Tamil Arts Volume 33 பூம்புகார் கடற்கோளும் அகழாய்வுகள் புலப்படுத்தும் உண்மைகளும் வெ. இராமமூர்த்தி மண்டல உதவி இயக்குநர் (ஓய்வு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைa
Contents | Pūmpuhār1 | Literary Treasure | Home

பூம்புகார் (11°08′21″N 79°50′57″E) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இது சராசரியாக 1 மீ (3.3 அடி) உயரத்தில் உள்ளது. தமிழகத்தில் பண்டைக் காலத்தில் இரு இடங்களில் கடல்கோளால் நாடு அழிந்தாக இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். புறநானூறு1, சிலப்பதிகாரம்2, மற்றும் கலித்தொகை3 ஆகிய நூல்கள் குமரிக்கண்டம் கடலால் கொள்ளப்பட்டது பற்றி தெரிவிக்கின்றன. கடலால் கொள்ளப்பட்ட மற்றொரு இடம் காவிரிப்பூம் பட்டினமாகும். இச்செய்தி மணிமேகலையில் இரண்டு இடங்களில் கூறப்பட்டுள்ளது. முதலிடத்தில் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படப் போகிறது என்ற எச்சரிக்கை பின்வரும் அடிகளால் காட்டப்பட்டுள்ளது. "தீவகச் சாந்தி செய்யா நாளுள் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம்" "காசில் மாநகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக்கோள் மறவேல் என்று" ஆபுத்திர நாடு அடைந்த காதையில், உதயணன் தாயான இராசமாதேவி மணிமேகலையைச் சிறைவைத்துள்ளதையறிந்த சித்திராபதி, காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படும் அபாயம் உள்ளது என்றும், இந்திர விழாக்கொண்டாடத் தவறினால் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோளால் அழிந்து விடும், விழிப்பாயிரு என்றும் சாரணன் ஒருவன் முன்பே கூறியுள்ளான் என்றும் இராசமாதேவியிடம் கூறுவதாகக் இப்பாடல் வரிகள் உள்ளன. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடை காதையில், காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தைத் தீவதிலைகை, "மன்னவன் மகனுக்குற்றது பொறாஅன் நன்மணியிழந்த நாகம் போன்று கானலும் கடலும் கரையும் நேர்வுழி வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது மணிமேகலா தெய்வம் மற்றது பொறா அன் அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென விட்டனள் சாபம் பட்டதிதுவால் கடவுள் மாநகர் கடல்கொள” என்று மேகலையிடம் கூறியதாகக் காணப்படுகிறது. இப்படிக் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படும் என எச்சரித்ததற்கொப்ப பின்னர் கடல் கொண்டுள்ளது என்பதும் மணிமேகலை இலக்கியத்தால் புலனாகிறது. அவ்வாறு கடலால் கொள்ளப்பட்ட காவிரிப்பூம் பட்டினம் நகரத்தின் முழுப்பகுதியும் கடலால் கொள்ளப்பட்டதா? அல்லது நிலப்பகுதியிலும் பண்டையப் பூம்புகாரின் பகுதிகள் மறைந்துள்ளனவா? என்பது புரியாத புதிராக இருந்து வந்தது. 1962-63ல் தொடங்கி 1973 முடிய இந்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்திய நில அகழாய்வு மூலம் கீழையூரில் படகுத்துறையும், பல்லவனீச்சரத்தில் புத்த விகாரையும், மணிக்கிராமத்தில் நீர்த்தேக்கமும் வெளிப்படுத்தப்பட்டன. இவையனைத்தும் பண்டையப் பூம்புகாரின் பகுதிகள் ஆகும். ஆனால் வெவ்வேறு காலங்களைச் சார்ந்தவை. படகுத்துறை கி.மு.5-4 ஆம் நூற்றாண்டையும், புத்தவிகாரை கி.பி.4-5 ஆம் நூற்றாண்டையும், நீர்த்தேக்கம் கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக படகுத்துறையின் காலம் கார்பன் 14ன் கணக்கீட்டுப்படி கி.மு. 316 ± 103 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பூம்புகார் சங்ககாலத்தில் பெரும் துறைமுகப்பட்டினமாக விளங்கியமைக்கு மேற்காணும் நில அகழ்வாய்வுச் சான்றுகள் போதுமானவையாக இருந்ததால், கடல் கோளால் அழிக்கப்பட்டதென்பதற்கு ஆதாரமாகச் சான்றுகள் கிடைக்குமா? என்று அறிய கோவாவில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆய்வு மையத்தோடு இணைந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1981ல் பூம்புகார்க் கடற்பகுதியில் ஜியோபிசிகல் சர்வேயை நடத்திற்று. அவ்வாய்வில் பூம்புகாரையொட்டிய கடற்பகுதியில் சில இடங்களில் கடலில் கூம்புகள் போன்று சில மேடுகள் இருப்பது தெரிய வந்தது. அப்பகுதிகளில், மூழ்குநர்களைக் கொண்டு தீவிர ஆய்வுகள் 1982 முதல் 1997 முடிய நான்கு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. மேற்காணும் நான்கு கட்ட ஆய்வில் கீழ்க்காணும் முக்கியச் செய்திகள் அறியப்பட்டன.
  • பூம்புகாருக்கு வடக்கேயுள்ள கடைக்காடு கடற்கரை யிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் பண்டைய காவிரியாற்றுப் போக்கின் தடயம் (Palaeo river of Kaveri)
  • அவ்வாற்றின் வடகரையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் 23 மீட்டர் ஆழத்தில் இலாட வடிவில் செம்புறாங் கல் கட்டடமும். அதற்கு முன்பாக இருதனிக் கட்டடங்களும்.
  • அவ்வாற்றின் தென்கரையில் வடபகுதி கட்டங்களுக்கத் தென் கிழக்குத் திசையில் மேலும் இரு செம்புறாங்கல் கட்டடப்பகுதிகள்.
  • கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ஏழு அல்லது எட்டு மீட்டர் ஆழத்தில் சில கருங்கல் கட்டடப்பகுதிகள். இப்பகுதியில் கிடைத்துள்ள பானை னஓடுகள் கி.மு.4-3ஆம் நூற்றாண்டினதாக் கருதப்படுகிறது.
  • கரையையொட்டிய அலைகள் மோதும் பகுதியில் செங்கற்கட்டடங்கள் அழிபாடுற்று மண்மேடிட்டுக் காணப்படுகின்றன. இவற்றின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு முடிய.
  • சின்னவானகிரிக்கு எதிர்த்திசையில் சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கடலில் சுமார் 24 மீட்டர் ஆழத்தில் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்று. காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு. இக்கப்பலில் சுமார் 2 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பீரங்கி, இரண்டு வெடிமருந்துப் பெட்டிகள், கொடிக்கம்பம், கப்பலின் போக்கை நெறிப்படுத்தும் செப்புக்கருவி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஈயக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈயக்கட்டிகள் மூன்று வகையாகக் காணப்படுகின்றன
  • பூம்புகாரையொட்டி தெற்குப் பக்கத்தில் சின்னமேடு என்னும் குப்பத்துக்கு எதிரே உள்ள கடற்பகுதியில் 36 அடி ஆழத்தில் தற்செயலாக மீனவர் வலையில் ஒரு புத்தர் சிலை கிடைத்துள்ளது.
பூம்புகார் கடலால் கொள்ளப்பட்டது உண்மைதான் என்பதும் பண்டையநாளில் மிகப்பெரிய நகரமாக அது விளங்கியது என்பதும் சுமார் ஐந்து கிலோமீட்டர் அளவுக்கு அதன் பகுதிகள் கடலால் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் உறுதியாகியுள்ளது. தரைப்பகுதியில் பூம்புகார் எவ்வளவு தூரம் வரை பரவியிருந்தது என்பதைக் கண்டறியவும் நீரகழாய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களின் காலத்தைக் கணித்து ஒப்பாய்வு செய்யவும், நில அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 1995-96ல் தொடங்கி 1997-98 முடிய மூன்று ஆண்டுகளில் அகழாய்வு பூம்புகாரின் பல்வேறு பகுதியில் நடைபெற்றது.
குறிப்பாக மணிக்கிராமத்தையடுத்த கிழார்வெளி, வானகிரி முதலிய இடங்களில், நிகழ்ந்த அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க தொல்பொருள் சான்றுகள் தெரியவந்துள்ளன. கிழார் வெளியில் ஒரு படகுத்துறையும், வானகிரி அகழாய்வில் இதுவரை பூம்புகார் கள ஆய்விலோ அல்லது அகழாய்விலோ கிடைக்கப்பெறாத எழுத்துப்பொரித்த பானையோடும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரிய சுடுமண் பொம்மைகளும் குறிப்பிடத்தக்கவையாகும். கிடைக்கப்பெற்றிருப்பது கிழார் வெளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள படகுத்துறை முன்னர் இந்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் வெளிப்படுத்தப்பட்டுள்ள படகுத்துறையின் மறுவடிவம் போன்றே காணப்படுவதாக நடன. காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வானகிரியில் கிடைத்துள்ள எழுத்துப்பொரித்த பானையோட்டின் வாசகத்தைதுறை கீழ்காணுமாறு படித்திருந்தது. (அ) ஹாபாகேதரோ'. இதன் பொருள் விளங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இப்பானையோட்டின் காலம் கி.மு.3-2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சு.இராசவேலு அண்மையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘அபிமகததோ’ என்று படித்து 'அபி' என்றால் இளவரசி என்று பொருள் என்றும் ‘மகி' என்பது நட்சத்திரப் பெயர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'தோ' என்பதற்குப் பொருள் கூறவில்லை. சுடுமண் பொம்மைகளில், அவலோகிதேசுவரர், புத்தபாதம், முற்காலச் சோழர் காலக்கலைப்பாணியில் உள்ள ஆண் உருவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கள ஆய்வின்போது கிடைத்துள்ள சுடுமண் பொம்மைகளுள் புத்தர் அல்லது யக்ஷனின் தலை குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்டுள்ள நில அகழாய்வு மற்றும் நீரகழாய்வுச் சான்றுகளைக் கொண்டு காண்கையில் பூம்புகார் என்னும் மாநகரம் சுமார் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெரும் புகழோடு. இன்றைக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே விளங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அடிக்குறிப்புகள்:
  • புறநானூறு,பாடல் 6,9
  • சிலம்பு - காடுகாண் காதை, 11, 18-22
  • கலித்தொகை, 104, முல்லைக்கலி
  • K.V.Soundararajan, Kaveripattinam Excavations. 1963-73 (Published 1994) 5. Dr.S.R.Rao JMA - Vol 2, (1991)
  • இரா.நாகசாமி, தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் முயற்சியால் நடைபெற்றது.
  • நடன, காசிநாதன், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் முயற்சியால் நடைபெற்றது.
  • A.S.Gaur, "ceramic Industries of Poompuhar, An Integrated approach of Marine Archaeology, Ed.S.R.Rao (1997) p.128
  • A.S.Gaur, Sundaresh, Manoj Sexena, Sila Tripati and P.Gudigar, Prelliminary observations an 18th Century Ship Wreck at Poompuhar (East coast of India), IINA, 1994 pp. 118-126.
  • Natana. Kasinathan, 'Ancient Seaports of Tamilnadu and their trade contact with other countries', Endowment Lecture ofTamilnadu History Congress, 1997, pp 14-16; கிழார் வெளிப்படகுத்துறை, திரு நடன காசிநாதன், முன்னாள் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதல்படியும் தொல்லியியல் துறை துணை இயக்குநர் திரு.அ.அப்துல் மஜீத் அவர்களின் மேற்பார்வையிலும் இக்கட்டுரை ஆசிரியர், மற்றும் பொ.இராசேந்திரன் ஆகியோரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதனைப் பாதுகாத்திட நாகப்பட்டின மாவட்ட நல நிதியிலிருந்து நிதியினை ஒதுக்கி அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு.அருண்மொழி, இ.ஆ.ப.உதவினார்.
  • நடன .காசிநாதன், அர.வசந்தகல்யாணி, தொல்லியல், துறையின் அரிய கண்டுபிடிப்புகள் 1988-1998, பக்கம் 27.
  • சு. இராசவேல், "பூம்புகாரில் சிங்கள பிராமி எழுத்துப்பொரித்த மட்கலத்துண்டு" ஆவணம், இதழ் 10, (1999) பக்கம் 154. -
  • “தொல்லியல் நோக்கில் தமிழகம்' என்ற கருதரங்கு மலரில் வெளியானது

Contents | Pūmpuhār1 | Literary Treasure | Home