◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

9. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

ஆயர்மகள் - மாமல்லபுரம், கி.பி. 8-ம் நூற்றாண்டு
ஆயர்மகள் - மாமல்லபுரம், கி.பி. 8-ம் நூற்றாண்டு

வேளண்மையின் சிறப்பு:

வேளண்மையின் சிறப்பை குடப்புலிவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துறைக்கிறார். மறு உலகத்தில் கிட்டும் செல்வத்தைப் பெறுதல், மாற்றான் தோள் வலியை அழித்தல், இவ்வுலகில் புகழ் நிறுத்தல் இம்மூன்றையும் வேளாண்மைக்கு நீர் நிலை பெருக்குவதால் ஒருங்கே பெறமுடியும் என்கிறார். உடலுக்கு உயிர் கொடுத்தால் மறுமைச் செல்வம் வரும், புகழ் வரும், மாற்றானின் வலி குன்றும். உடலுக்கு இன்றியமையாதது உணவு. உணவு கொடுத்தாரே உயிர் கொடுத்தார். உணவு எனப்படுவது நிலமும் நீரும் இணைவதால் தோன்றுவது. மிகப் பரந்த நிலமாயினும் மானம் பார்தத பூமியாக இருந்தால் பயன் இல்லை. ஆதலின் நீர் நிலைகளைப் பெருக்கி உணவு உற்பத்திக்கு வழிதேடுவதால் மற்ற அனைத்தைக் காட்டிலும் சிறப்பைப் பெறுவாய் என அப்பெரும் புலவர் கூறுவது ஒர் உன்னதத் தத்துவமாக திகழ்கிறது. சங்க காலத்து மக்கள் வேளாண்மையின் சிறப்பை மேனிலை உலகின் செல்வத்தைக் காட்டிலும் சிறந்ததாகக் கருதினர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையை குரங்கோழியூர் கிழார் “திருவில்லது கொலைவில்லறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார்” என்று கூறுவார். போர்ப் படையைக் காட்டிலும் உண்மையான நிலைத்த பேறு வேளாண் படைக்கே என்று இது உணர்த்துகிறது. “ஏரோர்க்கு நிழன்ற கோலினை” என்பது அரசன் ஏர் பிடித்து உழும் மக்களை எவ்வாறு காத்தான் என்பதற்கு எடுத்துக்காட்டு. பகடுபுறந்தருநர் பாரமோம்பிகுடிபுறந்தருகுவை எனக் கிள்ளிவளவனை பாடியாதும் இதையே. போர்புறத்தே நின்படை வெற்றி கண்டதற்கு காரணம் கலப்பையால் உழப்பட்ட நிலத்திலே விளைந்த நெல்தான் (புறம் 35) எனக் கூறுவது வேளாண்மையின் சிறப்பையும் உணவின் பெருக்கத்தையும் ஆகும். வீரர்கள் அரசனது வெற்றி கொடுக்க உழவு தான் காரணம் எனக் குறள் கூறும் (1034). ஒருபிடி படியுஞ்சீறிடம்எழுகளிறு புரக்கு நாடு (புறம் 40)

நில வகைகள்:

பொதுவாக நிலம் பூமி, செய். செறு, குண்டில், அறை என்று அழைக்கப்பட்டது. நீர் நிலம், விளை நிலம் என்றும், நன்செய் நிலம் என்றும் கல்வெட்டில் அழைக்கப்பட்டது.
தவிர ஓர் ஆண்டுக்கு எவ்வளவு போகங்கள் பயிர் செய்ய முடியுமோ அதன் அடிப்படியிலும் நிலங்கள் அழைக்கப்பட்டன. ஒரு போகம் என்பது ஒரு பூவிளையும் நிலம் என்றும், இரண்டு போகம் விளைவது இரு பூவிளையும் நிலம் என்றும் அழைக்கப்பட்டன. சித்திரை மாதத்தில் அறுவடை ஆகும் ஒரு வகை நெல்லுக்கு “கார்” என்று பெயர். அது அறுவடை செய்யும் போது முதிர்ந்த பயிர்களை அறுத்து சில நாள் கழித்து மீண்டும் இரண்டாம் முறை அறுவடை செய்வர் என அறிகிறோம். அதை மறு என்பர். ஆதலின் இது போன்ற பயிர்களை “கார் மறு நிலம்” என்று அழைத்தனர். பெரும்பாலான கல்வெட்டுகளில் “கார்மறு” நிலம் குறிக்கபடுகிறது. நீர்ப் பாசனத்தின் அடிப்படையில் ஆறுபாச்சல் நிலம் என்றும் இறைத்தல் நிலம் என்றும், குறிப்புகள் உள்ளன. மன்னார் கோயில் கல்வெட்டு இருபூ ஆறுபாச்சல் நிலன் என்று கூறுகிறது. “இறைத்தல் ஒருபூ நிலம்” என்று மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. ஒருவகை நெல் அதிக நாட்க்கள் கழித்து அறுவடை செய்யப்பட்டது என்றும் மற்றது குறுகிய காலத்துக்குள் அறுவடை செய்யப்பட்டது என்றும் அறிகிறோம். இதை 13-ம் நூற்றண்டில் மாறவர்மன் சுந்திரபாண்டியன் காலக் கல்வெட்டு “பெரும்பூவும் குறுவையும் விளையும் நிலம்” (374/4) எனக் குறிக்கிறது. விளைச்சலுக்கு ஏற்ப நிலங்கள் பல தரங்களாகவும் பிரிக்ப்பட்டு முதல் தரம், இரண்டாம் தரம் என்று 12 க்கும் மேற்பட்ட தரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. சில நிலங்கள் (தரமிலி) என்றும் அழைக்கப்பட்டன. மேல் குறித்தவை அனைத்தும் நெல்விளையும் நிலங்களைக் குறிப்பவையாகும். மற்ற விளையும் பயிற்கள் ஒட்டியும் நிலங்கள் பெயர் பெற்றன. கமுகுத் தோட்டம், மஞ்சள் விளையும் நிலம், சுற்றுத் தெங்கும் கொடித் தோட்ட நிலம், மாந்தோட்ட நிலம், வரகு விளையும் நிலம், எள்ளு விளையும் நிலம், கருணியும் வழுதலையும் விளையும் நிலம்” என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது.

பயிர் வகைகள்:

பயிர்கள் பொதுவாக வான்பயிர் என்றும், புன் பயிர் என்றும் பிரி்த்து அழைக்கப்பட்டன. “இவ்வூர் காரும், மறுவும், இருபூவும், கரும்பு, செங்கழுநீர், கொழுந்து, வாழை, மஞ்சள், இஞ்சி, தெங்கு, கமுகு, மா, பலா, பருத்தி, ஆமணக்கு உள்ளிட்ட வான் பயிர், புன் பயிர் உள்ளிட்டன” என்று சுந்திரபாண்டியன் (12ம் நூற்றாண்டு), கல்வெட்டு கூறுகிறது. கரும்பு, செங்கழுநீர், தெங்கு, கமுகு, பலா, வாழை, கொழுந்து, மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பல பயிர்களும், எள்ளு, வழுதிலை, பாகல் உள்ளிட்ட புன் பயிர்களும் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது (753/8). பெரும்பாலும் மரங்கள் நின்ற இடங்களை தோட்டம் என்றும், கொல்லை என்றும், கல்வெட்டுக்கள் கூறுகின்றன. “மா, வாகை, வேம்பு, பனை, புங்கு, புளி இடு மரங்களும், படுமரங்களும்” என்று சுந்திரபாண்டியன் கல்வெட்டுக் கூறுகிறது.
மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு ஒன்று நிலம் தருத்தியதை” பிரும்மதேசத்து புறக்காலில் காடுவெட்டி பயிர் செய்ய வொண்ணாது கிடந்த நிலத்தை மடப்புறமாக காடுவெட்டி கட்டைபறித்து மேடும் தாழ்வும் ஒக்க இட்டு, ஆறும் கனகபாலன் அடைத்து, பயிர் நிலமாகத் திருத்தி” என்று கூறுகிறது. மற்றொரு கல்வெட்டில், “காடுவெட்டி, ஏந்தலும் கண்டு கணறும் குழித்து, நத்தமும் கண்டு, குடியும் ஏற்றி, கரம்பு தலைத்து, அச்சுக்காட்டாக்கி பயிர் செய்யக் கடவாராகவும்” எனறு கூறுகிறது. இதுபோல் பல கல்வெட்டுக்கள் காடுகளை அழித்துப் பயிர் செய்த வகையைக் கூறுகின்றன. பல இடங்களில் காடாகிக் கிடந்த நிலங்களை திருத்திப் பயிர் செய்தனர். அதை “நிலன் திருத்தி” என்று கல்வெட்டுக கூறும். நிலத்தை திருத்துவதை வசக்கல் என்றும் மசக்கல் என்றும் அழைப்பது உண்டு. “காடுவெட்டி நிலமும் வசக்கி பயிரேற்றி விளைஞ்ச நிலம்”. என்று ஸ்ரீவல்லப பாண்டியனின் கல்வெட்டு (223/14) கூறுகிறது. இது போன்ற பல நிலங்கள் மசக்கல் என்றே அழைக்கப்படுவதும் உண்டு. புதிதாக பயிர் செய்வதை “பயிர் ஏற்றுதல்” என்று அழைத்தனர். ஆற்றங்கரைகளிலில் இருந்த நிலங்கள் சில சமயம் ஆற்றப் பெருக்கால் பாதிக்கப்பட்டன. மணலிட்டு பயிர் செய்ய முடியாது இடந்ததை பெரும் பொருளிட்டு சிலர் பயிர் நிலமாக்கியுள்ளனர். இவ்வாறு மணலடித்தால் அந்நிலங்களின் எல்லைகள் மறைந்துபோக உத்தேசமாக திருத்தியுள்ளனர். ஆற்றுப்படுகையில் ஆறுடைந்து மணலிட்டுமணல் மேடாய் பயிர்செய்ய ஒன்னாதுகிடக்கிற உத்தேசப்படி நிலம் இருவேலி கடற்கரையில் இருந்த நலங்கள் சில சமயங்களில் மணலடித்து பயிர் இட ஏதுவின்றி போதல் உண்டு. “கடலில் திரை ஏறி வாய் அருகு இல்லிபடும், இராவணன் மெல் வாயும் எழுந்து, மணல் குன்றாக பட்டினவர் குடி இருப்பான நிலனும், நீங்கலாகப் பனையும், இலுப்பையும் மரமாக்கலாம் நலமாக்கி (990/5) என்று சீர்காழியில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு கூறுவதிலிருந்து இதை அறியலாம். நிலத்தைத் திருத்தி அமைத்ததை ஒரு கல்வெட்டு அழகாக கூறுகிறது. “நந்தவனம் அமைபேன் என்று காடும் கள்ளியும் வெட்டி, மேடும் பள்ளமும் ஒப்பித்து, நாலும் வேலியும் அமைத்து, நாறுபூத் திருப்பள்ளித்தாம மல்லிகையும், பெருஞ் சண்பகமும் சிறு சண்பகமும், இரு வாச்சியும் உள்பட்டன மற்றும் எல்லாப் பூமரமும் வைத்து நிலமும் வேலியடைத்து, நீர் இறைத்து கன்று வைத்து” என்று கூறுகிறது. “காவேரி உடைந்து மடுவாய் நீர்நிலை ஆனநிலத்து சிபண்டாரத்து தொளயிரங் காசு ஒடுக்கி” (985/5) எனத் திருவெண்காட்டில் ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. “வாகையும், வேம்பு குடி இருப்புப் பனை, புங்கு, புளி, ஆத்தி, ஆவிரை, கொழிஞ்சி ... இடுமரங்களும் படுமரங்களும் (178/8) எனக் கல்வெட்டுக் கூறுகிறது. “காடுவெட்டி கட்டைபறித்து களரும் சுடுகாடும் மேடும் பள்ளமும் பாடு பறிவரம்பிட்டு வெட்டித் திருத்தி பதினெட்டடிக் கோலால் பதினாறுக்கு பதினாறு கொண்டது ஒரு மாவாக, கதிரில் வழி கண்ணாறு சதுரம் கட்டி நன்செய் புன்செய் தோட்டங்களில் பயிர் செய்தும் பயிர் செய்வித்தும்” (411/5) என ஒரு கல்வெட்டுக் கூறும். மற்றொரு கல்வெட்டு “நிலம் அநேக காலம் விழலும், காடுகோளுமாய் பயிர் செய்யாது கூறுபாடும் பரப்பும் தரமும் இறை ஏற்றமின்றி சபை பொதுவாய் கிடந்தமையில்” என்று கூறுகிறது. இதுபோன்று காடுகளை அழித்தல் சங்காலத்தில் கரிகால் பெருவளத்தானால் மேற்கொள்ளப்பட்டது என்று “காடுகொன்று நாடாக்கி” என்னும் அடிகளால் அறியலாம். பல்லவ மன்னர்கள் பல காடுகளை அழித்து பயிர் செய்ய வகை செய்தனர். அதனால் அவர்களுக்கு காடுவெட்டிகள் என்றே பெயர் இருந்தது. அன்று அவர்கள் மேற்கொண்ட பணியினால்தான் தமிழகத்தின் வடபகுதியில் பெரும்பகுதி உழவுக்கு ஏற்றதாகச் செய்யப்பட்டது. நிலத்தைப் பன்படுத்தியவன் சுவர்கம் ஏகுவான் என்று சிறுபஞ்சமூலம்குளம் தொட்டு காவுபறித்து வழிசீத்துஉளம் தொட்டு உழுவயல் ஆக்கிவளம் தொட்டு பாகுபடும் கிணற்றோடு என்றுஇனப்பண்படுத்தான் ஏகுசுவர்கம் இனிது (64) எனக் கூறுகிறது.

நீர்பாசனம்:

நிலங்களுக்கு ஆறுகளிலிருந்தும், ஏரி குளங்களிலிருந்தும், கிணறுகளிலிருந்தும் நீர் பாய்ச்சப்பட்டது. வாய்கால்களின் மூலமாகவும் ஏற்றத்தின் மூலமாகவும் நீர் நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டது. “இந்நிலத்துக்கு பழம் படி பாயும் நீர் பாயவும், வரும் நீர் வாரவும் இறைக்கும் நீர் இறைக்கவும் பெறுவதாகவும்” என்று ஒரு கல்வெட்டுக் குறிப்பதிலிருந்து, பாய்த்தல், வாருதல், இறைத்தல் என மூன்று பொதுப் பிரிவுகளாகக் கொண்டிருந்தனர் என அறியலாம்.
ஏற்றம் குற்றேத்தம் என்றும் நெட்டேத்தம் என்றும் இருவகையாகப் பரிக்கப்பட்து. குற்றேத்தம், ஏற்றத்தின்மேல் ஒரு ஆள் நின்றுகொண்டு முன்னும் பின்னும் ஓடி இறைப்பதாகும். நெட்டேத்தம் என்பது மாடு பூட்டி இறைக்கும் ஏற்றம் போலும். இவை தவிர கூடைகளைக்கட்டி வாய்கால்களிலிருந்து நீர் இறைப்பதும் உண்டு. வாய்கால்களை நேராக வைத்துக்கொள்வது அரசனின் பொறுப்பு. இதற்காக வரி வசூலிக்கப்பட்டது. இவ் வரிகளுக்கு “புழுதிபாடு” என்றும் “கொள்கலன்” என்றும் பெயர். இவ்வரிகளைப் பெறும் உரிமையை ஊர்ச் சபைக்கோ, அல்லது சில தனிப்பட்டவர்களுக்கோ அளித்து, அவர்கள் அவற்றைச் சீராக வைத்திருக்க அரசன் பணித்தான். ஏரிகளைக் கவனித்து வருவதற்கு ஊர்களில் ஏரி வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரிய மக்கள் இவ்வேரிகளைச் செவ்வனே வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்றனர்.

கிணறு:

நிலங்களுக்கு நீர் பாய்ச்ச பல கிணறுகள் வெட்டப்பட்டன. இவ்வாறு கிணறு வெட்டுவதை கிணறு தொட்டல் அல்லது “கிணறு குழித்தல்” என்று குறிப்பர். தனியார் கிணறு தோண்ட விரும்பினால் ஊர்ச் சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊராய் இருந்தால் அரசனிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் விதிமுறை இருந்ததாக அறிகிறோம். “துரவு கிணறு இழிக்கப் பெறுவதாகவும்” என்று கூறுவதிலிருந்து அரசின் ஆணை பெற்றுத்தான் கிணறுகள் தோண்டப்பட வேண்டும் என்று ஊகிக்கலாம். (தண்டந்தோட்டம் செப்பேடுகள்). மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர் பாளையம் செப்பேடுகளும் “துரவு கிணறு இழிக்கப்பறுவதாகவும்” என்று கூறுவதிலிருந்து கிணறு தோண்டும் உரிமையும் அரசனால் அளிக்கப்பட்டது என்பது தெளிவு. பாண்டியான் பராந்தக வீர நாராயணன் கொடுத்த ஒரு வயலில் இரண்டு கிணறுகள் இருந்தன. அக்கிணற்றால் விளைந்த நிலத்தை அவன் அளித்தான் என்று தளவாய்புரம் செப்பேடுகள் கூறுகின்றன. “பருத்தி வயக்கலும், இவ்வயல்களில் கிணறு இரண்டும் அக் கிணற்றால் விளை நிலனும்” என்றும் மேலும் கொடுத்த வயல்களில் கிணறுகள் மூன்று இருந்தன என்றும் அக்கிணற்றில் எப்பொழுதும் நீர் இருந்ததென்றும், அக்கிணற்றால் விளையும் வயலனைத்தும் இறையிலியாக அளிக்கப்பட்டன என்றும் அச்செப்பேடு கூறுகிறது.

வாய்க்கால்கள்:

ஏரியிலிருந்து வாய்க்கால் வெட்டிக்கொள்ளவும் அரசன் அனுமதி தேவை. அதேபோன்று ஆற்றிலிருந்து வாய்க்கால் தோண்டவும், வெள்ளம் வரும்போது அந் நீரைப் பெற வெள்ளக்கால் தோண்டவும் அரசு அனுமதி தேவை. “செய்யாற்றாலும் வெஃகாவினாலும் திரையன் ஏரியாலும் நீர் ஈந்த வழி ஆற்றுக்காலும், வெள்ளக்காலும் தோண்டிக் கொண்டு உண்ணப் பெறுவாராகவும” என்று காசாக்குடி செப்பேடு கூறுகிறது. அதுமட்டுமல்ல, இவ்வாற்றின் இடையிலே நீர் இறைத்தால் அரசனால் தண்டிக்கப் படுவர் என்பதை அச்செப்பேடு, “இக்கால்களில் கூடை இறைத்தும், குறங்கறுத்தும், குற்றேத்தம் பண்ணியும் கொண்டு உண்டோர் கோக் கொள்ளும் தண்டப் படுவதாகவும்” என்று குறிக்கிறது. இதிலிருந்து இவ் வாய்க்கால்கள் எதற்காக தோண்டப்பட்டனவோ அதற்கு இடையூறு ஏற்பட்டாமல் காத்தல் மன்னனின் கடன் என்றும் அறிகிறோம். இதே கருத்தை பல்லவ மன்னன் நந்தியின் புல்லூர் செப்பேடு கூறும். “இவ்வூர் ஏரிகளுக்கு ஆற்றக்கால் நீரிந்த வழி தோண்டிக்கொண்டு உண்ணப் பெறுவாராகவும். இக்கால் கூடை எறிந்துக், குற்றேத்தம் பண்ணியும், குறங்கறுத்தும் கொள்ளப் பெறாதாராகவும். கொண்டார் கோவினால் தண்டிக்கப்படுவாராகவும்” என்பது அச்செப்பேட்டின் வாசகம்.
சில ஊர்கள் புதிதாக நிர்மானிக்கப்பட்டபோது அங்கு பல வாய்க்கால்கள் புதிதாக வெட்டப்பட்டன. இவை முக்கிய வாய்கால்களாக அமைக்கப்பட்டபோது இவைகளுக்குச் சிறப்பாகத் திட்டமிட்டு பெயரிட்டனர். உத்தரமேரூரில் நந்திவர்மன் காலத்தில் (8-ம் நூற்றாண்டு) புதிதாக வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. இவை வைரமேக தடாகத்திலிருந்து ஊர் நிலங்களுக்கு நீர்பாய அமைக்கப்பட்டவை. இவற்றிற்கு தெய்வப் பெயர்களாக ஸ்ரீதேவி வாய்க்லகால், சரஸ்வதி வாய்க்கால், பார்வதி வாய்க்கால், சுப்பிரமணிய வாய்க்கால், கணபதி வாய்க்கால் என்று பெயர் சூட்டப் பெற்றிருந்தன. சேரமாதேவியில் திருமாலின் பன்னிரு பெயர்களான கேசவ, நாரயண, மாதவ, கொவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரவிக்ரமா, வாமன, ஸ்ரீதர, ரிஷீகேஸ, பத்மநாபா, தாமோதரா என்பவற்றில் புருஷோத்தம வாய்க்கால், மாதவ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால், என்பவை குறிக்கப்படுகின்றன. இதிலிருந்து பன்னிரு பெயர்களையும் வாய்க்காலுக்கு இட்டிருக்கின்றனர் என்று ஊகிக்கலாம். தெய்வங்களின் பெயர் மட்டுமின்றி ஊர் அமைத்தவர்களின் பெயராலும் வாய்க்கால்கள் அழைக்கப்பட்டன. செம்பியன் மாதேவி என்னும் ஊர் கண்டராதித்த சோழரின் தேவியால் ஏற்படுத்தப்பட்டது. அவ்வூரில் அமைந்த வாய்கால்கள் அத்தேவியின் பெயர்களாலும், அவள் கணவன் பெயராலும் அழைக்கப்பட்டன. செம்பியன் மாதேவி வாய்க்கால், பராந்தகன் மாதேவி வாய்க்கால், மாதேவடிகள் வாய்க்கால், முதலிய பெயர்கள் அத்தேவியரின் பெயரால் வந்தவை. இவெ தவிர அவ்வூரில் கண்டராதித்த வாய்க்கால் என்பதும், பழுவூர் நக்கன் என்னும் வாய்க்கால் ஒன்றும் இருந்தன என அறிகிறோம். இதிலிருந்து ஒர் ஊரைப் புதிதாக அமைக்கும்போது வேளண்மைக்கு வேண்டியவற்றை திட்டமிட்டு அமைத்து அவற்றிற்கு பெயர்கள இட்டனர் என்று அறியலாம். இதைத் திவர பல வாய்க்கால்கள் அரசர்களின் பெயர் தாங்கி நிற்பதைக் கண்டால் அவர்கள், பாசனம் சிறக்க எவ்வளவு பணி செய்தனர் என்பது புரியும். சுந்தர சோழன் வாய்க்கால், கரிகால சோழன் வாய்க்கால், இராஜாதிராஜ வாய்க்கால், சுங்கந்தவிர்த்த சோழன் வாய்க்கால் எனப் பல அரசர்களின் பெயர்களைக் கொண்ட வாய்க்கால்கள் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றன. ஆற்றிலிருந்து நேராக நிலங்களுக்குப் பாயும் வாய்க்கால்கள் இருந்தன. இவை ஆற்றிலக்கால் என்று அழைக்கப்பட்டன. உய்யக் கொண்டான் திருமலையில் “வயிர மேக வாய்க்கால்” குறக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து பிரியும் உய்யக் கொண்டான் வாய்க்கால் வயிர மேக வாய்க்காலாக இருக்கும். ஆற்றிலிருந்து குளங்களுக்கும், ஏரிகளுக்கும், நீர்ப்பய்ச்சும் வாய்க்கால்களை குறங்கு, கால், கிளைக்கால், ஓடை என்று அழைத்தனர். ஆறு பெருக்கெடுக்கும்போது வாய்கால் வழி நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதும் நாம் அறிந்ததே. இவ் வாய்கால்களுக்கு வெள்ளக்கால் என்று பெயர். ஊற்றிலிருந்து கல்வெட்டி தற்காலப் பயிர் செய்வதும் உண்டு. அதை ஊற்றுக்கால் என்பர். ஆறுகள் கோடையில் வறண்டபோது இது பயன் அளித்தது. பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் காலத்தில் கூரம் என்னும் கிராமத்தில் பரமேஸ்வர தடாகம் ஏரி தோண்டப்பட்டது. இதற்கு பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு கால் என்னும் கால்வாய் தோண்டப்பட்டது. இவ்வூர் பரமேஸ்வர தடாகத்துக்கு பாலாற்று நின்றும் தோண்டின பெரும்பிடுகு கால் என்று கூரம் செப்பேடு (வரி 78, 79) கூறுகிறது. இப்பொழுது தென்னேரி என்று அழைக்கப்படும் ஏரி முன்னர் திரையன் ஏரி என்று அழைக்கப்பட்டது. இத்திரையன் ஏரிக்கு செய்யாற்றிலிருந்தும், வெஃகாவிலிருந்தும் நீர் கொண்டு வரப்பட்டது. இந் நீர் கொண்டுவரும் கால்களிலேயே வெள்ளக்காலும், ஆற்றுக்காலும் தோண்டிக் கொள்ளலாம் என நந்திவர்மன் ஆணையிட்டான். இவ்வாறு ஆறுகளிலிருந்து ஏரிகளுக்கு நீர் கொண்டுவரும் கால்களையும் ஆற்றுக்கால் என்று அழைத்தனர் என்று புல்லூர் செப்பேடுகளால் அறிகிறோம். “இவ்வூர் எரிகளுக்கு ஆற்றுக்கால் நீரீந்த வழி தோண்டிக் கொண்டு உண்ணப் பெறுவாஅராகவும்” என்று செப்பேடு கூறுகிறது. இவ்வாறு கால்கள் தோண்டுவது அரசன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்பது, “இவர்களுக்கு ஆற்றுள் நின்றும், ஏரிகள் நின்றும் நீரீந்த வழி தோண்டிக் கொணடு போவாராகவும்” (புல்லூர் 122, 123) என்பதால் தெளிவாகிறது.

ஏரிகள்:

நீர் பாசனத்துக்கு இன்றியமையாதாதான ஏரிகள் ஏராளமாக மன்னர்களாலும் பிறராலும் தோண்டப்பட்டன. பல்லவ அரசி சாருதேவியின் செப்பேட்டில் ராஜ தடாகம் குறிக்கப்படுகிறது. திரையன் ஏரி என்பது, சங்காலத்துப் புகழ்பெற்ற திரையனால் தோற்றுவிக்கப்பட்டது போலும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சோளிங்கருக்கு அருகில் மகேந்திர தடாகம் என்னும் பெரும் ஏரியைத் தோற்றுவி்த்தான். அதே போன்று மாமண்டூரில் உள்ள சித்ரமேக தடாகம் என்பதும் இம் மன்னனால் தோண்டப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுவர். கூரம் கிராமத்தில் பரமேஸ்வர தடாகம் என்னும் ஏரி பல்லவ பரமேஸ்வரன் காலத்தில் தோண்டப்பட்டது.
பல்லவ ஏரிகளில் மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது உத்தரமேரூரில் உள்ள வயிரமேக தடாகம் என்னும் பேரேரியாகும். இது இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் தோன்றி இருக்க வேண்டும். இதே போல் கங்கைகொண்ட சோழபுரத்தில் முதல் இராஜேந்திர சோழனால், தான் கங்கைவரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழ கங்கம் என்று பெயர். பராந்தக சோழன் காலத்தில் அவன் பெயரால் ஏற்படுத்தப்பட்டதே இப்போது வீராணம் என அழைக்கப்பெறும் வீரநாராயணன் ஏரி என்பதாகும். அதே அரசன் காலத்தில் “சோழவாரித” என்னும் பேரேரி ஒன்று சோளிங்கருக்கு அருகில் ஏற்பட்டது. இங்ஙனமே மதுராந்தகப் பேரேரி என்று மதுராந்தகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புள்ள ஏரியும் பேரரசின் புகழ்பாடிக் கொண்டுள்ளது.

ஏரிக்குழித்தல்:

இவ்வாறு தோண்டப்பட்ட ஏரிகள் அடிக்கடி மண்மேடு இட்டு தூர்ந்துவிடும். ஆகையால் இவற்றை அடிக்கடி ஆழம் செய்யவும், ஏரிக் கரையை அடிக்கடி உயர்த்தவும், பலர் பொருள் வைத்துள்ளனர். இது ஒரு பெரும் அறமாகக் கருதப்பட்டது. பாண்டிய மன்னன் சடையன் மாறன் என்பவன் காலத்தில் இருப்பைக் குடி என்னுமிடத்தில் இருப்பைக்குடி கிழவன் என்பவன் குளத்தின் கரை பழைமையாக இருந்ததை எடுத்துவிட்டு அடியில் கல்லிட்டுப் புதியதாக கரை இட்டு மடைகள் வைத்து அதற்கு இருப்பைக்குடி கிழவன் ஏரி என்று பெயர் இட்டான் என்று அறிகிறோம். “இவ்வாண்டு பழங்ககரை இழித்து அதனடியில் கல்லு நாட்டி, மன்னு மடைக்கு மேற்கு கருங்குளத்துக்கு கிழக்கு நிலைத்திட்டு கரை செய்து மடை வைப்பித்து இருப்பைக்குடி கிழவன் என்று தன் பெயரிட்டு ஏறுவித்தது” (43/14) என்று கல்வெட்டுக கூறுகிறது. மதுரை மாவட்டத்து இரமநாதபுரத்தில் பாண்டியன் மாறஞ் சடையன் காலத்தில் நக்கன் புள்ளன் எனபவன் தன் பெயரால் ஒர் ஏரி அமைத்து, கற்கோதி குமிழி செய்வித்தான். ஆனால் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. நக்கன் புள்ளன் இடயிலேயே இறந்திருக்கக் கூடும். அவன் மகன் புள்ளன் நக்கன் என்பவன் குறைப்பணியை முற்றுவித்தான். இங்கு பணி செய்தவன் தச்சன் வடுகன் கூற்றன் என்பவன். குறைப் பணியை முடித்தான் அத்தச்சன் மகன். ஆதலின் அவர்களுக்கு அக் குளத்தின் கீழ் தலைநீர் பாயும் நிலம் ஒரொரு வயலை, புள்ளன் நக்கன் அளித்தான் (26/14).
இதுபோன்று ஏரிக்குச் செய்த பல பணிகளை உத்தரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் தானவேந்தன் என்பவன் ஊர் சபையரிடம் 20 கழஞ்சு பொன் கொடுத்தான். அவர்கள் அவ்வூரில் இருந்து ஒவ்வொரு சேரியைச் சேர்ந்த நிலத்திலிருந்தும் வந்த எருவிலையைக் கொண்டு மாதந்தோறும் குழி குத்துவாராக ஒப்புக் கொண்டனர். “வயிரமேக தடாகத்துக்கு உட்குழி குத்துவதாக சுட்டிக் கொடுத்தோம்” (357/6). இவ்வேரியில் ஓடம் விடுவதற்காக தானி புத்தடிகள் என்பவனின் தாய் 100 கழஞ்சு பொன் கொடுத்தாள். தானி புத்தடிகள் என்பவன் இரண்டாவது ஓடம் விடவும், அதற்கு வேண்டிய வழி செய்யவும் 100 கழஞ்சு பொன் கொடுத்தான். இப்பொன் கொண்டு ஆள் கூலி உள்ளிட்டு நாள் ஒன்றுக்கு ஒரு குழியாக ஒர் ஆண்டுக்கு 360 குழி மண் வெட்டி எடுத்துக் கரை ஏற கட்டுவதாக ஊர்ச் சபை ஏற்றுக் கொண்டது (356/6). இதே ஏரியை மண் வெட்டி கரை அட்ட திருக்கழுகுன்றன் என்பவன் கம்பவர்மன் காலத்தில் 100 கழஞ்சு பொன்னும் 203 காடி நெல்லும் கொடுத்தான். அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து குழி குத்தி கரை கட்டுவதாக சபை ஒப்புக் கொண்து. வைகாசி மாதம் முதல் இரண்டு திங்கள் ஆண்டாண்டுதோறும் செய்வதாக சபை ஏற்றது. இதை இவ்வேரிக்கு தர்மம் என்று கல்வெட்டுக கூறுகிறது. இதே மன்னன் காலத்தில் ஒருவர் ஏரி குழிகுத்தி கரைக்கு மண் அட்ட கோயிலில் பொன் கொடுத்தார். அதனால் அவனுக்கு பல வரி விலக்களித்தது (369/6). இதே ஊரில் காரிகைக் குட்டம் என்ற ஏரிக்கு சுற்றிலும் ஒரு கோல் அகலத்துக்குக் கரை இருந்தது. அதைச் சுற்றிலும் அரைக் கோல் அகலத்துக்கு வெளிப் பூமி அமைக்க இருவர் பொன் கொடுத்து நிலம் வாங்கி வைத்தனர். அக்கரையில் மண் எடுப்பாரையும் முள் குத்துவாரையும், நீர் விட்டாரையும் தண்டிக்கச் சபை ஒப்புக் கொண்டது. (370/6). இராஜராஜ சோழன் காலத்தில் அரிகேசரி மங்கலத்தில் ஏரி உடைந்து குளமாய், காடாய் கிடந்தது. இவ்வேரி பாசனம் உள்ளிட்ட நாடுகளை வகை செய்கின்ற அரசு அதிகாரி அரையன் அம்பலக் கூத்தன் என்பவன் “குளத்தை குழிச்சு பெருங்கரை கட்டி வைத்து காடும் வெட்டுவித்து மடைகளும் எடுப்பித்து பரமேசுரப்பேரேரி என்று பெயரிட்டான்” (724/5) என்று அறிகிறோம். விண்ண மங்கலம் என்னும் ஊரில் ஏரியில் மீனை விற்று அதிலிருந்து வந்த பொன் கொண்டு ஏரியை ஆண்டுதோறும் ஆழம் செய்ய வகை செய்தனர் (459/6). ஏரி சமைத்து ஆற்றிலிருந்து நீர் கொணர்ந்து பயிர் செய்ய ஒரு குடும்பமே வகை செய்தது. நாற்பத்ததெண்ணாயிரப் பிள்ளையும், அவர் தமக்கை மங்கையர்கரசியும் தங்கள் பொருள் இட்டு நிலம் திருத்தினார்கள். இதற்கு அந்நாட்டு எல்லையில் திருந்திகை என்ற ஆற்றை அடைத்து ஏரிவெட்டி தூம்பு இட்டு நிலம் திருத்தினார்கள். மங்கையர்கரசி இறந்து போனாள், பிள்ளையும் வயதால் தளர்ந்து போனர். ஏரியைச் சரிவர பராமரிக்க முடியவில்லை. ஏரி பல இடங்களில் உடைந்தது. ஆறும் உடைந்தது. கழனி எல்லாம் கடாய் நெடுநாள் பாழாகிக் கிடந்தன. பிள்ளையின் மருமகன் தொண்டைமா நாச்சியார் என்பவன் ஏரிமடைகளை அடைப்பித்து கலிங்கும் இடக் கல்வெட்டிக் கொடுத்தார்கள். இவ்வாறு இப்பணி செய்ய முடியாமல் போனதால் நிலம் பாழாய் கிடந்தது. அதனால் நாற்பத்தெண்ணாயிரத்துப் பிள்ளையின் மக்கள் சபையாரிடம் சென்று “எங்களால் ஆறு அடைத்து ஏரியில் மடைகளும் அடைத்து கலிங்கும் கட்ட முடியாது. நீங்கள் உங்கள் பொருள் இட்டு இப்பணி செய்யுங்கள். நாங்கள் முன்பு செய்ததுக்கு கொல்லை காடு கழனிகளில் முன்றில் ஒரு பங்கு எங்களுக்கு விட்டு இருகூறு நீங்கள் அனுபோகியுங்கள்” என்று கூறினர். அதனால் ஊரில் எட்டு பேர்கள் சேர்ந்து பொருள் இட்டு இப்பணி செய்ய ஒப்புக் கொண்டனர். அவர்களுக்குப் பிள்ளயின் மக்கள் எழுத்திட்துக் கொடுத்து விட்டனர். அப்பொருள் கொடுத்த எண்மரில் அவ்வூர் தேவரடியாள் திருவம்பலம் பிரியாத பிள்ளை என்பவளும் ஒருத்தி (83/8). ஏரியில் ஓடமிடுவதற்காக பலர் பொருள் கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டோம். ஏரியில் குழி குத்தி மண் எடுத்துக் கரையில் அட்டுவது என்று சிலவற்றில் குறிப்பும் கண்டோம். திருச்சி மாவட்டம் நங்கவரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு இதை தெளிவாகக் குறிக்கிறது. ஓடம் மரத்தால் செய்யப்பட்டது. இதைக் குளத்தில் விட்டு நாள் தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு மண் தோண்ட வேண்டும். அதை ஓடத்தால் கரைக்கு கொணர்ந்து கரையில் அட்ட வேண்டும். இதற்காகும் செலவுக்காகவே அப்பொருள் கொடுக்கப்பட்டன. நங்கவரத்தால் அறிஞ்சிகை சதுர்வேதி மங்கலத்தார் தங்களூர் குளத்தில் ஒரு ஓடம் “இசங்க” நிலம் விற்றுக் கொடுத்தார்கள். இந்நிலத்தை வாங்கி இப்பணிக்காக வைத்தாவர் கொடும்பாளூர் கற்கடை திரைலோக்கியனாரான கோதண்டராம மாராயன் என்பவர். குளத்தில் நாள்தோறும் ஆறு ஆள் மண் தோண்டி கரைக்கு அட்ட வேண்டும். இவர்கள் ஒரு நடைக்கு 140 கூடை மண் கொண்டு வர வேண்டும். இந்த ஆட்களுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பதக்கு நெல் கூலி புடவை உட்பட கூலி (வேட்டி உட்பட) அறுவருக்கு நாள் ஒரு கலமாக வருடத்திற்கு 365 கலம் நெல். இவர்களை கண்காணிப்பவனுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நாலு நாழி (அதாவது 12 படி) நெல் ஆண்டுக்கு 45 கலம். இந்த ஓடத்தில் அழிவு ஏற்பட்டால் திருத்தும் தச்சனுக்கு ஒரு ஆண்டுக்கு 2 கலம், 1 தூணி, பதக்கு. மரம் இடும் வலையனுக்கு (ஓடக்காரனுக்கு) 2 கலன். இவ்வாறு கூலி கொடுக்க வேண்டும். இந் நிலத்தை சபையே உழுது, நெல் கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் அரசே தண்டிக்கும். இவ்வாறு அரசர், மாதேவியர், அதிகாரிகள், பெண்டுகள் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் பொருள் கொடுத்து ஏரிகளை நல்ல நிலையில் வைத்திருக்க பெரிதும் முயன்றிருக்கின்றனர்.