்க்கு” சித்திரைத் திருநாளிலும், புரட்டாசித் திருநாளின் போதும் திரு நீராட்டு, குங்குமம், பன்னீர், செங்கழுநீரத் திருப்பள்ளித்தாமம் (மலர்மாலை) அமுதுபடி ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக தானம் அளித்த செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
மேலும் *"வட்டணை ஆடல்உடையார்” மார்கழித் திருவாதிரை அன்று சிறப்பான வழிபாட்டிற்கும், வீதிஉலா வருவதற்கும் தானம் அளித்த செய்தி கூறப்படுகிறது. வட்டணை ஆடல் உடையார் திருமேனி ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானின் திருமேனியாக இருக்கவேண்டும். மூன்றாம் இராஜராஜ சோழனது கல்வெட்டுகளில் தான் வட்டணை என்ற சொல் இடம் பெற்று விளங்குகிறது.
திருவாய்மூருடைய நாயனார் திருவிழா எடுக்தருளும் பொழுது வீதியின் அகலம் குறைவாக உள்ளதைக் கண்டு அதன் அகலத்தை பெரிதாக்க இடப்பட்ட அரசனின் ஆணை மற்றும் அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்பு ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. கோயிலுக்காக "நாற்பத்தெண்ணாயிரவன் திருநந்தவனம்” என்ற பெயருடைய நந்தவனம் அமைக்க நிலமும், குளமும் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு செங்கழுநீர் மலர் மாலை அணிவிக்க நிலம் அளிக்கப்பட்டதாக மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூற்கிறது.
திருமுறைகள் பாட திருக்கைக் கொட்டி மண்டபம் இருந்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கோயிலில் ஞானசம்பந்த பெருமானுக்கு வழிபாடு மேற்கொள்ள தானமாக நிலம் அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் ஞானசம்பந்தர் - “திருஞானம் பெற்ற பிள்ளை” எனக் குறிக்கப்படுவது சிறப்பாகும். தானமாக பெற்றுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பவர் கோயில் மாகேசுவர கண்காணி - இவர் பெயரும் எனக் கல்வெட்டு கூறுகிறது.
இப்பகுதியில் வழக்கில் இருந்த காசின் பெயர் “திருவாய்மூர்வராகன்” என அழைக்கப்பட்டது. தனது தாய் - தங்தை நன்மைக்காக இறைவன் - இறைவி சன்னிதியில் விளக்கு எரிக்க சீர்த்தங்குடையான் வேளான் பட்டன் என்பவன் 50 காசுகள் தானமளித்த செய்தி காணப்படுகிறது.
பாசை என்ற ஊரைச் சேர்ந்த வணிகன் திருநாகீசுவரமுடையான் மற்றும் அவனது மனைவி சிவன் பெருந்தேவியும் 600 காசுகள் கோயிலுக்கு அளிக்கின்றனர். அதன் வட்டியைக் கொண்டு கோயிலில் நெய் தீபம் ஏற்ற பித்தளை குத்து விளக்கு அளிக்கப் பெற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. விளக்கு பற்றி குறிக்கும்பொழுது இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளை குத்து விளக்கு என்று அது செய்யப்பட்ட முறை பற்றியும் உலோகம் என்ன என்பதையும் குறிப்பிடுகிறது.
இக்கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிர் திருவாய்மூர் மாணிக்கம், பூ நங்கை என்பவர்களும் கோயில் வழிபாட்டிற்காக நிலம் அளித்துள்ளனர்.
கோயில் நிலங்கள் யார் யார் பொறுப்பில் இருந்தன என்பதை விரிவாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கோயில் கல்வெட்டினை பொறித்த தச்சன் “உடைய நாயக ஆசாரியன்” என்பதனையும் அறியமுடிகிறது.
திருவாய்மூர் திருக்கோயில் வழிபாட்டிலும் சிறந்து விளங்குகிறது. சப்த விடங்க தலங்களில் ஒன்றாகவும், அஷ்ட (எட்டு) பைரவர் வழிபாடும், சூரிய பூஜை நடைபெறுவதும், இக்கோயில் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குவதை எடுத்துக் காட்டுகிறது.
திருவாய்மூர் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வழியே கோயிலுக்கு அளிக்கப்பெற்ற திருமேனிகள் அதன் பெயர், அதன் அமைப்பு எவ்வாறு இருந்தது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள், நடைபெற்ற திருவிழாக்கள், பற்றி அறிந்து கொள்கிறோம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாய்மூர் திருக்கோயிலை
“திங்களொடு அருவரைப்பொழிற் சோலைத்தேனலங் கானாந் திருவாய்மூர்அங்கமொரு அருமறை யொலிபாடல்அழல் நிறவண்ணர் தம் அடி பரவிநங்கள் தம் வினை கெட மொழியவல்லஞானசம்பந்தன் தமிழ்மாலைதங்கிய மனத்தினால் கொழுதைழுவார்தமர் நெறி யுலகுக்கோர் தவநெறியே” - (2-ஆம் திருமுறை)
திருஞானசம்மந்தர் பெருமான் வாக்கால் போற்றி வழிபட்டு நலமடைவோம்!
உதவிய நூல்கள் :
திருவாய்மூர் திருக்கோயில் வரலாறு - திருக்கோயில் வெளியீடு
நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு -
2007. (பதிப்பாசிரியர்கள் : முனைவர் நா.மார்க்கசீய காந்தி - முனைவர் சு.இராசகோபால்)
வட்டணைபட நடந்த நாயகர் - இரா.நாகசாமி, கல்வெட்டு இதழ் -1 - 1974
வரலாற்றில் பரதநாட்டியம் - இரா. நாகசாமி
கவின்மிகு சோழர்கலைகள் - இரா.நாகசாமி - 2011 - பக்கம் 29-30, 158-161.