அணிந்துரை
திருவாளர் இரா. நாகசாமி தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவர். வரலாற்றுத் துறையில் நேர்மையுடன் திறமையாக அரும்பணி ஆற்றிவருகின்றவர். தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள கல்வெட்டு, பட்டயம், சிற்பம், படிமம், கட்டடம், ஓவியம், இலக்கியம், முதலான கலைகளில் கருத்தூன்றி ஆய்ந்து பல அரிய சான்றுகளைப் புலப்படுமாறு வெளிபடுத்தி வருகின்றவர்.
இத்தகைய தகுதிச் சிறப்புகள் மிக்க அவர் எழுதிய இந்நூலுக்கு யாவரும் கேளிர் என்று பெயர் சூட்டியுள்ளார். பழம்பொருள் ஆய்வுத் துறையினர் ஆதலால் நூற்பெயருக்கும் பழம் நூல்களை ஆய்ந்து பழமையான, புறநானூற்றில், கணியன் பூங்குன்றனார் அருளிய அருமைப் பாட்டொன்றில் காணப்பெறும் யாவரும் கேளிர் என்ற ஒரு சொற்றொடரைத் தேர்ந்து கொண்டது சாலப் பொருத்தமேயாகும்.
இந்நூலுள்ள பண்டைத் தமிழகத்துப் பல குடிமக்களும் நமக்குக் காட்சி தருகின்றனர். அவர்களின் நோக்கும், போக்கும் நுண்ணிதின் ஆய்ந்து புலப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றால், பண்டைத் தமிழ் மக்களின் நாகரிகமும், பண்பாடும் தெள்ளிதின் விளங்குகின்றன.
இந்நூல் பல கட்டுரைகளாகப் பகுத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் பழம் நூல்களில் கண்ட சொற்றொடர்களே தலைப்பாக அமைக்கப் பெற்றிருப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.
மன்னர்களின் வாழ்வும், பணியும், கொற்றமும் மலர்கின்ற அழகை அருமையாக விளக்குகிறார்; வணிகர் வாழ்வும் பணியும் சிறக்க ஒளி விடச்செய்திருக்கிறார்; அந்தணர் அறநெறி வாழ்வும், பணியும் மணக்கச் செய்கின்றார்; உணவளித்து உயிர்காக்கும் உழவோர் அருமையும் பெருமையும் செவ்விதின் மிளிர வைக்கிறார்; மற்றும் பல தொழில் இயற்றுவோருள் தச்சர் சீர்த்தி தண்ணொளி பரப்பச் செய்கிறார். இறுதியில் தேவராடியார் என்னும் தெய்வப் பணிப் பெண்டிரின் சீர்த்தியைச் செம்மையாகப் புலப் படுத்துகின்றார்.
இந்த முறையில் இது ஒரு புதிய முயற்சி. பயன் தரும் நல்ல முயற்சி. எத்தனையோ தவறான, பிழையான, கருத்துக்களை அகற்றி மெய்நிலையை உணர்த்தக் கூடிய நல்ல முயற்சி. இம் முயற்சியில் திரு. நாகசாமி கணிசமான அளவு வெற்றி பெற்றுவிட்டார்.
எனவே, இந்த முறையில் இன்னும் பலப்பல தலைப்புக்களில், தமிழக வரலாற்றை மின்னிடச் செய்யும் கட்டுரைகளை எழுதி இதன் இரண்டாம், மூன்றாம், நான்காம் பகுதிகளாக வெளியிட வேண்டுமென ஆசிரியரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இந்த நல்ல நூலுக்குத் தமிழகம் நல்வரவு கூறி, ஆதரவு தந்து, அசிரியர்க்குப் பேரூக்கம் அளிக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. வாழ்க: வளர்க இந்தப் பயனுள்ள பணி என மனமார, வாய் மணக்க வாழ்த்துகிறேன்.
அன்பன்,
கம்பன் அடிப்பொடி, சா. கணேசன்