3. அரசெனப்படுவது நினதே பெரும
வர்மன்:
சங்க காலத்திலேயே மன்னன் கடவுளுக்குச் சமமாகக் கருதப்பட்டான். அரசனைக் குறிக்கும் இறை, வேந்தன் கோ, முதலிய சொற்கள் அரசனின் கடவுள் தன்மையைக் குறிக்கின்றன என்பதில் தவறில்லை. ஆனால் அக்கால மன்னர்கள் தேவர் அல்லது வர்மர் என்ற சொற்களைத் தங்கள் பெயர்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து சிறப்பாக ஆண்ட பாண்டியப் பேரரசர்களில் பலரின் பெயர்களுடன் வர்மன் என்ற பெயர் இணைத்துக் காணபடுகிறது. ஜயந்தவர்மன், மாறவர்மன், ஜடிலவர்மன், வரகுணவர்மன் என்று அவர்களின் செப்பேடுகள் குறிக்கின்றன. பிராம்மண குலத்தவர் சர்மன் என்ற சொல்லைத் தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்வர், க்ஷத்திரியகுலத்தவர் தங்கள் பெயருடன் வர்மன் என்பதை இணைத்துக் கொள்வது மரபு. இதையே மேற்குறித்த பெயர்கள் குறிக்கின்றன. இவ்வழக்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட பல்லவர்களிடத்தும் காணப்படுகிறது. பல்லவானாம் சிவகந்த வம்ம என்று பிராகிருத செப்பேடுகள் குறிக்கின்றன. மஹேந்திரவர்மன், நரசிம்ம வர்மன், நந்திவர்மன், நிருபதொங்கவர்மன் என்று குறிக்கப்படும் இவர்களின் பெயர் அனைத்திலும் இச்சொல் இணைந்தே விளங்குவதைக் காணலாம்.
தேவர்:
கி.பி. 850ல் நிலைநிறுத்தப்பட்ட சோழப் பேரரசின் முதலிரு மன்னர்களான விஜாயாலயசோழரும், ஆதித்த சோழரும், கல்வெட்டுகளில் பரகேசரிவர்மர் என்றும் ராஜகேசரி வர்மர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களது கல்வெட்டுகள் அனைத்திலும் இப் பட்டப் பெயராலேயே அழைக்கபடுகின்றனர். இப்பட்டங்களுடன் வர்மன் என்ற சொல்லை இணைத்துள்ளதைக் காணலாம். முதல் பராந்தக சோழர் (கி.பி.907) காலம் முதல் ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். பராந்தக சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பாலும் பரகேசரிவர்மர் என்றே குறிக்கப்பட்ட போதிலும் பெயருடன் தேவர் என்ற சொல்லை இணைத்தும் குறிக்கபடுகிறார். சற்றேறக்குறைய பராந்தகரின் சமகாலத்தவனான நிருபதொங்கவர்மன், பாஹூர் செப்பேட்டில் நிருபதொங்கதேவர் என்று அழைக்கப்படுகிறான். பராந்தகதேவர் என்று உத்தரமேரூர் கல்வெட்டு குறிப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பின்னர் வந்த சோழமன்னர்கள் அனைவரும், இராஜகேசரி பரகேசரி பட்டங்களுடன் வர்மன் என்ற சொல்லையும், தங்களது பெயர்களுடன் தேவர் என்ற சொல்லையும் இணைத்தே வழங்கியுள்ளனர். இராஜகேசரிவர்மரான ஸ்ரீராஜராஜதேவர், என்றும் பரகேசரிவர்மரான இராஜேந்திர சோழதேவர் என்றும் வருவதைக் காணலாம். பின்னர் ஆண்ட சோழ மன்னர்கள் அனைவருமே இவ்வாறு வழங்கியுள்ளனர்.
கி.பி. 13ம் நூற்றாண்டில் சோழர் வலி குன்றத் தொடங்கிய போது பாண்டியர் தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். ஆயினும் சோழரது ஆட்சியில் ஏற்பட்ட மாறுதல்களையே இவர்களும் பின்பற்றினர். சடையவர்மரான சுந்தரபாண்டியதேவர், மாறவர்மரான குலசேகரதேவர், ஸ்ரீவல்லபதேவர் என்று இவர்கள் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசு நிலை நிறுத்தப்பட்ட போது விஜயநகர மன்னர்களது பெயர்களுடன் ராயர், அல்லது மகாராயர் என்னும் சொல் இணைக்கப்பட்டது. கிருஷ்ணதேவ மகாராயர், பிரவுடதேவராயர் என்றும் பெயர்கள் வருவதைக் காணலாம். ராயர் என்ற சொல் வந்தபோதிலும் தேவர் என்ற சொல்லும் இணைத்துள்ளதைக் காணலாம்.
மக்கள் தலைவன் மன்னனாகி தேவனாதல்:
இதிலிருந்து முதலில் மக்களின் தலைவர்களாக மன்னர்கள் கருதப்பட்டனர். பின்னர் தாங்கள் க்ஷத்திரிய குலத்தவர் என்று கூறிக்கொள்வதில் ஆர்வம் காட்டினர் என்பது வர்மன் என்று சொல்லை வழங்குவதிலிருந்து வெளியாகிறது. சங்ககாலத்தில் சிறு சிறு பகுதிகளின் தலைவர்களாக மன்னர் ஆண்டனர். ஆனால் சுமார் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் முழுவதும் இருபெரும் பிரிவுகளின் கீழ் வந்தன. தெற்கே பாண்டியரும், வடபுறத்தே பல்லவரும் தங்கள் குடைக்கீழ் கொண்டு வந்தனர். ஆதலின் அரசனின் ஆற்றலும், ஆணையும் பெரும் பகுதிகளில் நிலவ வேண்டியிருந்தது. ஆதலின் அவனிடத்து அதிகாரம் சங்கலாலத்தைக் காட்டிலும் மிகுந்திருந்தது. மக்களின் தலைவனாயிருந்தவன் மன்னர் குலத்தவனாய் கூறுக்கொள்ளத் தலைப்பட்டான் என்பதை இது குறிப்பதாகக் கொண்டால் தவறில்லை. அடுத்து வந்த சோழப் பேரரசர்களே தமிழகம் முழுவதையும் தங்கள் குடைக்கீழ் கொணர்ந்து ஒன்றுபட்ட தமிழகத்தை ஏற்படுத்தியவர் எனலாம். இவர்களது ஆட்சி தமிழகத்தோடு மட்டுமின்றி, கிழைச்சாளுக்கியர் முதலிய சில பேரரசுகளுக்கும் இவர்கள் தஞ்சமாய் விளங்கினர். தங்களது புயவலியால் இம்மாபெரும் பேரரசைத் தோற்றுவித்ததோடு, நாட்டின் ஆட்சி முறையை என்றும் காணாத வகையில் சீராக அமைத்த இம்மன்னர்களிடத்தில் மதிப்பும், அதிகாரமும் என்றும் காணாதவகையில் குவிந்தது என்பது தெளிவே. இப்பின்னணியில் நோக்கும்போது சோழப் பேரரசர்கள் தேவர்கள் என்று கூறிக்கொண்டது மிகப்பொருத்தமே. மக்கள் தலைவன் மன்னனாகி தேவனாவது படிப் படியாக அதிகரித்து வந்தது பொறுப்பாலும், ஆற்றலாலும் என்பதில் தவறில்லை.
சக்கரவர்த்தி:
பேரரசன் என்ற கருத்து சங்க காலத்து நிலவி இருந்தது. சக்கரவர்த்தி என்று அவரை வடமொழி நூல்கள் குறிப்பிடுவதற்கு ஏற்ப தமிழில் அவரது திகிரி மேருவரை பரவி நின்றது என்ற கருத்துகள் சங்க நூல்களில் இடம் பெறுகின்றன. ஆயினும் சக்கரவர்த்தி என்னும் சொல், காணப்படவில்லை.
ஆதிராஜன்:
வேள்விக்குடி செப்பேட்டில் பல்யாக சாலை முடுகுடுமி பெருவழுதி என்பவன் பரமேச்வரன் என்றும் பாண்டியாதிராஜன் என்றும் குறிக்கப்படுகிறான். பாண்டியாதிராஜன் என்று குறிக்கப்படும் கடுங்கோன் களப்பிரர்களை வென்றான். முன் களப்பிரர் பல ஆதிராஜரை வென்று அவரிடத்தைக் கைப்பற்றி யிருந்தனர் என்று அச்செப்பேடு குறிக்கிறது. ஆதிராஜர் என்ற பெயரால் பல தமிழக அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். மாறவர்மன் அவனிசூளாமணி என்னும் பாண்டியன் ஆதிராஜன் என்று அழைக்கப்படுகிறான். கோச்சடையன் ரணதீரன் என்பவனும், அவனுக்கு பின்வந்த ராஜசிம்மன் என்பவனும் மன்னர் மன்னன் என்றழைக்கப்படுகின்றனர். சின்னமனூர் பெருஞ் செப்பேடுகள், ஆறாம் நூற்றாண்டிற்குமுன் ஆண்ட பாண்டிய மன்னர்களை “மகாராஜர்” என்றும் “சார்வபெளமர்” என்றும் அழைக்கப்படுகின்றன. வரகுணன் மகாராஜர் என்று அழைக்கப்படுகிறான்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிவஸ்கந்தவர்மன் “தர்ம மகாராஜாதிராஜன்” என்று அழைக்கப்பட்டான். அவனுக்குப் பின் அண்ட பல்லவ மன்னர்கள் அனைவரும் தர்மமகாராஜாதிராஜன் என்று செப்பேடுகளில் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இவர்கள் “அறத்தின்” அடிச்சுவட்டில் மகாராஜாதிராஜன் என்று கருதிக்கொண்டனர் என்பது தெளிவு. சிலர் பெருமனடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பல்லவ மன்னர்களில் சிம்மவிஷ்ணுவும், மஹேந்திரவர்மனும் ஆதிராஜன் என்று அழைக்கப்பட்டனர் என்று மாமல்லபுரம் கல்வெட்டுகளால் அறியலாம்.
பெருமானடிகள் - உடையார்:
சோழப் பேரரசர்களின் காலத்திலிருந்து சில புதிய சொற்றொடர்களைக் காண்கிறோம். முதலில் ஆண்ட ஆதித்தசோழர், பராந்தகர், ஆகியோரின் காலத்தில் பெருமானடிகள் என்ற சொற்றொடர் சிறப்பாக வழக்கில் வந்தது. சோழப்பெருமானடிகள் என்று ஆதித்தனும், பராந்தகனும் பல கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. உத்தரமேரூர் கல்வெட்டில் பராந்தக சோழன், சக்கரவர்த்தி என்றே குறிக்கப்படுகிறான். பின்னர் ஆண்ட அரசர்கள் தங்கள் பெயருக்கு முன்னர் “உடையார்” என்ற சொல்லை வழங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். “உடையார் ஸ்ரீராஜராஜதேவர்” என்றும் உடையார் “ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்” என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர்.
திரிபுவனச்சக்கரவர்த்தி - கோனேரின்மை கொண்டான்:
முதல் குலோத்துங்க சோழனின் ஆட்சியிலிருந்து மூவுலகுக்கும் சக்கரவர்த்தி என்னும் பொருளில் “திரிபுவனச் சக்கரவர்த்திகள்” என்ற பட்டத்தை ஒவ்வொரு சோழ மன்னரும் ஏற்றனர். இக்காலத்திலிருந்து இவ்வரசனுக்கு ஈடான மன்னன் யாரும் இல்லை என்ற பொருளில் “கோனேரின்மை கொண்டான்” என்ற பட்டமும் அதிகம் வழங்கலாயிற்று. பல மன்னர்களின் கல்வெட்டுகளில் அவர்களது பெயரே குறிக்கப்படாமல் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் என்றே வருவதைக் காணலாம்.
மஹாமண்டலேச்சுரன்:
விஜயநகரமன்னர்கள் தங்களை “மஹாமண்டலேச்சுரர்” என்றும் பூர்வ, பச்சிம, தக்ஷிண, உத்தர சதுஸ் சமுத்ராதிபதி என்றும் கூறிக் கொள்ளுவது வழக்கம். நாற்கடலுக்கும் நாயக்கர் என்ற பொருளில் இவ்வாறு இவர்கள் பட்டம் ஏற்றனர். இவருக்கும் முன்னர் ஆண்ட சோழரும், பாண்டியரும், “இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி” என இலக்கி நயம் சிறக்க கூறிக்கொள்வது மரபு. இருப்பினும் விஜயநகர மன்னரிடத்து சக்கரவர்த்தி என்று கூறிக்கொள்ளும் மரபு ஏனோ காணக்கிடைக்கவில்லை. மகாராயர் என்று இவர்கள் கூறிக்கொண்டதே இதை குறித்தது போலும்.
பல்லவர்களில் சில சிறப்புப் பட்டங்கள்:
எவ்வாறு நான்கு திசைகளையும் திசைக் காவலர்களாகிய இந்திரன், யமன், வருணன், சோமன் ஆகிய நால்வரும் காக்கின்றனரோ அதுபோல் நடுவுலகை காக்கும் காவலன் என்றும், ஐந்தாவது காவலன் என்றும் பல்லவர்களில் பலர் குறிக்கப்படுகின்றனர். லோக பாலானாம் பஞ்சமஸ்ய லோகபாலஸ்ய என்றோ அல்லது லோகபாலானாம் மத்யமஸ்ய லோகபாலஸ்ய என்றோ அவர்களின் செப்பேடுகள் குறிக்கின்றன.
தமிழகத்தைச் சார்ந்த பிறமன்னர்களும் தாங்கள் இந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட போதிலும், பல்லவர்கள் மட்டும் “பாரத்வாஜர்” என்பதைத் தங்கள் பட்டமாகவே கொண்டிருந்தனர்.
வானவரம்பன், இமயவரம்பன் பட்டங்கள்:
சங்ககாலச் சேர மன்னர்களில் சிலர் “வானவரம்பன்” என்றும், சிலர் “இமயவர்ம்பன்” என்றும் குறிக்கப்படுகின்றனர். இப்பட்டங்களை, சேரர் அரியணையில் ஏறியவர்கள் மாற்றி மாற்றி ஏற்றிருக்க வேண்டும். “வானவரம்பன்” எனப் பட்டம் பெற்றவர் ஆண்டபின், அரியணை ஏறியவர் “இமயவரம்பன்” என்று பட்டம் ஏற்றிருக்கக் கூடும். இவ்வாறு அரியணை ஏறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட பட்டங்களை மாற்றி மாற்றி ஏற்றுக் கொள்வது சங்ககாலத்தில் சேரர் குலத்தே மட்டும் நிலவியதாகக் கொள்ளலாம். சங்கலாலச் சோழரிடம் இது போன்ற ஒரு மரபு இருந்ததாகத் தெரியவில்லை.
மாறன் - சடையன்:
சங்ககாலப் பாண்டியர்களில் சிலர் “மாறன்” என்றும் சிலர் “செழியன்” என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் இவை ஒருவருக்குப்பின் ஒருவர் அரியணை ஏறியபோது பட்டங்களாக மாறி மாறி ஏற்றுக் கொள்ளப்பட்டனவா என்று தெரியவில்லை. ஆனால் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட பாண்டிய மன்னரிடம் இம்மரபு காணப்படுகிறது. சிலர் “மாறன்” என்றும், சிலர் “சடையன்” என்றும் பட்டம் ஏற்றனர். இப்பட்டங்களை ஒருவருக்குப் பின் ஒருவர் மாறி மாறி ஏற்றனர். அதுமட்டுமின்றி “சடையனின் மகன் சடையன்மாறன்” என்றும், “மாறனின் மகன் மாறஞ்சடையன்” என்றுமே பட்டம் ஏற்றனர். அவரவர்களின் தனிப்பெயர்கள் குறிக்கப்படாமல் பெரும்பாலும் இப்பட்டப் பெயர்களாலேயே பல பாண்டிய மன்னர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக வரகுணன் என்னும் மன்ன “மாறஞ்சடையன்” என்றே குறிக்கபடுகிறான். அதேபோன்று ஸ்ரீமாறவர்மன் என்பவன், “சடையன் மாறன்” என்று கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறான்.
இராஜகேசரி பரகேசரி:
சோழப்பேரரசு நிலைநிறுத்தப்பட்ட பிறகு சோழமன்னர்கள் இராஜகேசரி என்றும் பரகேசரி என்றும் பட்டம் ஏற்றனர். ஆனால் இப்பெயர்களைச் சங்ககாலச் சோழர் ஏற்றிருக்கவில்லை. கி.பி. 7ம் நூற்றாண்டில் ஆண்ட மாறவர்மன் என்னும் பாண்டியமன்னன் “அரிகேசரி” என்ற சிறப்புப்பட்டம் பெற்றிருந்தான். கொடும்பாளூர் வேளிர்களில் நிருபகேசரி என்று ஒரு வேளீரும், விக்கிரமகேசரி என இருவரும் பெயர் கொண்டிருந்தனர். விஜயாலயனுக்கும் காலத்தால் முற்பட்டவர் நிருபகேசரி என்னும் வேளிர். சோழப்பேரரசை நிலைநிறுத்த முதலில் மிகவும் உதவியவர் கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் ஆவர். கொடும்பாளூர் குலத்துக்கும், சோழர் குலத்துக்கும் இதனால் மிக நெருங்கிய உறவு இருந்தது. பல சோழப் பெண்களை கொடும்பை வேளிர்கள் மணந்திருந்தனர். இருக்குவேளிர் பெண்கள் சோழரின் தேவியராக விளங்கினர். ஆதலின் இப்பட்டம் ஏற்கும் மரபு சோழருக்கு கொடும்பாளூர்த் தொடர்பினால் ஏற்பட்டதோ என ஐயம் தோன்றுகிறது.
“இராஜகேசரி”, “பரகேசரி” என்று சோழர் மாறி மாறிப் பட்டம் ஏற்றதை கலிங்கத்துப்பரணி
சுராதி ராசன் முதலாக வருசோழன் முனம் நாள், சோழ மண்டலம் அமைத்தபிறகு ஏழ் உலகையும்இராஜசேசரி புரந்து பரகேசரிகளாம் இருவர் ஆணை புலி ஆணை என நின்ற புகழும்
என்று வருணிக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சியை தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளிவளவன் முதலியோருக்கும் முன்னரே ஆண்ட சோழர்களுக்கு பரணி அளிக்கிறது. இதை வரலாற்று அடிப்படையில் ஏற்றுக் கொள்ளச் சான்றுகள் இல்லை.
கோவிசைய:
சேரரையும், சோழரையும் பாண்டியரையும் போல பல்லவர்கள் மாற்றி மாற்றி குறிப்பிட்ட பட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அனைவரும், தங்கள் பெயரின் முன்னர் “கோவிசைய” என்ற சொற்றொடரை இணைத்துக் கொண்டனர். வெற்றி விளங்கும் மன்னன் என்ற பொருளில் இவ்வாறு அவர்கள் அழைத்துக்கொண்டனர். “கோவிசைய மஹேந்திர விக்கிரம வர்மர்”, “கோவிசைய நந்திப் போத்தரைசர்”, “கோவிசைய அபராஜித விக்கிரமவர்மர்” என்று பெயர்கள் வருவதிலிருந்து இதை அறியலாம். அது மட்டுமின்றி தங்கள் பெயருக்குப் பின்னர் “விக்கிரம” என்ற சொல்லையும் பலர் சூடிக் கொண்டனர்.
குலப்பெயர்:
சங்க காலத்தில் ஆண்ட அரசர் தங்கள் பெயர்களுடன், தங்கள் குலத்தைக் குறிக்கும் பல பெயர்களில் ஏதாவது ஒன்றை தங்கள் பெயருடன் இணைத்துக் கூறுவது வழக்கம். “செம்பியன்”, “வளவன்”, “சோழன்” என்னும் ஏதாவது ஒரு சொல்லைக் கொள்வது சோழர் வழக்கம். அதே போன்று பாண்டியர், “மாறன்”, “வழுதி”, “செழியன்” ஆய பெயர்களில் ஏதாகிலும் ஒன்றைக் கொள்வது மரபு. சேரரும், அதன், “குட்டுவன்”, “சேரன்” என்னும் குலப் பெயர்களில் ஏதேனும், ஒன்றைக் கொண்டனர்.
ஆனால், பிற்காலத்தில், ஒரே பெயரை மட்டும் மன்னர் சூடிக்கொள்ளத் தலைப்பட்டனர். சோழப் பேரரசர்கள் அனைவரும் “சோழர்” என்ற ஒரே குலப் பெயரைக் கொண்டனர். இராஜராஜ சோழர், இராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர் என்றே இவர்கள் பெயர் உள்ளதே ஒழிய “செம்பியன்”, என்றோ “வளவன்” என்றோ காணப்படவில்லை. அதே போன்று, “பாண்டியர்” என்ற ஒரு பெயரை மட்டும் பாண்டியர் கொண்டனர். வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், சுந்தர பாண்டியன் என்றே பெயர்கள் காணப்படுகின்றன. பாண்டியர்களிலும் கி.பி. 6-லிருந்து 9-ம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள் “பாண்டியன்” என்ற சொல்லை பெயருடன் இணைத்துக் கொள்ளவில்லை. “மாறன்”, என்றும் “சடையன்” என்றுமே அழைக்கப்பட்டனர் என முன்பே கூறினோம்.
போத்தரையன்:
பலலவ மன்னர்கள் “போத்தரையர்” என்ற சொல்லை இணைத்துக் கொள்வது மரபு. மஹேந்திரப் போத்தரையன் நரசிங்கப் போத்தரையன், நந்திப் போத்தரையன் என்று இவர்கள் கல்வெட்டுகள் குறிக்கின்றன. மாமல்லபுரத்தில் ஆதிவராஹ குகையில் பல்லவ மன்னர்கள் இருவரின் உருவச் சிலைகள் உள்ளன. அவற்றின் மேல். அவர்கள் பெயர், “மஹேந்திர போற்றாதிராஜன்” என்றும் “சிம்மவிண்ணப் போத்ராதிராஜன்” என்றும் குறிக்கப்பட்டுள்ளன. “போத்தரையன்” என்பதின் வடமொழி ஆக்கமே இது. போத்து என்பது “துளிர்” என்ற பொருளில் வரும். பல்லவர் “பல்லவன்” “அங்குரன்” என்று அழைக்கப்பட்டதால் அதன் ஈடான தமிழ்ச் சொல்லே “போத்து” என்று ஆராய்ச்சியாளர் கொள்வர். “போத” என்று சொல் “புத்ரன்” என்ற சொல்லின் பாகதச் சிதைவு. “சத்யபுத்ரன்”, “கேரளபுத்ரன்” என சில அரசு குலங்கள் குறிக்கப்படுகின்றன. ஆதலின் “போத” என்ற சொல்லிலிருந்து போத்தரையன் என்னும் பெயர் தோன்றியதோ என்ற ஐயம் எழலாம். “போத்ராதிராஜன்” என்னும் பெயரிலிருந்து இவ்வையம் எழுகிறது. பல்லவர்களின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சியாளரிடையே கருத்து வேறுபாடு உண்டு. பல்லவர் தோற்றம் பற்றிய கருத்து சான்றுகளோடு நிலைப்படும் போது “போத்தரையன்” என்பதின் பொருளும் நிலைப்படும் என்பதில் ஐயமில்லை.
மன்னர்களின் சிறப்புப் பெயர்கள்:
அரசர்கள் அவர்களது ஆட்சியில் பெற்ற செயற்கரிய செய்கையோ அல்லது வெற்றியையோ அவர்களது பெயருடன் இணைத்துக் கொள்வது மரபு. இம்மரபு சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவி இருந்தது. தலையாளங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், கடல் பிறக்கோட்டிய குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, முதலிய சங்ககாலப் பெயர்களைப் போன்றே வாதாபிகொண்ட நரசிங்கப்போத்தரையன், தொள்ளாற் றெறிந்த நந்திப்போத்தரையன், தொண்டைநாடு பாவிய இராஜகேசரி (ஆதித்தன்), மதிரைகொண்ட கோப்பர கேசரி (பராந்தகசோழன்), கங்கைகொண்ட சோழன், கருவூரும் பாண்டியன் முடித்தலையுங்கொண்ட சோழன் (மூன்றாம் குலோத்துங்கன்), எம்மண்டலமுங் கொண்டருளிய சுந்தர பாண்டியன் போன்ற பெயர்கள் அவர்கள் வெற்றியின் அடிப்படையில் அமைந்தவை.
சில மன்னர்கள் இறந்த இடத்தின் பெயரால் சிறப்பாக அழைக்கப்படுவதும் சங்ககாலத்திலிருந்தே வழக்கிலிருந்ததாகும். குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், வெள்ளியம்பலத் துத்துஞ்சிய பெருவழுதி முதலிய பெயர்களைப் போலவே, ஆற்றூர்த் துஞ்சிய தேவர், பொன்மாளிகைத் துஞ்சிய தேவர், ஆனைமேல் துஞ்சிய தேவர் முதலிய பெயர்கள் பிற்காலத்திலும் காணப்படுகின்றன.
சில அரசர்கள் பிற சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். பெருஞ்சோற்று ஊதியஞ்சேரல், பாலை பாடிய பெருங்கடுங்கோ, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற சிறப்புப் பெயர்களைப் போலவே மஹேந்திர பல்லவன், சித்ரகாரப்புலி என்றும், சிவசூடாமணி என்று இராஜசிம்மனும், மேற்கெழுந்தருளிய தேவர் என்று கண்டராதித்ததேவரும், சிவபாதசேகரன் என்று முதல் இராஜராஜனும், சுங்கந்தவிர்த்தருளின தேவர் என்று முதல் குலோத்துங்கனும், சுந்தரபாண்டியன் சோணாடு வழங்கியருளியவன் என்றும் சிறப்புப் பெயர் பெற்றனர்.