◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

நூன்முகம்

பழந்தமிழர் சமுதாயத்தைப் பற்றி பல அடிப்படைச் சான்றுகளைத் திரட்ட முற்படும்போது எவ்வளவோ அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைத் தொகுத்து எழுதும்போது எல்லையில்லா இன்பம் பெறுகிறோம். தமிழ் மக்களின் வரலாற்றில் ஈட்பாடு கொண்ட அனைவரும் அவ்வின்பம் பெறுதல் வேண்டும் என்ற நோக்கே இந்நூலின் தோற்றத்துக்குக் காரணம். அதை மனதில் கொண்டுதான் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத என்னைப் பேரன்போடு ஊக்குவித்த போது அதை உவகை கலந்த நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன். இந்நூல் உருவாக அவர்களின் அன்பே தொடக்கமாக அமைகிறது. இந்நூலின் தொடக்கம் முதல் இறுதிவாரை என் முயற்சியில் பெரும் பங்கு கொண்டு என்னை இதில் ஈடுபடுத்திய பண்பாளர் திரு. சிட்டி அவர்களாகும். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள். இந்நூல் எழுத என்னாலும் இயன்றது என்றால் எனக்கு முன் எவ்வளவோ சான்றோர் அரும்பாடுபட்டு எழுதி வைத்துள்ள நூல்களே அதற்கு உதவின. அச்சான்றோர்கள் அனைவரையும் மனதால் வணங்குகின்றேன். இந்நூலில் உள்ள பல கருத்துக்கள் முன்னோர் கூறியவை தான். பல நூல்களில் வெளியான கருத்துக்களில் சிலவற்றை விரிவு அஞ்சி விட்டும் உள்ளேன். சில கருத்துக்கள் என் மனத்து உதித்தவை. இவற்றையெல்லாம் ஓரளவு தொகுத்து இந்நூலாக்கியுள்ளேன். எழுதி முடித்த பின் தான் இன்னும் எழுதவேண்டியவை எவ்வளவு உள்ளன என்பது தெரிந்தது. ஒரு மாபெரும் சமுதாய வரலாற்றை ஒரு சிறு நூலில் அடக்கும் திறன் யாருக்கும் இல்லை என்பதற்கு இந்நூல் சான்று. தமிழ் மக்களின் பேரன்பையும், பெரு மதிப்பையும் பெற்ற காரைக்குடி கம்பன் அடிப் பொடி திரு. சா. கணேசன் அவர்கள் இந்நூலுக்கு அன்போடு அணிந்துரை நல்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அவ்வணிந்துரையில் இதுபோன்று நான்கு பகுதிகள் வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆன்றோர் ஆசியும் ஆண்டவன் அருளும் பொய்ப்பதில்லை என்பார் பெரியோர். இந்நூலை யான் எழுதும்போது எழுத உதவிய திருமதி சத்யவதி, திரு. சிவசங்கரன், செல்வி பானுமதி ஆகியவர்களுக்கும் அச்சுத் திருத்துவதில் உதவிய திரு. நடன காசிநாதன் அவர்களுக்கும் என் நன்றி. இந்நூலில் உள்ள குறை களைந்து குணம் கொள்ள வேண்டுகிறேன். இரா. நாகசாமி