◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

11. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை

வணிகர்:

தொல்காப்பியம் மரபியலில் வணிகர், வைசியர் என அழைக்கப்படுவதிலிருந்து அக்காலத்திலேயே வைசியர் குடி சிறப்பாகக் கூறப்பட்டது தெளிவு. அவரது வாழ்க்கையை வாணிக வாழ்க்கை என்று தொல்காப்பியம் கூறுகிறது (மர. 78). “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை”. இவர்கள் இளங்கோக்கள், மன்னர் பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், அன்காவலர், உழமர், பரதர், வினைஞர், செட்டியர், சீரைட்டியர் எனவும் அழைக்கப்படுவர் என்று நிகண்டு கூறுகிறது. இவர்களுக்கு அறுதொழில்கள் உண்டு எனப் பண்டைய நூல்கள் குறிக்கின்றன. ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரை ஓம்பல், வாணிகம் என்ற அறுதொழிலும் அவர்குரியன ஆதலின் அவர் “இருமூன்று மரபினர்” என்று தொல்காப்பியத்தில் குறிக்கப்படுகின்றனர். இவ்வறு தொழில்களை வணிகர்க்கு நிகண்டுவும் குறிக்கிறது. கல்வெட்டுகளில் இவர்கள் வணிகர், நகரத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், வியாபாரி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உழவுத் தொழிலும், வாணிகமும் சிறந்த தொழிலாக இருந்தது.
கடல் வாணிபம் செய்வோரை “கவந்தரு தருவிற்புலம் பெயற்மாக்கள்” என்று சிலம்பு கூறுகிறது. இவர்களை கடலோடிகள் என்று அரும்பத உரை ஆசிரியரரும், பரதேசிகள் என அடியார்க்கு நல்லாரும் குறிப்பர் (சிலம்பு 1,5, 11).

பண்டைய வணிகர்:

மதுரைக்கு அருகில் உள்ள அழகர் மலையில் சுமார் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவை சமணப் பெரியார்களுக்கு அளித்த பாழியைக் குறிக்கின்றன. இப்பரிசு கொடுத்தவர்களில் பலர் வணிகர் என்று குறிக்கப்படுகின்றனர். அறுவை வணகன், உப்பு வணிகன், கொழு வணிகன், முதலிய மதுரையைச் சேர்ந்த வணிகர்கள் அங்கு பொருள் கொடுத்துள்ளனர். இதிலிருந்து பல வணிகர்கள் சங்காலத்தில் சமண மதத்தை தழுவியிருந்தார்கள் அன்று அறிகிறோம். இதிலிருந்து பல்வேறு வணிகர் இருந்தனர் என்பதும் பெறப்படுகிறது. எட்டு வகை தானியங்களை விற்கும் கூலவணிகர், நுல் ஆடை விற்கும் அறுவை வணிகர், உப்பு விற்கும் உமணர் முதலிய பலவகை வணிகர் இருந்ததை சங்கநூல்களில் இருந்து அறிகிறோம். கலத்தாலும், காலாலும், இவர் பொருள் ஈட்டுவோர் என சிலம்பு கூறுகிறது. கலம் என்பது நீர்வழியாக மரக்கலத்தின் மூலம் நடைபெறும் வியாபாரம். காலால் என்பது வண்டிகளால் தரைவழியாக நடைபெறும் வாணிபம். நீர்வழி வாணிபம் என்றும் நிலவழி வாணிபம் என்றும் அக்காலத்திலேயே வகுத்திருப்பது சிறப்பாகக் கவனிக்கதக்கது.

சங்க கால வாணிபம்:

சங்க காலத்தில் வணிகர் வயாபாரஞ் செய்த பொருள்கள் யாவை என்பதையும், அவர்கள் எந்தன்மையினர் என்பதையும் பட்டினப்பாலை மிகவும் சிறப்பாகக் கூறுகிறது. வாணிகரது வாழ்க்கை எதைக் குறிக்கோளாக கொண்டு சிறந்தது என்பதற்கு இலக்கிய மரபாக இதைக் குறிக்கலாம்.
நிமிர்ந்த குதிரைகள் நீர்வழியே வந்தன. வண்டியில் மிளகு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. வடமலையில் பிறந்த மணியும், பொன்னும், தென்கடல் முத்தும், குடமலையில் விளைந்த சந்தனமும், அகிலும், கீழ்க்கடலில் பிறந்த பவளமும், கங்கைக் கரைப் பொருள்களும், காவிரி ஆற்றங்கரை பொருள்களும் ஈழத்திலிருந்த உணவுப் பொருள்களும், பிற நாட்டுப் பொருள்களும், அவர்களால் விற்கப்பட்டன என்று பட்டினப்பாலை கூறுகிறது. இவற்றிலிருந்து இந்தியா முழுவதிலிருந்தும் வந்த பொருள்களையும், பிறநாடுகளிலிருந்து வந்த பொருள்களையும் விற்கும் வணிகர் நிறைந்திருந்தது தமிழ் நாடு எனத் தெளியலாம்.

வணிகர் தன்மை:

இவ்வாறு சிறந்த வணிகர் தன்மை யாது? எனப் பட்டினப்பாலை கூறுவுத சங்க கால வைசியர்களின் வாழ்கைக் குறிக்கோளை தெளிவாக விளக்குகிறது. இவர்கள் நீர்மீதும், நிலத்தின் மீதும் வணிகம் செய்வதால் அவற்றில் இனது உறங்குவர். தன் சினைகளோடு மகிழ்வர். பகையின்றி வாழ்வர். மீன் பிடிப்போர் முன்றிலில் கூட மீனகள் பாய்ந்து விளையாடும் வகையிலும், விலங்கு இறைச்சிகளை விற்போர் வீட்டிலும் விலங்குகள் நிறைந்து நிற்கும் வகையில் அவர்களது கொடுந் தொழிலை நீக்கி, களவு செய்வோரை நல்வழிப்படுத்தி, தெய்வங்களை வழிபட்டு, வேள்விகள் பல செய்து, அந்தணர்களது புகழ் பரவச் செய்து வாழ்வர். ஆநிரைகளை ஓம்பல், உழவத் தொழிலை சிறக்க செய்தல் ஆகியவை இவர்களது சிறந்த தொழில். அறம் குறையாமல் வருவோர்க்கு நல்ல உணவு அளித்து நடுவுநிலை தவறாது, அருள் வாழ்க்கை நடத்துவர். தாம் பொய் கூறின் தம் குடிக்கே இழுக்கு என்று எப்போதும் வாய்மையே கூறி, பிறர் பொருளையும் தம் பொருள் போல் மதித்து தாம் கொள்ளும் பொருள்களை அதிகமாக கொள்ளாமல், கொடுக்கும் போது குறைத்துக் கொடுக்காமல், உரிய அளவிலே கொடுத்தும் கொண்டும் தம் இலாபத்தை வெளிப்படையகக் கூறி விற்கும் தன்மையினர் என்று அப்பாடல் கூறுகிறது. வணிகர் தங்களின் பொருள்களை கழுதையின் மீது எற்றி வருவர் என்றும், தங்களைக் காத்துக் கொள்ள வாள் எந்துவர் என்றும் சங்க பாடல்களில் இருந்து அறிகிறோம். இம்மரபு பிற்காலத்தும் நிலவியது.

வணிக சமுதாயம் - மணிக்கிராமம்:

வணிகர்களது சமுதாயம் பல பெயர்களில் திகழ்ந்தது. அவற்றில் “மணிக்கிராமம்” என்ற ஓர் அமைப்பு சிறந்து விளங்கியது. கடல் கடந்த சயாம் நாட்டில் தக்கோலம் என்று பெயர் பெற்ற (தகூபா) இடத்தில் ஒரு தமிழ் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதில் மணிக்கிராமத்தார் குறிக்கப்பட்டுள்ளனர். இக்கல்வெட்டு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தது என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். மணிக்கிராமம் என்னும் பகுதி காவேரிபூம்பட்டினத்தில் இன்றும் உள்ளது. காவேரிபூம்பட்டினம் சிறந்த துறைமுகமாகத் திகழ்ந்ததை, அனைவரும் அறிவோம். அங்கிருந்து தமிழக வணிகர் கடல் கடந்து வாணிகம் செய்யச் சென்றிருக்கின்றனர். அவர்களே தக்கோலத்தில் குறிக்ப்படும் மணிக்கிராமத்தார் எனலாம். அக்கல்வெட்டு சேனாமுகத்தையும் குறிக்கிறது. இதிலிருந்து மணிக்கிராமத்தார் கடல் கொள்ளைகாரர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், சென்ற இடத்தில் தங்களைக் காத்துக் கொள்ளவும் சேனையை அழைத்துச் சென்றனர் என்றும் அறியலாம்.

நாநாதேசி - ஐந்நூற்றுவர்:

மணிக்கிராமம் என்பது போல நாநாதேசி என்ற ஒரு அமைப்பும் வணிக சமுதாயத்தில் இருந்தது. இவர்கள் நாநாதேசி திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்று பல கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர். இவர் ஐந்நூற்றுவர் என்ற குடியினரே என்று கொள்ள வேண்டும். ஆயிரத்து ஐந்நூற்றுவர் என இவரை சிலர் குறிப்பர். இது தவறாகத் தோன்றுகிறது. தசை ஆயிரத்து ஐந்நூற்றுவரைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு இவர்களது சாஸனத்தை பஞ்சசத வீர சாஸனம் என்று குறிக்கிறது. பஞ்சசதம் ஐந்நூற்றையே குறிக்கும். திசையாயிரத்து என்பது பல்வேறு தசைகளைச் சேர்ந்தவர் என்ற பொருளே எனக் கொள்லாம்.
மைசூர் பகுதியில் கிடைத்த சில கல்வெட்டுகள் இவர்களது தோற்றத்தையும், தொழிலையும் குறிக்கின்றன. இவர்கள் வாசுதேவர் கந்தழி மூலபத்ரா ஆகிய குலங்களில் பிறந்தவர்கள். பல்வேறு குடியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தேசங்களில் சுற்றித் திரிவோர்க்கு பிறந்தவர்கள். பகவதியால் போற்றப்பட்டவர்கள். சேர, சோழ, பாண்டிய, மலய, மகத, கௌஸல, சௌராஷ்டிர, தானுஷ்டிர, குறும்ப, காம்போஜ, லாட, பருவர, நேபாள, ஏகவத, லம்பகர்ண, ஸ்திரீராஜ்ய, கோலமுக முதலிய பலவேறு நாடுகளுக்கும் சென்று வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் சிறந்த யானைகள், குதிரைகள், விலையுயர்ந்த கற்கள், வாசனை திரவியங்கள் முதலியவற்றை விற்றவர்கள். சிவப்பு நாடா கட்டிய கழுதைகளிலும், எருமைகளின் மீதும் போருள்களை ஏற்றிச் செல்வார்கள். இவர்களது சாஸனம் வீரசாஸனம் என்று அழைக்கப்படும், என்று இவர்களது கல்வைட்டுகளிலிருந்து அறிகிறோம். இவர்களது வாணிபம் பல நாடுகளிலும் பரவியிருந்தது. பல்வேறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருந்தாலும், இவர்கள் வீரர்களாகவும் திகழ்ந்தனர் போலும். இவர்கள் சுமத்திரா தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்துள்ளதை அங்கு “லோபோ தோவேர்” என்ற இடத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. இது கி.பி. 1088-ஐச் சார்ந்த கல்வெட்டு.

பூமி புத்ரர்கள்:

இராஜராஜன் சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று (திட்டகுடி 291/8) இவர்களைப் பற்றி குறிக்கிறது. அது அரசனின் மெய்கீர்த்திக்குப் பின்னர் இவர்களது கீர்த்தியைக் கூறுகிறது.ஸ்ரீமத் பூமிசுபுத்ரஸ்ய சாதுர்வர்ணஸ குலோத்பவம்சர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய சாஸனம்
என்று அச்சாஸனம் தொடங்குகிறது. இதிலிருந்து சித்ரமேழி நாட்டவர் எடுத்த முடிவுகள் இச்சாஸனத்துடன் தொடங்கியது என்று தெளிவாகிறது. இக்கல்வெட்டு “எழுபத்தொன்பது நாட்டு உத்தம நிதி உயர்பெருங்கீர்த்தி, முத்தமிழ் மாலை மும்மையும் நிறைந்த சித்ரமேழி பெரிய நாட்டோரும், நான்கு திசை பதினெண்பூமி தேசி திசை விளங்கு திசையாயிரத்து ஐந்நூற்றுவரும், அவ்வூர் கோயிலில் பூமி தேவியை எழுந்தருளிவித்ததையும் சித்ரமேழி தோரணம் எடுத்ததையும் வழிபட்டு பொருள் கொகடுத்ததையும் குறிக்கிறது. இங்கு இரண்டு குழுக்கள் குறிக்கப்படுவது சிறப்பாகும். ஒன்று எழுபத்தொன்பது நாட்டு சி்த்ரமேழி பெரிய நாட்டார் குழு, இரண்டாவது பதினெண்பூமி திசையயிரத்து ஐந்நூற்றுவர் குழு என்பவையாகும். இவற்றிலிருந்து இரண்டு திறத்தாரும் வைசியர் என்றும், பெரிய நாட்டவர், உழவுத் தொழிலைத் தலையாகக் கொண்டவர் என்றும், திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்பவர் வணிகத்தையே தலையகக் கொண்டவர் என்றும் கொள்ள இடமிருக்கிறது. நாட்டுக்கும், நகரத்துக்கும் தர்மமாக என்று இக்கல்வெட்டு குறிப்பதிலிருந்தே “நாடு” உழு தொழிலினரையும், நகரம் என்பது வணிகரையும் குறிக்கிறது என்பது தெளிவு.

பசும்பையே தெய்வம்:

சித்ரமேழி சாஸனங்களை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவற்றில் சி்த்ரமேழி பெரிய நாட்டவரைக் குறிக்கும் கல்வெட்டுகளில் சித்ரமேழியே தெய்வமாகவும், பசும்பையே வேலியாகவும் உடையவர் என்று குறிக்கப்படுகின்றனர். இவ்வாறு குறிக்கப்படுபவர் உழுதொழிலைத் தலையாக கொண்டவர்கள். உதாரணமாக திருக்கோயிலூர் கல்வெட்டு “செங்கோலே முன்னாகவும், சித்ரமேழியே தெய்வமாகவும், செம்பொன் பசும்பையே வேலியாகவும், க்ஷமையினோடும், கருணை எய்தி, சமய தன்மம் இனிது நடாத்தி நிகழாநின்ற உயர்பெருங்கீர்த்தி முத்தமிழ் மாலை முழுவதும் உணர்ந்த சித்ரமேழி பெரிய நாட்டோர்” என்று கூறுகிறது. இதிலிருந்து பெரியா நாட்டார் உழவுத்தொழிலினர் என்பது தெளிவு. பல நாட்டு வயபாரிகளைக் குறிக்கும் பிரான்மலைக் கல்வெட்டு “செங்கோலையே முன்னாகவும் செம்பொற் பசும்பையே தெய்வமாகவும் க்ஷமையினோடு கருணை எய்திச் சமய தன்மம் இனிது நடாத்தி” என்று வருகிறது. இங்கு பொன் நிறைந்த பையே “பசும்பையே” தெய்வமாகக் கூறப்பட்டுள்ளது, வியாபாரிகள் பொருளீட்டும் சின்னமாக கருதப்பட்டதற்கு எடுத்துக்காட்டு.

திட்டகுடி:

திட்டகுடியில் இருந்த பெருமாள் கோயிலுக்கு “எழுபத்தொன்பது நாட்டு விண்ணகர் எம்பெருமான் கோயில் எனப் பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது. இதிலிருந்து இக்கோயில் எழுபத்தொன்பது நாட்டு பெரிய நாட்டார் எடுப்பித்தனர் என அறியலாம். இங்கு திருமுற்றத்தில் நானூற்றுவன் திருமண்டபம் ஒன்று இருந்தது. அதில் கூடியே சித்ரமேழி நாட்டார் முடிவு எடுத்தனர். அதன்படி அக்கோயிலில் பூமிதேவியை எடுப்பித்தனர். இவர்கள் பூமிதேவி புத்ரர் என்று குறிக்கப்படுவது சிறக்கத்தக்கதாகும். பல இடங்களில் இவர்கள் பூமிதேவியையும், ஸ்ரீதேவியையும் பிரதிட்டை செய்துள்ளனர். நிலமகளையும், திருமகளையும் இவர்கள் சிறப்பாகப் போற்றியதால் இவ்விரு தெய்வங்களையும் பல இடங்களில் எழுந்தருளிவி்த்துள்ளனர்.
திட்டக்குடியில் இவர்கள் ஒரு தோரணம் எடுத்தனர். அத்தோரணம் “மேழித் தோரணம்” என்று கூறப்படுகிறது. இதிலிருந்து இது கலப்பையின் உருவில் இருந்தது என அறியலாம். திட்டக்குடி நாட்டாரும் நகரத்தாரும் எடுத்த முடிவுகளும் குறிப்பிடத்தக்கவை. ஆண்டுக்கு ஏர் ஒன்றுக்கு ஒரு பதக்கு நெல்லும், ஆள் ஒன்றுக்கு ஐந்து காசும், இவர்கள் பணிமக்கள் இரண்டு காசும், இவ்வூர் கோபாலர் குடி ஒன்றுக்கு நாலு நாழி நெய்யும், கோயிலுக்கு வழிபாட்டுக்காக அளிக்க வேண்டும். இதைத் தண்டுவாருக்கு வெள்ளை அரிசி தூணிப்பதக்கு, பூரி அரிசி கலம், பாக்கு ஐம்பது, வெற்றிலை பத்து, உப்பு நாநாழி, மிளகு உரி, எள்ளெண்ணை நாழியும் ஊரில் கொடுக்க வேண்டும். அவ்வாறு தண்டவருவார்கள் வெண்கலம் தகர்ந்தும், மண்கலம் உடைத்தும் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.

திருக்கோயிலூர்:

திருக்கோயிலூரிலும் சித்ரமேழி நாட்டார் கொடுத்த தானமும் இங்கு குறிப்பிடத் தகுந்தது. இவ்வூர் கோயிலுக்கு “எழுபத்தொன்பது நாட்டு பதினெண் பூமி சி்த்ரமேழி விண்ணகர்” என்று பெயர். திட்டகுடியில் குறிக்கப்பட்டது போல எழுபத்தொன்பது நாட்டாரும், பதினெண் பூமி நகரத்தாரும் இங்கு சித்ரமேழி குழுவாய் சமைந்திருந்தனர் என்பது தெளிவு. இவர்கள் கொடுத்த தானமும் சிறப்பானது. “...சி்த்ரமேழி விண்ணகர் தருவிடைக்கழி நின்றருளின பெருமாள் கோயில் அனாதியாக மேழி திருத்தோரணமும், ஸ்ரீபூமிதேவி பிரதிஷ்டையும் பண்ணி முன்பே நம் தர்மமாய் போதுகையில் இந்நாயனார்க்கு நாம் வைத்துக் குடுத்த வைப்பும், சமைப்பும், செடியும், முகமும், சாதனமும், ராஷ்டிர க்ஷோபங்களில் கைத்தப்புகையில் முன்பு வைத்துக் கொடுத்தபடியே ஆட்டைக்கு, ஏருக்கு பதக்கு நெல்லும், ஆளுக்கு குறுணி நெல்லும், வெட்டாள் உட்பட பெற வைத்துக் கொடுத்தோம்” என்று கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து முன்பிருந்தே இங்கு சித்ரமேழி நாட்டார் தருமம் கொடுத்திருந்தனர். அது போர்களில் கைமாறிப் போய்விட்டது. ஆதலின் மீண்டும் தர்மம் அளித்தனர் என்றும், இவர்கள் பூமிதேவி பிரதிஷ்டையும், மேழித் தோரணமும் எடுத்தனர் என்றும் அறிகிறோம்.

பிரான்மலை:

பிரான்மலையில் உள்ள ஒரு கல்வெட்டு சி்த்ரமேழி குழுவினரின் தன்மையைக் குறிக்கும். தலையாய கல்வெட்டு ஆகும். இக் கல்வெட்டு ஸ்ரீ பூமாதேவி புத்ரனாம் க்ஷார க்ஷீரோத பூர்வினாம், ஜயந்தி சி்த்ர லோகானாம் ராஜ்ய பரிபாலகானாம் சர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேழி சாஸநம். என்று தொடங்குகிறது. இம்மெய்கீர்த்தி இவர்களை ராஜ்ய பரிபாலகர் என்று கூறுவதிலிருந்து இவர்கள் அரசியல் செல்வாக்கு மிகவும் பெற்றிருந்தனர் என்று அறியலாம். இச்சாஸநம் திரிபுவனச்ரய பஞ்சசத வீரசாஸனம் என்றும் பெயர் பெற்றது என்று அறிகிறோம். இவர்கள் வாசுதேவ சகாயகன் தேவி மூலம் பத்ரலோப ஸ்ரீஐம்பொழில் பரமேச்வரிக்கும் பூமிதேவிக்கும் மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து ஐம்பொழில் பரமேசவரி என்ற தெய்வத்தையும் பூமி தேவியையும் சிறப்பாகத் தொழுதனர் என்றும் அறியலாம்.
இவர்கள் பதினெட்டு பட்டனத்திலும், முப்பதிரண்டு வளர்புரத்தும், அறுப்பது நான்கு கடிகைத் தாவளத்தும் இருந்தனர் என்றும் கூறிக்கொள்கின்றனர். பதினெண் விஷயத்தார், பதினெண் பட்டினத்தார், பதினெண் குடி வேளார் என்று பதினெட்டு பல கருத்துக்களில் வழங்கப்படுவது, வரலாறு தெரியாத காலத்தில் சிறந்திருந்த ஏதோ ஒரு சிறப்பை பிற்காலத்தார் பலர் தங்களதாக கூறிக் கொண்டனர் என்று முன்னரே கூறியுள்ளோம். ஆதலின் பதினெட்டு எவை என்று தெரியவில்லை. சிறந்த பட்டனங்களில் பதினெட்டை இணைத்து பதினெண் பட்டினங்கள் எனக் கூறியிருப்பர் என்பதில் ஐயமில்லை. அதே போன்று “முப்பத்திரண்டு வளர்புறம் அறுபத்தி நான்கு கடிகைத் தாவளமும்” என்று குறிப்பது எண்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பே ஒழிய முப்பத்திரண்டு வளர்புரம் மட்டும் இருந்தன என்றோ, கடிகைத் தாவளம் அறுபத்து நான்குதான் இருந்தன என்றோ கூற இயலாது. பல இருந்தன என்று கொள்வது மட்டும் பொருந்தும். பட்டினம், வளர்புரம், கடிகை, தாவளம், இவற்றுடன் தாவளத்திருந்து தன்மம் வளர்க்குஞ் செட்டியும், செட்டி சுரப்புத்தனும், தவறொன்றில்லாத தன்மை ஒழுக்கத்து கவறை தன்னோடு காச்யபன் விடுத்த சாமுண்டேச்வராயும், உருத்திரன் வடுத்த ஓலைவாரியானும், உண்ணியது முடிக்கும் ஒண்டிறல் வீரர் பன்னிருதரத்து பணி செய் மக்களும், முன்னியாக இச்சாஸனம் செய்யப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது. இவற்றிலிருந்து இவர்களைப் பற்றி பல புராணக் கதைகள் தெரிகின்றன. காஸ்யபன் விடுத்த சாமுண்டேச்வரியும், உருத்திரன் விடுத்த ஓலைவாரியனும், இவர்களால் சிறப்பாக வழிபடப்பட்டனர் என்பது தெளிவு. இவர்களது ஓலை நாயகம் உருத்திரனால் விடப்பட்டவன் என்று கருத்து இருந்தது. முரசு ஒலித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்த இவர்கள் வாழ்ந்த வீதிகளில் முத்தமிழ்ப் பாடலோடு, ஆடல ஓவா விழாவும் வேள்வியும் விளங்கின. இவர்கள் வாழ்ந்த இடங்களில் தெங்கு, பலா, மாஞ்சோலை, சந்தன வேலி, சண்பகப் பொழில், வாழை, கமுகு, கொடி முல்லை, பூவை, கிள்ளை முதலிய நிறைந்து விளங்கின. அவ்வாறு சிறந்த இவர்கள் வாட்டம் இன்றி கூட்டம் பெருக அறம் வளரக் கலிமெலிய புகழ்பெருக பகைபணிய திசையனைத்துஞ் செவிடுபட செங்கோலே முன்னாகவும், செம்பொற் பசும்பையே தெய்வமாகவும் க்ஷமையினோடு கருணை எய்த சமய தன்மம் இனிது நடாத்துபவர்கள் எனக் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்று குறிக்கப்பட்ட போதிலும் பல்வேறு பரிவினராக குறிக்கப்படுகின்றனர். இக்கல்வெட்டில் கீழ்வரும் பரிவுகள் குறிக்கப்பட்டுள்ளன. ஆகியோர் கூடி இத்தானம் அளித்தனர். இதிலிருந்து பல நாடுகளில் பரவி வாணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், இவர்கள், தாங்கள் ஒரே இனத்தவர் என்று கூடி தங்கள் இனத்துக்கென முடிவெடுதது, அதை தங்கள் இனத்தவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி செய்யும் சமுதாய அமைப்புப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. இவ்வளவு பரந்த சமுதாயம அமைப்பு சமயத்தின் அடிப்படையில் இருந்ததால் இது இனிதே நடந்தது என்பதில் ஐயமில்லை. “சமய தன்மம் இனிது நடாத்தி” என்று கூறும் இவர்களது மெய்கீர்த்திகள் இதை எடுத்துரைக்கின்றன. சமய அடிப்படையில் இன்றேல் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட நாடுகளில் இருந்தோர் இவ்வித அமைப்பில் வாழ்தல் இயலாத காரியம். இவர்கள் அனைவரும் நகரத்தார் என்று குறிக்கப்படுவது நோக்கத தகுந்தது. இவர்கள் வாழ்ந்த இடங்களும் புரம் என்று குறிக்கப்படுவதும், பெருந்தெரு என்று குறிக்கப் பெறுவதும் சிறப்பாக அறியற்பாலதாம். இவை வணிக அமைப்பைக் குறிப்பவையாகும். இம்முடிவுக்கு கையொப்பமிட்டவர்களில் சிலர் வேளர், செட்டி, கோனார், பிள்ளை, முதலிய பெயர் கொண்டவர்களாக உள்ளனர். ஆக இப்பெயர் கொண்டவர்கள் வைசியர்களும் ஆவர் என்பது தெளிவு. சிலர் வணிகத்தார் என்றும் பட்டம் கொண்டவர்கள். சிலர் ஊர் கிழார்களாகவும் குறிக்கபடுகின்றனர். சிலர் சமய சக்ரவர்த்தி என்றும், சமய மந்திரி என்றும் அழைக்கப்படுகின்றனர். இப்பெயர்கள் இச்சமுதாய அமைப்பில் இருந்த செல்வாக்கை குறிக்கிறது போலும். ஒருவர் சமய மாதா என்று அழைக்கப் படுகிறார். ஒருவர் குதிரைச் செட்டி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

வாணிகர் பொருள்களும் வரியும்

இக்கலவெட்டு மேலும் பல துறைகளில் சிறப்புடையது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாணிகர்கள் என்ன என்ன பொருள்களில் வாணிகம் புரிந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இவ்விலைப் பொருள்கள் வகைப் படுத்தப் பட்டுள்ள முறையையும், வியாபாரம் எவ்வளவு சீராக அமைந்திருந்தது என்பதையும் எடுத்தியம்புகிறது. உப்பு, அரிசி, பயிற்றம், அவரை, துவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், சுக்கு, வெங்காயாம், கடுகு, சீரகம், இருப்பு, பருத்தி, நூல், புடவை, மெழுகு, தேன், சந்தனம், அகில், பன்னீர், சவரி மயிர், கற்பூரத் தைலம், சாந்து, புழுகு, சவ்வாது, செமாடு, குதிரை, ஆனை, முதலிய வாணிகப் பண்டங்கள் குறிக்கப்படுகின்றன.
இப்பொருள்கள் ஒவவொன்றும் தலைச்சுமை, பாக்கம், பொதி, வண்டி, என அளவுகளால் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு காசு வரி அளிக்கப்பட வேண்டும் என்றும் கல்வெட்டு கூறுகிறது. தேன், பன்நீர், முதலிய திரவப் பொருள்கள் குடம் என்னும் கொள் அளவை கொண்டு நிச்சயிக்கப்பட்டன. சாந்து, புனுகு, சவ்வாது ஆகிய வாசனைப் பொருள்கள் “கொம்பு” அன்னும் அளவைகளால் நிச்சயிக்கப்பட்டன. பொருள்களுக்கு இடப்பட்ட வரியும் அன்றைய நிலவரத்தை தெரிவிக்கின்றன. உப்புக்கும், நெல்லுக்கும் வரி ஒரே அளவாக இருந்தது. நெல்லை் போல் இருமடங்கு அரிசிக்கு இடப்பட்டது. பருத்தியைப் போல் இருமடங்கு நூல்களுக்கு இடப்பட்டது. நூலுக்கும் இரும்புக்கும் ஒரே வரி. வாசனைப் பொருள்களாகிய சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர் முதலியவற்றிற்குத்தான் மிகவும் அதிகமாக வரி காணப்படுகிறது. அவற்றிற்கு எவ்வாறு வரி இடப்பட்டது என்பது தெளிவாகக் கூறப்படுவதால் அதன் பட்டியல் இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
பொருள்முறைவரி
உப்புதலைச்சுமை½ காசு
உப்புபாக்கம்½ காசு
உப்புபொதி1 காசு
உப்புவண்டி10 காசு
நெல்பாக்கம்½ காசு
நெல்பொதி1 காசு
நெல்வண்டி10 காசு
அரிசிபாக்கம்1 காசு
அரிசிபொதி2 காசு
அரிசிவண்டி10 காசு
பயி்ற்றம்பாக்கம்½ காசு
பயி்ற்றம்பொதி1 காசு
பயி்ற்றம்வண்டி20 காசு
அவரை / துவரைபாக்கம்½ காசு
அவரை / துவரைபொதி1 காசு
அவரை / துவரைவண்டி20 காசு
ஆமணக்கங் கொட்டைபாக்கம்¼ காசு
ஆமணக்கங் கொட்டைபொதி½ காசு
ஆமணக்கங் கொட்டைவண்டி10 காசு
பாக்குபாக்கம்2 காசு
பாக்குபொதி4 காசு
மிளகுபாக்கம்2½ காசு
மிளகுபொதி5 காசு
மஞ்சள்பாக்கம்1½ காசு
மஞ்சள்பொதி3 காசு
சுக்குபாக்கம்1½ காசு
சுக்குபொதி3 காசு
வெங்காயம், கடுகு, சீரகம்பாக்கம்1 காசு
வெங்காயம், கடுகு, சீரகம்பொதி2 காசு
மெழுகுதலைச்சுமை4 காசு
மெழுகுபாக்கம்5 காசு
மெழுகுபொதி10 காசு
தேன்குடம்4 காசு
கொள்கைப் பட்டுதலைச்சுமை1 காசு
கொள்கைப் பட்டுபாக்கம்1 காசு
கொள்கைப் பட்டுபொதி2 காசு
சந்தனம்பொதி30 காசு
அகில்சுமை30 காசு
பட்டுப்பட்டாவள்பொதி30 காசு
பன்னீர்குடம்30 காசு
சவரிமயிர்சுமை30 காசு
கற்பூரத் தைலம்சுமை20 காசு
சாந்து, புழுகு, ஜவ்வாதுகொம்பு15 காசு
செமாடுஒன்றுக்கு1 காசு
குதிரைஒன்றுக்கு¼ அச்சு
ஆனைஒன்றுக்கு½ அச்சு
நகரத்தார் பொருள் வைத்து விற்கும் இடங்களை மடிகை என்று அழைத்தனர். சாரிகைக் கோட்டை என்னும் சுங்கக் கோட்டைகளும் இருந்தன. மன்னார்குடியில் இரண்டு மடிகைகள் இருந்தன. புவனேக வீரன் மடிகை, விக்ரம பாண்டியன் மடிகை என அவை பெயர் பெற்றிருந்தன. அவை சாரிகைக் கோட்டையில் இருந்தன. அந்நகரத்தார் சாரிகைக் கோட்டையில் புகும் பாக்கு பொதி ஒன்றுக்கு உழக்குப் பாக்கு கொண்டு அதை முதலாகக் கொண்டு அவ்வூரில் இருந்த ஜயங்கொண்ட சோழீச்சுரமுடையாற்கு திருவமுதுக்கு வைத்தனர் (40/6). இதே போன்று சாரிகை கோட்டையில் புகும் மிளகு பொதி ஒன்றுக்கு உழக்கு மிளகும், புடவை கட்டு ஒன்றுக்கு பணம் மாகாணியும் கொண்டு கறியமுதுக்கு வைத்தனர் (41/6). கோட்டைக்குள் வராமல் புறத்தே சென்றாலும் இவ்வாறே கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர்.