◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

1. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது முது மொழி. யானுயிர் என்பதறிகை வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே (புறம். 186). நாட்டின் வாழ்விற்கு இன்றியமையாத பல்வேறு அங்கங்களை சீராக இயங்க வைக்கும் உயிர்ச்சக்தியே அரசு என்று தமிழ் மக்கள் தொன்று தொட்டே கருதினர். ஆதலின் தனி மனிதனைக் காட்டிலும் சிறப்பான சக்தி பெற்றவனாக தெய்வீகச் சக்தி நிறைந்தவனாக மன்னனை மக்கள் கருதினர். சங்க காலத்திலிருந்தே மன்னன் தெய்வத்தின் அமசமாக கருதப் பெற்றோன். சேரமன்னனை செஞ்டை வானவன் அருளினில் விளங்கி வஞ்சி தோன்றிய வானவ என சிலப்பதிகாரம் கூறுகிறது. பல்லவர்கள் திருமாலின் அம்சாவதாரம் என்று கசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. நேரில் விஷ்ணுவே தோன்றியதுபோல் நந்தி வர்மன் பிறந்தான், என்பன போன்ற கருத்துகள் பல கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. ஆதலின் அரசர் குலம் பரம்பொருளிடமிருந்து தோன்றியது என்றும், திருமாலிடமிருந்தும் நான்முகனிடமிருந்தும் உதித்தது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

வம்சம்:

மன்னர்கள் தாங்களை சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ சந்திர குலத்தில் பிறந்தவர் என்றோ கூறிக்கொள்வது மரபு. சோழர்கள் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறும். தங்கள் குலமுதல் பரிதி என்று வீரராஜேந்திரனின் கல்வெட்டும், பாண்டியர் சந்திர குலத்தவர் என்று அவர்களது செப்பேடுகளும் (சந்திரனது வழித்தோன்றி என்று சிவகாசி செப்பேடுகளும்) கூறும். பாண்டிய மன்னன் பராங்குசமாறனை, மதிமரபாம் திருமரபிற் திகழ் மாறன் என்றும் திங்கட்டிருக்குலத்துக் கொற்றவன் என்றும் பாண்டிக்கோவை குறிக்கும். ஆய்குல மன்னர்கள் தங்களை சந்திர குலத்தவர்கள் என்று கூறிக்கொண்டனர். கருநந்தடக்கன் என்னும் ஆய்குல மன்னனின் பாலியத்து செப்பேடுகள், இவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தோன்றியதால் சந்திரனின் களங்கம் நீங்கியது என்றும் கூறுகின்றன. இந்திய நாட்டில் பல அரசர்கள் தாங்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர் என்றும், சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்டனர்.

கோத்திரம்:

இவர்களது கோத்திரம் தவத்திற் சிறந்த மகரிஷிகளிடமிருந்து தோன்றியது என்றும் கொள்வர். சோழமன்னர்கள் காச்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது செப்பேடுகளால் அறியலாம். காச்யபர், அத்ரி என்ற இரண்டு ரிஷிகளின் பெயர்கள் அவர்களது குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர்கள் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்கள் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவர்களது தொன்மையான் செப்பேடுகள் மிகவும் சுருக்கமானவை. அச்செப்பேடுகளில் ‘பாரத்வாஜ சகோத்ரானாம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. சற்று பிற்பட்ட செப்பேடுகளி இது விரித்து ஆங்கிரஸ், பிருஹஸ்பதி, பாரத்வாஜர் ஆகிய ரிஷிகளின் கோத்திரத்தைச் சார்ந்தவர் எனக் குறிக்கப் பெறுகிறது. மேலைக்கங்கர்கள் கன்வ மகரிஷியின் (கான்வாயன) கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பழுவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பழுவேட்டரையர் ஒருவர் மகரிஷி வம்சத்து க்ஷத்திரியர் எனப்படுகிறார். இது போன்று ஒவ்வொரு மன்னரும் தாங்கள் ஒரு தவமுனிவரின் வழிவந்தோர் என்று கூறிக்கொள்வது ஆரியர்களின் வழக்கத்தைப் பின்பற்றியது என்று கொள்ளலாம். சங்க காலத்தில் மன்னர்கள் ஒரு தனிப்பட்ட ரிஷியின் வழிவந்தவர் என்று கூறிக்கொண்டதாகச் சான்றுகள் இல்லை. இது கி.பி. 2-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதிகரித்தது என்றுதான் கொள்ளவேண்டும்.

புராண வீரர்கள்:

மக்கள் புராண, இதிஹாசங்களில் குறிக்கப்பட்டுள்ள அருஞ்செயல் செய்த வீரர்கள் சிலரும் தன் குல முன்னோர்கள் எனத்தலைப்பட்டனர். பதினெண்குடி வேளிர்களும் ஒரு ரிஷியின் யாகத்தீயில் இருந்து தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்வது இங்கு நோக்கத்தக்கது.
சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், காகுத்தன், பகீரதன், தசரதர், இராமர் முதலியோர் தங்கள் குலத்தோர் என்று கூறிக் கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும் திருவாலங்காடு செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம். ‘மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல உலகளித்த தொல்லையோன்’ என்று ஒரு சோழனை இராஜராஜன் உலா குறிக்கிறது. புரூரவஸ், நகுஷன் முதலியோர் தங்கள் குலத்தவர் எனப் பாண்டியர் கூறிக் கொள்வதை வேள்விக்குடி செப்பேட்டில் காணலாம். துரோணர், அச்வத்தாமா முதலியோர் தங்கள் குலத்தவர் என்று பல்லவர்கள் குறிக்கின்றனர். யாதவர் தாங்கள் விருஷ்ணி குலத்தவர் என்று கூறுகின்றனர். பாணர்கள் தாங்கள் மகாபலியின் வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதையும் காணலாம். நாட்டில் பல்வேறு கதைகளும் சிறப்படைந்து அவற்றில் வரும் வீரர்களையும் தங்கள் குலத்தவர்களாகக் கூறிப் பெருமையடையும் நிலையை இது குறிக்கிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டிலிருந்து இம் முறை அதிகரித்து வருவது, இக்கதைகள் மக்களிடத்தே பரவி வருவதற்கு எடுத்துக் காட்டு என்றே கொள்ளலாம்.

செயற்கரிய செய்தோர்:

சேரர், சோழர், பாண்டியர் முதலியோர் தங்கள் முன்னோர்களில் சிலர் செயர்கரிய செயல்களைச் செய்ததாகச் கூறுகின்றனர். அவற்றில் பல வரலாற்று நிகழ்சிகளை நினைவுறுத்துகின்றன. சில கற்பனையாகவும் உள்ளன. கற்பனையாக உள்ளவையும், ஏதோ ஒரு வரலாற்று நிகழ்ச்சியை முதலில் உவமை போல் மிகைபடக் கூற, அதையே பின்னோர் உண்மை என எடுத்து கொண்டுள்ளார்கள் என்று ஊகிக்க இடமுள்ளது. இமயத்தில் சின்னம் பொறித்தது போன்றவை மூவேந்தருக்கும் பொதுவானவை. பாரதப் போரில் பங்கு கொண்டதாக மூவேந்தர் முடிகளும் கூறிக் கொள்கின்றனர். உதியன் பாரதப்போரில் பெருஞ்சோறளித்தான் என்று சங்க காலத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின் அவன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் எனவே அழைக்கப்பெற்றான். பாண்டிய மன்னரில் ஒருவன் பாரதப் போரில் யானைப்படை ஒட்டியதாக குறிக்கப்படுகிறான். பாரதப் போரில் தருமனுக்கு உதவியதாக ஒரு சோழ மன்னன் போற்றப்படுகிறான்.
சில செயல்கள் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பொதுவாக உள்ளன. இந்திரனின் ஆசனத்தில் சமமாக அமர்ந்ததாக சோழன் ஒருவனும் பாண்டியன் ஒருவனும் புகழப்படுகின்றனர். பெளத்த ஜாதகக் கதைகளில் இந்திரனுடன் சமாசனம் பெற்றதாக ஒரு கதை உள்ளது. இதிலிருந்து இக் கதை மிகவும் தொன்மையானது என்று தெரிகிறது. அதே போன்று இரு மன்னர்களும் கடல் கடந்து அமுது கொண்டதாக கூறிக் கொள்கின்றனர். பூதங்களை ஏவல் கொண்டதாக பாண்டியரும், பூதங்களில் ஒன்றான காற்றை ஏவல் கொண்டதாக சோழரும் போற்றப்படுகின்றனர். கரிகாலனின் முன்னோர்களில் ஒருவர் கடலில் நாவாய் ஒட்டுவதற்காக காற்றை ஏவல் கொண்டதாக சங்க காலத்திலேயே வரலாறு இருந்தது (புறம் 66). இதேபோன்று பாண்டியரும் சேரரும் ஒரே செயல் செய்ததாக கூறிக் கொள்கிறார்கள். பாண்டியன் ஒருவன் வேல் எரிந்து கடலைப் பின் ஒட்டியதாகச் செப்பேடுகள் குறிக்கின்றன. குட்டுவன் என்ற சேரமன்னனும் இதே செயல் செய்து கடல் பிறக்கோட்டிய குட்டுவன் என்று பெயர் பெற்றான். சோழமன்னன் ஒருவன் பிலமதினில் புகுந்து நாக கன்னியை மணந்தான் என்றும் பல்லவமன்னன் ஒருவன் நாகக்கன்னியை மணந்து அரசு பெற்றான் என்றும் குறிக்கப்படுகின்றனர்.

சிறப்புக் கதைகள்:

சில கதைகள் ஒவ்வொரு குலத்திற்கும் தனிச் சிறப்பு அளிப்பவையாகவும் உள்ளன. சோழர் குலத்தில் பல கதைகள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்புடையவை மனு நீதி சோழனுடைய கதையும், சிபிச் சக்கரவர்த்தியின் கதையுமாம். இவ்விரண்டும் சங்க காலத்திலிருந்தே சிறப்பாக இருந்தன. சிபிச் சக்கரவர்த்தியின் கதை பெளத்த ஜாதகக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. மாந்தாதா என்ற மன்னன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என அறிகிறோம். இந்திரனை வாகனமாக்கினான் என்றும், இந்திரனைத் தன் கொடியில் புலியாக்கினான் என்றும், இந்திர விமானம் ஊர்ந்தான் என்றும் சில சோழர் குறிக்கப்படுகின்றனர். (பாண்டியர் இந்திரன் முடியை வீழ்த்தினர் என்றும், இந்திரனின் குலத்தைக் கைப்பற்றினர் என்றும் குறிக்கப்பெறுகின்றனர்). சோழர் கதைகளில், போகபுரியாகிய உத்தரகுருவை ஒரு சோழன் ஆண்டதாகவும் மேல்கடல் நீரை கீழ்கடலில் விட்டதாக ஒருவரும் குறிக்கப்படுகின்றனர். ஒரு மன்னன் கூற்றுக்கு வழக்குரைத்ததாக குறிப்புள்ளது.

வரலாற்றுக் கதைகள்:

சில வரலாற்றுச் செய்திகளும் கதைகளில் இடம் பெறுகின்றன. ஒரு மன்னன் குடகுமலையை அறுத்து பொன்னியைக் கொணர்ந்தான் எனக் குறிக்கப் பெறுகிறான். இவனது அருஞ்செயலாலே தமிழகம் பொன்னிவள நாடாக மாறியது எனலாம். அதே போன்று ஒரு மன்னன் முதுமக்கட்சாடி வகுத்ததாக குறிப்பதும் வரலாற்று நிகழ்ச்சியாகவே படுகிறது. பொன்னிக்கு கரைகண்ட சோழன் என்பது வரலாற்று நிகழ்ச்சியே யன்றோ! இதே போன்று பாண்டியர்கள் வழியில் இந்திரனது ஆரம் கொண்டது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன் இந்திரனின் முடிமேல் வளையை எறிந்ததாகக் குறிப்பு உண்டு. பாண்டியர்களின் முன்னோர்கள் செய்த சிறந்த செயல்கள், மாபாரதம் தமிழ் படுத்தியதும் மதுரையில் சங்கம் வைத்ததுமாகும். மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்றும் செப்பேடு கூறுகிறது. இத்துடன் பாண்டியர் அகத்தியருடன் தமிழாய்ந்ததாகக் கூறுவதிலுருந்து இவர்களது தமிழ்த்தொண்டு நன்கு தெளிவாகிறது. சோழர்கள் நீர் வளம் பெருக்க வகை செய்தனர். பாண்டியர் கல்விச் செல்வத்துக்கு வழி வகுத்தனர். அதியமான் குலத்தைச் சேர்ந்த முன்னோன் ஒருவன் தேவருலகத்திலிருந்து கரும்புப் பயிரைக் கொணர்ந்ததாகக் கூறப்படுகிறான். இதிலிருந்து முதன் முதலில் கரும்புப் பயிரை தமிழகத்தில் பயிர் செய்தவர்களே அதியமான் குலத்தோர் என்று ஊகிக்க இடமிருக்கிறது.

மக்கட் பேறு:

குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதார் எதை எதையோ இனிது என்பர் என்பது முதுமொழி. குழந்தைகள் அளிக்கும் இயற்கை இன்பத்துக்கு ஈடு இணையேதும் இல்லை என்று தமிழ் மக்கள் கருதினர். அவ்வின்பத்தைத் துய்ப்பதற்கே மக்களை விரும்பிப் பெற்றனர். மக்கட் பேற்றை மன்னர்கள் எவ்வளவு சிறப்பாகப் போற்றினர் என்பதற்கு பாண்டியன் அறிவுடை நம்பியின் பாட்டு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். பெரும் செல்வராயினும் குறு குறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும், கவ்வியும், தன் உடலிலே அடிசிலை விதிர்க்கும் மயக்குறு மக்களை இல்லாதார் வாழ்க்கை பயனற்றது என்று அமைகிறது அப்பாட்டு. தங்கள் குலம் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. ஆதலின் தமக்குப் பின்னர் நாடாள, காதல் குல மைந்தன் தேவை என மன்னர்கள் வேண்டி பெற்றனர். தங்கள் குலம் தழைக்கவந்த செல்வர்கள் எனச் சீரும் சிறப்புமாகப் போற்றினர். தந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் பல்லவகுல திலகன் எனக் கூறப்படுகிறான்.
இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனை பேரிசாத்தன் மன்ன பவழம் போன்ற வாயையும், இனிமையும் அணிந்த உன் புதல்வரைப் புகழ்கின்றேன். இவர்கள் உன்போல்வார்களாகுக. இவருக்கு பிறக்கும் குழந்தைகளைக் கண்டு நீ அடையும் இன்பத்தை நானும் பெறுவேனாக என மக்கட்பேற்றின் பெருமையை பாடுகிறார். காவற்கமைந்த அரசுதுறை போகிய வீறுசால் புதல்வட்னைப் பெற்றனை எனப் பதிற்று பத்து குறிக்கும் (பதி. பத். 74. 20). தங்கள் முன்னோர்களின் கடனிறுப்பதற்கும் மக்கள் தேவை எனத் தமிழ் மன்னர் சங்க காலம் தொட்டே என்ணினர். செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர் இளம்புதல்வர்களைப் பெற்றதால் முதியோர்களின் தொல்கடனிறுத்தாய் என வணங்கா ஆண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர் பேணி தொல்கடனிறுத்த வெல்போறண்ணல் (பதி. பத். 70. 20)” எனப் பாடுகிறார். குழந்தையில்லாத மன்னர் சிறப்பாக வேள்வி வேட்டு அதன் பயனாய் மக்களைப் பெற்றனர் என்றும் கருதினர்.

தாய் வீட்டில்:

அரசகுலப் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காகத் தன் தாயிருக்கும் இடம் வந்தனர். குலோத்துங்க சோழனின் தாய் அம்மங்காதேவி இராஜேந்திர சோழனுடைய மகள். கீழைச்சாளுக்கிய மன்னன் இராஜ ராஜநரேந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டவள். அவள் குலோத்துங்கனைப் பெற்றபோது கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் தாயுடன் இருந்தாள் எனக் கலிங்கத்துப் பரணியிலிருந்து அறியலாம். அப்போது அவள் கணவன்வழி வந்தோரும் அங்கிருந்தனர். பிறந்த குழந்தையை குழந்தையின் பாட்டி, கங்கைகொண்ட சோழனின் தேவி மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, இவன் எங்கள் திங்கள் குலம் (சோழர்) செழிக்கவந்த செம்மல் என்றும், இவன் தந்தையின் குலமாகிய சூரிய குலம் விளங்கத் தோன்றிய வள்ளல் என்றும், மாயக் கண்ணனே அவதரித்துள்ளான் என்றும் கூறி கொஞ்சி மகிழ்ந்ததாக ஜயங்கொண்டார் கூறுகிரார். குழந்தையின் பிறப்பை அவதாரம் என்றே ஜயங்கொண்டார் குறிப்பிடுவார். அரசர்களின் குழந்தைகள் தெய்வ அருள் நிரம்பியவை என்ற கருத்தை இது எடுத்துரைப்பதாயுள்ளது.

தாயின் திருவயிறு விளங்கட்டும்:

சிறந்த குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் திருவயிறு விளங்கட்டும் என்று பாடுவது தமிழ் மரபு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாடிய குமட்டூர் கண்ணனார் அவன் தாய் வயிறு குறைவின்றி விளங்குவாளாக எனப் புகழ்கிறார். ‘வயிறு மாசிலீயள் அவனீன்ற தாயே’ (பதி. பத். 20-21). இம்மரபை கி.பி. 10ம் நூற்றாண்டிலும் காண்கிறோம். உத்தம சோழரின் தாயாகிய செம்பியன் மாதேவியாரை உத்தமசோழரை திருவயிறு வாய்த்த பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என்று பல கல்வெட்டுகள் கூறும். குலோத்துங்கனை அருள்திருவின் திருவயிறாம் ஆல் இலையில் அவதரித்தான் என ஜயங்கொண்டார் பாடுகிறார்.
இவ்வாறு பிறந்த குழந்தைகள் இருவழிகளிலும் சிறந்த தொல் குடியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிப் பெருமை அடைந்தனர். தந்திவர்மன் பல்லவ மன்னன் என்பவன் தன்னை உபயகுல பரிசுத்தன் எனக்கூறிக் கொள்கிறான். இருவழியும் நன்றென்று சங்ககாலத்திலேயே உலகோர் உரைப்பது வழக்கம் என்பது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி என்ற திருமுருகாற்றுப் படை அடிகளால் அறியலாம்.

நக்ஷத்திரம் கணித்தல்:

பிறந்த குழந்தையின் நக்ஷத்திரத்தை கணித்து வைத்தனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் கொடித்டேர் செழிய நீ பிறந்த நாள் மீன் நிலைத்து நிற்பதாக எனப்பாடுகிறார் (நின்று நிலை இய நின் நாள் மீன்). பல அரசர்களின் பிறந்த நக்ஷத்திரங்கள் கல்வெட்டுகளி குறிக்கப்படுகின்றன. அந்நாட்களில் சிறப்பாக தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர். பிறந்த நாளன்று சிறந்த விழாக் கொண்டாடினர் என்றும் அறியலாம். நந்திவர்மன் ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தான் என அறிவோம். இராஜராஜன் சதயம் என்ற நக்ஷத்திரத்தில் பிறந்தவன். அவன் பிறந்த ஐப்பசித் திங்கள் சதயநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடினான். தான் வெற்றிகண்ட சேரர்நாட்டில் (உதியர் மண்டலத்தில்) சதயவிழாவை ஏற்படுத்தினான். இராஜேந்திரன் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தான். முதல் குலோத்துங்கன் திருப்புனர்பூசத்துனாள் பிறந்தான் (659/17). அரசர் குழந்தைகள் நல்லநாளில், நல்ல மீனில் பிறந்தால் புகழ் எய்துவர் என்று கருதினர். கோச்செங்கட் சோழனை அவன் தாய் மகவு பெறும் வேளையில், காலம் உணர் பழையவர்கள் இம்மகன் ஒரு நாழிகை கழித்துப் பிறப்பின் இம்மூவுலகும் ஆள்வான் எனக் கூறினர். ஆதலின் தாய் தன் உடல் நோயையும் கருதாது ஒரு நாழிகை கழித்துப் பெற்றெடுத்தாள். ஆதலின் பிள்ளை பிறந்ததும் இறந்தாள் என சேக்கிழார் கூறுகிறார்.
கற்புடைய தேவி பெற்றெடுத செல்வர் ஆதலின் தாயின் பெயர் கூறியே மகன் பெயரைக் குறிப்பதும் பண்டைய வழக்கமாயிருந்தது. திருவிற்சேரலாதற்கு வேள் ஆவிக்கோமன் பதுமன்தேவி யீன்ற மகன் நார்முடிச்சேரல் எனவும் போன்றவும் வழங்கியுள்ளதை பதிற்றுப்பத்தில் காணலாம். தேர்மாறனுக்கு மழவநாட்டு பெண்ணிடம் பராந்தக நெடுஞ்சடையன் தோன்றினான் என்று வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. பராந்தக வீர நாராயணன், ஸ்ரீகண்ட சோழரின் மகளான அக்களநிம்மடியிடம் பிறந்தவன், என்று குறிக்கப் பெறுகிறான். பல்லவ மன்னனாகிய தந்திவர்மனுக்கு கதம்பகுலப் பெண்ணாகிய அக்களநிம்மடி என்பாளிடம் தெள்ளாறெறிந்த நந்தி பிறந்தான். அத் தெள்ளாறெறிந்த நந்திக்கு ராஷ்டிர குலத்தில்கூட பிறந்த சங்கா என்னும் மெல்லியலாளிடம் நிருபதொங்கன் பிறந்தான் என்று செப்பேடுகள் குறிப்பதும் இம் மரபை ஒட்டியே.

பெயரிடல்:

குழந்தை பிறந்ததையும், அதை அருகில் இருந்தோர் கண்டதையும் சிம்மவர்மன் என்ற பல்லவமன்னனின் கல்வெட்டு கூறுகிறது. அச்வத்தாமா, மதனி என்ற பெண்ணைக் கானகத்தே காதலித்தான். அவனுக்கு உரிய காலத்திலே பிறந்த குழந்தையை தளிர்களால் ஆகிய விரிப்பில் விட்டனர். அக்குழந்தையைக் காணவந்த தந்தையாகிய அச்வத்தாமா பல்லவ விரிப்பிலே விளங்கும் குழந்தையைக் கண்டான். ஆதலின் அதை பல்லவன் என்று பெயரிட்டு அழைத்தான் என அக்கல்வெட்டுக் கூறுகிறாது. அக்கல்வெட்டு ஆந்திரதேசத்தில் அமராவதி என்ற இடத்தில் கிடைத்தது. இதிலிருந்து தந்தை குழந்தைக்கு பெயரிடுதல் மரபு என அறியலாம்.

அரச குழந்தைகளின் பெயர்:

அரச குழந்தைகளின் பெயர் ஆற்றலையும், வலிமையும், இனிமையையும், காவல் தன்மையையும் குறிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பது மரபு. கரிகாலன், செங்கண்ணான், நெடுஞ்செழியன், இரும்பொறை முதலிய சங்ககால அரசர்களின் பெயர்கள் இவற்றைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். இராஜராஜ சோழனுக்கு இயற்பெயர் அருள்மொழி என்னும் இனிய பெயராகும்.

குடிப் பெயர்:

மன்னர்கள் தங்கள் குடிப்பெயரையும் இணைத்து பெயரிட்டனர் என்று ஊகிக்க இடமிருக்கிறது. கிள்ளி, சென்னி, வளவன் ஆகிய பெயர்களை சோழர்களும், இரும்பொறை, குட்டுவன், ஆதன் ஆகிய பெயர்களைச் சேரர்களும் செழியன், வழுதி ஆகிய பெயர்களைப் பாண்டியர்களும் இணைத்து சங்ககாலத்தில் பெயர் சூட்டினர். சங்ககாலத்தில் மன்னர்கள் குழந்தைகளாயிருந்தபோது ஒரு பெயரும், முடிசூட்டிக்கொண்டவுடன் ஒரு பட்டப் பெயரும் சூட்டிக்கொண்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளில் பல்லவப் பேரரசு நிலை நிறுத்தப்பட்ட பிறகு சிறுவயதில் ஒரு பெயரும், முடிசூடும்போது ஒரு பட்டப்பெயரும் கொண்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. நந்திவர்மன் என அபிஷேக நாமம் இடப்பட்டான் என காஞ்சி வைகுந்தபெருமாள் கோயில் கல்வெட்டு கூறுகிறது. மதுராந்தகன் என்ற இயற்பெயர் பெற்றிருந்தவனே பின்னர் முதல் இராஜேந்திர சோழன் என்னும் பெயர்பெற்ற பேரரசன். இராஜேந்திரன் என்னும் இயற்பெயர் பெற்றிருந்தவனே பின்னர் புகழ்பெற்ற முதல் குலோத்துங்கனாகும். இரண்டாம் இராஜேந்திர சோழன் தனக்கு பின்னவர்க்கு முடிசூட்டும்போது, புதுப்பெயரளித்தான் என்பது மானச் சிலைக்கையோரானைச் சேவகனை நிருபேந்தர சோழன் என்றும் பருமணி சுடர்மணி மகுடஞ்சூட்டி என்று குறிப்பதிலிருந்து அறியலாம்.

தந்தை பெயருடன்:

தந்தையின் பெயருடன் மகனின் பெயரையும் இணைத்துக் கூறுவது பண்டைய மரபு. குட்டுவன் கோதை (புறம் 54) என்பது குட்டுவன் மகன் கோதை என்ற பெயரிலும், நலங்கிள்ளி சேட்சென்னி (புறம் 61) என்பது நலங்கிள்ளி மகன் சேட்சென்னி என்ற பொருளிலும், மாறன் மகன் வழுதி என்ற பொருளில் மாறன் வழுதி (புறம் 51, 52) என்றும் சங்க காலத்தில் வழங்கப்பட்டது. பிற்காலத்திலும், பல மன்னர்களின் பெயரோடு அவர் தந்தையின் பெயர் இருந்ததைக் காண்கிறோம். பல்லவர்களில் தந்தி நந்தி என்றும் நந்தி கம்பன் என்றும் பெயர் உள்ளோர் குறிக்கப்பட்டுள்ளனர். சோழ மன்னர்களிலும் இதுபோன்ற மரபைக் காணலாம். ஆதித்த சோழனின் மகனுக்கு ஆதித்தன் கன்னரதேவன் என்ற பெயரும், மதுராந்தக உத்தம சோழனின் மகனுக்கு மதுராந்தகன் கண்டராதித்தன் என்றும் பெயர் விளங்கின.

தந்தையின் பெயர்:

தந்தையின் பெயரையே மகனுக்கு இடுவதும் சங்க காலத்தில் இருந்து காணப்படும் ஒரு வழக்கமாம். கடுங்கோனின் மகன் கடுங்கோன் என்றே அழைக்கப்பட்டான். ஆயினும் தந்தையையும் மகனையும் பிரித்து அரிய ‘பெரும்’ என்றும் ‘இளம்’ என்றும் குறிப்பிட்டு அழைத்திடனர். பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்று புகளூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளான். பெருஞ்சேரலிரும்பொறை மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்பதும் இதையே குறிக்கும். முதல் இராஜேந்திர சோழனின் இரண்டாம் மகனுக்கு இராஜேந்திரன் என்றே பெயர் விளங்கியது.

பாட்டன் பெயர்:

பாட்டன் பெயரை மகனுக்கு வைப்பதும் பெரும்பாலும் கையாளப்பட்ட மரபு என்று அறிவோம். சங்க காலத்தில் இம்மரபு நிலவியதைக் குறிக்க தக்க சான்றுகள் இல்லை. பல்லவ மன்னர்களில் பலர் இம்மரபைப் பின்பற்றினர். பெயர்கள் மாறி மாறி வருவதிலிருந்து இதை நன்கு அறியலாம். நரசிம்மவர்மனாகிய மாமல்லன் தன் தந்தையின் பெயராகிய மகேந்திரவர்மன் என்பதையே தன் மகனுக்கும் இட்டான். அதுபோல் இராஜசிம்மனும், தந்திவர்மனும், தங்கள் தந்தை பெயரை மக்களுக்கும் இட்டு மகிழ்ந்தனர். சோழர்களில் பராந்தக சோழன் தன் தந்தையின் பெயரான ஆதித்தன் என்பதை இணைத்து தன் இரு மக்களுக்கும் ராஜாதித்தன் என்றும் கண்டராதித்தன் என்றும் பெயரிட்டான். விக்கிரமசோழன் தன் மகனுக்குக் குலோத்துங்கன் எனத் தந்தையின் பெயரையே சூட்டினான்.

தாய்வழிப் பாட்டன் பெயர்:

எவ்வாறு தந்தை வழிப் பாட்டன் பெயரை மக்களுக்கு இட்டனரோ அதுபோன்று தாய்வழிப் பாட்டன் பெயரையும் மக்களுக்கு இடுதலும் வரலாறு அறிந்ததே. சிறப்பாகத் தாயின் தந்தை வலிமையும், சிறப்பும் மிக்கவனாயிருந்தால் அவன் பெயரை குழந்தைகள் பெறுவது மரபு. பாண்டிய மன்னன் இராஜசிம்மன் என்பவனின் தாய் பல்லவ இராஜசிம்மனின் மகள் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். பல்லவர்களில் தந்திவர்மனும், நிருபதொங்கனும் இராஷ்டிரகூடப் பெண்களிடம் பிறந்தவர்கள். ஆதலின் இராஷ்டிரகூட மன்னர்கள் தந்திதுர்க்கனின் பெயரையும், நிருபதொங்கனின் பெயரையும் கொண்டு விளங்கினார்கள். சோழர்களில் முதல் இராஜராஜனின் மகள் கீழைச்சாளுக்கிய மன்னனை மணந்தாள். அவள் மகன் இராராஜன் என்று அழைக்கப்பெற்றான். அதே போன்று முதல் இராஜேந்திரனின் மகள் அம்மங்காதேவி, கீழைச்சாளுக்கிய மன்னன் இராஜராஜநரேந்திரனை மணந்திருந்தாள். அவள் மகன் இராஜேந்திரன் என்று பெயரிடப்பட்டான். பின்னர் அவனே குலோத்துங்கன் என்று பெயர் சூடியவன்.

பேரரசன் பெயர்:

இவை தவிர மன்னர்கள், தங்கள் அரசை நிலைநிறுத்த உதவிய பேரரசர்களின் பெயரையே தங்கள் மக்களுக்கு இடுவதும் ஒரு மரபாகும். பல்லவ வரலாற்றில் இரண்டு சான்றுகள் கிடைக்கின்றன. மேலைக் கங்கர்களது ஆட்சியையும், கதம்பர்களது ஆட்சியையும் நிலைநிறுத்த மிகவும் உதவியர்கள் பல்லவர்கள். பல்லவர்களின் சிற்றரசர்களாக, கங்கர்களும், கதம்பர்களும் ஆண்டிருக்கிறார்கள். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன், ஆர்யவர்மன் என்னும் கங்க மன்னனை கங்க ஆரியாசனத்தில் அமர்த்தி முறைப்படி அபிஷேகம் செய்து முடிசூட்டினான். அதனால் ஆர்யவர்மன் தன் மகனான மாதவர்மன் என்பவனுக்குச் சிம்மவர்மன் என்றே மறுபெயர் சூட்டினான். கங்க மன்னனுக்கு முடுசூட்டிய பல்லவ சிம்மவர்மன், கதம்பமன்னன் விஷ்ணுவர்மன் என்பவனுக்கும் முடிசூட்டினான். கதம்ப மன்னன் தன் மகனுக்கு சிம்மவர்மன் என்றே பெயர் சூட்டினான்.

மாற்றரசன் பெயர்:

இது தவிர போரில் தோற்ற மன்னன், வெற்றி பெற்ற மன்னனின் முன் தன் மகவை வைத்து அதற்கு வெற்றி கொண்ட மன்னனின் பெயரைச் சூட்டுவதும் உண்டு. மூன்றாம் ராஜராஜசோழன் மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் தோற்றான். சுந்தர பாண்டியன், சோழன் இழந்த நாட்டை அவனுக்கே திருப்பிக்கொடுக்க அவனைப் பொன்னமராவதிக்கு அழைத்தான். அப்போது சோழன் தன் மகவை சுந்தரபாண்டியனிடம் நின்பேரென்று காட்டினான் என்பதை போன வளவன் உரிமையோடும் புகுந்து பெற்ற புதல்வனை நின் பேரென்று முன்காட்டி என்று கல்வெட்டு குறிக்கிறது.

ஐம்படைத் தாலி:

சிறு குழந்தைகள் எழுந்து நின்று நடைபயிலும் முன்னரே ஐம்படைத்தாலி அணிவது வழக்கம். சங்கம், ஆழி, வில், வாள், கதை ஆகிய ஐந்து படைகளைப்போல் பொன்னாலும், விலை உயர்ந்த ரத்தினங்களாலும் சிறிய அளவில் செய்து, குழந்தையின் அரையிலே கட்டுவதையே ஐம்படைத்தாலி என்பர். குலோத்துங்க சோழன் குழந்தையாய் இருந்தபோது ஐம்படைத்தாலி அணிவிக்கப்பட்டான்.

பூணூல்:

உரிய வயது வந்தவுடன் அரசிளங்குமரர்களுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. இது எந்த வயதில் என்று அறிய முடியவில்லை. தருமசாத்திரங்கள் அரச மக்களுக்கு பதினொறு வயதில் பூணூல் அணிவிக்கலாம் எனக் குறிக்கின்றன. பூணூல் அணிவித்ததும் அவன் இருபிறப்பாளனாகக் கருதப்படுகிறான். அரசர், வணிகர், அந்தணர் முதலிய குலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்கும் வயது வந்ததும் பூணூல் அணிவிக்கப்படுவர். இதிலிருந்து இவர்கள் நான்மறைகளையும் பிற கல்விகளையும் கற்கும் தகுதிபெறுவர். இவ்வழக்கம் சங்ககாலத்தில் இருந்ததா எனத்தெரியவில்லை. ஆனால் பல்லவர் காலந்தொட்டு இருந்திருக்க வேண்டும். குலோத்துங்கன் பூணூல் அணிந்து கொண்டான் என்பதை ஜயங்கொண்டார் முந்நூல் பெருமார்பில் சிறந்து ஒளிர, இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர், மாண் உருவாய்-வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளீ, வில்வித்தை, வாள் வித்தை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலிய கற்றான் எனப் பாடுவர். இவ்வாறு கல்வியிற் சிறப்பெய்திய பின்னரே அரசாளும் பொறுப்பில் சிறப்பர் என்பது அக்காலத்தோர் கருத்து.

சிறு வயதில் அரசு:

ஆயினும் ஒரு சில நேரங்களில் அரசிளங்குமாரர்கள் சிறுவர்களாக இருக்கும்போது நாடாளும் மன்னராக முடிசூட்டும் நிலை ஏற்படுவதும் உண்டு. கரிகால்வளவன் சிறுவனாக இருந்தபோது மன்னனாகப் பொறுப்பேற்றான் என்று அறிவோம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறுவனாக இருந்தபோதே அரசனான். பல்லவமன்னன் நந்திவர்மன் பல்லவ மல்லன் தனது 12ம் ஆண்டிலேயே காஞ்சி அரியணை ஏறும் சூழ்நிலை ஏற்பட்டது. அவனுக்கு முன்னர் ஆண்ட இரண்டாம் பரமேச்சுரவர்மன் இறந்த பிறகு, நாடாளும் தகுதி வாய்ந்த அரச குலத்தவன் யார்? என நாட்டார் ஆராய்ந்தனர். ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் ஆண்ட மன்னனின் தம்பி வழிவந்தவன் நந்திவர்மன் எனக் கண்டு அவனுக்கு முடிசூட்டினர் என்று கல்வெட்டுக் கூறுகிறது.
அரசிளங்குமாரர்கள் சிறுவயதிலேயே முடிசூட்டப்பட்ட போது அல்லல்களை எதிர்த்து நிற்க வேண்டி வந்தது. கரிகாலன் மாற்றார்களின் கரத்தில் சிக்காமல் தப்பிப் பின்னர் தன் நாட்டைக் காவல் பூண்டதை அறிவோம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளயன் என்ற காரணத்தால் சேரனும், சோழனும், ஐம்பெரும் வேளிர்களும் அவன் மீது போருக்கு எழுந்தனர். அவன் அவர்கள் அனைவரையும் ஒருங்கே தோற்கடித்து வாகை சூடினான். நந்திவர்மன் பல்லவமல்லன் முடிசூடியதும் பல போர்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அரசிளங்குமாரர்கள் சிறு வயதிலேயே முடிசூடும் நிலை ஏற்பட்ட போது பகைவர்களிடமிருந்து மட்டுமல்ல, அரசர் குலத்தவரிடமிருந்தே தங்களைக் காத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. கரிகாலன் முடிசூடத் தகுந்தவன் என்று அறிந்ததும் சிறையில் வைக்கப்பட்டான் என்றும், தன் வலியாலேயே தப்பி வந்து மாற்றோரை அழித்து முடிசூடினான் என்றும் அறிகிறோம். சோழமன்னன் இரண்டாம் இராஜராஜன் இறக்கும் போது அவனுக்கு இரு மக்கள் இருந்தனர். ஒருவனுக்கு ஓராண்டும், மற்றவனுக்கு ஈராண்டுமே நிறைந்திருந்தன. அதனால் எதிரிலிப்பெருமாள் என்பவனுக்கு முடிசூட்டி இராஜராஜன் இறந்தான். ஆனால் அவனது இரண்டு சிறுவர்களுக்கும் மனைவியருக்கும் ஆபத்துச் சூழ்ந்தது. அவர்களைத் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பி என்பவன் ஆயிரத்தளியிலிருந்து (தாராசுரத்துக்கு) இராஜராஜபுர அரண்மனைக்கு அழைத்து வந்து கண்ணெனக் காத்தான் என அறிகிறோம். பின்னர் முடிசூடிய மூன்றாம் குலோத்துங்கன் அம்மக்களில் ஒருவனே (சதாசிவ பண்டாரத்தார் - பிற்காலச் சோழர் வரலாறு.)

இளங்கோப் பருவம்:

அரசிளங்குமாரர்கள் தக்க பருவம் அடைந்ததும் இளங்கோ என முடிசூட்டப்பட்டனர். இப்பருவத்தை இளங்கோப்பருவம் என்றே அழைத்தல் மரபு. முதல் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுகள் இளங்கோப்பருவம் எனக் குறிக்கின்றன. ஆயினும் இளங்கோப் பருவம் என்பது எந்த வயதிலிருந்து எந்த வயதுவரை எனத் தெளிவாகத் தெரியவில்லை. அரசனுக்கு அரியணை ஏறும் உரிமை பெற்ற மகன் மட்டும் இளங்கோ என முடிசூட்டப்பட்டானா அல்லது அரசமாதேவியரிடம் பிறந்த மக்கள் அனைவரும் முடி சூட்டப்பெற்றார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அரசமாதேவியரிடம் பிறந்தோர் அனைவரும் உரிய பருவத்தில் இளங்கோவாக முடிசூட்டப்பெற்றார்கள் எனக்கொள்ள ஏதுவிருக்கிறது. செங்குட்டுவனுடைய மைத்துனன் வளவன் கிள்ளியுடன் அவன் குடிப்பிறந்தார் ஒன்பதின்மரும் தங்களுக்கு இளவரசு கொடுத்ததையும் வேண்டாம் என்றனர். வளநாடழிக்க முனைந்து வளவன் கிள்ளியோடு போரிட்டு மடிந்தனர். அவர்களை இளங்கோ வேந்தர் என சிலம்பு குறிக்கிறது (சிலம்பு 27-120). மூத்த மகன் செங்குட்டுவன் இருக்க இளவல் இளங்கோ எனக் கூறப்படுவது இதையே குறிக்கிறது எனக்கொள்ளலாம். முதல் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி அவன் தம்பியரை இளங்கோக்கிளை எனக் கூறுகிறது. ஆதலின் இளங்கோ என்பது அரசமக்கள் அனைவரும் அடையும் ஒரு நிலை எனக்கொள்வதில் தவறில்லை. இது பெரும்பாலும் அவர்களது பிறந்த நாளையும் மீனையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும். இதை ஒரு பெரும் விழாவாக நடத்தியிருக்க வேண்டும். இவ்விழாவில் என்ன சடங்குகள் செய்யப்பட்டன எனத் தெரியவில்லை.

யுவமகராஜா:

பல்லவமன்னன் விஜயஸ்கந்தவர்மன் ஆண்டபோது புத்தவர்மன் என்பவன் யுவமகாராஜா என்று குணபதயே செப்பேடுகளில் குறிக்கப்படுகிறான்.
கி.பி. நான்கு, ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து ஆண்ட யுவமகாராஜா சிவஸ்கந்தவர்மன் தானே ஆணத்தியாக நின்று ஒரு நில தானம் அளித்திருக்கிறான். பல்லவர்களின் சில செப்பேடுகளில் யுவமகாராஜா விஷ்ணு கோபவர்மன் என்பவன் குறிக்கப்படுகிறான். இவன் மகன் சிம்மவர்மன் என்பவன் தன் ஆட்சியாண்டில் பல தானங்கள் அளித்திருக்கிறான். பாட்டன், தந்தை, அரசன் என மூன்று தலைமுறைகளைக் குறிக்கும் இவனது செப்பேடுகள் பாட்டனையும் அவனையும் மகராஜா என்று குறிக்கின்றன. ஆனால் அவன் தந்தையை மட்டும் யுவமகராஜா விஷ்ணுகோபன் என்றே குறிக்கின்றன. விஷ்ணுகோபனுக்கு சிம்மவர்மன் என்ற ஒரு முன்பிறப்பு உண்டு. அவன் நாட்டை ஆண்டான். விஷ்ணுகோபன் தன் வாழ்நாள் முழுவதும் யுவமகாராஜா என்றே அழைக்கப்பெற்றான். வீரராஜேந்திரசோழனுக்கு அதிராஜேந்திரன் என்று ஒரு மகன் இருந்தான். அவனே வீரராஜேந்திரனுக்குப் பிறகு முடிசூடினான். ஆயினும் வீரராஜேந்திரன் குலோத்துங்கனை இளவரசாகச் செய்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இது வேங்கி நாட்டின் இளவரசாக முடி சூட்டப்பெற்றதைக் குறிக்கிறதா அல்லது ஏனைய அரசிளங்குமரர்களைப் போல் இவனுக்கு இளங்கோ விழாவை நடத்த அதையே பின்னர் முடிசூடப் போவதைக் குறிக்கும் வகையில் இலக்கிய நயம் சிறக்க ஜயங்கொண்டார் பாடினாரா என்பது தெளிவாயில்லை.

பட்டத்தரசியின் மகன்:

அரசர்கள் தங்கள் மாதேவியரிடத்துப் பிறந்த மக்களனைவரையும் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் இளங்கோவாக்கினர் என்று கூறுகிறோம். இருப்பினும் தனக்குப் பின்னர் அரியணை ஏற மூத்த புதல்வனைத் தேர்ந்தெடுத்தனர். இம் மூத்த புதல்வன் மூத்த பட்டத்து முதலரசியின் தலைமகனா அல்லது அரசமாதேவியர்களில் அனைவரிலும் எவருக்கு முதலில் பிறந்தவனோ அவனா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. பட்டத்து முதலரசியின் மகனே நாடாளும் தகுதி உடையவனாயிருந்திருக்க வேண்டும். ஆயினும் வேறுபாடுகளும் உண்டு. முதல் ஆதித்த சோழனுக்கு இருமாதேவியர் இருந்தனர். முதல்வள் இளங்கோ பிச்சியென்பாள். இவள் மைந்தன் ஆதித்தன் கண்ணரதேவன் என்பவன். இரண்டாமவள் திரிபுவன மாதேவி என்னும் வயிரியக்கன் என்பவள். முதல் பராந்தக சோழன் இவளுடைய மகனாயிருக்கலாம். முதலரசியின் மகனான கன்னரதேவனுக்கு பட்டம் அளிக்கப்படவில்லை. பராந்தகனுக்கே அளிக்கப்பட்டது. இதிலிருந்து முதலரசியின் மகன் என்றல்லாமல் முதலில் பிறந்த மகனுக்கும் அரசு அளிக்கப்பட்டது என்றும் கொள்ள ஏது இருக்கிறது.
அரசாள்வதற்கு முதல் மகனே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப் பட்டபோதிலும், அறிவிலும், ஆற்றலிலும், சிறந்தவனே சில நேரங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டான். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும்மூத்தோன் வருக என்னாது அவருள்அறிவுடையோன் ஆறு அரசுஞ்செல்லும்...........................(புறம். 183) என்னும் புறநானூற்றுச் செய்யுளும் இதையே வலியுறுத்துகிறது எனலாம். இரண்டாம் பரமேச்சுர பல்லவன் இறந்ததும், இரண்யவர்மனின் நான்கு மக்களில் முதல் மூவரும் இருக்க பட்டம் எய்தியவன் நான்காம் மகனான நந்திவர்மன் பல்லவமன்னனே. குலோத்துங்க சோழனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்களில் நான்காவது மகனான விக்ரமசோழனே அரியணை ஏறினான். ஆளுகின்ற அரசனின் மகன் குழந்தையாக இருப்பினும், முடி சூட்டப்படுவது மரபு என்று கண்டோம். ஆயினும் இளங்கோவான அரசனுக்கு முடு சூட்டும் போது மகனுக்கு யுவமகாராஜா என பட்டங்கட்டுதலும் உண்டு. அச்சுதராயர் சக்ரவர்த்தியாகப் பட்டம் கட்டப்பட்ட போது வேங்கடாத்ரி என்பவன் தன் தலைமகன் விஷ்ணுவர்மன் என்பானுக்கு நாடளித்தான். இது ஆற்றலின் அடிப்படையிலா, அல்லது அன்பின் அடிப்படையிலா என்று தெரியவில்லை.

வழி மாறல்:

அரசகுமாரன் சிறுவனாக இருக்கும்போது அரசனுக்குப்பின் அவன் தம்பியரும் அரசை ஏற்று ஆள்வதும் உண்டு. தம்பியருக்குப்பின் அவருடைய வழி வந்தவர்களே நாட்டை ஆளத்தலைப்பட்டனர். பராந்தக சோழரின் தலைமகன் இராஜாதித்தன், பராந்தகனின் ஆட்சி காலத்திலேயே போரில் மாண்டான். ஆதலின் பராந்தகனுக்குப்பின் அவன் இரண்டாம் மகன் கண்டராதித்த தேவர் பட்டத்துக்கு வந்தார். அவருக்கு மதுராந்தக உத்தமசோழன் என்று ஒரு மகன் உண்டு. அவன் சிறியவனாயிருந்தான். ஆதலின் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார். அரிஞ்சயற்குப் பிறகு உத்தமசோழன் அரியணை ஏறவில்லை. அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் ஆண்டான். அவனும் உத்தமசோழனை இளவரசனாக நியமிக்கவில்லை. தன் தலைமகனான ஆதித்தகரிகாலனையே இளவரசாக்கினான். இதிலிருந்து முடிசூட்டும் உரிமை உடைய சிறிய மகன் இருப்பினும், மன்னனின் தம்பி முடிசூடினால் அவன் வழிக்கே அரசு சென்றது என்று தெளிவாகிறது.

இளங்கோவாகி அருஞ்செயல்:

அரசகுமாரர்கள் இவ்வாறு இளங்கோவாக முடி சூட்டப்பட்டபோது அவர்களுக்கு புதிதாகப் பெயர் ஏதாகிலும் இடப்பட்டதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு, அரசனாக முடிசூட்டப்படும் போது செய்யப்பெறும் செயல்கள் எல்லாம் சிறிய அளவிலே செய்யப்பெற்றன எனக் கொள்ளலாம். இளங்கோவான பிறகு அவர்கள் செயற்கரியசெயல் செய்து புகழ் தேட ஆரம்பித்தனர். சேர மன்னன் பெருங்கடுங்கோன் என்பவனின் மகன் இளங்கடுங்கோ என்பவன் இளங்கோ ஆனபோது யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் சமணத்துறவிக்கு ஒரு பாழி அமைத்துக் கொடுத்ததைக் கோஆதன் செல்லிரும்பொறை மகன், பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ ஆகி அறுத்த கல், என்று புகளூர் கல்வெட்டு குறிக்கிறது. இது கி. பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு. புண்ணியச் செயல் செய்ததை இது குறிக்கிறது. இளங்கோவாகப் பட்டம் ஏற்றவுடன் தன் வீரத்தை உலகோருக்கு அறிவிக்கும் வகையில் மாற்றார் மீது படையெடுத்து அரும்பெரும் வெற்றிகளைப் பெற்றனர் என்றும் அறிகிறோம். பல்லவமன்னன் சிம்மவர்மன் ஆண்டபோது அவன் மகன் சிம்மவிஷ்ணு என்பவன் பல்லவராட்சியைத் தெற்கே காவிரிக்கரை வரை பரப்பினான் என்று பல்லவன் கோயில் செப்பேடு கூறுகிறது. சோழப்பேரரசர்களின் மக்களில் பலர் இளவரசர்களாக இருந்தபோது பெரும் தண்டு கொண்டு போரிலே வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பராந்தகன் மகன் இராஜாதித்தன், சுந்தரசோழன் மகன் ஆதித்த கரிகாலன் முதலியோரை இங்கு குறிப்பிடலாம். இராஜராஜனின் மைந்தன் இராஜேந்திரன் இளவலாக இருந்தபோது மகாதண்ட நாயகனாக வடதிசை சென்று வெற்றி முழக்கம் செய்தான். முதல் குலோத்துங்கனை இளவரசுப் பட்டத்தில் வைத்தவுடனே மாற்றரசர்களின் செல்வங்களைக் கவரப் போர் தொடுத்தான் எனப் பரணி ஆசிரியர் குறிக்கிறார்.