◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

2. கொற்றம் எய்திய பெரியோர் மருக

சாளுவன்குப்பம் பல்லவ கிரந்தக் கல்வெட்டு - மாமல்லபுரம்
சாளுவன்குப்பம் பல்லவ கிரந்தக் கல்வெட்டு - மாமல்லபுரம்

முடிசூடல்:

அரசகுலத்துதித்தோன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நேர்முகமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் விழாவே முடிசூட்டுவிழா என்பதாம். கணிதவல்லுநர் குறித்த நல்ல மீனுடைய, நல்ல நாளில் நல்ல வேளையில் அரியனையில் அமர்த்தி முடி கவிப்பது, ஆட்சியின் அடையாளமான் சின்னங்களை அணிவித்துப் பொறுப்பை அவனிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கம். இதைக் கொற்றம் எய்துதல் என்றும் குறிப்பர்.

முடிபுனை விழா:

இவ்விழா எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி ஒரு சில குறிப்புகளை கலிங்கத்துப்பரணி குறிக்கிறது. “மன்னன் அந்நாளில் வேதமந்திரங்கள் முழங்க திருமஞ்சனம் ஆடினான். பின்னர் அரியணை ஏறினான்; அரியணையில் ஏறும்போது பிறர் அருகம்பில்லை ஏந்த அதன் மீது கால் வைத்து பின்னர் அரியணை ஏறினான். அப்போது மறையவர்கள் விதிப்படி முடியைக் கவித்தனர். மனுநெறி தழைப்பதற்காகவே முடிதரிக்கப்பெற்றது. அம்முடியில் பல விலையுயர்ந்த மணிகள் பதிக்கப்பெற்றிருந்தன. முடிகவிழ்க்கப்பட்ட பின்னர் புண்ணியநீர் எல்லாம் முடி மீது சொரியப்பட்டன. அரசனுக்குரிய கொடி கொடுக்கப்பட்டது. முத்துக்கள் அணிந்த வெண்மையான கொற்றக்குடை அரசனின் முடி மேல் பிடிக்கப்பட்டது. பின்னர் மன்னன் தீயில் வேள்வி வேட்டான். வேட்ட பின்னர் குழுமியிருந்த புலவர்களுக்கு ஏராளமான பரிசுகளை அளித்தான். மற்ற அரசர்கள் இறை கொணர்ந்து செலுத்தினர்,” என்று ஜயங்கொண்டார் குறிக்கிறார். அருகம்பில், பில் வகைகளில் அரசு போன்றது. ஆதலின் “அருகே எவ்வாறு நீ பில்களில் சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று நானும் மன்னர்களில் சிறந்தோனாகுக” என்று முடிசூடிம் மன்னன் கூறி ஏறல் வேண்டும் என்று வடமொழி நூல்கள் குறிக்கின்றன. மிகவும் தொன்மையான உபநிடதங்களுக்கும் முற்பட்ட பிராம்மணங்கள் என்னும் நூல்களில் அரசனுக்கு முடிசூட்டும் விழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

அங்கங்கள்:

அரசன் பொறுப்பை ஏற்றான் என இவ்விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சி குறிக்கிறது எனக் கூறுவது கடினம். முடிசூட்டுவிழா அல்லது மகுடம் புனைவிழா என்று கூறுவதிலிருந்து முடி அணிவதுதான் அரசனின் சின்னம் எனக் கொள்ளலாம். முடியுடைவேந்தர் மூவர் என்ற சங்ககால வழக்கும் இதையே குறிக்கிறது.
பாண்டியன் பராந்தக வீரநாராயணனைக் குறிக்கும் போது ‘புனைமணிப் பொன்முடி சூடி’ என்று சின்னமனூர் செப்பேடுகள் குறிக்கின்றன. முதற்குலோத்துங்கனை “குலமணிமகுடம் முறைமையிற் சூடி” என்று மெய்கீர்த்திகள் பாடுகின்றன. எனவே முடிசூட்டல் அரசு பொறுப்பேற்பதில் தலையாய அங்கம் எனக்கருதப்பெற்றது. ஆயினும் இவ்விழாக்கள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அரசனாவதின் இன்றியமையாத சின்னங்கள் என்று தான் கொள்ளவேண்டும். முரசு முழங்குதானை மூவர் என்று கூறும் சங்ககால மரபும், செங்கோல் வேந்தன் என்பதும் இதையே நினைவுறுத்துகின்றன. தளவாய்புரம் செப்பேடுகள், செங்கோல் பிடித்த ஆண்டு என்னும் பொருளில் செங்கோலாண்டு எனக் குறிக்கிறது. திருவேங்கை வாசல் கல்வெட்டு “பரகேசரி செங்கோல் பற்றிய ஆண்டு அஞ்சில்” எனக் கூறுவது (136/19) இம்மரபையே குறிக்கும். ‘சிம்மாசனத்து வீற்றிருந்தருளிய’ என்று கூறும் கல்வெட்டுகளும் இன்னம் பிற மரபுகளும் இவ்விழாவின் எல்லா அங்கங்களும் சேர்ந்து, ஒரு முழுமை அளித்ததை குறிக்கின்றன. தாமம் நிறைந்த நெடுங்குடை, சக்கரம், புலிக்கொடி, செங்கோல், அணை, மணி நெடுமுடி முதலிய சின்னங்களை சோழர் மெய்கீர்த்திகள் குறிக்கின்றன. தாமநெடுங்குடை பொழிந்ததவள வெண்ணிலா குளிர்பொதியச்சுடர்சக்கரவெற்பில் தனதயிற் சக்கரவெயிலெறிப்பசினிப்புலியுஞ் செங்கோலும் அணைத்துயிர்க்குங் காவல் பூணபணியனை மிசைப் பரஞ்சோதி பாற்கடல் நின்றெழுந்தருளிமணி நெடுமுடி கவித்து...... என்று இரண்டாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன.

முடி:

செம்பொற் திருத்தகு முடி (முதலாம் ராஜேந்திரன்), குலமணி உரிமையில் சிறந்த மணிமுடி (முதலாம் குசோத்துங்கன்), சுடர்மணி மகுடம் (விக்கிரம சோழன்), சீர்வளர்ந்த முடி (இரண்டாம் குலோத்துங்கன்), சோதி மணி முடி (இரண்டாம் ராஜாதிராஜன்), என்று பலவாறாக கல்வெட்டுகளில் முடி புகழப்படுகிறாது. குலத்தின் தனம் என்றும் முடி குறிக்கபடுகிறது. கதிரவன், குலமுடி சூடி (ராஜாதிராஜன் II) கேரளன் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும் என்றும் (முதலாம் இராஜேந்திரன்), குலமணிமகுடம் (முதலாம் குலோத்துங்கன்), என்றும் மெய்கீர்த்திகள் பாடுகின்றன. முடிபுனைவதை “உரிமையில் சூடல்”, என்றும் “முறைமையில் சூடல்” என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. தினகரோதயமெனச் செழுங்கதிர் சொரியும் கனக மாமுடிகவின் பெறச் சூடி, என்று (சடாவர்மன் சுந்தர பாண்டியனின்) ஒரு கல்வெட்டு அழகாக குறிக்கிறது. விசைய மாமணிமகுடம் மேய்ந்து (முதலாம் வீர ராஜேந்திரன்) என்றும் சோதிமணி முடி புனைந்து என்றும் குறிப்பதையும் காணலாம். மாறவர்கன் சுந்தரபாண்டியனின் மெய்கீர்த்தி சிங்காதனத்துடன் முடிசூடினான் என மிடை கதிர் நவமணி வீரசிங்காதனத்துவன் முடி சூடி என்று குறிக்கிறது. மற்றொரு மெய்கீர்த்தி வெவ்வேறு வகுத்த முது நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர்க்கொரு தனி நாயகன் என்று உலகேத்த திருமுடி சூடி (இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்) என்று குறிப்பது முடிசூடலின் பெருமையைக் குறிக்கிறது.
முடி குலமுடி என்றும் முறைமுடி என்றும் கூறப்பட்டது. வழிவழியாக வந்த முடியை இவ்விழாவின்போது மன்னர் தலையில் அணிவித்தனர் என்று கொள்ளலாம். ஆயினும் தன் ஆட்சிக்காலம் முழுவதுமே இதை அணிந்திருந்தனரா அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கும் ஏற்ப முடிகளை செய்து கொண்டனரா என்றும் தெளிவாயில்லை. ஒவ்வொரு மன்னரும் தங்களுக்கேற்ற முடிசெய்து பிற நாட்களில் தரித்தனர் என்றும் கொள்வதில் தவறில்லை. முடி மகுடம் எனவும் கிரீடம் எனவும் வழங்கப்படும். இது பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டு விலை உயர்ந்த மணிகள் இழைத்து சிறந்த வேலைப்பாடுடன் விளங்கியது என்று அறியலாம். இருப்பினும் வேறுசில முடிகளும் புனைந்து கொள்ளப்பட்டன. சங்கலாலச் சேர மன்னன் ஒருவன் களங்காயாலும் நார்முடியாலும் ஆனதொரு முடியைப் பூண்டான் என்றும் அதனால் களங்காயிக் கண்ணி நார்முடிச்சேரல் என்றும் பெயர் பெற்றான் என்றும் அறிகிறோம். இது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை. இம்முடி நாரால் ஆக்கப்பெற்றது என்றும் களங்காயால் ஆன கண்ணி ஆரம் அதன் அடியில் சுற்றப்பட்டிருந்தது என்றும் எண்ணலாம். இது வெறும் காயாலும் நாராலும் ஆன முடியா அல்லது பொன்னால் இவ்வுருக்களில் செய்யப்பெற்ற முடியா என்பதில் ஆராய்ச்சியாளரிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பொன்னாலேயே இவ்வுருவங்களில் செய்யப்பட்டிருந்தது என்று கொள்வதில் தவறு இல்லை. ‘அரசிலை’ ‘மாங்காய் மாலை’ என்பன மாங்காயால் ஆனமாலை என்பதில்லாமல் மாங்காய்போல் செய்யப்பட்டது என்று பொருள் கூறுவதுபோல, நார் போலும் களாங்காய்போலும் செய்யப்பட்ட பொன்முடி எனக்கொள்ளினும் தவறில்லை. அரிகேசரி பராங்குச மறவர்மானின் முடி, மகரிகை அணி மணி நெடுமுடி என்று குறிக்கப்படுகிறது. இதிலிருந்து இவன் முடி நீண்டதாயிருந்தது என்றும் அதில் மகரம் போன்ற வேலைப்பாடு இருந்தது என்றும் அறிகிறோம். மகரிகை அணி உடைய சில முடிகளை பண்டைய சிற்பங்களில் காணலாம். பாண்டியன் குலசேகரனுடைய கல்வெட்டுகளிலும் “ஆரும் வேம்பும் மணி இதழ் புடையாத் தாருஞ் சூழ்ந்த தடமணி மகுடம்” எனக் குறிப்பு உள்ளது.

சிற்பங்களில்:

பல்லவர்களது மகுடங்கள் உருளையாகவும் நெடியவையாகவும் இருந்தன என்பதை மாமல்லபுரத்தில் உள்ள இரு சிற்பங்களிலிருந்து அறியலாம். மாமல்லபுரத்தில் ஆதிவராஹ குகையில் சிம்மவிஷ்ணும், மஹேந்திரன் என்ற இரு மன்னர்களின் உருவங்கள் உள்ளன. அவற்றில் இரண்டிலும் உருளையான நெடிய முடிகளைக் காண்கிறோம். அவற்றின் மேல் தாமரை மொட்டு போன்ற அணியையும் காண்கிறோம். காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலில் பல பல்லவ மன்னர்களின் சிலைகள் உள்ளன. அவற்றில் சிறந்த வேலைப்பாடு உடைய முடிகள் காண்பிக்பபட்டுள்ளன. சிலவற்றில் கண்ணியை போல் தடித்த மாலை போன்ற அணி, முடியின் அடியை அலங்கரிக்கின்றன. மேல் பகுதி கூர்முனையாக உள்ளது.
இவை தவிர காஞ்சி வைகுந்த பெருமாள் கோயிலில் நந்திவர்மணின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்திவர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும் யானையின் உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத் தலை போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது. வைகுந்தப் பெருமாள் கல்வெட்டு இவ்வாறு குறிப்பினும் சிற்பத்தில் யானைத்தலை போன்ற முடி காணப்படவில்லை. யானைத் தலை போன்ற முடி எங்கும் பல்லவர் சிற்பங்களில் காணக் கிடைக்கவில்லை என்பது இங்கே குறித்தல் வேண்டும். பாண்டிய மன்னருடைய சிற்பம் என்று கூறும் வகையில் திட்டவட்டமாக கூறக் கூடிய சிற்பங்கள் ஏதுமில்லை. எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் செய்தளித்த கடவுளர் சிற்பங்களில் காணப்படும் முடிகளைப் போலவே அம்மன்னர்களது முடிகள் இருந்திருக்க கூடும். சோழ மன்னர்களது முடிகள் அதிகம் நீண்டோ அல்லது குறைந்தோ இன்றி, மேல் கூர்மையாக மிகவும் வேலைப்பாடுடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்று சில செப்பு படிமங்களில் இருந்து அறியலாம். விஜயநகர மன்னர்களது முடிகள் நீண்டு நான்கு புறங்களிலும் பட்டையான தங்க தகட்டுடன் திகழ்ந்திருந்தன என்று கிருஷ்ண தேவராயருடைய சிற்பத்திலிருந்து காண்கிறோம். இவருடைய சிலைகள் தில்லையிலும் திருப்பதியிலும் உள்ளன. இது போன்று தான் பின்னர் வந்த நாயக்க மன்னர்களின் முடிகளிலும் காணப்படுகின்றன. இன்றும் ஸ்ரீரங்கத்தில் அரையர் என்பார் சூடும் முடிபோன்றவை அவை. இருப்பினும் திருமலை நாயக்கரின் முடி, மேல் நுனியில் ஒரு புறம் வளைந்து காணப்படுகிறது. மேலும் நல்ல பொன்னும் பட்டும், முத்துக்களும், இரத்தினங்களும் இழைத்துச் செய்யப்பட்டு விளங்குவதைக் காண்கிறோம். திருமலை மன்னர் தான் அணிவது போன்ற முடி ஒன்றை மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்திற்கு அளித்தது இன்றும் உள்ளது.

மறையவர் முடி சூட்டினர்:

மன்னனின் புரோஹிதரே முடியை மன்னன் தலையில் சூட்டுவித்தார் எனக்கருத இடமிருக்கிறது. வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியனுக்கு அவன் புரோஹிதரான அகத்தியர் தன் கரத்தால் முடி சூட்டினார் என கும்பசம்பவ கரபிராப்த அபிஷேக கிரிய எனக் குறிக்கிறது. மறையவர் முடி எடுத்தனர் எனக் கலிங்கத்துப்பரணியும் கூறும், சோழர்களின் கல்வெட்டுகளில் மன்னர்கள் பின்னோருக்கு முடி சூட்டுவதை முடிகவிப்பித்து என்று கூறுவதும் இதையே குறிக்கிறது. எதிரிலிப் பெருமாளை மண்டை கவிப்பித்து போந்தார் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இரண்டாம் இராஜாதிராஜன் சிறுவனாக இருந்தபோது திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பி என்பவன் அவனுக்கு முடி சூட்டியதை கல்வெட்டு ராஜாதிராஜதேவர் என்று திரு அபிஷேகம் பண்ணுவித்து என்று கூறுவதும் இதையே வலியுறுத்துகிறது. மன்னன் முடி சூட்டினான் என்று சில கல்வெட்டுகள் குறிக்கின்றன. முன் கூறியவற்றிலிருந்து இது மன்னர்கள் புரோஹிதரை கொண்டு சூட்டியதைக் குறிக்கிறதா அல்லது தாங்களே அணிவித்ததைக் குறிக்கிறதா என்று தெரியவில்லை.

முடி கவிழ்ந்தால்

முடி, அரசன் என்பதைக் குறிக்கிறது என்றோம். அது கவிழ்ந்தால் அரசு வீழ்ந்தது என்று கருதப்படும். போரில் மன்னர்கள் மாற்றரசர்களின் முடியைக் கைப்பற்றுவது ஒரு குறிக்கோளாகவே கருதப்பட்டது. முடி கொண்ட சோழன் என்றே ஒரு மன்னர் பட்டம் பூண்டான். பாண்டியன் இராஜசிம்மன் என்பவன் சோழனிடம் தோற்று ஓடுயபோது தன்முடியை ஈழத்தில் கொண்டு மறைத்தான். பின்னர் இராஜேந்திரசோழன் அம்முடியைக் கவர்வதற்காக ஈழத்தின் மீது படையெடுத்து ஈழத்தரசன் முடியையும், முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்தர முடியையும் கவர்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. இராஜாதிராஜனுடன் போர் புரிந்த சுந்தரபாண்டியன் என்பவன் தன் முடி விழத் தலை விரித்தோடினான் எனக் கல்வெட்டு கூறுகிறது. மன்னன் தன்னுடைய அடிகளில் மாற்றார்களின் முடியை வீழ்த்தல் தன் வீரத்துக்கும் மாற்றாரின் தாழ்வுக்கும் எடுத்துக்காட்டு எனக் கருதினான். இது சங்க காலத்திலிருந்தே இயங்கிவந்த மரபெனலாம். பல மன்னர்களின் அடியை மாற்றாரின் முடி அலங்கரித்தது எனப் புலவர் பாடுவர். மூன்றாவது குலோத்துங்கன் வீரபாண்டியன் என்பானை வென்றான். அவனை அழைத்து அவனது முடிமேல் தன் அடியை வைத்தான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

முடியால் கழல்:

மாற்றரசரது பொன்முடியைக் கைப்பற்றிய மன்னன் அம் முடியைக் கழலாக்கி தன் காலில் அணிந்து கொள்ளுதல் மரபு. ‘கடந்தட்டவர் முடிபுனைந்த பசும் பொன்னின் அடிபொலியக்கழல் தைஇய வல்லாள” எனக் கிள்ளி வளவனை ஆவூர் மூலங்கிழார் பாடுகிறார் (புறம் 40). மாற்றரசரது முடிகளிலிருந்து ஆரம் செய்து மார்பில் அணிவதும் ஒரு மரபு என்பது எழுமுடி மார்ப (சிலம்பு 28-169) என்னும் தொடரால் விளங்கும். ஏழு அரசர்களை வென்று அவர்களது ஏழு முடியாலும் ஆரம் செய்து அதனைத் தரித்தான்.

முரசு:

முடிபுனைவிழாவில் மூன்று முரசுகளும் முழங்கின. மூன்று முரசுகள் வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்பவை ஆகும். வீர முரசுக்கு கொற்ற முரசு என்றும் பெயர். அரசனுடைய பல்வேறு தொழில்களுக்கு தனித்தனி முரசு இருந்தது. முரசு ஒரு கட்டிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.
புலியையும் குத்திக் கொல்லும் ஆற்றல் வாய்ந்த கொல்லேற்றின் (காளையின்) பைந்தோலை சீவாது போர்த்தி முரசு கட்டப்படும். இதை மயிர்க்கண் முரசம் என்று இலக்கியங்கள் கூறும் (மதுரைக்காஞ்சி 732). முரசு கரிய மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மேல் உள்ள தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இதனுடைய கண் பேயின் கண்ணை ஒத்திருக்கும் என்றும் கூறுவது மரபு. இதன் பக்கங்களில் மயில் பீலியும், தளிரோடு கூடிய உழிஞை என்னும் கொடியும் கட்டப்பட்டிருக்கும், முரசை அடிக்குங் குறுந்தடிக்குக் கடிப்பு என்று பெயர். முரசில் தெய்வம் உறைவதாகக் கொண்டு அதற்கு வழிபாடு செய்வர் (பலிபெறு முரசம் புறம். 362) ஏற்றுரி முரசின் இறைவன் (பெருங். 2-2: 29-30). முரசிற்கு நீராட்டி பலி கொடுப்பது வழக்கம். இம்முரச வழிபாட்டுக்குத் தனியாக ஒருவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் மந்திரங்கூறி இரத்தமும் கள்ளும் கலந்த பலியை, பிண்டமாக முரசிற்குப் படைத்தான் என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. (புறம் 51; பதிற்றுப்பத்து 30). வீர முரசம் நீராட்டப் பெறுவதும் (பதிற்றுப்பத்து 19, 7) இரத்தத்தைக் கொண்டு பூசிப்பதும் (பதி. பத். 29) சங்க கால மரபு எனப் பதிற்றுப்பத்தில் காணலாம். முரசு கட்டில் மிகப் பெரியதாக இருந்தது. முரசு நீராட்ட எடுத்துச் செல்லப்பட்ட போது அது அரசனுடைய முரசு கட்டில் என்று அறியாது மோசிகீரன் அதன்மீது படுத்து உறங்கி விட்டான். அரசனுடைய முரசு கட்டிலில் யாரும் ஏறக் கூடாது. இந்தத் தவற்றைப் பொறுத்ததோடன்றி கீரனுக்கு சாமரம் வீசினான் சேரன் இரும்பொறை. இந் நிகழ்ச்சியால் ஒப்பற்ற பாடல் ஒன்று தமிழுக்குக் கிடைத்துள்ளது (பாடல் சேற்கவும்). சேர சோழ பாண்டியரை முரசு முழங்கு தானை மூவர் என்று இலக்கியங்கள் கூறும் (பொரு-54, பெரும்பாணா. 33, புறம் 35). வெற்றி பெற போர் மீது செல்லும் அரசன் நல்ல நாளில் வாளோடும், குடையோடும், வீர முரசையும் வடதிசை பெயர்த்து வைத்தல் மரபு. போரில் பகைவர் நடுங்க முரசைச் சாற்றுவது வழக்கம். இடியென முழங்கு முரசு என்று புறம் (17) கூறுகிறது. பல்லவ அரசன் பரமேச்வரவர்மனுக்கும், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் நடந்த போரில் முரசொலி இடிபோல் முழங்கி மாற்றாரின் மனத்திலே பயத்தைத் தோற்றுவித்தது என்று கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. முரசுகளுக்குப் பெயர்கள் உண்டு. பல்லவ மன்னன் நந்திவர்மனின் முரசுக்கு சமுத்திரகோஷம் என்றும் கடுமுக வாதித்ரா என்றும் பெயர் இருந்தது. கடல் போல முழங்கும் முரசு என்றும் கடுங்குரன் முரசும் என்றும் பதிற்றுப்பத்து (68, 69) குறிப்பதை இது நினைவூட்டுகிறது. கடல் போல முழங்கும் குரல்கடுவாய்பறையுடைப் பல்லவர் கோன் என்று திருமங்கை மன்னன் தன் பாடலில் குறிக்கிறார். மாற்றரசர்களின் கடுவாய முரசைப் போரில் கைப்பற்றுவது சிறப்பாகக் கருதப்பட்டது. பல்லவ நந்திவர்மனுடைய முரசை சாளுக்கியன் கைப்பற்றிய செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. மாற்றரசர்களின் முரசைக் கைப்பற்றி அதன் கண்ணைக் கிழிப்பது ஒரு மரபு. வெற்றி கொண்ட மன்னன் வெற்றி பெற்ற மறுநாள் போர்க்களத்தில் வீர முரசுக்குக் சிறந்த வழிபாடு நடத்தி, படை வீரர்களுக்குப் பெருஞ்சோற்று விழா அளித்தான்.

செங்கோல்:

அரசையும், காவலையும், நீதிமுறை செய்தலையும் குறிக்கும் சின்னமாகக் கோல் கருதப்பட்டது. ‘ஆட்டை மேய்க்கும் இடையன் கையில் கோல் கொண்டுள்ளான். அது போல் குடிமக்களை மேய்க்க மன்னன் கொண்டது கோல்’ என்று ஒரு பேராசிரியர் குறித்துள்ளார். மக்களை ஆடு மாடுகளாகவும், மன்னனை இடையனாகவும், செங்கோலை இடையன் கைக்கோலாகவும், தமிழ் இலக்கியங்களோ, கல்வெட்டுகளோ உவமிக்கவில்லை. குடியை மேய்த்தல் என்று இல்லாது அதற்கு நேர்மாறாக, குடியைத் தழுவி கோலோச்சும் மன்னனின் அடியை உலகம் தழுவும் என்று வள்ளுவர் குறித்துள்ளார். கோன்மையை, செங்கோன்மை என்றும் கொடுங்கோன்மை என்றும் இரு பிரிவுகளில் வள்ளுவப் பேராசான் தன் நூலில் சிறப்பாகக் குறித்துள்ளார். இவற்றில் நீதி முறைசெய்தல், ஆட்சி, காவல் என்ற மூன்று பொருள்களையுமே அவர் கோன்மையின் இலக்கணமாக, யார் மாட்டு தேர்ந்து செய்வதே முறை, மன்னவன் கோல் நோக்கி வாழும் குடிஅந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல், என்றும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாரு தராசின் கோல், எடை எடுக்கும் போது சீராக நிற்குமோ, அது போன்று நீதிமுறை செய்வதில் நடுநிலை பிறழாது புரியும் சின்னமாகக் செங்கோல் கருதப்பட்டது. இப்பொருளில் அறம் துஞ்சும் செங்கோல், என்று புறநானூறு குறிக்கிறது. செங்கோலில் அறத்தின் தெய்வம் தங்கி இருக்கும் என்று ஆன்றோர் நம்பினர் (புறம். 35). அரசன் தன் மக்களாயினும் நடுநிலை பிறழாது நீதி வழங்கினான் என நமரென கோல் கோடாது, எனப் புறநானூறு குறிக்கிறது (புறம். 53). இதனால் அறவோர் மன்னனைப் புகழ்ந்தனர் (புறம். 221).
ஏரை உடைய குடி மக்களுக்கு நிழல் தரும் வகையில் கோலோச்சப் பட்டது என்று பொருளிலும் இலக்கியங்கள் கூறுகின்றன. நல்லியக்கோடனை, ஏரோர்க்கு நிழன்ற கோலினை என்று நல்லூர் நத்தத்தனார் பாடுகிறார் (சிறுபாணா-233). காவல் என்ற சொல்லில் கல்வெட்டுகளில் செங்கோல் வழங்கப்பட்டுள்ளது. சக்கரமும் செங்கோலுந் திக்கனைத்துங் காவல் கொள்ள என்று ஒரு மெய்கீர்த்தி கூறுகிறது. சினப்புலியும் செங்கோலும் அனைத்துயிர்க்கும் காவல் பூண என்று இரண்டாம் இராஜராஜனின் மெய்கீர்த்திகளும் கூறும். பல இடங்களில் அரசு அல்லது ஆட்சி என்ற பொருளிலும் காண்கிறோம். வீர ராஜேந்திரனின் மெய்கீர்த்தி இமையத்தோடும் கிடந்து சேது வரம்பாக செங்கோல் செலுத்தி என்று கூறுகிறது. இதே கருத்தில் முறையில் செங்கோல் திசைதொறும் செல்ல (அதிராஜேந்திரன் மெய்கீர்த்தி) என்றும், சக்கரமும் செங்கோலும் திக்கனைத்தும் செல்ல (குலோத்துங்கன் மெய்கீர்த்தி) என்றும், செங்கோல் எண்டிசை நடப்ப (சடையவன்மன் சுந்தர பாண்டியன் மெய்கீர்த்தி) என்றும், மெய்கீர்த்திகள் குறிக்கின்றன. அரசு செயல்படுவதை கோலியங்குதல் என்று இலக்கியங்கள் குறிப்பதும் இக் கருத்தை வலியுறுத்துகின்றது. முடி தரிப்பது எவ்வாறு அரசன் பொறுப்பேற்றதின் சின்னமாகக் கருதப்பட்டதோ, அதே போல் செங்கோல் ஏந்துதலும் ஆட்சி பொறுப்பேற்றதின் சின்னமாகக் கருதப்பட்டது. பாண்டிய மன்னன், பராந்தக வீரநாராயணன் தன் ஆட்சியாண்டை செங்கோல் யாண்டு என்று கூறுவது இதையே குறிக்கும். ஆயினும் மாற்றான் முடியைக் கவர்ந்தால், அவன் அரசைக் கைப்பற்றியதாக முன்னோர் கருதினர். அது போல் மாற்றானின் செங்கோலை மன்னன் கைப்பற்றியதாகவோ வளைத்ததாகவோ குறிப்பு இல்லை. இறைவனின் அருளால், இறைவனுக்காக மன்னன் நாட்டை ஆள்வதாக் ஒரு கருத்து வழிவழி வந்துள்ளது. இதைக் குறிக்கும் வகையில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆண்டுதோறும், ஒரு விழா அங்கயற்கண்ணி ஆலயத்தில் நடத்துதல் வழக்கம். சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள், கோயிலில் அங்கயற்கண்ணி அம்மைக்கு சிறப்பாக வழிபாடு நடத்தி, அன்னையிடமிருந்து நவரத்தினங்கள் இழைத்த செங்கோலை மன்ன பெற்று வீதி உலாவாகத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று, அங்கே அரியணையில் அதை ஏற்றுவது வழக்கம். ஒரு நாள் முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். அதற்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. மறுநாள் அது கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இதைச் செங்கோல் விழா என்பர். இதை திருமலை நாயக்கர் ஆண்டுதோறும் நடத்தினார் என அறிகிறோம். இதையே அவருக்குப் பின் வந்த ராணி மங்கம்மாளும் பின்பற்றியிருக்கிறாள். இதைச் சித்திரிக்கும் ஓவியம் ஒன்று மதுரைக் கோயிலில் இன்றும் உள்ளது.

குடை:

மன்னன் என்பதைக் குறிக்க எவ்வாறு முடியும், செங்கோலும் திகழ்ந்தனவோ, அது போன்று குடையும் அரசச் சின்னமாகவே கருதப்பட்டது. அரசனின் முடிபுனை விழாவில் வெண்மையான குடையும் கவிக்கப்பட்டதென கலிங்கத்துப் பரணியிலிருந்து அறியலாம். அரண்மனையில் உள்ளே வீற்றிருந்தாலும், வெளியில் சென்றாலும், போர்க்களத்தில் இருபினும் அரசனின் தலை மீது குடை பிடிக்கப்பட்டது. குலோத்துங்க சோழன் காஞ்சியில் செம்பொன்மாளிகையில் சித்திரமண்டபத்தில் அமர்ந்திருக்க, அவன் மேல் குடை கவிக்கப்பெற்றிருந்தது, எனப் பரணி ஆசிரியர் வெண்குடை ஒன்று நிழற்றவே என்று பாடுகிறார். குடை அரச உரிமையைக் குறிப்பது என்ற பொருளில் புறம் (367) கொற்ற வெண்குடை என்று குறிக்கிறது. செங்குட்டுவனை மாலை வெண்குடை மன்னன் என்று சிலம்பு கூறும்.
இக்காலத்தில் கோயில் திருவிழாக்களிலே எடுத்துச் செல்லப்படும் குடைகளைப் போலத்தான் அக்கால கொற்றக்குடைகள் திகழ்ந்திருக்க வேண்டும். காஞ்சியில் வைகுந்தநாதர் கோயிலில் பல்லவ வரலாற்றுச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றில் பல அரசர்களின் தலைமேல் கொற்றக்குடை கவித்துள்ளதைக் காண்கிறோம். இவை அனைத்தும் கோயில் குடைகளையே ஒத்திருப்பதைக் காணலாம் கொற்றக்குடைகள் நெடிய பொன்னணிந்த காம்புகள் கொண்டு வெண்மையாக விளிம்புகளில் முத்து தாமங்கள் தொங்க திகழ்ந்தன என்று பல குறிப்புகளில் இருந்து காணலாம். வெண்கொற்றக் குடையை புறநானூற்றுப் புலவர் வெள்ளைக்குடி நாகனார் இலக்கிய நயம் சிறக்கப் பாடியுள்ளார். “வளவ, நின்னுடைய குடை வெயில் மறைப்பதற்காக கொள்ளப்பட்டதா என்றால் இல்லை. வருத்தமுற்ற குடியை நிழற்செய்தல் காரணத்தால் கொள்ளப்பட்டது” என்று வியன்குடை வெயின் மறை கொண்டன்றோ அன்றே வருத்திய குடி மறைப்பதுவே கூர்வேல் வளவ என்று பாடுகிறார். மக்களுடைய வருத்தத்தைப் போக்கும் சின்னமாக இது கருதப்பட்டதால் குளிமை நிறைந்தது என்று புலவர்களால் பாடப்பெற்றது. தொல்குல மாமதி போல் பனி முத்திலங்குங் குடை மன்னன் என்று நெடுமாறன் புகழப்படுகிறான் (பாண்டி. கோ.131). அகில புவனமும் களிப்பதோர் புது பதி போல வெண்குடை மீமிசை நிழற்ற என்று விக்கிரம சோழன் மெய்கீர்த்தியும், திங்கள் வெண்குடை திசைகளெட்டுந் தாங்கும் தனிக்கூடந்தான் என விளங்க என்று இரண்டாம் இராஜராஜன் மெய்கீர்த்தியும், பாண்டியரது வேள்விக்குடி செப்பேடு குளிர் வெண்குடை மண்காப்ப என்றும் கூறுகின்றன. வெண்குடை இருநிலைவளாகம் எங்கனும் தந்து இருநிழல் வெண்ணிலாத்திகழ என்று முதல் குலோத்துங்களின் மெய்கீர்த்தி குறிக்கிறது. இன்னுயிரைக் காப்பது என்னும் பொருளில் அதிராஜேந்திர சோழனின் கல்வெட்டு திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிய மன்னுயிர் தோறும் இன்னருள் சுரந்து நிரைநிழல் பரப்பி எனக் குறிக்கிறது. மக்களைப் பெற்ற தாயினும் சிறக்க காக்கவல்லது என்று பண்மணிக் கொற்ற வெண்குடை நிழல் குவலயத்து உயிர்களைப் பெற்ற தாயினும் பேணி என்று வீரராஜேந்திரனின் கல்வெட்டு கூறுகிறது. மன்னனின் ஆட்சி எதுவரை பரந்து நின்றதோ அது வரையிலும் மன்னனின் குடை நிழல் அளித்தது என்று புலவர் சிறக்கப்பாடுவர். விக்கிரமசோழனின் மெய்கீர்த்தி, சந்திரன், சூரியன் வரையும் அவன் குடைநிழல் பரவியது என்று இரு சுடரளவும் ஒரு குடை நிழற்ற என்று குறிக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்கீர்த்தி ஒரு குடை நிழல் இரு நிலங்குளிர என்று குறிக்கிறது. கடும் வெய்யில் காய்ந்தாலும், பெரு மழை பெய்தாலும், கொடிய காற்று வீசினாலும் தடையின்றி மக்களைப் பாதுகாக்கவல்லது நெடுஞ்சேரலாதனது குடை என்று பதிற்றுப்பத்து(17) கூறும். மன்னன் குடைக் கீழமர்ந்து அரசாண்டதை வெண்குடை நிழற்கீழ் செங்கோலோச்சி என்று குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி கூறுகிறது. முதற் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி கொற்றக் குடைக்கீழ் கொடைக் கொடி ஏந்தினான் என்று கூறுகிறது. அரசனது குடை தெய்வக் கோயில்களை வலம் வரும் போது தாழ்த்திப் பிடிக்கப்பட்டது. பல்யாகசாலை முது குடிமிப் பெருவழுதி சிவபெருமானின் கோயிலை வலம் வரும்போது அவன் குடை தாழ்த்திப் பிடிக்கப்பட்டது என்று நின் குடை முனிவர் முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே இறைஞ்சுக பெரும (புறம். 6) எனக் குறிக்கப்படுகிறது. தெய்வ வழிப்பாட்டைத் தவிர பிற இடங்களில் மன்னனின் குடை உயர்த்தி, அனைத்திற்கும் முன்னர் பிடிக்கப்பட்டது. சேர, பாண்டிய மன்னர்களது குடைகள் பின்னுற, சோழ மன்னனின் குடை உயர்ந்தது முன்னின்றது என்று (புறம் 31) கூறும். மன்னன் மாற்றரசர் மீது படையெடுக்கப் புறப்படும் போது நல்ல நாளில் நல்ல முகூர்த்தத்தில் குடை, வாள், முரசு ஆகியவற்றை வடதிசையில் பெயர்த்து வைப்பது மரபு. வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க என்பது செங்குட்டுவன் ஆணை (சிலம்பு 26-33). இதை குடைநிலை வஞ்சி என்று சிலப்பதிகாரம் (25-141) கூறும். இதை குடைநாட் கோளல் என்றும் பிற இலக்கியங்கள் கூறும். குடையையும், வாளையும், முரசத்தையும் பெரிய யானையின்மேல் ஏற்றி புறநிலைப் புரிசையில் வைப்பர் (சிலம்பு-5, 91-92; 26. 44-5,). போரில் மன்னனது குடை வீழ்ந்தால் அவன் தோற்றான் என்று கருதுவர். பல்லவ மன்னன் பரமேச்சுரவர்மன் சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனுடன் கடும் போரிட்ட போது, பல்லவன் இறுதியில் வெற்றி பெற்றான். போர்க்களத்தில் மாற்றானின் குடை சிதறியது என்று கூரம் செப்பேடு குறிக்கிறது. மாற்றானின் குடையை போர்க்களத்தில் வீழ்த்துவது பேராண்மையாகக் கருதப்பெற்றது (சிலம்பு. 28-91). குடையை வீழ்த்துதல் மட்டுமல்ல, அதைக் கைப்பற்றுவதும் வீரரின் மரபு. பெருஞ்சேரலிரும்பொறை இரு பெரு வேந்தரையும் வென்று அவருடைய முரசுங் குடையும் கலனும் கொண்டான் (பதி. பத். பதிகம் 8). போரில் மாற்றரசர்களை வென்று அவர்களிடமிருந்து கவர்ந்த கொற்றக்குடையின் காம்புகளை தலைக்கோலாகச் செய்வது வழக்கம். தலைக்கோலின் கண்கள் தோறும் நவரத்தினங்களால் கட்டி இடைப் பகுதியை பொன் தகட்டால் கட்டுவர். இதை இந்திரன் மகன் சயந்தனாகக் கொண்டு வழிப்பட்டு அரசனின் அரண்மனையில் வைப்பர். நாடகக் கணிகை தலைக்கோல் கொள்ளும் நாளன்று புண்ணிய நீர் கொணர்ந்து தலைக்கோலுக்கு நீராட்டி, மாலை சூட்டி, பட்டத்து யானைமீது அமர்த்தி அரசன், அமைச்சர் முதலியோர் தேரிடம் எடுத்துச்சென்று, தேரின் மீது அமர்ந்துள்ள பாடுவாரிடம் கொடுத்து, ஊர்வலமாக நாட்டிய அரங்கு சேர்ந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்து நாட்டிய மகளை ஆடச் செய்து அவளுக்கு தலைக்கோலி என்னும் பட்டம் அளித்தல் மரபு என்று சிலம்பிலிருந்து அறிகிறோம். இது போன்று பிற்காலத்திலும் அரங்கேறிய நாட்டிய மகளுக்கு தலைக்கோலி என்னும் பெயர் கொடுத்துள்ளதை பல கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது.

அரியணை:

மன்னன் அரியணை ஏறுவது முடிபுனை விழாவின் ஒரு சிறந்த அங்கம். அரியணையை அரிமான் ஏந்திய முறை முதல் கட்டில் என்று சில்ப்பதிகாரம் (சிலம்பு-529) குறிக்கும். மாற்றரசர்களின் பட்டத்து யானையை வீழ்த்தி அதன் தந்தங் கொண்டு அரியணை செய்வது ஒரு மரபென்று அரசு வாவழைப்பக் கோடறுத்தியற்றிய அணங்குடை மரபில் கட்டில் என்று பதிற்றுப்பத்து (79) குறிக்கிறது. அரியணை என்பதிலிருந்து இக்கட்டில்களின் கால்கள் சிங்க உருவில் அமைக்கப்பட்டிருந்தன என்பது தெளிவு. இதையே சிம்மாசனம் என்றும் சிங்காசனம் என்றும் குறிப்பர். அரசர்களின் கட்டில் மட்டுமின்றி கடவுளர்க்கும் இது பொன்று அணைகள் அமைத்தனர் என்பதை சிங்கம் சுமந்த மாசறுமணியனை மேய உரவோன் என்று கூறும் திருப்பாமாலை (யாப்பருங்கலவிருத்தி - மேற்கொள்) அடிகளால் அறியலாம். காஞ்சி வைகுந்த பெருமாள் கோயிலில் பல பல்லவ அரசர்கள் அரியணைமீது அமர்ந்திருப்பதைச் சிற்பங்கள் சித்தரிக்கின்றன.
அரியணைகள் தந்தத்தால் மட்டுமின்றி பொன்னால் செய்யப்பட்டு பல விலையுயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டிருந்தன என்பதையும் மெய்கீர்த்திகளில் இருந்து அறியலாம். சோழர்களின் மெய்கீர்த்திகள் அனைத்தும் அரியணையை செம்பொன் வீரசிம்மாசனம் என்று குறிக்கின்றன. பிற்காலப் பாண்டியர்களின் மெய்கீர்த்திகளும் வீரசிம்மாசனம் என்றே குறிக்கின்றன. அரசர்கள் தலைநகரில் அரண்மனையில் அமர்ந்து முடிசூட்டப்படு கோலியரற்றும் கட்டிலுக்கு மட்டும் இன்றி, அவன் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்த அரண்மனைகளில் அமைக்கபட்ட அரச கட்டில்களுக்கும் அரியணை என்ற பெயர் இருந்தது. குலோத்துங்கன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரியணை ஏறினான். அவனுக்கு காஞ்சியில் ஒரு அரண்மனை இருந்தது அதில் குலோத்துங்கன் வீற்றிருந்ததையும், சிம்மாசனம் என்று குறிக்கப்படுவதையும் கலிங்கத்துப் பரணியில் காணலாம். (கலிங். பரணி-318). அரியணையில் தெய்வம் உறையும் என்று பண்டையோர் கருதினர். அரியணைக்குப் பெயரிடுதலும் உண்டு என்று அறிகிறோம். “தோற்றுப் போன மாற்றரசர்களின் பெயரைத் தங்கள் அரியணைக்கு அரசர்கள் இடுவது பிற்கால வழக்கம் என்றும், இது சங்க காலத்தில் இல்லை” என்றும் ஒரு ஆசிரியர் குறிக்கிறார். இது ஏற்புடையதாக இல்லை. பாண்டியன் ஸ்ரீவல்லபனின் அரியணைக்குப் “பாண்டியராஜன்” என்ற பெயர் இருந்தது என்பது மதுரைக் கோயிலில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிக் கட்டில் பாண்டிய ராஜனில் எழுந்தருளி, என்று வரும் (223/14) கல்வெட்டுகளால் அறியலாம். இதிலிருந்து மன்னன் தனக்கு மிகவும் உகந்த பெயரையே அரியணைக்குச் சூட்டினான் என்று கொள்வது பொருந்தும். இப் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பள்ளியறைக் கூடத்தில் கலிங்கத்தரையன் என்னும் கட்டில் இருந்தது (257/14). இம்மன்னனின் உயர்ந்த அதிகாரியின் பெயர் கலிங்கத்தரையன் என்பது. இதுவும் மேற் சொன்ன கருத்தையே வலியுறுத்துகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சியில் மதுரை அரண்மனையில் இருந்த கட்டிலுக்கு மழவராயன் என்றே பெயர் இருந்தது (431/4). பின்னர் வந்த சடையவர்மன் குலசேகரன் காலத்திலும் மதுரையில் இருந்த கட்டில் மழவராயன் என்றே அழைக்கப்பட்டது (301/4). இதே மன்னன் காலத்தில் கோட்டாற்றில் ஒரு அரண்மனை இருந்தது. அதில் இருந்த கட்டிலும் மழவராயன் என்றே அழைக்கப்பெற்றது (428/4). இம்மன்னனின் காலத்தில் மதுரை அரண்மனையில் பள்ளியறையில் இருந்த கட்டிலுக்கு மழவராயன் என்றும், ஸ்ரீ வல்லபன் கூடத்தில் இருந்த கட்டிலுக்கு முனையதரையன் என்றும் பெயர் (293/4). இவ்வாறு பெயர் பெற்றவை அனைத்தும் பள்ளிக்கட்டில் அல்லது பள்ளிப் பீடம் என்று குறிக்கப்படுகின்றன. ஆதலின் இவை அரியணைகளா அன்றி பள்ளி கொள்ளும் கட்டில்களா என்னும் ஐயம் தோன்றலாம். ஆயினும் அரச ஆணைகள் இவற்றிலிருந்தபோது அளிக்கப்பட்டன என்று குறிக்கப் பெறுவதால் இவற்றை அரியணை என்று கொள்வதில் தவறில்லை.

கொடி:

முடு புனைவிழாவில் கொடி எடுத்தல் ஒரு அங்கமாகக் கருதப்பட்டது. குலோத்துங்கனுக்கு நடந்த முடிவிழாவில், புலிக்கொடி எடுக்கப்பெற்றது என்பதை புலிவளர்க் கொடி எடுத்தலும் அதுமுடல் கொடு எடுத்தனர் அமரர் தம் விழவெடுக்கவே என்னும் பரணி (266) அடிகளால் அறியலாம். இதிலிருந்து கொடியும் அரச சின்னங்களில் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. அரசனுடைய கொடியை விசைய வெண் கொடி (புறம். 462) என்றும், விசையம் வெல்கொடி (முல்லை. 91) என்றும், வென்றெழுகொடி (மலைபடு. 582) என்றும், வாந்தோய் வெல்கொடி (பதி. பத். 67-1) என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதையே பிற்காலக் கல்வெட்டுகள் வீரக்கொடி என்று புகழ்கின்றன. மூன்றாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி வீரக் கொடி தியாகக் கொடி எடுத்து என்று கூறுகிறது. மன்னனின் நாட்டு எல்லையின் இறுதி வரை கொடி பறந்ததாகக் கூறுவது மரபு. செங்கோலும் கொடிப் புலியுந்திகிரிவரை வரம்பளக்க என்று மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டுகள் கூறுகின்றன.
சேரரும், சோழரும், பாண்டியரும் முறையே வில், புலி, மீன் கொடிகளைக் கொண்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. பல்லவர் எருதைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர். அடலேறு வலத்துயர் வைத்தபிரான் என்று தெள்ளாற்றெறிந்த நந்தி குறிக்கப்படுகிறான். விருஷத்வஜன் என்று பல்லவர் கல்வெட்டுகள் கூறும். இவ்வாறு மன்னர்கள் தங்கள் குலக் கொடிகளைக் கொள்வதோடு, வேறொரு கொடியையும் தாங்கி நின்றனர் என்று அறிகிறோம். பரமேச்சுரவர்மன் கட்வாங்ககேது என்று குறிக்கப்படுகிறான். நந்திவர்மன் பல்லவமல்லனும் கட்வாங்கக் கொடியைக் கொண்டிருந்தான்1. நந்திவர்மனைத் தோற்கடித்த சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன், பல்லவனின் கட்வாங்கக் கொடியை கைப்பற்றியதாகக் குறிக்கிறான். கட்வாங்கம் என்பது கை எலும்பு ஒன்றில் மண்டை ஓடு பொருத்தி விளங்குவதாகும். இரண்டு அரசர்கள் கொண்டிருந்ததாகக் குறிப்பதால் இதை ஒரு குறிப்பிட்ட அரசரின் தனிக்கொடியாக கொள்வதற்கும் இல்லை. எருதுக்கொடி இருக்க இதையும் ஏன் பல்லவர்கள் தாங்கியிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதே போன்று மீன்கொடி கொண்ட பாண்டிய அரிகேசரி பராங்குச மாறவர்மன் இடியின் உருவை தன் கொடியில் கொண்டிருந்தான். கொடிக்கண் இடியுரு வேந்திய கோன் (பாண்டி. கோ. 242) என்றும், மழையேறுயர்த்த மன்னவன் (184) என்றும், வானேறணிந்த வென்றிக் கொடியன் என்றும் (138) பாண்டிக் கோவையில் இவன் குறிக்கப்படுகிறான்.

இலச்சினை:

மன்னனுடைய கொடியில் விளங்கும் சின்னமே அவனுடையே இலச்சினையாகக் கருதினர். சோழனுடைய கொடி புலிக் கொடி என்று அறிவோம். அதே சின்னம் கோட்டைக் கதவிலும், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதும் இடப்பட்டது என்று சிலப்பதிகாரத்திலிருந்தும், பட்டினப்பாலையிலிருந்தும் அறிகிறோம். தெள்ளாற்றெறிந்த நந்தியை விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே என்று கூறுவதிலிருந்து அவனுடைய இலச்சினை எருது என்று அறிகிறோம் பல்லவ மன்னர்களின் செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றில் எருது இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
சோழர்களுடைய சில செப்பேடுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும், வில், கயல், புலி முன்றும் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. சோழனின் சில செப்பேடுகளில் புலியும், மீனும் மட்டும் காணப்படுகின்றன. இது போன்ற செப்பேட்டு இலச்சினைகளில் இவ்வரச சின்னங்களைத் தவிர இவற்றின்மேல் ஒரு குடையும், இருபுறமும் கவரிகளும் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் புறத்துக் கொன்றாகக் குத்து விளக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளன சுற்றிலும் அரசனின் பெயர் பொறிக்கப்பட்டும் விளங்கும். வில், கயல், புலி மூன்றையும் இலச்சினையாகப் பொறிப்பது சங்க காலத்திலேயே தமிழகத்தில் நிலவி வந்த மரபு என்று அறிகிறோம். வளைந்த வில்லைப் பொறியாக உடையவன் என்று புகழப்படும் செங்குட்டுவனை செருவிற்கயற் புலியான் என்று சிலம்பு குறிக்கிறது (ஊழல்வரி-25). இவற்றைச் செந்தமிழ் நன்னாட்டு இலச்சினை என்றே சிலம்பு கூறுகிறது (25-171). செங்குட்டுவன் கல் கொண்டு வருவதற்காக, வடதிசைப் புறப்படுவதை வடநாட்டு மன்னருக்குத் தெரிவிப்பதற்காக ஓலை எழுதப்பட்டது. அதில் இம்மூன்றும் பொறிக்கப்பட்ட இலச்சினை இடப்பட்டது என்று வடதிசை மருங்கிளை மன்னர்க்கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண் தலை ஏற்க வரைக (சிலம்பு. 25. 170-3) என்று கூறுகிறது. பாண்டிக்கோவை நெடுமாறனை சிலைமிசை வைத்த புலியுங் கயலும் சென்று ஓங்கு செம் பொன்மிசை வைத்த பிரான் என்று குறிப்பதிலிருந்து இவனும் இம்மூன்று சின்னங்களையும் கொண்டிருந்தான் என்று அறியலாம். இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய சோழமன்னர்களின் செப்பேடுகளில் மூன்று சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன என்று கண்டோம். சேரரையும், பாண்டியரையும் வென்றதைக் குறிக்கவே அவர்களது சின்னங்களைத் தங்கள் சின்னங்களோடு பொறித்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர் குறிப்பர். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில செப்பேடுகளில் புலியும், மீனும் மட்டும் உள்ளன. இதிலிருந்து சோழன் பாண்டியரை மட்டும் ஜெயித்தான் என்றும், சேரரை வெற்றி காணவில்லை என்றும் கொள்ள வேண்டும். இது ஏற்புடையதாகக் காணப்படவில்லை. காரணம், முதல் இராஜேந்திர சோழனின் கரந்தைக் செப்பேட்டில் வில் பொறி இல்லை. இருப்பினும் அவன் தென்னகம் முழுவதையும் வென்றான் என்பதில் ஐயமில்லை. ஒரே மன்னனின் செப்பேடுகளில் உள்ள இலச்சினைகளிலும், சில மாறுதல்களைக் காண்கிறோம். ஆதலின் அந்தந்த மன்னர்களின் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றத்தையும் கொண்டு இலச்சினைகளில் சில மாற்றங்கள் இருந்தன என்று கொள்வது பொருந்தும். இலச்சினைகளில் மூவேந்தர்களின் சின்னங்களும் ஒருங்கே பொறிக்கபட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இம் மூன்றும் ஒருங்கே கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. மூன்று சின்னங்களும் ஒருங்கே ஒரு கொடியில் பொறிக்கப்பட்டதாகச் சான்றுகள் இல்லை2. ஆதலின் அரசனுடைய இலச்சினைகளில் அவனது குலச் சின்னத்தைத் தவிர பிற சின்னங்களும் இருந்தன. ஆனால், அவனது கொடியில் குலச் சின்னம் மட்டும் இருந்தது என்று கொள்வதில் தவறில்லை. அரசன் வீரக்கொடியோடு தியாகக் கொடி எடுத்தான் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன (முன்றாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி) வீரத்தனிக்கொடி, தியாகக் கொடியோடும் ஏற்பவர் வருக என்று வீர ராஜேந்திரனின் மெய்கீர்த்தி குறிக்கிறது. தியாகத்தைக் குறிக்க கொடி இருந்தது. ஆனால் அதில் என்ன சின்னம் பொறித்திருந்தது என்று தெரியவில்லை. போரில் மாற்றரசர்களின் கொடியைப் பிடித்தல் ஒரு வெற்றியாக கருதப்பட்டது. நந்திவர்மனுடைய தானைத் தலைவன் உதயசந்திரன் என்பவன் உதயணன் என்னும் வேட அரசனை வென்று, அவனுடைய மயில் தோகைகளால் செய்யப்பட்ட கண்ணாடிக் கொடியை கைப்பற்றினான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன. (பல்லவர் செப்பேடுகள் பக். 136). இரண்டாம் இராஜேந்திர சோழன் சாளுக்கியரை வென்று அவரது வராக வெல்கொடியைக் கைப்பற்றினான் என்று அவன் மெய்கீர்த்தி குறிக்கிறது. அரசன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு முடி சூடும் போது, உடைவாள் அணிவதும் ஒரு அங்கமாகக் கருதப்பெற்றது. ராமபட்டாபிஷேகத்தின்போது அங்கதன் உடைவாள் ஏந்தினான் என்பதிலிருந்து, இதன் முக்கியத்துவத்தை அறியலாம். நெற்றியில் பட்டம் கட்டுவதும் ஒரு அங்கம் போலும். மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியனை வென்று மதுரையில் அவனுக்குப் பதிலாகப் பாண்ணைப் பட்டங் கட்டினான் என்று அவனுடைய கல்வெட்டுக் கூறுகிறது. பட்டம் கட்டுவதால்தான் அரசன் முடிபுனைவதைப் பட்டாபிஷேகம் என்று குறிப்பர். முடிசூட்டும் விழாவைப் பட்டாபிஷேகம் அல்லது மகுடாபிஷேகம் அல்லது மகாபிஷேகம் என்று வடமொழியில் குறிப்பர். மணிமுடிகவித்து மகாபிஷேகம் மகிழும் நாளில் என்று பாண்டியனின் செப்பேடு கூறுகிறது.

முடிசூடும்போது புதுப் பெயர்

முடிசூட்டப்படும்போது புதிய பெயர் ஒன்று சூட்டப்படுவதும் மரபு என்றும் அதற்கு அபிஷேக நாம என்று பெயர் என்றும் கண்டோம். அருள்மொழி வர்மன் என்பவனே முடிசூடும்போது இராஜராஜன் என்று பெயர் ஏற்று உலகப் புகழ் பெற்றான். சோழப் பேரரசர்கள், தாங்கள் வெற்றி கண்ட பல பகுதிகளை ஆளத் தங்கள் குலத்து உதித்தவர்களை நியமிப்பது வழக்கம். அக் காலங்களில் அவர்களுக்கு முடிசூட்டி, புதுப் பெயரளித்து, அப் பகுதிகளை ஆள நியமிப்பது வழக்கம். முதல் இராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டை ஆளத் தன் மகன் ஒருவனை நியமித்தான் அவனை சோழ பாண்டியன் என்று பெயரிட்டான் முதல் ராஜாதிராஜன் தன் குலத்தவர்களுக்கு வானவன், வில்லவன், மீனவன், கங்கன், பல்லவன் என்று பெயரிட்டு முடிசூட்டிவித்தான். இது போன்று வெற்றி கொண்ட நாட்டுக் குலப் பெயரையே கொள்வது மிகவும் தொன்மையான மரபு என்று அறிகிறோம். தென்ன வானவன் செம்பியன் சோழன் என்றே ஒரு பாண்டிய மன்னன் அழைக்கப்பட்டான். அரிகேசரி பராங்குச மாறவர்மன் வானவன் மாறன் என்று அழைக்கப்பட்டான் என்று பாண்டிக் கோவை கூறுகிறது. வானவன் என்பது சேரரைக் குறிக்கும். இவன் சேரரைப் பலமுறை வெற்றி கண்டவன் ஆதலின் இப்பெயர் பூண்டான். மாற்று நாட்டு அரச குலத்தவர் தங்கள் நாட்டை ஆள்வதை மக்கள் விரும்பவில்லை. மக்களின் நன்மதிப்பைப் பெறவே இவ்வாறு அந்நாட்டு அரச குலப் பெயரை வெற்றி பெற்ற மன்னர் சூடிக் கொண்டனர்.
தங்கள் குலத்தவர்களுக்கு முடி சூட்டினார்கள் என்றும் அவர்களுக்கு புதுப் பெயர்கள் சூட்டினர் என்றும் சில நேரங்களில் வெற்றி கண்ட நாட்டு அரச குலப் பெயரை ஏற்றனர் என்றும் கண்டோம். இரண்டாம் இராஜேந்திர சோழன் தன் சிறிய தாதை ஒருவருக்கும், தம்பியர் நால்வருக்கும், மக்கள் அறுவருக்கும், பெயரர்கள் இருவருக்கும் இவ்வாறு பெயர் சூட்டி மகுடஞ் சூட்டினான் என்று அவன் கல்வெட்டுக் கூறுகிறது.

சிறிய தாதை

தம்பியரில்

காதலருள்

காதலர் காதலர் தம்முள்

பருமணிச் சுடர்மணி மகுடஞ் சூட்டினான் என்றும் கூறுவதிலிருந்து இவர்கள் முடி சூடும்போது புதுப்பெயர் ஏற்பது ஒரு அங்கம் என்பது தெளிவாகிறது. முடிசூட்டப்பட்ட மன்னன் தன் குலத்தோர் அனைவரைக் காட்டிலும் சிறந்தோனாகிறான். தனக்கு இளையவர்களுக்கு மட்டும் இன்றி தன்னைக் காட்டிலும் வயதில் மூத்தவர்களுக்கும் தலைவன் ஆனான். தன்னிலும் பெரியவருக்கும் முடி சூட்டும் உரிமை பெற்றான். முதல் இராஜாதிராஜன் தன் சிறிய தாதைக்கும், தமையனுக்கும் முடிசூட்டினான். இரண்டாம் இராஜேந்திர சோழனும் தன் சிறிய தாதைக்கு முடிசூட்டுவித்தான் என்று அவர்களது மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. அரச பொறுப்பை ஏற்ற போதிலும் முடிசூட்டுவிழா நல்ல நாளில் நல்ல முகூர்த்தத்தில் நடைபெற்றது. விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிப் பொறுப்பை தான் ஏற்று சுமார் இரண்டு வாரங்கள் கழித்து ஸ்ரீ ஜயந்தி நாளில் முடிசூட்டிக் கொண்டார் என்றும் அறிகிறோம்.

அரசிக்கும் உடன் முடிசூட்டல்:

மன்னனுக்கு முடிசூட்டும் போது அவனது தேவிக்கும் உடன் முடிசூட்டுவிப்பது மரபு. இது சிறப்பாக விஜயநகரக் காலத்திலிருந்து காணபடுகிறது, என்று ஒரு பேராசிரியர் தன் நூலில் குறிக்கிறார். இது விஜய நகர மன்னர் காலத்துக்கும் முன்னரே தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவிய மரபு என்று அறியலாம். உலகுடைய பெருமாளுடன் ஒக்க முடிகவித்தான் என்று மூன்றாம் இராஜராஜனின் மெய்கீர்த்தி, தேவிக்கும் உடன் முடிசூட்டப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. முடிபுனைந்தவுடன் ஏராளமான பொருள்கள் கொடுக்கப்பட்டன. இதை அபிஷேகதக்ஷிணை என்று குடந்தை கீழ்க்கோட்டக் கல்வெட்டுக் குறிக்கிறது.
முடிபுனைவது கோயிலில் தெய்வத்தின் முன்னிலையிலும், சிறந்த மண்டபங்களிலும் நடைபெற்றது. சிறப்பாக அபிஷேகம் செய்வதற்காக எடுக்கப்பட்ட மண்டபங்கள் அபிஷேக மண்டபங்கள் என்று பெயர் பெற்றன. முடிபுனைந்த பின்னர் மன்னனும் மாதேவியும் நகர்வலம் வந்தனர். 1 Dr. Meenakshi - Administration and Social Life under the Pallavas Page 43.2 Dr.N.Subrahmaniam Sangam Polity. Page 80.பேராசிரியர் குறிப்பிட்டுள்ளது தவறு. மூன்று சின்னங்களும் கொடியில் குறிக்கப்பட்டிருந்ததாகக் குறிக்கிறார். ஆனால், நூலில் மூன்று சின்னங்களும் ஓலையில் குறிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.