◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

10. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

பசு கறக்கும் காட்சி - மாமல்லபுரம், கி.பி. 7–8ம் நூற்றாண்டு
பசு கறக்கும் காட்சி - மாமல்லபுரம், கி.பி. 7–8ம் நூற்றாண்டு

வெள்ளாளர்:

உழவர்கள் மண்மகள் புதல்வர்கள் என்றும், வளமையர் என்றும், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காரளர், புனைஞர், பின்னவர் என்றும் நிகண்டு கூறுகிறது. வேளாளர் என்பவர் வைசியரும் சூத்திரரும் என்று பிங்களந்தை கூறுகிறது. வேளாளர்களுக்கு உழவு, பசுக்காவல், வாணிபம், குயிலுவம், காருகவினை (நெய்தல் தொழில்) இருபிரப்பாளர் ஏவல் செய்தல் என அறுவகைத் தொழில்கள் என திவாகரம் கூறுகிறது. இவற்றில் எத்தொழிலை வேண்டுமானாலும் இவர்கள் பின்பற்றலாம் என்பது இதன் கருத்துப் போலும். ஆதலின் மேல் குறிப்பிட்ட அறுவகைத் தொழில்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுகுச் செல்லும் உரிமை இவர்களுக்கு இருந்தது என அறிகிறோம். இவர்களுக்கு கடையர், தொழுவர் என்னும் பெயர்களும் இருந்தன. இவர்களை “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்” எனச் சிலம்பு கூறும் (10-149, 150)
வெள்ளாளர் அல்லதுய வேளாளர் என்னும் பெயர் வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆற்றில் வெள்ளப் பெருக்கு எடுத்து வரும்போது வெள்ள நீரை நிலத்துக்கு பாய்ச்சி பயிர் செய்ததால் இப்பெயர் வந்தது அன்பது அவர் கருத்து. ஆனால் “வேள்” என்னும் சொல்லில் இருந்து இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்பது இந்நூலாசிரியர் கருத்து. வேள் எனில் மண் பொருள் (யாழ்பானத்து அகராதி தமிழ் லெக்சிகன்). மண்ணைக் கொண்டு தொழில் புரியும் குயவனுக்கு “வேட்கோ” எனப் பெயர், பல கல்வெட்டுக்களில் காணப்படுவது “வேள்” என்பது மண்ணைக் குறிக்கும் என உறுதி செய்கிறது. மண்ணை ஆள்பவர், என்னும் பொருளும் வேள+ஆளர் அல்லது வேளாளர் என வந்திருக்ககூடும். வேள=மண் என்னும் சொல்லிலிருந்து வேளிர் என்னும் பெயர் வந்திருக்கக் கூடும். வேளாளர், வேளார், வேளிர் என்று மூன்று திறத்தாரும் ஒரு குடியினராகவே கருதப்படுதல் உண்டு என்றும் முன்னரே கூறினோம். வேளிரும் வேளாளரும் முதலில் ஒரே இனத்தவராய் இருந்திருக்க கூடும் என்று கொண்டால் தவறில்லை. கல்வெட்டுகளில் வேளாளர்கள் பல பெயரில் குறிக்கப் படுகின்றனர் வேளிர், வேளாளர், செட்டி, நாயக்கர், முதலி, ரெட்டி, காராளர், பெருக்காளர், நாட்டார், கோனார், பிள்ளை என்று பெயர்கள் காணப்படுகின்றன. 12-ம் நூற்றாண்டில் “இவ்வூர் வெள்ளாளன் நெய்த வாயில் உடையான் வேளார் தேவர் கண்டான்” எனக்க கல்வெட்டு கூறுவது வெள்ளாளர், வேளான் என்று அழைக்கப்பட்டதன் எடுத்துக்காட்டு (23/8). விண்ணமாலை வெள்ளாளரில் சின்னம நாயக்கன் மகன் சூரப்ப நாயக்கன் என்று 13-ம் நூற்றாண்டில் கூறப்பட்டுள்ளது (468/8). “வெள்ளாளரில் வடுகமிரட்டி மகன் வடுகமிரட்டி” என்று மற்றொரு கல்வெட்டு கூறுகிறது (468/8). ஆதித்த சோழர் காலத்தில் (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு) ஈசன மங்கலத்து வெள்ளாளன் கங்கப் பெருமானடி அறிஞ்சகுடி வெள்ளாளன் புழலயன் என்பவன் குறிக்கப்பெறுகிறான். இவன் புழலயன் செட்டி என்று அழைக்கப்படுகிறான். இவன் தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலய செட்டி என்று அழைக்கபெறுகிறான். இதிலிருந்து வெள்ளாளன் ஆக இருந்தபோதிலும் செட்டி என்று அழைக்ப்படுகிறான் என்பது தெளிவு. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடியதாகக் கூறப்படும் ஏர் ஏழுபது என்னும் நூல் இவர்களுது புகழைச் சிறப்பாகக் கூறுகிறது. வையம் புரக்கும் பெருக்காளர் என்றும் “அழுங்குழவிக்கு அன்புடன் தாயே போல், அனைத்துயிர்க்கும் எழுங்கருணைப் பெருக்காளார்” என்றும் “தாயனைய காராளர்” என்றும் புகழ்கிறது. இவர்களது குலத்திலும் உயர்ந்த குலம் ஏதுமில்லை என இந்நூல் கூறுகிறது. இவர்கள் கங்கை மரபில் தோன்றியவர்கள் என ஏரெழுபதும் குறிக்கிறது. இதை சேக்கிழார் பிள்ளைத் தமிழும் குறிக்கிறது. வேதம் ஓதலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வாணிகமும், வழிபாடும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வேளான் பக்கமும், என்று உரையாசிரியர் கூறுவர். “வேளான் மாநதர்க்கு உழு தூண் அல்லது இல்லென மொழிப பிரவகை நிகழ்ச்சி” என தொல்காப்பியம் கூறும். பெரிய கழனியை உடையவர்கள் கிழவர் என்பார்கள். காவிரியனையுந் தாழ் படப்பை நெல்விளை அம்பர் கிழவோன் (புறம் 385) வேளாளர் உயர்ந்த அதிகாரிகளாகவும் உழவுத் தொழில் நடத்துபவர்களாகவும், பிறதொழில் வல்லுநர்களாகவும் பிறருக்கு உழைப்பவர்களாகவும், பணி புரிந்தனர் என்று கல்வெட்டுகளால் அறிகிறோம். இவர்கள் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவர்களுள்ளும் பல குடிகள் இருந்தன. உதாரணமாக ஆந்தை, காடை, மணியன், வில்லியன் முதலிய குடிகள் கொங்கு நாட்டில் 11, 12-ம் நூற்றாண்டிலேயே இருந்தது என்று வள்ளியெரிச்சல் கல்வெட்டுக்களால் அறிகிறோம். அவர்கள் உயர் குடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். தமிழவேள், மாராயர், மூவேந்த வேளாளன் என்ற பட்டங்கள் அவர்களுக்கு காணப்படுகின்றன. சேக்கிழார் நாற்பத்தெண்ணாயிரவர் என்ற குடியைச் சேர்ந்தவர். இக்குடியினர் உழவுத் தொழிலில் சிறந்தவர்கள். ஏகாம்பரநாதர் உமையன்னைக்கு எட்டு உழக்கும், ஈராழி நெல்லும் கொடுக்க, அதை உமையின் கையிலிருந்து பெற்று உழவுத் தொழில் பெருக்கினர் என்று சேக்கிழார் புராணம் கூறுகிறது. காராளர் வயலில் உழுது தங்கள் கையால் நட்டு வளைந்த கதிர்கள் திருந்தினால்தான் பாராளும் அரசர்களின் பொன்முடி திருந்தும். கலப்பை பூணட ஏரால் எண்திசை வளர்க்கும் புகழ் வேளாளர் என்றும், ஏரடிக்கும் சிறு கோலால் தரணி ஆள்வதால்தான் முடியரசர் செங்கோல் செலுத்துவர் என்றும் சேக்கிழார் புராணம் கூறுகிறது.

அதிகாரிகள்

வேளாளர்களில் பலர் உயர்ந்த அதிகாரிகளாக அரசில் பணிபுரிந்தனர். பாண்டிய மன்னன் சடையன் மாறன் கீழ் பராந்தகப் பள்ளி வேளானாயின நக்கன் புள்ளன் என்பவன் உயர் அதிகாரியாகத் திகழ்ந்தான். ராஜசிம்ம பாண்டியனுக்கு பெருங்காகூர் கோன் வேளான் கணக்கனாக இருந்தான். (பெரிய சின்னமனூர் சாஸனம்). சோழர்களது கல்வெட்டுகளில் பெருமளவு உயர் அதிகாரிகளாக மூவேந்த வேளாளன் என்னும் பட்டம் பெற்றவர்கள் பணிபுரிந்து இருக்கிறார்கள். இவர்கள் வேளாளர்கள் என்பதில் ஐயமில்லை. இராஜராஜனின் கீழ் பொய்கை நாட்டு கழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவன் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தான். அவனது திறமையைப் போற்றி அவனை தஞ்சைப் பெரிய கோயிலில் ஸ்ரீகாரியமாக அரசன் நியமித்தான். உத்தரங்குடையான் கோன் வீதவிடங்கனான வில்லவ மூவேந்த வேளான் என்பவன் இராஜராஜனுக்கு பெருந்தரமாகப் பணிபுரிந்தான். இராஜாதிராஜன் கீழ் வேளாளக் கூத்தனான செம்பியன் மூவேந்த வேளான் என்பவன் உயர் அதிகாரியாக பணிபுரந்தான். சோழர் காலத்தில் பணிபுரிந்த நூற்றுக் கணக்கான அரசங்க அதிகாரிகள் மூவேந்த வேளார் எனப்பட்டம் பெற்றதிலிருந்து வேளாளர் உயர் அதிகாரிகளாகப் பெரும்பாலாக இருந்தனர் என்பதில் ஐயமில்லை.

சேனைத்தலைவர்கள்

வேளாளர்கள் அமைதி நிலவிய நாட்களில் அரசனின் அதிகாரியாகவும் பணிபுரிந்தனர், ஆயினும் போர்காலங்களில் அரசர்களுக்காகவோ, அரசர்களுடனோ போருக்குச் சென்று வெற்றிவாகை சூடும் வீரர்களாகவும் பணிபுரிந்திருக்கின்றனர். கலிப்பகையார் என்பவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியாரை மணஞ்செய்ய நிச்சயத்தனர். ஆனால் மணவினை நடக்கும் முன்னர், கலிப்பகையார் அரசனின் ஆணையை ஏற்று போருக்குச் சென்றார். எயர்கோன் கலிக்காமனார் வேளாண் குடியைச் சேர்ந்தவர், ஆயினும் அவர்குடி சோழ அரசர்களுக்குச் சேனாபதியாக விளங்கிய குடி என்று “வள்வர் சேனாபதிக்குடி” என்று குறிக்கப்படுகிறது. இதிலிருந்து ஒரு குடியே வழிவழியாக அரசனுக்கு தானைத் தலைமை ஏற்கும் பேறு பெற்றிருந்தது என்றும் அறியலாம். இதே போன்று வேளாண்மை குடியைச் சேர்ந்த கோட்புலி நாயனார் சோழ மன்னர்க்கு தந்திரியாய் போர்களம் சென்றார். உத்தரஙகுடையான் கோன் வீதிவடங்கனான வில்லவ மூவேந்த வேளாளன் என்பவன் முதல் இராஜராஜனுக்காக கோழிப் போரில் பங்கு கொண்டான் என்று தஞ்சைக் கல்வெட்டு கூறுகிறது. சேக்கிழார் குடி சோழப் பேரரசுக்குச் செய்த பெரும் பணிகளை அனைவரும் அறிவர். இராஜராஜனின் படையில் வெள்ளான் சித்திரையானி என்பவன் வேளைக்காரப் படையில் பணிபுரிந்தான் (238/5).

வாணிகம்

வேளாளர் பலர் வாணிகத் துறையில் சிறந்து இருக்கிறார்கள். இவர்களிடத்தில் சித்ரமேழி நாட்டார் என்னும் சமுதாய அமைப்பு இருந்தது. இச்சித்ரமேழி நாட்டரின் மெய்கீர்திகளில் மூன்று மாறுபாடுகள் காணப்படுகின்றன. சில மெய்கீர்திகள் மேழியையே தெய்வமாகக் கொண்டவர்கள் என்று கூறுகின்றன. இவர்கள் மேழி பிடித்து உழுபவர்கள். சில மெய்கீர்திகள் “பசும்பையையே தெய்வமாகவும்” என்று கூறுகின்றன. இவ்வமைப்பு வேளாளர்களில் வணிகத் துறையில் சிறந்தோர்களின் அமைப்பு எனலாம். இன்னம் சில மெய்கீர்திகள் செங்கோலையே தெய்வமாகக் கொண்டவர்கள் எனக்கூறுகின்றன. இவர்கள் அறங்கூறும் பணியில் ஈடுபட்டபோது இவ்வாறு அழைத்துக் கொண்டனர் போலும்.

சித்ரமேழி பெரிய நாட்டவர்

உழவையே தங்கள் தொழிலாக் கொண்டு வாழ்ந்த ஒரு குடி மக்கள், நாட்டில் பலபகுதிகளில் பரவி வாழ்ந்த போதிலும் ஒரே இனத்தவராக சமயத்தவராக தங்களைக் கருதி வாழ்ந்தனர். இவர்கள் எரையெ தெய்வமாகக் கொண்டவர் என்றும் அதனால் சித்ரமேழி பெரிய நாட்டார்கள் என்று பெயர் பெற்றனர் என்றும் அறிகிறோம். இவர்கள் தங்களை பூமிதேவியின் மக்கள் என்று கூறிக் கொண்டனர். இவர்கள் செந்தமிழிலும் வடகலையிலும் வல்லமை பெற்றிருந்தனர். நீதியில் நிபுணர்களாகத் திகழ்ந்தனர். செல்வம் நிறைந்தவர் ஆதலின் திருமகளின் மக்கள் என்றும் தங்களைக் கூறிக்கொண்டனர். எப்பொழுதும் இன் செல்லே பேசுவர். “தெங்கும், பலாவும், தேமாஞ்சோலையும், வாழையும், கமுகும், வளர்கொடி முல்லையும், பூவையும், கிள்ளையும் பொலிவோடு கெழுமி வாட்டம் இன்றி கூட்டம் பெருக வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இதிலிருந்து நிலத்தில் பயிர் செய்தலை எவ்வளவு சிறப்பாகக் கருதினர் என்பது தெளிவு. செங்கோன்மையே இவர்கள் தலையாகக் கருதினர். “சித்ரமேழியே தெய்வமாகவும் செம்பொற்பசும்பையே வேலியாகவும் கொண்டவர்கள்” என்றும் இவர்கள் தங்களைக் கூறிக்கொண்டனர். உத்தம நீதி, உயர் பெருங்கீர்தி, முத்தமிழ் மாலை மழுவதும் உணர்ந்தவர் என்றும் இவர்கள் குறிக்கப் பெறுகினறனர். இவர்கள் எழுபத்தொன்பது நாடுகளில் வாழ்ந்தனர் என்றும் திருக்கோயிலூர் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். இச்சித்ரமேழி நாட்டார் என்ற பெயரில் வெள்ளாளர் சமுதாயம் பல நூற்றண்கள் தமிழகத்தில் சீரும் சிறப்புமாக திகழ்ந்தது என்று அறிகிறோம். நெல்லூரில் உள்ள ஒரு கல்வெட்டில் இவர்கள் “அறம் வளர, கற்பமைய, புகழ் பெருக, மனுநெறி தழைப்ப நியாயம் நடாத்துகின்றவர்கள் என்று குறிக்கப் பெறுகினர் (496/5). இவர்கள் பல நாட்டில் இருந்தவர்கள் என்று அவர்கள் குறிக்கப் பெறுகின்றன. நாட்டை விழயம் என்றும் இவர்கள் குறிக்கின்றனர். இவர்களது பிரதிநிதிகள் அவ்வப்போது கூடி தங்கள் சமுதாயதுக்குத் தேவையனவற்றை ஆலோசித்தும், தங்கள் பெயரால் நடக்கும் அறத்திற்கு வேணடியவற்றை நிர்ணயித்துக் கொண்டனர் என்றும் அறிகிறோம். இக்கூட்டத்திற்கு பெரிய நாடு என்றும் பெயர். இப்பிரதிநிதிகள் எடுத்த முடுவுகள் இச்சமுதாயம் முழுவதையும் பணைத்தது என்று அறிகிறோம்.
நெல்லூரில் குலோத்துங்க சோழன் காலத்தில் இப் பெரிய நாட்டார் கூடினர். இவர்கள் கூடிய இடமும் சித்ரமேழி மண்டபம் எனக் குறிக்கப்படுகிறது. இவ்வூர் பெருமாள் கோயிலுக்கு நிலம் இப்பெரிய நாட்டவர் அளித்தனர். இவர்கள், அக்கூட்டத்தில் பெரிய ஊர்கள் 1000 குழி நிலமும், நடுத்தர ஊர்கள் 750 குழி நலமும், சிறிய ஊர்கள் 500 குழி நிலமும், பள்ளிப் படைகள் 250 குழி நிலங்களும் விடவேண்டும் என்று தீர்மானித்தனர். அத்தீர்மானத்தில் மற்றொன்றும் குறித்தனர். பிராம்மணிபுர சேவகப்பற்றைச் சேர்ந்தவர்கள், அதனால் கொடுக்க இயலாது என்று கூறக்கூடாது. யார் யார் மேழி பிடித்து உழுகிறார்களோ அவர்கள் அனைவரும் விடவேண்டும். விடாதவர் பெரிய நாட்டார்க்கு பிழைத்தவர்களாவர் என்றும் தீர்மானித்தனர். இத்தீர்மானத்தில் கையொப்பமுட்டவர் அனைவரும் வெள்ளாளர்கள். இந்நாட்டவர் பல கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதிலிருந்து இவர்கள் சிறந்த சமுதாய அமைப்பில் இயங்கி வந்தார்கள் என்று கருத இடமிருக்கிறது. இவர்கள் கலபபையையே தங்களது கொடியாகக் கொணடிருந்தனர். திருக்கோயிலூரில் கலப்பை போன்ற உருவில் ஒரு தோரணம் அமைத்திருந்தார்கள் என்றும் சிறப்பாக பூமிதேவியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் கல்வைட்டிலிருந்து அறிகிறோம். இவர்களுக்கென தனிப்பட்ட மெய்ககீர்த்தியே இருப்பதிலிருந்து இவர்கள் சமுதாயத்திலும், அரசாலும் பெரிதும் போற்றப்பட்டனர் எனறு அறிகிறோம். இக்காலத்தில் நாட்டார் என்று அழைக்கப்படும் குடிகளில் பலர் இப்பெரும் சமுதாயக் குடிகளாக இருந்திருக்க வேண்டும். வாணிகர்களாகப் பணிபுரிந்த வேளாளர்கள் பல்வகை தானியங்களை விற்பதில் ஈடுபட்டிருந்தனர் எனக் கொள்ள இடமிருக்கிறது. கூலவாணிகம் இவர்களது சிறந்த வாணிகத் தொழிலாக இருந்தது. இருப்பினும் பற வாணிகங்களிலும் இவர்கள் சிறந்திருந்தனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஆதித்த சோழர் காலத்தில் ஈசான மங்கலத்தில் இருந்த வெள்ளான் புழலய செட்டி என்பவன் ஒரு மாணிக்க வியாபாரி என்று அறிகிறோம். பசும்பையையே தெய்வமாகக் கொண்ட சி்த்ரமேழி என்னும் சமுதாய அமைப்பில் திகழ்ந்த வெள்ளாளர் இது போன்று வாணிகத்தி்ல் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

உழு தொழில்

உழு தொழிலையே தங்களது தொழிலாக் கொண்ட வெள்ளா மக்களின் வாழ்க்கையைப்பற்றி அதிகம் குறிப்பிடல் வேண்டியதில்லை. இவர்களே மன்னராலும் பிற மக்களாலும் போற்றப்பட்ட பெருக்காளர். இவர்களைப் பற்றிய ஏராளமான இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. இவர்களில் பல ஊர்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டு விளங்கினர். ஊர்க் கிழவர் ஊராளி என இவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களே காவுடையர் (கா என்பது கிராமம் என்னும் பாகதச் சொல்), காவுண்டர், காமிண்டர் எனச் சிறந்தவர்கள். இதேபோல் நாட்டுத் தலைவர்களாகவும் சிலர் விளங்கியதால் நாட்டார் எனவும் பெயர் ஏற்றனர். உழுது வாழ்பவர்கள் மேலோர் என்றும், கீழ்வாரத்தார் என்றும் இருவகை வேளாளர் உண்டு என உரையாசிரியர்கள் குறிப்பர். உரையாசிரியர்கள் காலத்தில் இப் பாகுபடு இருந்தது என்பது இதனால் தெளிவாகிறது. நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கு வாங்கி குத்தகை செலுத்துதல் மேல்வாரம் என்றும், அவ்வாறு மேல் வாரத்துக்கு ஏற்ற நிலத்தை பிறரிடம் கொடுத்து பயிரிடச் செய்து பெறும் குத்தகை கீழ்வாரம் என்றும் பொருள் பெறும் போலும்!. ஆதலின் செல்வம் மிகுந்தவர் மேல் வாரத்துக்கு நிலம் பெற்று பிறரிடம் கீழ்வாரத்துக்கு அளித்தனர் என்று கொள்ள இடமுண்டு. இதிலிருந்து வெள்ளாளர்களில் செல்வம் மிகுந்தவர்கள் என்றும், செல்வம் குறைந்தவர்கள் என்றும் இருபிரிவுகள் இருந்தன. செல்வம் குறைந்த அல்லது அற்ற வேளாளர்கள் பிறரிடம் தொழில் புரிந்து வாழ்ந்தனர். இவர்களையே பிறருக்கு தொழில் புரிவோர் என நூல்கள் குறித்தன. அரசின் அருள் பெற்று ஊர்கிழார்களாகவும், தானைத் தலைவர்களாகவும் விளங்கிய வேளாளர்கள், சமுதாயத்தில் உயர்ந்த ஜாதியினர் என்றும், பிறர்க்கு தொழில் புரிவோர் தாழ்ந்த ஜாதியினர் என்றும் கருத்து நிலவியது.

கிளைக் குடிகள்

வேளண் குடியில் பல கிளைக் குடிகள் இருந்தன என்றும் குறிப்பிட்டோம். இக்குடிகள் ஒவ்வொன்றிலும் செல்வம் நிறைந்து உயர்ந்த ஜாதியாக வாழ்ந்தோரும், செல்வமின்றி தாழ்ந்த ஜாதியாக வாழ்ந்தோரும் உண்டு. உதாரணமாக வள்ளியெறிச்சல் என்ற இட்த்தில் 11-ம் நூற்றண்டுக் கல்வெட்டு, காடை, புலியன் முதலிய வேளாளர் குடிகளைக் குறிக்கிறது. இவர்கள் உயர்ந்த குடிகளாக அரசாங்கப் பணி புரிந்திருக்கிறார்கள். மூவேந்த வேளான், தமிழவேள், முதலிய பட்டம் கொண்டுள்ளனர். ஆனால் இக்காலத்தில் இவர்கள் சிலர் தாழ்ந்த ஜாதியினராகக் கருதப்படுகின்றனர். அதே போன்று நாடார் என்னும் குடியில் சிலர் தங்களை உயர்ந்தவர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் கருதிக்கொள்ள தலைப்பட்டனர். ஆதலின் குடியில் உயர்வும் தாழ்வும் செல்வத்தாலும் செல்வாக்காலுமே தோன்றி பின்னர் ஜாதியின் பெயரால் கற்பிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.
வெள்ளாளர்கள் சிலர் தங்களது சிறந்த திறனால் அரசால் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் கீரனூர் கல்வெட்டில் வீரராஜேந்திரன் காலத்தில் ஒரு வெள்ளாளன் பல்லவரையன் என்று ஆழைக்கபெறுகிறான். “இவ்வூர் வெள்ளாளன் பூசகளில் அரையன் சிறியனான வேந்த சூளாமணி பல்லவரையன்” என்று கல்வெட்டு குறிக்கிறது. இதே ஊரில் உள்ள கல்வெட்டுக்களில், கீழ்மணியர், மேல்மணியர் என இரு பிரிவுகள் வெளாளர்களில் குறிக்கப்படுகின்றன. வெள்ளாளன் கீழ்மணியரில் நீலன் புலியன் (277/5) என்றும், மேல்மணியரில் காவன் உடையன் (279/5) என்பவனும் குறிக்கப்பெறுகின்றனர். ஒரு கல்வெட்டில் வெள்ளாளன் கோன் என்று குறிக்கப்படுகிறான். வெள்ளான் கழஞ்சியன் தேவனான கொங்கு இளங்கொன் (280/5) என்று குறிக்ப்பெறுகிறான். மற்றொரு கல்வெட்டில் வெள்ளாளன் பறையன் என்று குறிக்கப்பெறுகிறான். விக்ரம சோழன் காலத்தில் திருமுருகன் பூண்டி கல்வெட்டு “வெள்ளாளன் மாப்புள்ளிகளில் பறையனான தனபாலன்” (253/5) என்பவனைக் குறிக்கிறது. வெள்ளாளர்கள் பல கிளைக் குடிகளாக இருந்தன. இவை காலப்போக்கில் பெருகி 20-ம் நூற்றாண்டிலேயே ஏராளமான எண்ணிக்கையாக உயர்ந்தன. பல இடங்களில் வெள்ளாளரும், வேளரும் ஒரே குடி என்னும் வகையில் குறிப்புகள் உள்ளன. திருநாவுக்கரசர் வேளாண் குடியைச் சேர்ந்தவர். சேக்கிழார் வேளாளர். இவரது குடி புகழ் வேளாண் குடி என்று கூறப்படுகிறது. இளையன் குடி மாறர் நாயனார் ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லாத செல்வம் பெற்றவர். இவர் சூத்திரநற்குடியில் பிறந்தவர் என்று சேக்கிழார் குறிக்கிறார். ஏயர்கோன் என்பவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர். ஆயினும் தங்கள் குல முறையில் சோழ மன்னன் சேனாபதியாய் பணிபுரிந்த குடி என்று “வளவர் சேனாபதிக்குடி” என்று அழைக்கப்பட்டது. இவர் தன் இரு மக்கள் சிங்கடியார், வனப்பகை ஆகிய இருவரையும் சுந்தரமூர்த்திக்கு அடிமையாக அளிக்க அவரும் இவர்களை மக்களாக ஏற்றுக் கொண்டார். தான் பாடிய பாடலில் சிங்கடியப்பன் என்று அவர்களின் பெயரை இட்டே பாடினார். கோட்புலி நாயனார் வேளான் குடியைச் சேர்ந்தவர். அவர் சோழ மன்னனுக்கு தந்திரியாய் போரிடவும் செயல் பெற்றார்.

வாழ்க்கை

இவர்களுடைய வாழ்க்கைகளைப் பற்றி பல செய்திகளை சங்க நூல்கள் தருகின்றன. இவர்கள் மருதநிலத்தின் குடிகள். இவர்களது மனைகள் ஒப்பில்லாத மனைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தென்னங்கீற்றுகள் வேயப்பட்ட கூரைகளை உடையவை. இவர்களது மனை முன்றுகளில் மஞ்சள் விளைந்திருக்கும் (பெரும் பரணாற்றுப்படை 335). முல்லை நிலத்து உழவர்களின் மனை முன்றுகளில் வரகு முதலியன நிற்கும். தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள் இருக்கும். அவர்களது குடியிருப்புகள் வரகு வைக்கோலாலே வேயப்பட்டிருக்கும். வரகு திரிகை நட்ட பந்தல் நிற்கும். கலப்பையும், திறண்ட சக்கரங்களையும் அங்கே சார்த்தி வைத்திருப்பர்.
தன் பொருளைப் பிறருக்கு பகிர்ந்து இன்பம் கண்டவர்கள் இவர்கள் வேளாளர் விருந்தோம்புவதில் சிறந்தவர் எனப் பண்டைய நூல்கள் கூறுகின்றன. “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்றே ஒரு பாடல் உண்டு. சிறிய முதுகையும் பிடியின் கைபோன்ற பன்னலையும் தொடியணிந்த கையையும் உடைய வேளாண் பெண்கள் தங்கள் குழந்தைகளையும் விட்டுவிட்டு வருந்தினர்களை இருக்கச் செய்து பலமுறை குத்திய வெண்மையான அரிசிச் சோற்றுடன் நண்டு, பீர்க்கங்காயும் கலந்த உணவை கொடுப்பர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. வேளாளர் குடியிருப்பில் பெரிய பலாப்பழம், தெங்கின் இளநீர், முற்றிய வாழைப்பழம், பனைநுங்கு, முதலிய கிடைக்கும். சேமப்பின் இலையுடன் வள்ளிக்கிழங்கு முதலிய கிழங்குகளும் கிடைக்கும் எனப் பெரும்பாணாற்றுப் படை கூறுகிறுத. முல்லை நிலத்து உழவர்கள் வரகையும் அவரை விதையையும் புழுக்கி உண்பர். உழவர் கழனியில் அரிசிச் சோற்றோடு மீனை விலாப்புடைக்க உண்பர் என்று புறப்பாட்டு (புறம் 60) கூறுகிறது. வெள்ளாளர் சிறுவர்களுக்குரிய வயது வந்ததும் மயிர் நீக்குவர். அதை ஒரு விழாவாகவே நடத்துவர். அது தொடங்கியே கலை பயில பணிப்பர். மருள் நீக்கியாருக்கு கலைபயிலும் நாள் வந்ததும் மயிர் நீக்கும் விழா நடந்தது. உழவர், பள்ளர் பறையரோடு கழனியில் இறங்கிப் பணிபுரிவர், அவர்களது கை வலியகை எனவும் கருங்கை எனவும் அழைக்கப்படும். நிலத்தை முதலில் உழுவதை ஒரு பெரும் விழாவாகவே கொண்டிருந்தனர். கலப்பைக்குச் செந்நெல் கதிரையும், அருகம்பில்லையும் குவளைப் பூவையும் மாலையாக தொடுத்து அணிவித்து, தொழுது, ஏரைப்பூட்டி நிற்க அருகில் இருந்தோர் ஏரைப் பாடுவர். இதை ஏர்மங்கலம் என்று அழைப்பர் (சிலம்பு 1, 10, 132,5). மாடுகளினால் நிலத்தை மிதிக்க செய்தலும் (பெரும். 209-211). உழுத நிலத்தைக் காலால் மட்டுப்படுத்தலும் (தமிழர் சால்பு 289) சங்ககாலத் தமிழர் அறிந்திருந்தனர். வரிசையாக நின்று கொண்டு பட்டைகளினால் வயலுக்கு நீர் இறைத்துக் கொண்டே பாடுவர் (மதுரை 89-90). நாற்று நட்டு பயிர் செய்தல் சங்கால உழவர் கையாண்ட முறையாகும் (பெருமபாணா. 212) களை எடுக்க இவர்கள் தொடுப்பு என்னும் கருவியை உபயோகிப்பர் (பெருமபாணா. 201-2). வேளாளப் பெண்கள் மயிரைக் கொண்டையாக அணிந்து, ஆம்பல் முதலிய மலர்களினாலும், தளிர்களினாலும் ஆன ஒருவகை ஆடை அணிந்து களையாக விளைந்த ஆம்பலையும், நெய்தலையும், தளம்பு என்னும கருவியால் எடுப்பர். நெற்கதிர்கள் திரண்டு விளைந்தவுடன் அவற்றை அறுப்பர். நெல்லை அறுக்கும் போது தாளோடு சேர்ந்து அறுத்து, அருகில் நின்ற மிகவும் பழமையான மருத நிலத்தில் சேர்த்துப் போரிடுவர். அவ்விடத்துக்கு களம் என்று பெயர். உழவர்க்கு களமர் என்னும் பெயர் இதனால் வந்திருக்கக் கூடும். அக்களத்தில் உறையும் தெய்வங்களுக்கு பலிகொடுத்தலும் உண்டு. ஆதலின் இதை “மருதின் ஓங்கு சினை நிழல் பலிபெறு வியள் களம்” எனப் பெரும்பாணாற்றுப்படை கூறும். நெல்லை அரித்துப்போட்டு சூட்டைக் காட்டுவர். அப்போது முகக்கக் கொடுத்துப் பாடுவர். அதற்கு முகவைப் பாட்டு என்று பெயர். அப்போது தடாரி அல்லது கிணை என்னும் திரண்ட முழவை முழக்கி கிணைவன் (தடாரி கொட்டுவோன்) வயல் உழவனைப் போற்றுவான். இதை மகிழ் இசை ஓதை என்றும் களவழி வாழ்த்து என்றும் அழைப்பர்.

வேளாண் மகளிர்

மயிரை கொண்டையாக அணிந்திருப்பர். ஆம்பல் முதலிய மலர்களாலும் தளிர்களாலும் ஆன ஒருவகை உடையைத் தரி்த்திருப்பர் (புறம் 60). அவர்கள் சிறிய முதுகுடைவர்கள். பிடியின் கைபோன்ற பின்னலை உடையவர்கள். கையிலே தொடி அணிந்திருப்பவர் என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ஏரால் உண்டு வாழ்பவர், பெரிய மனையின் கண் மகளிர் குளத்துக் கீழ் விளைந்த களத்தின் கண் கொண்ட வெண்ணெல்லை முகந்து கொடுப்பார்.

திருமணம்

வேளாளர் தங்கள் பெண்களுக்கு 12 வயது வந்ததும் மணம் முடிப்பர். மணம் பெரும்பாலும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டது. வேளாண் குடியில் பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் சென்று பெண் கேட்பது மரபு. திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியாருக்கு 12 வயது வந்ததும் கலிப்பகையார் பெண் கேட்டுவர சில பெரியோரை அனுப்பினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இதிலிருந்து மணமகனோ, மணமகளோ விழாவின் முன்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது மரபில்லை எனக் கொள்லாம். இதே போன்று மானக்கஞ்சார நாயனாரின் மகளை ஏயர்கோன் என்பார் மணக்க விரும்பி மகட் பேச பெரும் முதியோரை அனுப்பினார். இவ்விருவரும் வேளாளர் குடியைச் சேர்ந்தவர்கள்.
மணம் பேசி முடிந்ததும் மதிநூல் வல்லுநர் இரண்டு திறத்தார்க்கும் ஏற்புடைய மங்கலமான நாளை வகுத்தனர். மணவிழாவின் தொடக்கமாகத் தங்கமயமான கலத்தில் வெண்முளை பெய்து தொடங்கினர். இது இப்பொழுதும் பாலிகை இடுதல் என வழங்கப்பெறும். மண மக்கள் வாழ்வில் செழுமை நிறைந்திருக்க வேண்டும் என்பதின் தொடக்கமாக இடைக் கருதினர் போலும். மணவிழாவின் முக்கிய அங்கமாக ஆண்மகன் பெண்னின் கரத்தை பிடித்தல் விளங்கிற்று. “கஞ்சாரர் மகள் கொடுப்ப கைபிடிக்க வருகின்ற” என்று வருகின்ற அடிகளால் இதை அறியலாம். மணவிழாவில் ஒரு குறிப்பிட்ட தொகை அரசுக்கு கடமையாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கண்ணாலக் காசு எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. மூன்றாம் குலத்துங்கன் காலக் கல்வெட்டு ஒன்று 12-ம் நூற்றாண்டில் “கண்ணாலங்களில் கொண்டவன் ஒரு சின்னமும் கொடுத்தவர் ஒரு சின்னமும் இடக் கடவார்களாகவும்” என்று குறிக்கிறது. அரசுக்கு வரவேண்டிய இப்பொருளை அவ்வூர் கோயிலுகளுக்கு அரசன் அளித்திருக்கிறான். இதேபோன்று ஈரோட்டில் உள்ள ஒரு கல்வெட்டில் “கண்ணாலம் ஆண்தலை அரக்கால் பொன், பெண்தலை அரைக்கால் பொன்” என்று வருவதிலிருந்து இக் காசு கல்யாணங்களில் எங்கும் கொடுக்கப்பட்டது என்றும், இவ்வாறு கொடுக்கப்படுவது பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த மரபு என்றும் தெரிகிறது. புதுச்சேரிக்கு அருகில் ஒரு கல்வெட்டு, கட்டில ஏறுவான் கொடுக்க வேண்டிய காசைக் குறிக்கிறது. முற்காலத்தில் மணந்து கொள்வதற்கு முன் கட்டிலில் ஏறிப் படுத்தல் கூடது என்னும் கருத்து நிலவியது, ஆதலின் இது கட்டில் ஏறுவான் என்பது மணவினை முடிக்கும் போது என்று பொருள் தோன்றுகிறது. வேளாண் குடி ஆண் மகன் நாட்டுக்காகப் படையெடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தனக்கு மணவிழா நிச்சயித்து இருந்தாலும் கூட அதை தள்ளி வைத்துவிட்டுப் போருக்கு எழும் ஆண்மை படைத்தவன் என்பது திலகவதியாரின் வரலாற்றிலிருந்து தெரிகிறது. திலகவதியார்க்கு மணவிழா நிச்சயமான பின்னர் மணமகனான கலிப்பகையார் அரசனின் ஆணையை ஏற்று போருக்கு சென்றார். போரில் அவர் இறந்துவிட்டார். தனக்காக நிச்சயிக்கப்பட்ட ஆண்மகன் போரில் இறக்கவும், திலகவதியார் மணவிழா நடக்காத பொதிலும் தீப்பாய நிச்சயித்தாள். ஆனால் திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் முடிவை அப்பெண் மாற்றியமைத்துக் கொண்டாள் என்று பெரியபுராணம் கூறுகிறது. இதிலிருந்து வேளணகுடியில் கணவன் இறந்துவிட்டால் விருப்பமுள்ளோர் தீப்பாய்வதும் உண்டு என்றும் அறியலாம். புகழனார் இறந்ததும் அவர் மனைவி உடன் இறந்தாள். வேளாண் குடிப் பெண்களுக்கு கடைசியர் என்றும் பெயர் உண்டி. கடைசியர் காலையில் பூக்களை நாற்றில் கோர்த்து தலையில் சூடிக்கொள்வர். தோளில் வளை தரித்திருப்பர். மார்பகம் திறந்திருக்கும். கழனியில் இறங்கி அவர்களே களை எடுப்பர். அவ்வாறு எடுக்கும்போது ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு விளையாடுவர். அதனால் ஒர் அழகும் பெற்றிருப்பர். இவர்கள் கள்ளை உண்டு மயக்கம் பெற்றிருப்பர். அதனால் பெரிய மீன் போன்ற இவர்களது கண்கள் சிவந்திருக்கும். தம் இசையில் புதுமையுண்டாகும் வகையில் இழிந்த மொழியில் பாடுவர். இப்பாட்டிற்கு “விருந்திற் பாணி” என்று பெயர் என சிலப்பதிகாரத்தில் இருந்து அறிகிறோம். வெள்ளாளர் பெண்களுக்கு வெள்ளாட்டி என்றும் பெயர் உண்டு. வேலைக்காரி என்னும் பொருளிலும் வெள்ளாட்டி என்னும் சொல் பல கல்வெட்டுகளில் கையாளப்படுகிறது.