கதிரவனை வணங்கும் அந்தணர் - மாமல்லபுரம், கி.பி. 8-ம் நூற்றாண்டு
குடியேற்றம்:
அந்தணர் தமிழகத்துப் பழங்குடகள் அல்ல என்பதும், இந்தியாவின் வடபால் இருந்து வந்து இங்கு வாழ்ந்த மக்களோடு கலந்து ஒன்றி வாழத்தலைப்பட்டவர்கள் என்பதும், எல்லா வரலாற்று அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர்கள் எப்பொழுது தென்னகத்தில் முதலில் குடியேறினர் என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. பௌதர்களும், அமணர்களும் வருவதற்கு முன்னரே இவர்கள் வந்தவர்கள் என்று கொள்ள இடமிருக்கிறது. பிராம்மணர்கள் மட்டும் கூட்டமாகத் தமிழகத்துக்கு வந்தனரா, அல்லது க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களுடன், ஆரிய சமுதாயமாக வந்தனரா என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. தனிப்பட்ட கூட்டமாக வந்தனர் என்று கொள்வதைக் காட்டிலும் பிற வர்ணத்தாருடன் வந்தனர் என்று கொள்வதே பொருந்தும்எப்படி இருப்பினும் ஆற்றல் மிகுந்த தலைமையில் இக்குடியேற்றம் நடந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அகத்திய முனிவரும், கவுண்டின்ய முனிவரும் இதுபோன்ற குடியேற்றத்துக்கு தலைமை ஏற்றனரோ என்று ஐயுற வேண்டியுள்ளது. முதலில் அகத்தியர் தலைமையிலும் பின்னர் கவுண்டின்யர் தலைமையிலும் இக்குடியேற்றம் ஏற்பட்டது எனலாம். இக்குடியேற்றம் பெரும் அளவு நடந்திருக்க வேண்டும். இன்றைய தமிழக பிராம்மணர்களில் பருஹத் சரணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. பருஹத் சரணம் எனில் பெரும் செலவு (குடிப்பெயர்வு) எனப் பெயர் பொருந்தும், ஆதலின் இவர்கள் ஆதி பிராம்மணக்க குடியாக இருக்கக் கூடும்.இவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஈழத்திலும் குடியேறி கடல் கடந்த நாடுகளிலும் குடியேறினர். மௌரியப் பேரரசன் அசோகனால் பௌத்த சமயத்தவர் ஈழத்துக்கு அனுப்பப் பட்டபோது அங்கு அந்தணர் இருந்தனர் என்றும் அவர்கள் பௌத்த மதத்தை தழுவினர் என்றும் அந்நட்டு நூல்களிலிருந்து அறிகிறோம்.தமிழகம் வந்த பிராம்மணர்கள் வேதம் வல்லவராயினும், வழக்கு மொழியாக பிராகிருதம் பேசினர் எனக் கொள்ள இடமிருக்கிறுது. இவரது பெண்டுகள் பிராகிருத மொழியே பேசினர்.க்ஷத்திரயர்களும் வைசியர்களும், சூத்திரர்களும் எவ்வாறு தமிழகத்தில் ஒன்றி வாழத் தலைப்பட்டனரோ அதே போன்று பிராம்மணர்களும் வாழத்த தலைப்பட்டனர். இவ்வாறு கலந்த சமுதாயத்தையே சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. சிறுசிறு கதைகளாக திகழ்ந்தவை காலப்போக்கில் வளர்ச்சியும், விரிவும் பெற்று பல புராணங்களாக மிளிர்ந்தன என்றும் அவை கி.பி 2ம் நூற்றாண்டின் பின்னர் அதிகம் தோன்றின என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் அந்தணர்களது வாழ்க்கை புராண வளர்ச்சியைக் காட்டிலும் வேத மரபையே அதிகம் கூறுகின்றன.
கோத்திரங்கள்:
சங்காலத்திலேயே இவ்வந்தணர் பல கோத்திரங்களைச் சேர்ந்தவர்களகத் திகழ்ந்தனர் எனச் சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம். கவுண்டின்யர், வாதுளர், கோசிகர், ஆத்ரேயர், கசியபர், ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தோர் சங்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தனர் என அவர்களது பெயர்களிலிருந்து அறிகிறோம். பல்லவர் காலத்தில், அதாவது சுமார் கி.பி 8ம் நூற்றாண்டில் 32க்கும் மேற்பட்ட கோத்திரங்களைச் சார்ந்தவர்கள் தமிழகத்திலும் அதை ஒட்டிய தென் ஆந்திர தேசத்திலும் இருந்தனர்.சாண்டில்ய, ஆவிஷ்ட, கௌண்டின்ய, ஹாரீத, பாரத்வாஜ, ஆத்ரேய, சாவர்ணி, லோஹித, கௌதம, கௌசிக, மௌத்கல, வாசிஷ்ட, தாராயண, வத்ஸ, சாங்கிருத்தியான, கார்க்க, பராசர, விஷ்ணுவிருத்த, மாஷல, அக்னிவேச்ய, காச்யப, ரதீதர, காமக, சாங்கர்ஷ, கண்வ, மாத்தர, குத்ஸ, சாலவத, வாதூல, பவுருகுத்ஸ, கபி, ஜாதகர்ண.முதலிய கோத்திரங்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன. பாண்டியரின் ஸ்ரீவரமங்கலம் செப்பேடு, பார்கவ கோத்திரத்தையும், தளவாய்புரம் செப்பேடு வான கோத்திரத்தையும் குறிக்கின்றன.
சூத்திரங்கள்:
இவ்வந்தணர்களது அன்றாட வாழ்க்கைகளையும் சடங்குகளையும் கிருஹ்ய சூத்திரங்கள் என்னும் நூல்கள் கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் பல கோத்திரங்களைச் சேர்ந்தவர் ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுவது உண்டு. இச்சூத்தரங்கள் இயற்றிய முனிவர்களின் பெயரால் பெயர் பெற்றன. பல்லவர் காலத்தில் ஆபஸ்தம்ப, பராவசன, வாஜஸனேயி, ஹிரண்யகேசி, பவிஷ்ய, சந்தோக, கலாராச்ய, காலார்ச்ச, அக்னிவேச்ய முதலிய சூத்திரங்களைப் பின்பற்றினோர் இருந்தனர் என்று காசாக்குடி, புல்லூர் முதலிய செப்பேடுகளால் அறியலாம். ஸ்ரீவரமங்கலம் செப்பேடு ஆச்வலாயன சூத்திரத்தைக் குறிக்கிறது. பௌதாயன கல்பத்தைச் சேர்ந்த ஒருவர், 8-ம் நூற்றாண்டு பண்டியர் செப்பேட்டில் குறிக்கப்படுகிறார். தமிழகத்தில் ஆபஸ்தம்பம், போதாயனம், ஆச்வலாயனம் ஆகிய சூத்திரங்கள் இன்று வரையிலும் பெருவாரியாக பின்பற்றப் படுகின்றன.
உட்பிரிவுகள்:
பிராம்மணர்களில் பல்வேறு கோத்திரங்களும், சூத்திரங்களும் இருந்தமை கண்டோம். ஆனல், தேசத்தாலும், காலத்தாலும், சமுதாயத்தில் பெற்ற செல்வத்தாலும், செல்வாக்காலும், சிலர் தங்களை உயர்ந்த குடிகள் எனவும், பிறரைத் தாழ்ந்தோர் எனவும் கூறிக் கொள்ளத் தலைப்பட்டனர். அந்தணர்களுக்குள் பல பிரிவுகள் சங்க காலத்தில் இருந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கோத்திரத்தாலும், சூத்திரத்தாலும் ஏற்பட்ட வேறுபாடுகளைத்த தவிர வேறு உட்பிரிவுகள் சங்க காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனால் கி.பி 6ம் நூற்றாண்டிற்கும் முன்னரே உட் பிரிவுகள் தோன்றி விட்டன, என்பதற்கு சான்றுகள் உள்ளன. திருஞானசம்பந்தர் “சைவ அந்தணர்” என்று அறிகிறோம். க.பி. 7-ம் நூற்றாண்டிலிருந்து அந்தணர்களிடம் சைவர்கள், வைணவர்கள், வேதம் ஓதுவோர் என்று பிரிவுகளைக் காண்கிறோம். சைவர்கள “சிவாச்சாரியர்” என அழைக்கப்பட்டனர். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் கூரத்தில் எடுத்த கோயிலில் வழிபாட்டுக்காக அனந்த சிவாசாரியாருக்கும் அவர் வழிக்கும் நிலம் அளித்தான் என செப்பேடு கூறுகிறது.கி.பி 11-ம் நூற்றாண்டின் இறுதி வரை திகழ்ந்த வைணவர்கள் பெரும்பாலோர் வைகானச மரபைச் சார்ந்தவர்கள். விகனஸ் என்ற முனிவரின் மரபை பின்பற்றியதால் இப்பெயர் பெற்றனர். இம்மரபு முற்றிலும் வேதமரபு. பிற சமயங்களிடம் வெறுப்பின்றி சிவபிரான், துர்கை முதலிய பிற தெய்வங்களையும் வழிபடும் சமையமாகத் திகழ்ந்தது. பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் கையொப்பமிட்டவர்கள் வைகானசர் என்று அழைக்கப்படுகின்றனர். வைணவர்களில் பாஞ்சராத்ரம் என்னும் மற்றொரு மரபு உண்டு. அது வேததிற்கு அப்பால் தோன்றி, தனித்து வளர்ந்தது. பிறகு பல்வேறு கருத்துக்களை உட்கொண்டது. இம்மரபைத்தான் வைணவ சமயக் குரவர் இராமானுஜர் பின்பற்றினார். இராமானுஜரின் வைணவசமய சீர்திருத்தத்தின் பயனாக தமிழகத்தில் வைகானச மரபைச் சேர்ந்த பல கோயில்களும், மக்களும் பாஞ்சராத்ர மரபை பின்பற்றினர் என்று கூறுவர்.அந்தணர்களில் மூன்றாவது பிரிவு வேதம் ஓதுவோர் இவர்களுக்குத் தனியாகப் பல நிலங்கள் அளிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டு வேதம் ஓதி வந்தனர். பல கோயில்களில் அவ்வப்போது நடக்கும் சந்தி பூஜைகளிலும் விழாக்களிலும் வேதம் ஓதினர். இவர்களில் நான்கு வேதம் ஓதுவோர், (சதுர்வேதி) மூன்று வேதம் ஓதுவோர் (திரிவேதி), இருவேதம் ஓதுவோர் (திவிவேதி) உண்டு. இவர்கள் ஸ்மிருதிகளின் வழி நிற்பவராதலின் ஸ்மார்த்தர் என்று அழைக்கப்பட்டனர்.தமிழகத்து அந்தணர்களது வாழ்க்கை முறை பற்றியும் தொழில் பற்றியும் அறிய பல இலக்கியங்களும் கல்வெட்டுகளும் துணைபுரிகின்றன.
குழவிப் பருவம்:
அந்தணக் குழந்தையின் பிறப்பும், வளர்ப்பும், சதங்குகளும், ஞானசம்பந்தனர் வரலாற்றிலிருந்து சிறப்பாக அறியலாம். குழந்தைப் பேற்றால் தந்தையார் பெரும் மகிழ்வு கொண்டார். அன்று மறையோர்கள் குழ ஓமங்கள் செய்தார். “மீதணியும் நெயயணி விழாவோடு சிறப்பர்” என்பதிலிருந்து குழந்தைக்கு நெய் தடவி குளிப்பட்டினர் எனக் கொள்ளலாம். ஜாதகம் எழுதுவிக்கும் சதங்கும் நடைபெற்றது. வீட்டில் விளக்குகள் வைத்து அலங்கரித்தனர். திண்ணைகளில் நீர் நிரம்பிய குடங்களும், வெண்முளைப் பாலிகைகளும் வைத்தனர். பொன் முதலான பல பொருள்களைத் தானமாக அளித்தனர். வேப்பந்தழையைக் காப்பாகக் கட்டினர். இதை “நிம்ப முதலான கடிநீடுவினை” என்று பெரிய புராணம் கூறும். கிருஹ்ய சூத்திரங்களில் குறிப்பிட்ட முறைப்படி குழந்தை பிறந்த பத்து நாட்களிலும் சடங்குகள் செய்தார் என்று சேக்கிழார் கூறுவார்.தூயதிருமாமறை தொடர்ந்த நடைநன்மேயவிதி ஐயிருதினத்திலும் விளைத்தார்பதினொன்றாம் நாள் நாமகரணங்கள். அழகிய தொட்டிலில் காலையில் குழந்தையை இடுவர். குழந்தைக்கு பல காப்புக்கள் அணிவிப்பது மரபு. ஞானசம்பந்தரின் தந்தை பிற காப்புக்கள் தேவையில்லை என்று திருநீற்றையே காப்பாக இட்டார் என்று பெரிய புராணாம் கூறுகிறது. பின்னர் தமிழும் மறையும் கூறத் தாலாட்டினர். திருமுலைப்பால் குழந்தைக்கு அன்று கொடுப்பதும் உண்டு. குழந்தையின் வளர்ச்சியை செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தவழும் பருவம், என்றெல்லாம் இலக்கியங்கள் கூறும். குழந்தைக்கு முடி எடுத்தல் என்பது ஒரு விழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளது. இது பிறந்த ஓர் ஆண்டுக்குள் நடைபெற்றிருக்க வேண்டும். திருஞானசம்பந்தரைப் பற்றி வரலாற்றில் செம்கீரைப் பருவத்திற்கு முன்னரே முடி எடுக்கப்பட்டது என்று அறிகிறோம்.ஐந்து ஆண்டு நிரம்பியதும் அந்தந்த மரபுக்கு உகந்த பாக்கள், சிறுவர்க்கு சொல்லித் தரப்பட்டன. சண்டேசுர நாயனார்க்கு ஐந்தாணடு நிரம்பியதும் ஆகமங்கள் கற்றுத் தரப்பட்டன. அந்தணர்ச் சிறுவர்களுக்கு ஏழாம் ஆண்டில் பூணூல் சடங்கு செய்யப்பட்டது. இதை “புகழும் பெருமை உபநயனப் பொருளில் சடங்கு” என்று சேக்கிழார் குறிப்பார். பூணூல் பூட்டியதிலிருந்து சிறுவர் வேதம் ஓதத்தலைப்பட்டனர்.அந்தணர் பிள்ளைகளை அரச குலத்தோர் வளர்ப்புப் பிள்ளைகயாகக் கொள்வதும் உண்டு. சுந்தரரை நரசிங்க முனையரையர் என்னும் குறுநில மன்னன் வளர்ப்பு பிள்ளையாக அன்புடன் வளர்ந்தான. இதை மகன்மை கொள்ளல் என்று பெரிய புராணம் குறிக்கிறது.
அந்தணர் கல்வி:
வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிவது அந்தணர்களின் தலையாய கல்வியாகத் திகழ்ந்தது. எவ்வளவு ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றனர் என்று கூறச் சான்றுகள் இல்லை. அவர்களது பதினாறாம் வயதில் மணம் செய்து வைக்கப்பட்டது. ஆதலின் ஏழாம் வயதிலிருந்து ஒன்பது ஆண்டுகளாவது கல்வியில் செலவழித்தனர் எனக் கொள்ளாம். மணஞ் செய்து கொண்டதும் கல்வியை நிறுத்தியதாக் தெரியவில்லை. திருமுருகாற்றுப்படை சில அந்தணர் நாற்பதாணடுகள் பிரம்மச்சரியம் காத்து, வேத நெறியில் நின்றனர் என்று கூறுகிறது. கல்விக்காகவே தங்களை அரப்பணித்துக் கொண்டவர்களாக இவர்களைக் கருதலாம்.ஐந்தாம் வயதிலேயே அந்தணச் சிறுவர்களுக்கு கல்வி ஆரம்பமாகியது என்று முன்னர் குறினோம், கல்வியின் தொடக்கம் எழுத்து அறிவதிலிருந்து தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் எழுத்தறிவிக்கும் ஆசான் இருந்தனர். அவர்களுக்குத் தனியாக நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு அக்ரவிருத்தி என்று பெயர். இவ்வாறு எழுத்தறிவித்த ஆசானைத் தெய்வமாகவே தமிழ் மக்கள் கொண்டனர் என்பதற்கு “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்னும் முழுமொழி சான்று. ஐந்தாவது வயது முதல் ஏழாவது வயதுவரை எழுத்து, தோத்திரம், எண்சுவடி முதலியான கற்றனர்.ஏழாவது வயது முடந்ததும் பிராம்மணச் சிறுவனுக்கு பூணூல் அணிவி்க்கப்பட்டது. அதிலிருந்து வேதங்கள் கற்றுத் தரப்பட்டன. வேதத்தை பகுதி பகுதியாக பிரித்து திரும்பத் திரும்ப ஓதி என்றும் நினைவில் இருத்திக் கொள்வதே கற்பிக்கப்பட்ட முறையாகும். இதை துரு சொல்லுதல் என்று எட்டாம் நூற்றாண்டுச் செப்பேடு கூறுகிறது. இன்றும் வந்துள்ள இம்முறையை “திருவை” சொல்லுதல் என்று அழைக்கின்றனர். வேதத்தை பதம், கிரமம், கணம் என்று பிரித்து படித்தனர் என்று எட்டாம் நூற்றாண்டு செப்பேட்டிலிருந்து அறியலாம். இருக், யஜுஸ், சாமம், ஆகிய மூன்று வேதமும் கற்கப்பட்டன. ஒரு சில இடங்களில் அர்வண வேதமும் கற்றுத் தரப்பட்டது. அந்தணர்கள் வேதங்களைத் தவிர பிற கல்விகளையும் கற்றனர். வியாகரணம், நியாயம், மீமாம்சம், கல்பம், கிருஹ்யம், தர்மங்கள், வாத்தியங்கள், பாஷ்யங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சிவாகமங்கள், வைணவ ஆகமங்கள், பதசஞ்சலியின் யோக சூத்திரங்கள் முதலியவையும், மருத்துவ நூல்களாகிய வாக்படரின், அஷ்டாங்க ஹிருதயம் போன்றவைகளையும் கற்றனர். இவை தவிர முத்தமிழிலும் இவர்கள் சிறப்புற்றனர் என்று அறிகிறோம்.இவ்வாறு கற்ற ஒவ்வொரு துறையிலும் பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி என இருவகைக் கல்விகள் இருந்தன. இவர்கள் இருவகைக் கல்விகளையும் ஒரே இடத்திலோ அல்லது வெவ்வேறு இடங்களிலோ கற்றனர். எண்ணாயிரம் என்ற இடத்தில் இரு கல்விகளையும் ஒரே இடத்தில் கற்றுக் கொடுத்தனர் என்று அறிகிறோம்.
கல்விசாலைகள்:
சாலை, வித்யாஸ்தானம், கடிகை மடம் என்று பல்வேறு பெயர்களில் கல்வி கற்றுத்தரும் ஸ்தானங்கள் அழைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் கோயிலைச் சார்ந்தவையாகவே பணிபுரிந்தன. இவற்றிற்கு அரசர்களும், செல்வந்தர்களும் எராளமான பொருள் அளித்திருந்தனர். கல்வி கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உணவுக்கும், உடைக்கும் ஒவ்வொருவர்க்கும் அளிக்கப்பட்டன. படுப்பதற்கு பாய், தேய்த்துக் குளிக்க வாரந்தோரும் எண்ணை, இரவில் ஒரு விளக்கு ஆகிய அனைத்தும் கொடுக்கப்பட்டன. என தருமுக்கூடல் கல்வெட்டால் அறிகிறோம். இதிலிருந்து இலவசமாகத்தன் கற்றக் கொடுக்கப்பட்டு என்றும் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உடை அளிக்கப்பட்டது என்றும் அறிகிறோம். பொதுக் கல்வி கற்போருக்கு நாள் ஒன்றுக்கு 6 நாழி நெல்லும் சிறப்புக் கல்வி கற்போருக்கு 10 நாழி நெல்லும் கொடுக்கப்பட்டது. பார்திவசேகரபுரம் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஒரு சாலை நிறுவப்பட்டது. இங்கு சேர்த்துக் கொளப்படும் மாணவன் பூமி உள்ளவனாய் இருக்க கூடது என்று குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பொருள் படைத்தவர்களை விட்டு ஏழை மாணவர்களுக்கு மட்டும் வசதி செய்து கொடுத்த சாலைகள இருந்தன என்பது தெளிவு. பொதுக் கல்வி பெற்றவர்கள் சாத்தரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். சாத்திரம் படித்தால் அவ்வாறு அழைக்கப்பட்டனர் போலும். சட்டர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் இவர்களே போலும்.எண்ணாயரம் என்ற இடத்தில் இருந்த சலையில் 270 மாணவர்கள் பொதுக் கல்வியும், 70 மாணவர்கள் சிறப்புக் கல்வியும் பெற்றனர். திரிபுவனி என்ற இடத்தில் 260 மாணவர்களும், திருமுக்கூடலில் 40 மாணவர்களும் கல்வி கற்க வகை இருந்தது அன்று அறிகிறோம். எண்ணாயிரத்தில் 340 மாணவர்களுக்கு 14 ஆசிரியர்கள் இருந்தனர். திரிபுவனத்தில் 240 மாணவர்களுக்கு 12 ஆசிரியர்களும், திருமுக்கூடலில் 40 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் இருந்தனர். இவற்றிலிருந்து ஒரு ஆசிரியர்க்கு சராசரி 20 மாணவர்களுக்கு மேல் கற்பிக்க நிலை இல்லை என்று அறிகிறோம். திருமுக்கூடலில் வேதம் கற்கும் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், வியாகரணம் கற்கும் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருந்தனர்.
கல்விசாலையில் புகவு:
புதுக் கல்வி பெற்று பின்னர் சிறப்புக் கல்விக்கு வரும் மாணவரை எவ்வாறு சேர்த்துக் கொள்வது என்பதையும், சேர்நத பின்னர் எவ்வாறு கற்றனர் என்பதையும் பார்த்திவசேகரபுரம் செப்பேடு கூறுகிறது. இதை பரவேசகஞ் செய்தல் என்று கூறுகிறது. அதற்குரிய விதிகள், வியாகரணம், மீமாம்சை, புரோஹிதம், ஆகியவற்றில் பொதுப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டும். மூன்று வேதங்களிலும் பொதுவாக அறிய வேண்டியவற்றை அறிந்திருக்க வேண்டும். ஐந்து சட்டர்கள் முன்னிலையில் இவற்றைத்தான் அறிவேன் என்றும், தனக்கு நிலம் ஏதுமில்லை என்றும் ஐந்து தீக்களின் மத்தியில் சத்தியம் செய்ய வேண்டும். அவனையே இச்சாக்குள் அனுமதித்தனர். இதை செப்பேடு “பிரவேசகஞ் செய்யும் பரிசு, வையாகரண, மீமாய, புரோஹிதப் புன்பாய், புவிசிரயம் இலன், திரிராட்ய வியவஹாரத்துக்கு வேண்டும் ஒத்துடையான், இது சத்யம் என்று ஐவர் சட்டரைக் கொண்டு பஞ்சக்கம் செய்தான், புகவு பெறுவான்” என்று கூறுகிறது.இதிலிருந்து சில செய்திகளை அறிகிறோம். கல்விக்கூடத்தில் அனுமதிக்க மாணவர்களே தேர்வு வைத்தனர். தன் தகுதியையும், செல்வ நிலையையும் குறித்து சேரவிருக்கும் மாணவனே சத்யம் செய்தால் போதும்.கற்கும் முறையைப் பற்றியும் இச்செப்பேடு சிறப்பாகக் கூறுகிறது. “வாரம் ஓதும் பரிசு சூத்ரத்தாலும், சூத்ராரணத்திலும், துரு சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு கிரமவாரம் அடுத்தோதுவது. சாகையிலும், கல்ப்பத்திலும், கணத்திலும், நாலு பாதத்திலும் துரு சொல்லி ஒன்பது புகவினில் அகத்தூகத்தில் இரண்டு வாரம்” என்று கூறுகிறது. படிப்படியாகத் தான் கற்கவேண்டிய கல்வி முழுமையையும், நெட்டுருவாக அறிதல் இம்முறையின் அடிப்படை அம்சம். “அகத்தூஹத்தில்” என்று செப்பேடு கூறுகிறது.
காலை ஒழுக்கம்:
இது தவிர கல்விச் சாலையில் படிக்கும் போது மாணவர் ஒருவரை ஒருவ் பிழைக்கப் பேசக்கூடாது. பேசினால் ஐந்து காணம் தண்டமிட வேண்டும். ஒருவரை ஒருவர் குட்டினால் குட்டியவன் ஒரு காசும், குட்டுண்டவன் ஐந்து காணமும் தண்டமிட வேண்டும். ஒருவரை ஒருவர் படைக் கலத்தால் தாக்கிக் கொண்டால் சாலையிலிருந்து வெளியேற்றப்படுவர். படைக்கலம் பிடித்துக் கொண்டு வகுப்புக்கு செல்லக்கூடது. சூதாடுதல் கூடது, வேலைக்காரிகளை அமர்த்திக் கொள்ளக்கூடாது என விதிகள் கூறுகின்றன. மேலும் சட்டர்கள் வயது முதிர்ந்தவர்கள் ஆகையாலும், சிறப்புக் கல்வி கற்க வந்தவர்கள் ஆகையாலும் சாலைக்குரிய நெல்லை குடியானவரிடமிருந்துத் தாங்களே வசூலித்தனர் போலும். உழும் குடிகளைத் தாங்களே நீக்குவதோ, அல்லது பலாத்காரமாக அவர்களிடமிருந்து பொருள் கொள்வதோ கூடாது. அவ்வாறு கொண்டவர்கள் தண்டிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி ஊர்ச் சபைக்கு கடமை செலுத்த வேண்டும். அதவாது செய்ய வேண்டிய பணியில் இருந்தால் ஒவ்வொரு வேதாத்தையும் படிப்போர், வேதத்துக்கு ஒருவராக மூவர் கட்டாயம் சபை இட்ட பணியை செய்தல் வேண்டும். செய்யத் தவறினால் 54 காணம் தண்டம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பொது வாழ்வுக்குத் தேவயான கட்டாய சேவையும் செய்தல் வேண்டும் என்று இதனால் அறிகிறோம். சாலையில் பணிபுரிபவர்கள் மாணவர்களைத் திட்டினால் ஒரு காசு தண்டிக்கப்பட்டனர். என்று பார்த்திவசேகரபுரம் செப்பேடு கூறுகிறது.
கல்விச்சாலையும் அரசும்:
இவ்வாறு கல்வி போதிக்கும் சாலைகளை அரசர்கள் மிகவும் ஆர்வத்தோடு நிறுவி வளர்த்தனர். இவற்றில் காஞ்சியில் இருந்த கடிகை மிகவும் சிறப்பாக விளங்கியது. கடிகை என்பது உயர் கல்வி கற்பிக்கும் நிறுவனம் என்றும், கல்விப் போட்டி நிகழும் இடம் என்றும் குறிப்பர். கி.பி. 5-ம் நூற்றாண்டிலேயே காஞ்சிக கடிகை புகழ் பெற்றிருந்தது. கதம்ப குலத்தைத் தோற்றுவித்த மயூரசர்மன் என்பவன் தன் குருவுடன் காஞ்சிக் கடிகையில் உயர் கல்வி கற்க வந்தான் என்று அறிகிறோம். கைலாயநாதர் ஆலயத்தைத் தோற்றிவித்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் கடிகையை திருத்தியமைத்து ஏராளமான செல்வம் அளித்தான.ஆய்குல மன்னன் கோக்கருநன்தடக்கன் என்னும் மன்னன் பார்த்திவசேகரபுரத்தில் விஷ்ணுவுக்கு கோயில் எடுத்து, 95 சட்டர்கள் படிக்க ஒரு சாலையை ஏற்படுத்தினான். பாண்டிச்சேரிக்கு அருகில் பாசுர் என்ற கிராமத்தில் ஒரு வித்யாஸ்தானத்துக்கு பல்லவ மன்னன் நிருபதுங்கன் மூன்று ஊர்களை அளித்தான். எண்ணாயிரத்தில் சாலையில் படிக்கும் மாணவருக்கும், ஆசிரியருக்கும் வேண்டியவற்றிற்கு முதல் இராஜேந்திர சோழன் பொருள் அளித்தான்.இவ்வாறு அரசர்களே இச்சாலைகள் சிறக்க முன்னின்று வகை செய்தனர். என்று அறியும்போது இங்கு சிறந்த கல்வி போதிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.வேதங்களில் தைத்திரீய யஜுர் வேதம் சிறப்பாகப் படிக்கப்பட்டது. சாம வேதத்தில் வாஜசனேயம், சந்தோகம், தலவகாரம் ஆகிய மூன்று பிரிவுகளும் சிறப்பாகக் கற்பிக்கப்பட்டன. வடமொழி இலக்கணங்களில் முதலிடம் பெற்றது ரூபாவதாரம் என்னும் நூல். பானினியின் வயாகரணம் சிறப்பாக கற்கப்பட்டது. மீமாம்சையில், பிரபாகரரது மீமாம்சையே தமிழகத்தில் சிறப்பாக கற்கப்பட்டது.வேதாந்தம் கற்பிக்கும் ஆசிரியருக்கு மற்ற ஆசிரியரைக் காட்டிலும் நெல் அதிகம் அளிக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுக்கப்படவில்லை. வேதாந்தம் கற்றுக் கொடுப்பவர் பணம் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று ஒரு மரபு உண்டு. மற்ற ஆசிரியார்களுக்கு நெல்லும் அவரவர் பாடங்களில் ஒவ்வொரு அத்யாயம் முடிந்ததும் பணமும் கொடுக்கப்பட்டன. வியாகரணம் கற்றுக் கொடுப்பவருக்கு 8 கழஞ்சும், மீமாம்சை கற்றுக் கொடுப்பவருக்கு 12 கழஞ்சும் கொடுக்கப்பட்டன.இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட சாலைகளில் அந்தணர் சிறுவர்கள் மட்டும் கல்வி கற்றார்களா? அல்லது பறரும் கல்வி கற்றனரா என்று தெளிவாக கூற இயலாது. பெரும்பாலான இடங்களில் அந்தணர் படித்தது சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஆனால் சில இடங்களில் படித்தவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இருபிறப்பாளர் என்பவர், அந்தணர், அரசர், வைசியர் ஆகிய மூன்று குடிகளுமே ஆவர். ஒரு சில குறிப்புகளிலிருந்து அரசியல் நூல்களும் படைக்கலப் பயிற்சியும் சாலைகளில் கற்றுத் தரப்பட்டனவோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.சில கடிகைகளும், சாலைகளும் மிகவும் வலிவுள்ளவையாக, அரசர்களும் கண்டு ஐயுறும் அளவிற்கு இருந்தன. காஞ்சியிலிருந்த கடிகை, சத்யசேனன் என்பவரிடம் இருந்தது. என்றும் அதை சகந்தசிஷயன் என்ற மன்னன் கைப்பற்றினான் என்றும் அறிகிறோம். கதம்ப குலத்தை நிறுவி மயூரசர்மன் காஞ்சியில் கடிகையில் சேர்ந்து கற்க வந்தபோது அங்கிருந்த குதிரைக் காவலனுடன் நேரிட்ட சண்டையால் பில் பிடிக்க வந்த கரம் வாளேந்தி தனியான ஒரு அரசையே நிறுவியது என்று தாளகுண்டா கல்வெட்டுக் கூறுகிறது.பார்த்திவாசேகரபுரம் சாலையில் சட்டர்கள் படைக்கலம் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள கூடாது என்றும் படைக்கலம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் விதி காண்கிறோம். படைக் கலம் தாங்கும் இவர்கள் அந்தணர்களா அல்லது அரசர் வைசியர் குலத்தையும் சார்ந்தவர்களா என்பது தெளிவாக இல்லை. அந்தணர்களிலும் பலர் சேனாபதியாகத் திகழ்ந்திருப்பதால் இதை நிச்சயமாக கூற இயலவில்லை. இச்சாலை காந்தளூர்ச் சாலையை பின்பற்றி அமைக்கப்படுகறது என்று செப்பேடு கூறுகிறது.காந்தளூர் சாலை என்பது மிகவும் வலியூள்ளதாக திகழ்ந்துள்ளது. இராஜராஜன் தான் அடைந்த வெற்றிகளில் காந்தளூர்ச் சாலை வெற்றி கண்டதை சிறப்பாக கூறுகிறான். “காந்தளூர் சாலை கலமறுத்தருளிட“ என்று கூறிக் கொள்கிறான. ஒப்பற்ற ஒரு அரசனுடன் போரிடும் அளவுக்கு அங்கு கலன்கள் நிறைந்திருந்தன. முதல் குலோத்துங்க சொழன் அச்சாலையை இரு முறை வென்றான். “இருகால் சாலை கலமறுத்து தண்டினான்ட“ என்று அவன் புகழ் பாடுகிறான். இவற்றிலிருந்து காந்தளூர்ச் சாலையில் அந்தணர்களயின் அவர்கள் போர்த திறன் மிகுந்து இருந்தவர்கள் என்று கொள்ள வேண்டும்.
அந்தணர்களின் மணவினை:
அந்தணர்களுக்கு நடைபெற்ற மணவினைச் சடங்குகளை பற்றி கலவெட்டுகளில் சான்றுகள் இல்லாவிட்டாலும் இலக்கியங்களிலிருந்து எவ்வாறு நடைபெற்றது என்று கூற இயலும். சிறப்பாக பெரிய புராணமத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும், திருஞானசம்பந்தருக்கும் நடைபெற்ற மணவிழா விரிவாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டாள் “வாரணமாயிரம்” எனப்பாடும் பதிகத்திலும் இது சிறப்பாகக் காணப்படுகிறது.அந்தணர்க்குல ஆண்மகனுக்கு 16வது வயாதில் மணம் செய்வித்தனர் என்று அறிகிறோம். பெண்ணிற்கு 12 வயதில் மணம் செய்தனர். ஆண் வீட்டார் பெண்ணைக் கேட்டு அனுப்புதல் மரபு. சுந்தரருக்கு சடங்கவியாரின் பெண்ணைக் கேட்டு அனுப்பினர் எனப் பெரிய புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தருக்கு உரிய வயாது வந்தவுடன் “மறைச் சடங்குகள் காட்டுவாரும் வேள்வி பல புரிய ஒரு கன்னிதனை வேட்டருள வேண்டும்” எனக் கேட்டனர். திருஞானசம்பந்தர் அதற்கு ஒப்புக் கொண்ட பின்னர் அவர் தந்தை மறையோர்களுடன் திருநல்லூர் பெருமணம் சென்றெய்தி நம்பாண்டார் நம்பியின் பெண்ணைக் கேட்டார். அதே போன்று ஆண்டாள் கண்ணனை தான் மணந்து கொண்ட கனாவில், இந்திராதி தேவர்கள் எல்லாம் வந்து தன்னை மணம் பேசினர் என்று கூறுகிறாள். பெண் வீட்டார் சென்று பிள்ளையைக் கேட்கும் மரபு பண்டைய மரபு அல்ல என்பது தெளிவாகிறது. ஆண்மகனின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பு நோக்குவது பற்றி எக்குறிப்பும் இல்லை.பெண் வீட்டார் மகளைக் கொடுக்க சம்மதித்தவுடன் கணிதநூல் வல்லுநர் நக்ஷத்ரிம் முதலிய கண்டு நல்ல நாளை நிச்சயித்தனர். பின்னர் உற்றார் உறவினருக்கு “மணநாள் ஓலை” அனுப்பினர் அன்று வீ்ட்டை மங்கலக் கோலம் கொண்டு அலங்கரித்தனர். திண்ணைகளுக்கு செஞ்சாந்து பூசினர். பாலிகை வைத்தனர். மங்கல வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. மாமறை நுள் விதிச் சடங்குகள் நடைபெற்றன.மணஞ்செய்யும் நாளைக்கு முதல் நாள் மணமகனுக்கு காப்பு அணிவித்தல் மரபு. இதைக் காப்பு நாள் என்று அழைப்பர். காப்பு பூணும் நாளன்று மணமகனுக்கு காப்பை நகர்வலம் செய்வித்து நவமணி அணிந்த சித்ரவிதான மண்டபத்தில் “வைதிக விதிச் சமாவர்த்தனம்” செய்தனர். செந்நெல்லும் வெண்மையான அரிசியும் பரப்பினர், அதன் மீது நூல் சுற்றி மாலை அணிவித்து, வாசநீரிட்டு, அரசிலை தருப்பை இட்ட கலசம் வைத்தனர். மணிவிளக்கும் பரப்பில் வைத்து நாத மங்கலம் முழங்க, வேதகீதம் முழங்க, பூஞ்சயனத்தின் மீதிருந்த மணமகன் கரத்தில் காப்பு அணிவித்தனர். காப்பு நாணில் பொன்னால் ஆன நாணும் இருந்தது. இதை பெரிய புராணம் “மைப்பொன் நாண் காப்பு சார்ந்தார்” என்று கூறும். இவ்வாறு மணமகன் விரதம் பூணுவது மணமகன் வீட்டில் நடைபெறும் சடங்கு.திருமணத் திருநாளன்று, மங்கலம் இசைக்க மணமகனை எழுப்பி கலைக்கடன் முடிந்தவுடன், மாலையும், தாரும் சூடி, மஞ்சனச் சாலை புகுந்து, வாச நெய் பூசி ஆசனத்தில் அமர்த்தி, தூநீர் ஆட்டி அவனை அலங்கரித்தனர். பட்டாடை பூட்டி, தலை ஈரம் உலர்த்தி மலரணிவித்தனர். பனிநீர் (பன்னீர் என இப்போது அழைக்கப்படுகிறது), சந்தனம், மன்மதச்சாந்து முதலிய கலவையைப் பூசி கையில் பவித்திரம் அணிவித்தனர். பின்னர் தன் குல தெய்வத்தை வணங்கி ஊர்வலமாக பெண்ணின் வீடு சென்றனர். ஞானசம்பந்தர் சிவிகை மீதேறி வாத்தியங்களும், பதிகங்களும், மறையும், விளங்க பெண்ணின் வீடு சென்றார். சுந்ரமூர்த்தி அரசனால் வளர்க்கப்பட்டவர். ஆதலின் அரசனுக்கும் வைதீக மரபுக்கும் ஏற்ப அலங்கரித்துக் கொண்டு குதிரை மீது ஊர்வலமாக பெண்ணின் வீடு சென்றார்.ஊருக்கு வந்த மணமகனையும், உற்றார், சுற்றத்தையும், பெண் வீட்டார் எதிர்கொண்டு அழைத்தனர். நிறை குடம், தூபம், பாலிகைகள் ஏந்தி, சுண்ணம், அறுகு, பொரி முதலிய வீசி, சந்தனக் கலவை நீர்த்தெளித்து, மறையவர், மடவார் சூழ எதிர்கொண்டு அழைத்தனர். ஞானசம்பந்தர் பெண்ணின் ஊராகிய நல்லூர் பெருமணம் சென்றதும் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி அருகினில் இருந்த ஒரு மடத்தினுள் புகுந்தார். அங்கு மஞ்சனமாடி, வெண் பட்டாடை பூண்டு, அலங்கரித்துக் கொண்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தர் அலங்கரி்த்துக் கொண்ட அணிகளைக் கூறுமிடத்து, கோவை மணிசரி, தொங்கல், கடிசூத்திரம், உதரபந்தனம், முத்தின் பூணூல், கோவை முத்துமாலை, வைரமோதிரம், கையில் தண்டையும், சிரியும், முழங்கைப் பொட்டு, கழுத்தில் கண்டிகை முதலிய பூண்டு முத்து மகுடம் பூண்டார் எனச் சேக்கிழார் கூறுகிறார்.பெண்ணுக்கும் காப்பணிவித்து அலங்கரித்தனர். மறையோர்கள் எல்லாம் எதிரே சென்று மணமகளை எதிர்கொள்ள, அரசிலை, தருப்பை தோய்ந்த நீரைக் கலசத்திலிருந்து இருக்கோதித் தெளிக்க, மணமகள் பூபந்தர் வந்தடைந்தார். அப்போது மங்கல மடந்தையர் எல்லாம் பொற்கொடங்களில் நீர், மணி, விளக்கு தூபம், மாலைகள், பாலிகைகள், சந்தனக் கலவை முதலிய ஏந்தி எதிர் கொண்டனர். அங்கு மணிபீடத்தின் மீது மணமக்களை அமர்த்தி மங்கலமகளிர் பாட்டுக்கள் பாடி, கலசங்களிலிருந்து நீர் ஒழுக்கி, அவரை வலம்வந்து விதிமுறை வினைகள் செய்தனர். பின்னர் மங்கல மாதரார் உள்ளே செல்ல மணமக்கள் வீட்டினுள் சென்றார்.உள்ளே விதானம் கட்டி அலங்கரித்த இடத்ததின் கீழ் மலர்த்தவிசின் மீது அமர்ந்தார். பெண்ணின் தந்தையும், தாயும், மணமகனின் காலை பாலும், நீரும் ஊற்றி கழுவினர். பெண்ணின் தாய் ஊற்ற தந்தை கழுவினார். அந்நீரை தலைமேலும் அங்குள்ளோர் மீதும் தெளித்து ஊற்ற ஆண்மகனின் கரத்தில் பெண்ணின் கரத்தை எடுத்து வைத்து பெண்ணின் தன் கோத்திரம் எடுத்துக்கூறி நீர்வார்த்து “என் பாவையை அளித்தேன்” எனக் கூறிக் கொடுத்தார் (பெரியபுராணம்).அதன்மேல நடந்த சடங்குகளை ஆண்டாள் தன் பதிகத்தில் குறித்துள்ளாள். மங்கல வாத்தியம் முழங்க வரி சங்கங்கள் ஊத பெண்ணின் கரத்தைப் பற்றி பின்னர் தீயை வலம் வந்தனர். பெண்ணின் கால் விரலை மணமகன் பற்றி அம்மி மிதிக்கச் செய்தனர். பின்னர் மணமகளின் கைமேல் பெண் கையை வைத்து பொரியை எடுத்து தீயில் இடுவர். (இதை பொரி ஓமம் அல்லது லாஜ ஹோமம் என்பர்). இலக்கியங்கள் அந்தணர் மணத்தை முற்றிலும் நமக்குத் தெரிவிக்கின்றன.
அந்தணர் மனைவியர்:
அந்தணரின் மனைவியை பிராமணி என்றும், பாரியை என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தணன் சேனாபதியாக திகழ்ந்த பொது அவன் மனைவியைத் தேவி என்றும், மாராசி என்றும் அழைப்பதும் உண்டு (636/5, 637/5). அந்தணர்கள் பல மனைவிகளை மணந்திருந்தனர் என்பதற்கு கல்வெட்டு சன்றுகள் உள்ளன. பிராமணர்கள் தங்கள் குலத்தில் மட்டுமின்றி பிற குடிகயிலும் பெண்களைக் கொண்டிருந்தனர். இதை அனுலோமம் என்பர். பிராமணப் பெண்கள் க்ஷத்திரிய, வைசிய, சூத்திர குடியில் மணப்பதும் உண்டு. இதை பரதிலோமம் என்பர். அனுலோம, பிரதிலோம வழியில் பிறந்த மக்களைச் சமுதாயம் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. அவர்களுக்குச் சில தொழில்களையும் தனியாக ஒதுக்கியது. இவற்றை அறநூல்கள் வகை செய்து விதிகள் செய்துள்ளன.
தொழில்கள்:
அந்தணர்கள் வேதம் ஓதுதல் தவிர பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். கல்விக்காகத் தங்களை அர்ப்பணித்து 48 ஆண்டுகள் பரிம்மசரியங்காத்து வேத நெறியில் நின்ற அந்தணர்களை திருமுருகாற்றுப்படை குறிக்கிறது. இதை முன்னரே குறிப்பிட்டோம். வேதம் வல்ல பல அந்தணர்களுக்கு அரசர்கள் தானம் அளித்தனர். இவ்வாறு அரசர்களிடம் தானம் பெற்றவர்கள் கல்வியிற் சிறந்தவர்களாக இருந்தனர். காசாக்குடி செப்பேடுகள் ஒரு பிராமணரின் கல்வி கேள்விகளை கீழ்வருமாறு குறிக்கின்றன. அவர் வேத கடலை கரைகண்டவர். “சாம வேதத்தை சவரத்துடன் நன்கு பாடவல்லவர், சந்தஸ், கல்பம், வியாகரணம், ஜோதிஷம், நிருத்தம், சிஷை, சந்தோவிச்சி்த்தி ஆகிய அங்கங்களுடன், வேதங்களைத் தானும் அறிந்து, பிறருக்கும் போதிக்கும் வல்லமை நிறைந்தவர். சொல், சொற்றொடர், பொருள் இவற்றை நன்கு அறியும் திறன் பெற்றவர். கர்மகாண்டத்திலும், கலைகளிலும் பண்டிதர். உலகியலிலும், உக்திகளிலும், கலைகளிலும் சிறந்தவர். காவியம், நாடகம், ஆக்யாயிகம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றை நன்கு கற்றவர். கர்மங்களை நன்கு அனுஷ்ட்டிப்பவர்” என்று அச்செப்பேடு கூறுகிறது.பராமணர்களுக்கு கொடுக்கபட்ட நிலங்களுக்கு பிரமதேயம் என்று பெயர். தங்களுக்குக் கிடைத்த நிலங்களைத் தங்களே அனுபவிக்காமல் தங்கள் குலத்தாருக்கும் கொடுத்து செல்வத்தை பகிர்ந்து கொண்டு இவர்கள் வாழ்ந்தனர். பாணிடிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் கிராமத்தை கொற்கைக் கிழான் என்னும் பிராமணருக்கு கொடுத்தான். அதை அவர் மூன்று கூறுகளாக்கி இரண்டு கூறுகளை 50 பிராமணர்களுக்குக் கொடுத்தார். ஒரு கூற்றைத் தான் கொண்டார். அதிலும் தன் தம்பிமார்க்கு நான்கு பங்கும் தன் சிற்றப்பனார் மக்களுக்கு ஆறு பங்காக்கியும் கொடுத்தார். நிலம் பெறற்வர்கள் பிரஸ்தி பாடியவர்க்கும், செப்பேட்டில் எழுதிய தச்சனுக்கும் நிலமும் மனையும் கொடுத்தார். இவ்வாறு தங்களுக்குக் கிடைத்ததை பிறருடன் பங்கு கொண்டு வாழ்ந்த பிராம்மணர்கள் உண்டு. வேதம்வல்ல பிராம்மணர்களுக்கு அவர்களது ஆற்றலுக்காக மட்டுமின்றி, அரசன் தன் ஆயுர், பலம், வெற்றி இவற்றிற்காகவும் நிலம் அளித்தான். இவ்வாறு அளிக்கப்பட்டவை சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் ஆகிய விசேஷ நாட்களில் அளிக்கப்பட்டன. வேதங்களையும் பிற சாத்திரங்களையும் அறிந்து தான் ஓதியும் பிறருக்கு ஓதுவித்தும் வந்த அந்தணர்களைப் பற்றி பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
அந்தண அமைச்சர்கள்:
பல அந்தணர்கள் அரசனுக்கு அமைச்சர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். பல்லவ மன்னன் நந்திவர்மனுக்கு மந்திரியாகத் திகழ்ந்தவன் பிரும்மதுவஜராஜன் என்னும் அந்தணன். இவன் பிருஹஸ்பதியை ஒத்தவன் என்றும், நீதி நிபுணன் என்றும், முக்கிய மந்திரி என்றும் அழைக்கப்பெறுகிறான். இவனை வீரன் என்றும் தீரன் என்றும் செப்பேடுகள் புகழ்கின்றன. புல்லூர் செப்பேடுகளில் நாகசர்மன் என்னும் அந்தணன் நந்திவர்மனின் மந்திரியாகக் கூறப்படுகிறான். அவனுக்குப் பிரும்மாதிராஜன் என்னும் பெயர் இருந்தது என்றும் அவன் பருஹஸ்பதிக்கு சமமானவன் என்றும், க்ஷாத்ரவித்தையில் சிறந்தவன் என்றும், சிவபக்தன் என்றும் அழைக்கப் பெறுகிறான். பருஹஸ்பதியின் பெயரால் தர்மசாத்திரம் ஒன்று இருந்தது. அது பல்லவர்களிடை மிகவும் சிறப்புற்றிருந்தது போலும்.சின்னமன்னூர் செப்பேடுகள் பாண்டிய மன்னனுக்கு பட்ட சோமாசி என்னும் அந்தணன் தர்மாத்யக்ஷனாக இருந்தான் என்றும், அவன் அரசனுக்கு அறம் போதித்தவன் (தர்மோபதேஷ்டா) என்றும் மந்திரியாக இருந்தான் என்றும் கூறுகின்றன. பாண்டிய மன்னன் வீரநாராயணன் அளித்த தளவாய்புரம் செப்பேடுகளுக்கு ஆணத்தியாகத் திகழ்ந்தவன் இளையாநக்கன் என்னும் அந்தணன். இவன் “ஹரிசரண கமல சேகரன் ஆயிரத்தைந் நூற்றுவன் திருமகிழ் இளையாநக்கன்” என்று அழைக்கப்படுகிறான். இவன் நரேந்திர மந்திரி என்றும், அதிகாரி அன்றும் குறிக்கப்படுகிறான். சோழ மன்னர் சுந்தர சோழருக்கு அநிருத்த பரம்மாதிராஜன் என்பவர் அமைச்சராக இருந்தார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் மந்திரியாகத் திகழ்ந்தபோது அவருக்குத் தென்னவன் பிரம்மாதிராஜன் என்ற பெயர் இருந்தது.
அரக்களத்து அந்தணர்:
பல அந்தணர்கள் அரசர்களுக்கு அறம் உரைக்கும் அதிகாரிகளாகத் திகழ்ந்தார்கள். பட்டசோமாசி என்பவன் அரசனுக்கு தர்மோபதேஷ்டா என்று சின்னமன்னூர் செப்பேடுகளில் குறிக்ப்பெறுகிறான். வேதசாத்திரங்களை அறிந்தவனும், சோமபாகம் செய்தவனுமான தாதபட்டன் என்பவன் பராந்தக வீரநாராயணனுக்குத் தர்மாத்யக்ஷனாக பணிபுரிந்தான். அவர்களை தருமவினைஞர் எனச் சிலப்பதிகாரம் குறிக்கும்.
அந்தண சேனாபதிகள்:
பல அந்தணர்கள் அரசனது சேனாபதிகளாக பணிபுரிந்து இருக்கிறார்கள். முதல் இராஜராஜ சோழனுக்குச் சேனாபதியாகத் திகழ்ந்தவன் கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பரும்மமாராயன் என்பவன். இவன் அந்தணர் குலத்தவன். அந்தணக் குலத்தவர் அரசனின் கீழ் உயர்ந்த பதிவி வகித்தபோது அளிக்கப்பட்ட பட்டமே பிரும்மமகாராயர் அல்லது பிரும்மாதிராயர் என்னும் பெயர்களாகும். இராஜராஜனின் வெற்றிகளில் கணிசமான பகுதிக்கு காரணமாக இவ்வந்தணச் சேனாபதி திகழ்ந்திருக்க வேண்டும். இராஜராஜன் கட்டுவித்த பெருங்கோயிலுக்கு திருச்சுற்றை இச்சேனாபதி கட்டுவித்தான். இராஜராஜ சோழவேதர் தருவாய் மொழிந்தருள இத்திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரும்மமாராயன் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இதிலிருந்து இராஜராஜன் இவனிடத்தில் பெரும் மதிப்பு வைத்திருந்தான் என்று அறியாலம்.இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனிடத்திலும் கிருஷ்ணன் இராமன் சேனாபதியாகத் திகழ்ந்தான். அவனுக்குப் பின்னர் அவன் மகன் மாறாயன் அருண்மொழியான உத்தமசோழ பிரும்மமாராயன் என்பவன் சேனாபதியாய் இருந்தான். தமிழகத்தை ஆண்ட தலைசிறந்த இருமன்னர்களுக்கு தந்தையும் மகனுமாக இரு அந்தணர்கள் சேனாபதிகளாகத் திகழ்ந்துள்ளார்கள்.அருண்மொழியான உத்தமசோழ பரும்மமாராயன் இராஜேந்திரன் காலத்தில் கோலாரில் ஒரு கோயில் கட்டினான். இவன் தண்டநாயகன் என்று கூறப்படுகிறான். தண்டநாயகன் உய்யக்கொண்டார் வளநாட்டு கேரளாந்தகச் சருப்பதி மங்களத்து நராக்கன் இராமன் அருண்மொழியான உத்தமசோழ பிரும்மமாரயன் என்று இவனைக் கல்வெட்டு குறிக்கிறது. (651/5). கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நக்கன் ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான இராஜேந்திர சோழ பிரும்மமாராயர் தேவியார் ஸ்ரீ கிருஷ்ணன் கௌசலையார் என்பவள் ஒரு கல்வெட்டில் குறிக்கப்படுகிறாள் (636/5). இதே ஊரில் இருந்து மற்றொரு சேனாபதி வந்துள்ளன். அவன் இராமன் அருண்மொழியான உத்தமசோழ பரும்மமாராயன் என்பவன். அவன் மனைவி மாராசி என்று அழைக்கப்படுகிறாள். அவள் பெயர் தேசப்பன் செம்பியன் மாதேவி என்பது (637/5).இராஜேந்திரன் மகன் இராஜாதிராஜனிடம் அப்பிமையன் இராஜேந்திர பிரும்மமாராயன் என்பவன் தண்ட நாயகனாக இருந்ததோடு அரசனின் பிரதிநிதியாக மகாராஜவாடி ஏழாயிரம் என்னும் இடத்தை ஆண்டான். இரண்டாம் இராஜேந்திர சோழனுக்கு ஜயங்கொண்ட சோழ பிரும்மாதிராஜன் என்ற அந்தணன் சேனாபதியாக இருந்தான். குலோத்துங்க சோழனுக்கு ஞானமூர்த்தி பண்டிதனான மதுராந்தக பரும்மாதிராஜன் என்பவன் சேனாபதியாக திகழ்ந்தான். ஆக தலை சிறந்த சோழ மன்னர்கள் அனைவரிடத்திலும் அந்தணர்கள் சேனாபதிகளாகத் திகழ்ந்திருக்கிறர்கள்.
அந்தண அதிகாரிகள்:
பல அந்தணர்கள் அரசனின் அதிகாரிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அரசனின் அருகிலிருந்து அவனிடும் ஆணைகளை வாய்மொழிக் கேட்டு எழுதும் திருமந்திர ஓலை என்னும் பொறுப்பிலும், திருமந்திர ஓலை நாயகம், திருமந்திர ஓலை நாயகக் கண்காணி, புரவுவரி, திணைக்களம் முதலிய பல பரிவுகளில் பணிபுரிந்திருக்கின்றனர். ஊர் நிலங்களை அளித்தல், வகை செய்தல், முதலிய பணிகளையும், ஊர் கணக்கு முதலியவைகளையும் செய்துள்ளனர் என்பது ஏராளமான கல்வெட்டுகள் கூறுகின்றன. முற்காலாப் பல்லவர் செப்பேட்டிலும், பாண்டியர் செப்பேட்டிலும் ஆணத்தி என்னும் பொறுப்பில் பல அந்தணர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசனது ஆணையை நிறைவேற்றுவோர் என்னும் பொறுப்பில் இருந்தனர்.முதல் பராந்தக சோழனுடைய காலத்தில் ஊராட்சி முறையைக் குறிக்கும் உத்தரமேரூர் கல்வெட்டு புகழ்வாய்ந்தது. இதில் அரசனின் ஆணையை உத்தரமேரூருக்கு பெற்று வந்து சபைக் கூட்டத்துடன் இருந்து ஆணையை நிறைவேற்றியான் ஸ்ரீவங்கநகர் கரஞ்சை கொண்டைய கிரமவித்த பட்டனாகிய சோமாசிப் பெருமாள் என்னும் அந்தணன் ஆவான். இது போன்று நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுக்களை கல்வெட்டுக்களில் இருந்து பெறலாம்.சில சோழர் கல்வெட்டுக்கள் அரச அதிகாரிகள் அனைவரையும் விரிவாகக் குறிக்கின்றன. இவர்களில் பல மூவேந்த வேளார், பிரும்மாதிராஜன், முதலிய பட்டம் பெற்றவர்கள். இவற்றிலிருந்து அந்தணர்கள் பல்வேறு குடியினரோடு சம அந்தஸ்து உடையவர்களாகக் காணப்படுகிறார்களை ஒழிய, ஜாதியின் காரணத்தால் இப்பதிவிகளில் எவ்வித உயர்வும் கொடுக்கப்பட்டவில்லை என்பது தெளிவு. எல்லா மக்களுடனும் கலந்து ஒன்றாக இவர்கள் பணிபுரிவதை பல சோழர் கல்வெட்டுக்கள் குறிப்பதிலிருந்து அரசாங்கப் பணிகளில் அந்தணர்களுக்கு எந்த வாய்ப்பு இருந்ததோ அது மற்ற குடியினருக்கும் இருந்தது என்பதும் தெளிவு.
அந்தணர் அரச குரு:
பல அந்தணர்கள் அரசனின் குருவாக இருந்திருக்கிறார்கள். இராஜராஜ சோழனுக்கு சர்வசிவ பண்டிதர் என்பவர் குருவாக இருந்திருக்கிறார். வீரபாண்டியானுக்கு பார்த்திவகேசரி என்னும் பெயர் பெற்ற அந்தணன் குருவாக இருந்தான் என சிவாகசி செப்பேடு கூறுகிறது. முதல் இராஜேந்திர சோழனுக்கு ஈசான சிவபண்டிதன் என்பவர் குருவாகத் திகழ்ந்தார். முதல் குலோத்துங்க சோழனுக்கு “உடையார் ஸ்வாமிதேவர் ஸ்ரீ கண்டசிவர்” என்பவர் குருவாக திகழ்ந்திருக்கிறார் (703/5). மூன்றாம் குலோத்துங்கனுக்கு ஈச்வர சிவன் என்பவர் குருவாக திகழ்ந்தார். 18 விதமான வித்தைகளையும் கற்றவர் என்றும், உபநிஷத்துக்களில் உள்ள பொருளனைத்தும் சிவபிரானின் உன்னத தத்துவத்தையே கூறுகின்றன என்று கண்டவர் என்றும், “சித்தாந்த ரத்னாகரம்” என்னும் நூல் இயற்றியவர் என்றும், கல்வெட்டுக் கூறுகிறது. இவரே மூன்றாம் குலோத்துங்கனால் திரிபுவனத்தில் எடுக்கப்பட்ட கோயிலில் சிவபிரானை பிரதிஷ்டை செய்தார் என அக்கல்வெட்டுக் கூறுகிறது.
ஊர்க்கணக்கு:
பெரும்பாலான ஊர்களில் கணக்கராக அந்தணர்கள் பணியாற்றி இருக்கின்றனர். கணக்கர்களாக பிறரைக் கட்டிலும் அந்தணர்களே கல்வெட்டுகளில் அதிகம் குறிக்கப்படுவதில் இருந்து, இத்தொழிலில் இவர்கள் அதிகம் ஈடுபட்டனர் என்று அறியலாம். ஊர்ச் சபைகளில் மத்யஸ்தர் என்னும் ஒரு பதிவி உண்டு. இப்பொறுப்பை பல இடங்களில் அந்தணர்கள் வகித்து வந்தனர். இதை நடுவிருக்கை என்றும் பல கல்வெட்டுக்கள் குறிக்கும். இவர்கள் சபை இடும் பணியை எழுதி வைக்கும் பணியாளர்களாகத் திகழந்தார்கள். “சபை பணிக்க எழுதினேன் மத்யஸ்தன்.....” எனப் பல கல்வெட்டுக்களில் காணலாம்.
அந்தணளும் கோயில்களும்:
தமிழகத்தில் கோயில்கள் மற்ற குடியினரின் வாழ்க்கையுடன் எந்த அளவுக்குப் பிணைந்திருந்தனவோ அந்த அளவுக்கு அந்தணர் வாழ்கையுடனும் பிணைந்திருந்தன. கோயில்களை அண்டி வாழ்ந்த அந்தணர்கள் பலர். தமிழகத்தில் சவாலயங்களிலும், திருமால் கோயில்களிலும் வழிபடு அந்தணர்களாலேயே செய்யப்பட்டது. சிவாலயங்களில் சிவாச்சாரியார்களும், வைணவ ஆலயங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் வழிபாடு செய்தனர். வழிபாட்டை தேவகர்ம என்றும், வழிபாடு செய்வாரை தேவகன்மி என்றும் கல்வெட்டுகள் கூறும். இவ்வாறு செய்பவர்களுக்கு நம்பி என்னும் பெயரையும் கல்வெட்டுகளில் காண்கிறோம். சுமார் 11-ம் நூற்றாண்டின் இறுதிவரை சைவமும், வைணவமும் ஒன்றை ஒன்று ஏற்று அதிக பூசல்கள் இன்றி வளர்ந்தன. வைணவர்களில் பெரும்பாலானவர்கள் வைகாணச மரபை பின்பற்றினர் என்று முன்னரே கூறினோம்.சைவம், வைணவம், இன்னம் பிற சமயங்களுக்கும் அடிப்படை ஒற்றுமையைக் கொண்டு, அதற்கு அப்பால் வேதாந்த கருத்துக்களையும் உள்ளடக்கி கோயில்லகள் திகழ முடிந்தது. அம்மரபு இன்றுவரை கேரளப் பகுதியில் நிலவி வருகிறது. ஆனால் 12-ம் நூற்றாண்டிலிருந்து சமயம் சற்று தீவர நிலையை ஏற்று அதிக வேறுபாடுகளுக்கு இடமளித்தது. கேரளத்தில் வழிபாடு செய்தவர்கள் “நம்பி ஸ்ரீ பாதங்கள்” அல்லது “நம்பி திருவடி” என அழைக்கப்பட்டனர். சுமார் 15-ம் நூற்றண்டுவரை கேரளத்திலும் கல்வெட்டுக்களில் பூஜை செய்வோர் நம்பி என்றே அழைக்கப்படுகின்றனர். இப்பெயரே பின்னர் மறுவி “நம்பூத்திரி” என்று அழைக்கப்பட்டது போலும்.உத்தமசோழர் காலச் செப்பேடு “நம்பியை வழிபாடு செய்ய அமர்த்தவும், நிம்பியை பெறாதுவிடில் வேதம்வல்ல பிராம்மணனை அமர்த்தவும்” என்று கூறுகிறது. இதிலிருந்து அந்தணர் வழிபடும் குலத்தில் பிறந்தவராக இருந்தால் வேதம் வல்லாரைக் காட்டிலும் முதலிடம் பெற்றனர் எனபது தெளிவு.அந்தணர்கள் அல்லாத சிலரும் கோயில்களில் பூஜை செய்துள்ளனர் என அறிகிறோம். உதாரணமாக உத்தரமேரூரில் சப்தமாதர் கோயில் வழிபாடு செய்தவர் “பாரசவர்” என்று குறிக்கப்படுகிறார்.வழிபாடு தவிர பரிசாரகஞ் செய்யவும் அந்தணர்கள் நியமிக்கப்பட்டனர். இராஜராஜன் தான் எடுத்த தஞ்சைக் கோயிலில் பரிசாரகஞ் செய்ய மாணிகளை நியமித்தான். மாணிகள் என்பவரை பிரும்மசாரிகள் என்று கூரவர்.கோயில்களில் பண்டாரஞ் செய்யவும், கணக்கு எழுதவும் பல அந்தணர்கள் நியமிக்கப்பட்டனர். தஞ்சை இராஜராஜேச்வரத்தில் அந்தணர்களே பண்டாரிகளாகவும், கணக்கெழுதும் கரணத்தார்களுமாக பணிபுரிந்தனர். இப்பணிகளில் பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பல ஊர்களைச் சேரந்தவர்கள். அவரிகளை அந்தந்த ஊர்ச் சபையே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்று இரஜாராஜன் விதித்திருந்தான்.
இசை கூத்துக்களில் வல்லுநுர்:
பல அந்தணர்கள் இசைத் துறையிலும், நாட்டியத் துறையிலும் ஈடுபட்டு சிறந்த வல்லுனர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவன் பறையூர் மறையோன் கூத்தச் சாக்கியன் ஆடலைக் கண்டு மகிழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக்கூத்தன் மறையோன் எனக் கூறப்படுவதிலிருந்து அந்தணர் குலத்தவன் என்பது தெளிவு. தஞ்சைப் பெருங்கோயிலில் உடுக்கை வாசிப்பான் ஒருவன் உடுக்கை விஜ்ஜாதரனான சோமசிவன் எனக் குறிக்கப்டுகிறான். இவனும் இவன் தந்தையும் கிரமவித்தர் என அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இவர்கள் அந்தணர்கள் எனக் கொள்ளாலாம்.அந்தணர்களுக்கு தொன்று தொட்டே நிலம் அளிக்கப்பட்டு வந்தது என்று கண்டோம். இவை விளைச்சல் நிலங்களானதால் பல அந்தணர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் தெளிவு. இவர்களே நிலத்தில் இறங்கி ஏற்பிடித்து உழுது பயிர் செய்தார்களா அன்றி பிற உழுங்குடிகளைக் கொண்டு பயிர் செய்தார்களா என்று கூறச் சான்றுகள் ஏதுமில்லை.பல அந்தணர்கள் ஊர்ச் சபைகளில் பல வாரியங்களுக்கு பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏரி வாரியம், கழனி வாரியிம், தோட்ட வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியிம், சம்வத்சர வாரியம் எனப் பல வாரியங்களில் பணிபுரந்திருக்கிறார்கள். இது தவிர சபை இட்ட ஊர்க் கடமை முதலியவும் இவர்கள் செய்தல் வேண்டும், என்று பல கல்வெட்டுக்களால் அறியலாம்.இதுகாறும் கிடை்துள்ள கல்வெட்டுக்களில் அந்தணர் வணிகத் துறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
துறவிகளும் மடதிபதிகளும்:
பல அந்தணர்கள் உலக வாழ்வைத் துறந்து துறவிகளாக மக்கள் வாழ்வை உய்விக்கும் பெரியோர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு சமயக் கோட்பாடுகளை ஏற்று அவற்றிற்கு ஏற்ப துறவறம் பூண்டவர்கள். சைவ சமயத்தைச் சார்ந்த பல்வேறு உட்பிரிவுகளையும் தழுவிய துறவிகள் இருந்தனர். காபாலிகம், காளாமுகம், பாசுபதம், பைரவம், சித்தாந்த சைவம் ஆகிய பல உட்பிரிவுகளைச் சார்நத துறவிகளும் இருந்தனர். திருவொற்றியூரில் நிரஞ்சன குரு என்பவர் கோயிலில் இருந்தார் எனப் பல்லவர் காலக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். பராந்தக சோழரின் மகன் இராஜாதித்த சோழனுக்கு கேரளத்தைச் சேர்ந்த வெள்ளன் குமரன் என்ற அந்தணன் உடன் இருந்த வீரனாக திகழ்ந்தான். அனால் இராஜாதித்தன் தக்கோலப் போரில் இறந்தவுடன் மனமுடைந்து தறவறம் பூண்டவன். இவன் சதுரானன பண்டிதன் என்னும் பெயரில் திருவொற்றியூரில் ஒரு மடம் அமைத்து அதில் வசித்தான். சதுரானன மடம் காளாமுகப் பிரிவைச் சார்ந்திருந்தது. சதுரானன பண்டிதனாகத் திகழ்ந்த இவ்வந்தணன் காளாமுகத் துறவியாகத் திகழ்ந்தான்.கொடும்பாளூர் இருக்வேளிர்களில் புகழ்பெற்ற பூதி என்னும் விக்ரமகேசரி தான் எடுப்பித்த கோயிலை ஒட்டி ஒரு மடம் அமைத்து அங்கு வசித்த மல்லிகார்ஜுனன் என்னும் துறவிக்கு நிலமளித்தான். மல்லிகார்ஜுனன் வேதபாரகன் என்றும், “காளாமுகாதான யதிமுக்யன்” என்றும் குறிக்கபடுகிறான். இதுபோன்று துறவிகளாக வாழ்ந்த அந்தணர்கள் பல மடங்களின் தலைவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
அல்லன செய்தோர்:
சிறந்த வேதம் விளங்கப்பாடிவிழுச்சீரெய்திய ஒழுக்மொடு புணர்ந்துநிலமமர் வையத்து ஒருதாமாகிஉயர்நிலை உலகம் இவனின்று எய்தும்அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்பெரியோர்.......அந்தணர்எனச் சங்க காலத்திலேயே மக்களால் புகழ்பட்ட அந்தணர்கள் ஒழுக்கத்தாலும், அறநெறியாலும், அன்புடை நெஞ்சத்தாலும் மக்களின் மனத்தைக் கவர்ந்தோர் ஆவர். ஆயினும் அவர் குடியில் நல்லது அல்லன செய்த பலர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.கோயிலில் பணிபுரிந்த சில அந்தணர்கள் கோயிலில் அணிகலன்களையும், சொத்துக்களையும் கவர்ந்ததால் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டதை சில கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.அரசியல் சூழ்ச்சிகளில் சில அந்தணர்கள் பெரும் பங்கு கொண்டு பாதகம் புரிந்திருக்கின்றனர். இராஜராஜ சோழன் அண்ணன் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் சோமன் இரவிதாசனான பஞ்சவன் பிரும்மாதிராஜன், பரமேசுரனான இருமுடி சோழ பிரும்மாதிராஜன், மலையனூரான் ரேவதாசக்கிரமவித்தன் என்போர் (Ep. Ind. Vol. XXI. No 27). இவர்கள் அந்தணர் என்பது தெளிவே. இதை உடையார் குடிக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.
அந்தணப் புலவர்:
அந்தணக் குலத்தில் பலர் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். கபிலர், பரணர், நக்கீரர், மலைபடுகடாம் பாடிய பெருங்குன்றூர் பெருங்கௌசிகன், பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் முதலிய அந்தணர்கள் புலமை மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அந்தணர் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் சிறந்திருந்தனர். ஆயினும் சங்க காலத் தமிழ் அந்தணர்கள் தமிழ் மொழியில் சிறந்த ஈடுபாடு கொண்டு ஒப்பற்ற தமிழ்ப்பாக்களை இயற்றிப் புகழ் எய்தியுள்ளனர். அக்கால அந்தணர் தமிழகத்தில் இயற்றிய சம்ஸ்கிருத நூல்கள் ஏதும் எஞ்சாததிலிருந்து சமஸ்கிருதப் புலமையைக் காட்டிலும் தமிழ்ப் புலமையில் அவர்கள் சிறந்திருந்தனர் என்பதில் ஐயமில்லை.ஒப்பற்ற தமிழ் இலக்கணம் வகுத்த அகத்தியரும், தொல்காப்பியரும் அந்தணக் குலத்தவர் எனப் பண்டைய மரபுகள் குறிக்கின்றன. கி.பி. 7-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தேவாரத் திருப்பதிகங்களையும், திருவாசகத்தையும் இயற்றிய திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய பெரியோர்கள் அக்குலத்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. கி.பி. 8-ம் நூற்றாண்டில் தண்டி என்னும் சிறந்த சம்ஸ்கிருத கவி பல்லவர் அவையை அலங்கரித்தான்.இந்திய தத்துவ சாத்திரத்தில் ஒப்பற்ற நக்ஷத்திரங்களாக திகழும் சம்கரரும், இராமானுஜரும் தமிழ் நாட்டுச் செல்வர்களே. சோழர் காலத்தில் பரணி இயற்றிய பெரும் புலவர் ஜயாங்கொண்டார், அந்தணர் குலத்தவர் என்பர். இது போன்று பல அந்தணர்க் குலத்தோர் சிறந்த தமிழ்ச் சான்றோர்களாக வடமொழிப் புலவர்களாகவும் திகழ்ந்தனர்.
பிரும்மதேயம்:
அந்தணர்களுக்கு அரசர்கள் நிலம் கொடுப்பது பல செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்களை பிரும்மதேயம் என்று அழைப்பர். இவ்வாறு நிலம் கொடுப்பது சங்க காலத்திலேயே நிலவிய ஒரு பண்பு. சேரன் செங்குட்டுவன் பரணர்க்கு உம்பர்க் கட்டுவாரியை கொடுத்தான். செலவக்கடுங்கோ வாழியாதன் கபிலர்கு நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி கண்ட நாடெல்லாம் கொடுத்தான். நெடுஞ்சேரலாதன் குமட்டூர் கண்ணனுக்கு ஐந்நூற்றூர் பிரமதாயங் கொடுத்தான். இங்கு கொடுக்கப்பட்ட நிலம் பிரமதாயம் என்ப்படுவது குறிக்கத்தக்கது.அறத்தையே கூறிய செ்விய நாவுடைய செயற்கரிய வேள்விகள் செய்து முடித்த வேதம் ஓதும் அந்தணர்க்கு அரிய கலங்களில் நீர்வார்த்து செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடுத்தான் எனப் பதிற்றுப்பத்து (64) கூறும். இவ்வாறு நிலம் கொடுக்கும் போது கரத்தில் நீர்வார்த்துக் கொடுத்தல் சங்க காலத்திலேயே நிலவியது என்று அறிகிறோம். இக்காலச் செப்பேடுகளும், கலவெட்டுக்களும் “நீரோட்டிக் கொடுத்தான்” எனக் குறிக்கின்றன.இவ்வாறு ஒரு பிராம்மணர்க்கு கொடுக்கப்பட்டது “எகபோக பிரமதேயம்” என்றும், பலருக்கு கொகடுக்கப்ட்டது “பிரமதேயம்” என்றும் குறிக்கப்படுகின்றன. கோயில்களைச் சார்ந்து அளிக்கப்பட்ட பிராம்மணர் நிலங்கள் “தேவதானப் பிரமதேயம்” என்றும் பெயர் பெற்றன. அந்தணர்களுக்கு கொடுத்த நிலத்தை அரசன் விரும்பினால் மாற்றி வெள்ளாளர்க்கு கொடுப்பதும் உண்டு. அவ்வாறு மாற்றப்பட்ட பல நிலங்களைச் சோழர்காலக் கல்வெட்டுக்களில் காணலாம். திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊர், சிங்களாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த பிரும்மதேயமாக இருந்தது. இதற்கு தலைமாறாக வேறு நிலம் கொடுத்து இதை வெள்ளான் வகையாக மாற்றியதை சோழர் கல்வெட்டு குறிக்கிறது.