Tamil Arts Volume 33
௳
கடவுள் துணை.
பனைமரசோபனம்.
வே. ஜெயவேலு முதலியாரால்
சென்னை சூளை
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
சோபனமடி சோபனமே சிவசோபனத் தமிப்பாட
அச்சோடி பெண்களா சோபனமே அம்மாடி பெண்களா சோபனமே
பனைமரமே பனைமரமே யேன்வளர்ந்தாய் பனைமரமே
நான்வளர்ந்த காரியத்தை நாட்டாரே சொல்லுகிறேன்கேள்
அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே
தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே
பராமரியா யிருக்காமல் பட்சமுடன் கேட்டிருப்பேன்
படுக்கப்பாய் நானாவேன் பாய்முடைய தோப்பாவேன்
வெட்ட நல்ல விறகாவேன் வீடுகட்ட வாரையாவேன்
பட்டுப்போற பயிர்களுக்கு பலத்தநல்ல யேத்தமாவேன்
அட்டடுக்கு பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்
கட்டநல்ல கயிறாவேன் கன்றுகட்ட தும்பாவேன்
மட்டமுள்ள வுரியாவேன் மாடுகட்ட தும்பாவேன்
பசுவணைக்கு கையிராவேன் பால்தயிருக் குரியாவேன்
வாரவட்டை நானாவேன் வலச்சல்களுந் தானாவேன்
தொட்டிலுக்கு கயிராவேன் துள்ளியாட வுஞ்சலாவேன்
கிணத்து ஜலமொண்டுவரக் கைதாம்புக் கயிராவேன்
பலத்தசுமை பாண்டங்கட்குப் பிருமனையுந் தானாவேன்
ஏழைநல்ல மங்கையர்க்கு யேற்றக் காதோலையாவேன்
மங்கிலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்
பாக்கியமுள்ள பெண்களுக்கு பாக்குப்பெட்டி நானாவேன்
விர்த்தாப்பிய பெண்களுக்கு வெற்றிலைபெட்டி நானாவேன்
குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி தானாவேன்
பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்கூடை நானாவேன்
திருப்பக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்
திருப்பாவை சேவிப்போர்க்கு திருத்துழாய்ப்பெட்டி நானாவேன்
எழுதுகின்ற பிள்ளைகட்கு யெழுத்தாணிகூண்டாவேன்
வாசிக்கின்ற பிள்ளைகட்கு வண்ண நல்ல தடுக்காவேன்
ஓதுகின்ற பிள்ளைகட்கு ஒலைத் தடுக்காவேன்
நனைந்து வருவார்க்கு ஜம்பக்குடை நானாவேன்
பசித்துவருவார்க்கு பனம்பழமு நானாவேன்
களைத்து வருவார்க்கு கள்ளமுதம் நானாவேன்
பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்
சித்திரைக்கோட்டையிலே சிறந்தநல்ல நுங்காவேன்
காளையர்க்குங் கன்னியர்க்குங் களைதீர்க்கும் விசிரியாவேன்
சண்டைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கற்பக்கட்டி நான்றருவேன்
கன்றீன்ற மங்கையர்க்குக் கற்பக்கட்டியானாவேன்
வேலிகட்ட கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்
வருஷத்துக் கோர்தினத்தில் சரசஸ்வதியம்மன் பூசைசெய்து
ஆமெழுகிகோலமிட்டு அச்சோடி பெண்களா சோபனமே
மனையலம்பி கோலமிட்டு மனைநிறைய புராணம்வைத்து
பூவும் புதுமலரும் பொன்னறுகும் அட்சதையும்
அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பா ருலகமெல்லாம்
விஸ்தாரமாய் ரண்டாநாள் விஜயதச மிடுயென்று சொல்லி
நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு
எண்ணெய்தேய்த்து நீராட்டி யியல்புடனே யலங்கரித்து
மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புஸ்தகம் வைத்து
மஞ்சள்படுத்துவர மங்களங்கள் பாடிவர
காம்பு நறுக்கியவர் கனுக்காம்பு வேரறுத்து
பக்கமிருபுறம்வாரி பல்வரிசை காம்பரிந்து
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து
ஆணிப்பொன் னெழுத்தாணி அழகாகவே பிடித்து
வெள்ளி கட்டெழுத்தாணி வேடிக்கையாய் கைப்பிடித்து
ஆரியரும் வேதியரும் ஹரிநமோ வென்றெழுதி
ஹரிஹரி யென்றெழுதி அர்ச்சிப்பா ரென்னையவர்
ஹரிச்சுவடி யென்னாலே வரைக்காய்ப்பாட மென்னாலே
எண்சுவடி யென்னாலே குழிமாற்று மென்னாலே
தர்க்கங்க ளென்னாலே சாஸ்திரங்க ளென்னாலே
இராமாயண மென்னாலே பாரதமு மென்னாலே
பாகவத மென்னாலே பலசாஸ்திரங்க ளென்னாலே
திருவாய்மொழி யென்னாலே திவ்யபிரபந்த மென்னாலே
நாலுவேதமு மென்னாலே ஆறுசாஸ்திர மென்னாலே
கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகு பெற்றிருப்பேன்
மங்கையர்க்கு மன்னவர்க்கு மனமறிவது மென்னாலே
வர்த்தகருஞ் செட்டிகளும் வழியறிவது மென்னாலே
கணக்கர்களு முதலிகளுங் கணக்கறிவது மென்னாலே
பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்
காசிக்கடை சவளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்
கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்கு குறிப்பு சொல்லி வாங்கி வைப்பேன்
கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்து பிள்ளைகட்கு
திருத்தமுள்ளமாபலியாய் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
காதத்து பெண்களுக்குக் காதோலை நானாவேன்
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
சீமந்தவாசலுக்கு சீருடனே நான்போவேன்
பிள்ளை பிறந்த தென்றால் பெருமையுடன் நான்போவேன்
மைந்தன் பிறந்தா னென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
மச்சுள்ளோ நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
குச்சள்ளோ நானிருப்பேன் குடிசைக்குள்ளே நானிருப்பேன்
எருமுட்டைகுதிரையெல்லாம் ஏந்திகொண்டு நானிருப்பேன்
ஏரிக்கரைமேலே யென்னாளும் வீற்றிருப்பேன்
எமலோகம் போனலு மெல்லார்க்குத் தெரியவைப்பேன்
சிவலோகம் போனவர்க்கு சீட்டோலையாயிருப்பேன்
சகலமான காரியத்துக்கும் சாக்கிரதையாயிருப்பேன்
இத்தனைக்கு முதவியென்று என்னை ஐய்யன் சிருஷ்டித்தான்
கற்பகவிருக்ஷமெனக் கைலையிலுந் தானமர்ந்தேன்
திருப்பனையூர் தன்னிற்சிவன் புனைந்தானென் நாமம்
நான் வளர்ந்தசேதிதனை நலமுடனே கேட்டவரும்
பாடிப்படித்தவரும் பாங்குடனே கேட்டவரும்
சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்
அச்சிலடித்தவரும் அழகுசென்னை யாள்பவரும்
ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல் வாழ்வார்
ஊழியூழிகாலமட்டும் உலகுதனிலே யிருந்து
வாழிவாழி யென்று சொல்லி வரமளித்தா ரீஸ்வரனார்.
பனைமர சோபனம் முதறிற்று.