◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

13. எம்முளும் உளன் வைகல் எண்தேர் செய்யும் தச்சன்

ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம் - சோழர் காலம், கி.பி. 12-ம் நூற்றாண்டு
ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம் - சோழர் காலம், கி.பி. 12-ம் நூற்றாண்டு

கம்மாளர்:

கருவிகள் செய்யத் தெரிந்த விலங்கே மனிதன் என்று தொல்லியல் வல்லுனர் இலக்கணம் கூறுவர். மனதிக் குரங்கிலிருந்து குரங்கு மனிதன் வேறாகக் கொள்ள அவன் செய்த கருவிகளே சான்றுகள் என்பர். அந்நிலையில் இருந்துதான் மனித இனத்தின் வரலாறு ஆரம்பமாகிறது. அவ்வாறு கருவிகள் செய்த மனித இனத்தைத் தொடங்கி, வளம் செய்தவர்களே கம்மாளர். இவர்களை விஷ்வககர்மா என்று நம் முன்னோர்கள் அழைத்தது மிகவும் பொருந்தும். இவர்களைக் கம்மாளர்கள் என்றும் அழைப்பர். கம்மாளர் எனில் தொழில் புரிவோர் என்று பொருள் படும். தொழிலாளி என்னும் சொல் இவர்களுக்கே முதன் முதலில் பொருந்தும். ஆதலின் இவர்களுக்கு வினைஞர் என்ற பெயரும் பண்டைய நூல்களில் காணப்படுகிறது. மண், மரம், கல், உலோகம், பொன், தந்தம் ஆகிய பல பொருள்களிலிருந்து கலன் செய்வோர் இவர்களில் இருந்தனர். ஆயினும் இவர்கள் அனைவரும் ஒரு இனத்தவரே. கொல்லர் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. “கொல்” எனில் வெட்டல் எனப் பொருள். பல பொருள்களை வெட்டி, செதுக்கி செய்வதால் இப்பெயர் பெற்றனர்.

பெயர்கள்:

இவர்களுக்கு கண்ணானர், சிற்பியர், துவட்டர், ஓவர், தபதியர், ஆற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர, கண்ணுள் வினைஞர் எனவும், சித்ரகாரர், ஓவியர், மோகர், என்றும் பெயர்கள் இருந்ததாக நிகண்டு கூறுகிறது. தட்டான், பொன் செய்யும் கொல்லர், பொன் வினைமாக்கன், சொன்னகாரர், அக்கசாலையர், பொன் செய்யும் புலவர் என்றும் பெயர்கள் இருந்ததாகவும் அதே நூல் குறிக்கிறது.
காவிரிப் பூம்பட்டினத்தில் மருவூர்பாக்கம் என்னும் பகுதியில் கஞ்சகாரர் (வெண்கலம் செய்வார்), செம்பு செய்குநர், கண்ணுள் வினைஞர் (சித்ரகாரிகள்), சுதையால் பாவை முதலிய செய்யும் மண்ணீ்ட்டாளர், மரங் கொல் தச்சர், கருங்கைக் கொல்லர், பொன்செய் கொல்லர் ஆகியோர் வசித்ததாகச் சிலம்பு கூறுகிறது (சில. 1.5, 28.31). பண்டைய தமிழ் இலக்கியங்களில் இவர்களைப் பற்றி பல சிறந்த குறிப்புகள் இருக்கின்றன. ஒரே பகலில் எட்டுத் தேர்களைச் செய்யும் வல்லமை படைத்த தச்சன் இருந்தான் எனப் புறநானூறு (87) “வைகல் எண் தேர் செய்யும் தச்சனை” குறிக்கிறது. பார்த்தோர் வயக்கும்படி செய்த பொம்மைத் தேரை சிறுவர்கள் வேகமாக உருட்டும் வண்ணம் செய்தளிக்கும் தச்சரைப் பெரும்பாணாற்றுப் படை குறிக்கிறது. நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்தும் வல்லமை படைத்த கண்ணுள் வினைஞரை “ எவ்வகைச் செய்தியும் உவமைம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர்” என மதுரைக் காஞ்சி (516, 519) கூறுகிறது. இவர்களை நூலறி புலவர் என நெடுநல்வாடையும், மேலோர் விழையும் நூலறி மாக்கள் என்று சிலப்பதிகாரமும் குறிக்கின்றன.

தோற்றம் பற்றிய கதைகள்:

இவர்களது தோற்றத்தைப் பற்றியும், சிறப்புகளைப் பற்றியும் பல கதைகள் உள்ளன. இவர்கள் பாஞ்சாலர்கள் என்றும் குறிக்கப்படுவர். பாஞ்சால நாட்டிற்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். பாஞ்சால நாட்டில் கிரேக்க, ரோமானியர் கலைஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களை யவனர்கள் என இந்திய இலக்கியங்கள் கூறும். யவனக் கட்டத் தொழிலிலும், சிற்பத் தொழிலிலும் வல்லவர்கள். பல யவனர்கள் தமிழ்நட்டிலும் பணிபுரிந்திருக்கின்றனர். அவர்களது தொடர்பால் கம்மாள்களது தொழில் சிறப்பெய்தியது என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்றுத் தொடர்பையே பாஞ்சாலர் என்னும் சொல் நினைவுறுத்துகிறது போலும். தச்சர்களுக்கு “யவனர்” என்றே பெயர் உள்ளதை நிகண்டு கூறுவதும் இங்கு நினைவிற் கொள்ளல் தகும்.

சங்கீர்ண ஜாதியர்:

கம்மாளர்கள் சங்கீர்ண ஜாதியர் என்று குறிக்கப் படுகின்றனர். கலப்பு மணம் புரிந்து கொண்டு அதன் பயனய் பிறந்த மக்களுக்கு பல தொழில்கள் ஒதுக்கப்பட்டன. இவர்களே இத்தொழிலாளர். இம்மக்கள் இருபிறப்பாளராகவே கருதப்பட்டனர். உயர்ந்த ஜாதியில் பிறந்த ஆண்மகன் அடுத்த ஜாதியிற் பிறந்த பெண்ணை மணந்து அல்லது புணர்ந்து பிறந்த மக்களை “அனுலோமர்” என்றும், உயர்ந்த ஜாதியில் பிறந்த பெண்ணுக்கு அடுத்த ஜாதியில பிறந்த ஆண்மகனிடத்துப் பிறந்த மக்களைப் “பிரதிலோமர்” என்றும் வடமொழி நூல்கள் கூறும். தொல்காப்பியர் காலத்திலேயே இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜாதிப் பாகுபாடு என உரையாசிரியர்களின் உரைகளில் இருந்து அறிகிறோம். இதைப் பார்ப்பனப் பாக்கத்து வகை எனத் தொல்காப்பியர் கூறுவார் (புறத்திணை. சூ. 75. நச்சினார்கினயம்)
இதற்கு பொருள் எழுதும் உரையாசிரியர் “பார்ப்பாருக்கு பார்ப்பனக் கன்னியிடத்தில் கற்பு நிகழ்வதற்கு முன்னர் களவில் பிறந்தவன் அவள் பிறர்க்குறியவளாகய காலத்து களவில் பிறந்தவன், கணவனை இழந்தவனிடம் பிறந்தவன், பிறவர்ணத்துப் பெண்களிடத்தே இவ்வாறு தோன்றியவன், அவரவர் மக்கட்கண் இவ்வேறே தோன்றியவர்கள் ஆகிய ஜாதி என்பர். இன்னோரும் தம் தம் தொழில் வகையில் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணை”. “இன்னும் பெண்பாலுயர்நது ஆண்பால் இழிந்த வழி பிறந்த ஜாதிகளும் அணை நிலை வகை எனப்படும்” என்றும் உரைப்பார். இதலிருந்து கலப்பு மணத்தால் பிறந்த மக்களையும், அவர்களே தொழில் புரிவோர் என்பதையும் அறியலாம்.

ஸ்தபதி:

நிலத்தைத் தேர்நதெடுத்து மனை எடுத்து சிற்பங்களைச் செதுக்கி ஒவியங்களைப் படைக்கும் சிற்ப வல்லுநர்களைப் பற்றியும் வாஸ்த்து நூல்கள் குறிக்கின்றன. இவர்களை ஸ்தபதி, சூத்திரகிராஹி, வர்த்தகி, தச்சன் என்று நான்கு பிரிவுகளாகக் கூறுவர்.

தச்சன்:

மரம், தந்தம், கல் உலோகம் முதலியவற்றில் பல்வேறு உருவங்களைச் செதுக்கும் வல்லமை பெற்றவனை தச்சன் என்று குறிப்பர். மிகவும் நுண்ணியதும், மிகப் பெரியதுமான உருவங்களை செதுக்கும் வல்லமை படைத்தவன், மண்ணீட்டுத் தொழில் அறிந்தவன், நல்ல குணங்களை உடையவன், ஆசானுடைய சொல்லை ஏற்று அதன்படி பணிபுரிபவனே தச்சன் என்று வழங்கப்படுவான் (மானசாரம்).

சூத்திரகிராஹி:

நூல் பிடித்து கல்லின் மீதும் மற்ற பொருள்களின் மீதும் வேண்டிய அளவுகளைக் குறியிட்டுக் கொடுக்கும் திறன் பெற்றோனை சூத்திரகிராஹி என்று குறிப்பர்.

வர்த்தகி:

குறிப்பிட்ட அளவுக்கு ஏற்ப செதுக்கப்பட்ட கற்களையும் சிற்பங்களையும் உரிய இடங்களில் பொருத்தி கட்டிடங்களை எழுப்ப வல்லவன் வர்த்தகி.

ஸ்தபதி:

ஸ்தபதி என்பவர் சிற்ப நூல் வல்லுனர்களின் தலைவரனாகவும், ஆசானாகவும், கருதப்படுவார். மனையை நிலைபெற ஸ்தாபித்தால் ஸ்தபிப்பதால் என்று இவர் அழைக்கப்பட்டார். கட்டிடம் அமைப்பதில் முழுப் பொறுப்பையும் ஏற்று மனை வகுப்பில் முனைந்துள்ள பல் வேறு தொழில் புரிவோரின் பணிகளையும் மேற்பார்வையிட்டு சீர் செய்து பணிமுடிக்கும் ஆசார்யர் இவர். சிற்பம், ஓவியம், கட்டிடம், முதலிய பல்வேறு துறைகளிலும் வல்லுனராகி நல்ல (புலவனாகவும்), வலிமை மிகுந்தவராய் இனிமையான குணமுடையவராய், நம்பிக்கைக்கு உகந்தவரையே ஸ்தபதியாக, ஆசார்யானாக வரிப்பது வழக்கம்.
இந்நல்லவருள்ளும் தச்சன் தொடங்கி படிப்படியாக அனுபவம் முதிர்ந்தவர்களை வர்தகி, சூத்திரகிராஹி, ஸ்தபதி என்ற பொறுப்புக்களில் அமர்த்துவர். இந்நான்கு பிரிவுகளும் அந்தப் பணிகளின் பொறுப்பைக் குறி்ப்பவையே ஒழிய குல வேறுபாடுகள் அல்ல. தச்சர் என்ற சொல் தற்காலத்தில மரத்தொழில் புரிபவர் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் பண்டையக் காலத்தில் செதுக்கும் தொழிலில் வல்லநர் தச்சர் என்று கூறப்பட்டனர். மரத்தொழில் புரிபவரை மர்த்தச்சர் என்றும் கல்தொழில் புரிவோரை கல்தச்சர் என்று குறிப்பது வழக்கம். வேதத்தில் சிவபெருமான் தச்சர்களின் தலைவனாகக் கூறப்படுகிறார். சிவபிரானிடமிருந்தே வாஸ்து சாத்திரங்கள் தோன்றியதாக அந்நூல்கள் குறிக்கின்றன. இந்தியாவின் வடபகுதியில் சிற்ப வல்லுநர்களை சிற்பாச்சார்யர் என்றும், சூத்திரதாரன் என்றும் பெரும்பாலும் குறிப்பர். தமிழ்நாட்டில் தச்சர்கள் என்றே வழங்கப்பட்டனர். சிற்ப ஆசாரியர்களாக விளங்குபவர்களை பெருந்தச்சர் என்று கல்வெட்டுகள் குறிக்கும். இவர்களே தச்சாசாரியர் என்றும் குறிக்கப்படுவர்.

குடியும் தொழிலும் கூறும் கல்வெட்டு:

திருவாரூரில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் தச்சர்களைப் பற்றிய ஒரு சிறந்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டு கிரந்த எழுத்துக்களில் உள்ளது. பண்டிய குலாந்தக சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த கல்வியிற் சிறந்த பல அந்தணர்கள் கூடி தச்சர்களின் குடி, அவர்கள் படிக்கக் கூடிய கல்வி, அவர்கள் செய்யக் கூடிய தொழில்கள் என்ன என்ன என்பதை ஆராய்நதனர். பல நூல்களில் இருந்து மேற்கோள்களும், அப்படியே கல்வெட்டில் தரப்பட்டுள்ளன (603/17).
இக்கல்வெட்டில் தச்சர்கள் ரதக்காரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு குடிகள் குறிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடி அனுலோமாரகப் பிறந்தவர்கள் என்றும், மற்றது பிரதிலோமர்களாகப் பிறந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அனுலோமர் என்பவர் அந்தணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களிலும் உயர்குடி ஆண்மகனுக்கு பினகுடி பெண்ணுக்கு பிறந்தவர் என்று கூறுகிறது. உயர்குடிப் பெண்ணுக்கு பின்குடி ஆண் மகனால் பிறந்தவர் பிரதிலோமர் என்பவர். அனுலோம ஜாதியர் பிரதிலோம ஜாதியரைக் கட்டிலும் உயர்ந்த ஜாதியாக கருதப்பட்டனர். ரதகாரராகத் தச்சர்களாகத் தொழில் புரிபவர்கள் அனைவரும் கலப்பு மணத்தால் பிறந்தவர்கள் என்று இக் கல்வெட்டில் குறிக்கப்பட்ட அனைத்து நுல்களிலும் கூறப்பட்டுள்ளது. சில நூல்கள் இவர்கள் சங்கீர்ண ஜாதியில் பிறந்ததால் கீழ் குலத்தவர் என்றும், பிற நூல்கள் இவர் உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகின்றன. பல நூல்கள் இவர்களை ஆசாரியர்கள் என்றும், இவர்களைக் கொண்டுதான் எல்லா தொழில்களையும் செய்தல் வேண்டும் என்றும் கூறுகின்றன. “ரதகாரரான கம்மாளரோம், அனுலோமரோம், பிரதிலோமரான ஜாதிகளில் இழி தொழில் செய்யோம்” என்று கல்வெட்டில் குறிப்பதிலிருந்து இவர்கள் உயர்ந்த ஜாதியினர் என்று ஸ்மிருதிகள் ஏற்றுக் கொண்டன என அறிகிறோம். இவர்களைப் பெரும்பாலான நூல்கள் புகழ்கின்றன. பொன்னால் பொருள் செய்பவன் சொர்ணகாரன் என்றும், இரும்புத் தொழில் செய்பவன் அயஸ்காரன் என்றும், தச்ச வேலை செய்பவன் தச்சன் என்றும், உருவங்களைச் செய்பவன் துவஷ்டா என்றும், அவனே ரதகாரன் என்றும், தேவதைகளுடையவும் பிறவுமான கோயில்களை எடுப்பவன் ஸ்தபதி என்றும் குறிக்கின்றன. மேலும் ஸ்தபதி, விச்வகர்மா, தச்சன், துவஷ்டா, ரதகாரன், காஷ்ட்டகாரன், வர்தகி முதலிய சொற்கள் அனைத்தும் சிற்பியைக் குறிக்கும் என்று கூறுகின்றன. சில நூல்கள் இவர்களுக்குப் பூணூலும், சந்தியாவந்தனமும் உண்டு, அயினும் வேதம் ஓதல், வேள்வி செய்தல், அக்னிஹோத்திரம் முதலியன கிடையாது என்று கூறுகின்றன. இவர்களுக்கு பூணூலும், சந்தியாவந்தனமும் வெறும் ஒப்புக்குத்தான் என்று கூறுகின்றன. ஆனால் வேறு சில நூல்கள் வேதம் அறிந்தவர்கள், அறநூல்களை (தர்ம நூல்களை) அறிந்தவர்கள் என்றும், நிமித்தமும், சகுனமும் கூறுவதில் வல்லவர்கள் என்றும், ஆசார்யர் என்றும் கூறுகின்றன. இவர்களது தொழில்களில் தேர் இலக்கணம், குதிரை இலக்கணம் அறிதல், ஊர், நகரம் முதலிய நிர்மானித்தல், பிரதிமைகள் செய்தல், ஆயுதங்கள் செய்தல், முதலிய கூறப்பட்டுள்ளன. ரதகாரன் வாஸ்து வித்தை அறிந்தவன் என்றும், வில் வித்தை கற்றவன் என்றும் கூறப்படுகிறான். தைத்த அம்புகளையும் முள்ளையும் எடுப்பதிலும் வல்லன் என்றும் இவன் குறிக்கப்படுகிறான் (603/17). இவர்களுக்கு குறிக்கப்பட்டுள்ள தொழில்களில், நிலத்தை சோதித்தல், நிலம் கொள்ளல், மனை எடுத்தல், சிற்பங்கள் செய்தல், சித்திரங்கள் செய்தல் முதலிய தொழில்கள் குறிக்கப்படுகின்றன. இவை தவிர தேர்கள் செய்தல், சித்திரங்கள் செய்தல் முதலிய தொழில்கள் குறிக்கப்படுகின்றன. இவை தவிர தேர்கள் செய்தல், ஆயுதங்கள் செய்தலும், தைத்த அம்பு, முள் முதிலிய நீக்கும் தொழிலும் அறிந்தவர் அனக் குறிக்கின்றனர்.

ஆயுதம் செய்வோர்:

மனை எடுக்கும் தொழிலும், சிற்பத் தொழிலும் ரதகாரர்களின் தொழில்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இக்கல்வெட்டுக் கூறும் இரு செய்திகள் இன்றியமையாதவை. 1) இவர்கள் ஆயுதம் செய்பவர் என்பது போர்கலன்களை இவர்கள் செய்து கொடுத்ததிலிருந்து அறியலாம். அக்காலத்தில் இவர்கள் போர்க் கலன்கள் செய்து கொடுத்ததன் மூலம் எவ்வளவு சிறந்த நிலை வகித்திருந்தார்கள் என்பதையும் அறியலாம். 2) போர்களில் தைத்த அம்புகளையும், வேல்களையும், உடலிலிருந்து எடுக்கும் மருத்துவராகவும் இருந்திருக்கின்றனர். ஆய்குல மன்னன் கோக்கருந் தடக்கன் என்பவனின் திருப்பறப்பு சாஸனத்தை எழுதியவன் அவியலன் தடக்கன் என்பவன். இவன் “ஸ்ரீ கோக் கருந் தடக்கற்கு ஆயுதங்கள் செய்வான் விழிஞத்து ஸ்ரீ வல்லவ பெரும்பணை” என அழைக்கப்படுகின்றான். இதிலிருந்து இச் செப்பேட்டை எழுதியவன் அரசனுக்கு ஆயுதம் செய்தவன் என்று அறிகிறோம்.
பாண்டியன் மன்னன் பராந்தக வீரநாராயணின் தளவாய்புர செப்பேடு சம்ஸ்கிருத பகுதியும் தமிழ்ப் பகுதியுமாக இரு பகுதிகளைக் கொண்டது. இதில் தமிழ்ப் பகுதியை எழுதியவன் தமிழாபரணன் என்னும் கொல்லன். இவனைப் பற்றி செப்பேடு சிறப்பாக கூறுகிறது. “தேர்மிகு மாக்கடல் தானை்த் தென்வர்கோன் திருவருளால் சீரமிகு செப்பேட்டுக்குச் செந்தமிழ் பாத்தொடை செய்தோன்” என்றும், செப்பேது வாசகத்தை “ஆரியம் விராய் தமிழ் கொடுத்த மதியோன்” என்றும் கூறுகின்றான. சிவபெருமான் வேண்ட அவருக்கு மழு செய்துதளித்தவர் வழிவந்தவன் என்றும், மாமுனியாகிய மனு வழியில் வந்தவன் என்றும் கூறப்படும் இவன் பாண்டித் தமிழாபரணன் என்னும் பல சிறப்பு பெயரெய்தி பாணிடிய மாராயப் பெருங்கொல்லனாகிய ஸ்ரீ வல்லவன் எனப்படுகிறான். இவனை வடமொழிப்பகுதி கவி என்று கூறுகிறது. இதிலிருந்து அரசனாலும் கவி என்று போற்றப்படும் தகுதி வாய்ந்தோர் கம்மாளர் குலத்தில் இருந்தனர் என அறியலாம். மாராயப் பட்டம் எய்தியுள்ளதும் இதனால் தெரிகிறது. இச்செப்பேட்டை எழுதியவன், முன் கூறிய தமிழாபரணன் என்னும் பாண்டிய மாராயப் பெருங் கொல்லனின் தந்தை நிருபசேகரப் பெருங்கொல்லன் என்பவன். மகன் பிரசஸ்தி பாட அதைத் தந்தை செப்பேட்டில் பொறித்துள்ளான். இவனைக் கூறுமிடத்து பாண்டியனின் ஆணையை, அவனது பொறியாகிய வில், புலி, இருகயல்களுதன் இமயத்தில் பொறிக்கும் தொழில் செய்துவந்தோர் பின் தோன்றல் எனக் குறிக்கப்படுகிறான். இவ்விருவருக்கும் அரசன் நிலம் அளித்துள்ளான்.

தச்சர்களின் மெய்கீர்த்தி:

நன்னிலம் தாலுக்கா ஆலங்குடி கராமத்தில் ஆபத்சகாயெசுரர் கோயில் தச்சர்களைப் பற்றிய ஒரு சிறப்பான கல்வெட்டு உள்ளது. அது க.பி. 1264-ம் ஆண்டைச் சார்ந்தது. அக்கல்வெட்டில் இவர் குடிக்கென சித்ரமேழி நாட்டாருக்கு முன்னர் நாம் கண்டது போன்ற தனி மெய்கீர்த்தியே காணப்படுகிறது. அம்மெய்கீர்த்தி பல விதங்களில் சிறப்புடையது. அது இவர்களது தோற்றத்தைப் பற்றியும், கொடி பற்றியும் தன்மை பற்றியும் குறிக்கிறது. மேலும் சித்ரமேழி நாட்டவர் போல், தச்சர் இனத்தச் சேர்ந்த அனைவரும் பல்வேறு நாடுகளில் இருந்து போதிலும், தாங்கள் ஒரே இனத்தவர் என்று கொள்ளும் ஒரு சமுதாய அமைப்பைக் கொண்டிருந்தனர். இவர்கள் அவ்வப்போது கூடி தங்கள் இனத்தின் தன்மை, தீமைகளைப் பற்றிய முடிவுகளை எடுத்தனர். அது அவ்வினம் முழுவதையும் பிணைத்தது.
அவர்களது மெய்கீர்த்தி பின்வருமாறு தொடங்குகிறது. பெற்றுடையது உத்திராபதிஅளந்துடையது தவப்பள்ளிகொற்றவரும் தேவர்களும் கொண்டாடஅறத்தொடு புரிந்த வாக்கப் பெருக்கமும்சிற்பொடு பொலிந்த செல்வம் நன்கு பெய்யும்குன்றாத குடி பிறப்பும்கூறுடை சொல் வீறுடைமையும்இவரொடும் மாறானார் நிராசையும்மன்று கலங்கா மனை வாழ்க்கையும்சென்ற இடத்து செறு வெற்றியும்புகழும் புத்ர லாபமும் சத்ரு நாசமும்மற்றும் எப்பேர்பட்ட சமஸ்தஉதயங்களும் உடையராய்யாவரும் தொழும் தொழில் வல்லாராய்அக்கசாலையும் பள்ளியும் ஆணையாகஉடைய அறுவகை தொழில் நால்வகை ரதகாரரோம் என்று கல்வெட்டுத் தொடங்குகிறுகிறது. இவர்கள் பெற்றுடையது உத்தராபதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. வேளிர்கள் துவராபதியை தங்களது நகராகக் கொள்வர் என்று முன்னர் கண்டோம். இங்கு ரதகாரர் தங்களது நகர் உத்தராபதி எனக் கூறுவதும் நோக்கத் தகுந்தது. கம்மாளர்களின் மரபின்படி அவர்கள் பாஞ்சாலத்திலிருந்து வந்தவர் எனக் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாஞ்சாலர் என்றே பெயர் உண்டு. கம்மாளர்களுக்கு மகரக் கொடி இருந்தது என்றும் இக்கல்வெட்டால் அறிகிறோம். இவர்கள் குன்றாத குடிப் பிறப்புடையவர் என்றும், மன்று கலங்காத மனை உடையவர் என்றும் குறிக்கப்படுகின்றனர். அக்காசாலையும், பள்ளியும் ஆணையாக உடையவர்கள் என்பர். அக்காசாலை என்பது காசு அச்சடிக்கும் சாலை. இவர்கள் அறுவகைத் தொழில் நால்வகை ரதகாரர் எனக் குறிக்கப்பட்டுகின்றனர். இவர்களில் நால்வகை ரதகாரர் என்பவர் ஸ்தபதி, சூத்ரகிராஹி, வர்த்தகி, தச்சர் என்று பாகுபடுத்தப்பட்ட நால்வகையினர். வேதியர்களும், வைசிகர்களும், வேளாளரும், எவ்வாரு அறு தொழிலாளர் என்று கூறப்பட்டனரோ அதே போன்று இவர்களும் ஆறு தொழிலாளர் என்று அழைக்கப்பட்டனர் போலும். இக்கல்வெட்டு இவர்களை பதினென் விஷயத்து அறுவகைத் தொழில் நால்வகை ரதகாரர் என்று கூறுகிறது. பதினெட்டு என்ற எண் பலவகையிலும் சிறப்பாக குறிக்கப்படுவதை முன்னரே கண்டோம். ரதகாரர்கள் தங்களை பதினெண் விஷயத்து ரதகாரர் என்பது பொதுப்படைச் சொல் எனலாம். இருப்பினும் கல்வெட்டில் கீழ்வரும் நாடுகளிலிருந்த ரதகாரர்களின் பிரதிநிதிகள் கூடி ஒரு முடிவு எடுத்தனர். “மற்றும் எல்லாவிடங்களிலும் உள்ள அறுவைகத் தொழில், நால்வகை ரதகாரர்கும் நாடுகளில் சமய சங்கேதிகளுக்கும் அறிவித்த சமயகாரியமாவது” என்று கல்வெட்டு கூறுகிறது. இவர்கள் எடுத்த முடிவு சமயகாரியம் என அழைக்கப்படுகிறது. இதன்படி இவ்வினத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட காசு தரவேண்டும். அது கொண்டு அக்கோயில் ஆபத்சகாயப் பெருமாள் என்று பெயர் பெற்ற தெய்வம், திருநீற்றுச் சோழன் திருத்தோப்பில் வருவதற்காக எடுத்து வந்து வழாச் செய்ய அத்தோப்பில் ஒரு மண்டபம் கட்டினர். அம்மண்டபத்தின் பெயர் “முழுவதும் வல்லான்” என்பதாகும். இவ்விழாவிற்கு வேண்டிய செலவுக்கும் இப்பொருள் வைக்கப்பட்டது. கொடுக்கத் தவிறியவர் வீட்டில் வெண்கலங்களை எடுத்துக் கொண்டும், மட்கலங்களை தகர்த்தும் தண்டிக்கப் படுவர் என அத்தீர்மானம் கூறுகிறது. இது எல்லா நாடுகளிலும் இருந்த ரதகாரர்களையும் பிணித்தது. இதற்கு கையெழுத்திட்டவர்கள் பலர் காணி உடையவர்களாகவும், உயர் பதிவியில் இருந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். சிலர் இரதகார சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்றனர் (439/6).

கோயில்களைக் கட்டிய தச்சர்கள்:

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 20 கல் தொலைவில் உத்தரமேரூர் என்ற ஊர் உள்ளது. அது மிகவும் பழம் புகழ்வாய்ந்த ஊராகும். அங்கு பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில் சுந்தரவரதப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டது. அதில் உள்ள ஓர் கல்வெட்டு இந்த கோயிலினுடைய இலக்கணங்கள் பொருந்திய அலங்காரங்களையும், அளவுகளையும் எவன் அறிகிறானோ அவன் வாஸ்து வித்தையை (கோயிற்கலை) அறிந்தவர்களில் சிறந்தவனாகிறான் என்று குறிக்கிறது. அக்கல்வெட்டு மேலும் பாடாகபுரவாசியும், சிறந்த அறிவாளியும் எப்பொழுதும் சத்ய சந்தனுமான ஸ்ரீபரமேச்வரப் பெருந்தச்சனால் இந்த கிராமத்தில், வாஸ்துக்களில் எல்லாம் சூரியன் போன்ற இக்கோயிலானது ஆகமங்களில் கூறப்பட்டுள்ள பிரயோகங்களுக்கு ஒப்ப கட்டப்பட்டு, ஜாதியாலும், பெயராலும் சிறந்து விளங்கிற்று என்றும் கூறுகிறது. இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னும் நல்ல நிலையில் நிற்கும் கோயிலாகும். இக்கல்வெட்திலிருந்து பல்லவர் காலத்தில் ஆலயங்கள் ஆகமரீதியாகக் கட்டப்பட்டன என்று திட்டவட்டமாக அறிகிறோம். அக் கோயில்களைக் கட்டும் கலைஞர்களை தச்சன் என்று தமிழ்நாட்டில் அழைத்தனர் என்றும், இக் கோயிலைக் கட்டியவன் பரமேச்வரத் தச்சன் என்றும் அறிகிறோம்.
இதே போன்று திருவொற்றியூரில் ஆதிபுரீச்வரர் ஆலையத்தைக் கட்டிய சிற்பின் பெயரும் கல்வெட்டில் கிடைக்கிறது. இக்கோயிலை முதலாம் இரஜேந்திர சோழன், சதுரானன பண்டிதன் என்பவனின் விருப்பத்திற்கு இணங்கக் கட்டுவித்தான். இது கருங்கல்லால் மூன்று தளங்களை உடையதாக பலவித சரணங்கள், கூடங்கள், கோஷ்டங்கள் முதலியனவைகளுடன் கட்டப்பட்டது. இதை ரவி என்னும் வீர சோழ பெருந்தச்சன் கட்டினான். தச்சர்கள் சில்பி, சித்ரகாரி, ரதகாரி, ஆசாரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலன கல்வெட்டுக்களில் தச்சன் என்றே அழைக்கப்படுவதைக் காணலாம். இவர்கள் சிற்பங்களைச் செதுக்கினர், கட்டிடங்களைக் கட்டினர், கல்வெட்டுக்களைப் பொறித்தனர்.
தருமராஜ இரதம் (அத்யந்தகாம பல்லவேஸ்வர கிருகம்) - மாமல்லபுரம், கி.பி. 7-ம் நூற்றாண்டு
தருமராஜ இரதம் (அத்யந்தகாம பல்லவேஸ்வர கிருகம்) - மாமல்லபுரம், கி.பி. 7-ம் நூற்றாண்டு
தமிழ்நாட்டில் தலை சிறந்த கலைப் படைப்பாக கருதப்படுபவை மாமல்லபுரத்துச் சிற்பப் படைப்புகளும், தஞ்சைப் பெருங்கோயிலும் ஆமாகும். இவை கட்டிட அமைப்பிலும், சிற்ப அழகிலும், கல்வெட்டுகளின் நிலையிலும் மிகவும் சிறந்தவை. மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பல்லவ மன்னர்களின் பெருமித படைப்பு ஆகும். தஞ்சைப் பெருங்கோயில் சோழ மன்னர்களின் சிறந்தோனான இரஜராஜனால் தக்ஷிண மேருவெனக் கட்டப்பட்டக் கோயிலாகும். மாமல்லபுரம் தொண்டை மண்டலத்தின் தலை சிறந்த துறைமுகம். தஞ்சை சோழ மண்டலத்து தலைநகர். இங்கு பணிபுரிந்த ஒப்பற்ற சிற்பிகள் யார’?

மாமல்லபுரத்துச் சிற்பிகள்:

மாமல்லபுரத்தின் சிற்பிகளைப் பற்றி குறிப்பது கடினம். எனினும் கீழ்கண்டவற்றால் அச்சிற்பிகள் யார் என்று ஊகிக்கலாம். மாமல்லபுரத்தைச் சார்ந்த பூஞ்சேரி என்ற ஒரு சேரியில், சாலையின் தெனபுறம் சிலை பாறைகள் உள்ளன. அவற்றில் நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்று கூறும் பாறையில் சில கல்வெட்டுக்கள் உள்ளன. இது நடுவில் குழிந்து தொட்டி போல் இருப்பதால் இதற்கு தொட்டி என்று பெயர் போலும். நொண்டி வீரப்பன் என்பான் ஒருவன் தன் குதிரைக்கு இதில் தண்ணீர் காட்டி இருக்கலாம். எனவே அவன் பெயரால் இது விளங்குகிறது. இக்கல்வெட்டுகள் ஏழு பெயர்களைக் குறிக்கின்றன. அவை 1) கேவாத பெருந்தச்சன், 2) குண மல்லன், 3) பய்யமிழிப்பான், 4) சாதமுக்யன், 5) கலியாணி, 6) நமஹ திருவொற்றியூர் ஆபாஜன், 7) கொல்லன் ஸேமன் என்பவையாகும். இவை பல்லவ கிரந்த - தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
கேவாத பெருந்தச்சன் என்ற பெயர் ஒரு சிற்பியைக் குறிக்கும் என்பது வெளிப்படை. “கேவாத” என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. எனினும் பெருந்தச்சன் (மகா தக்ஷன்) என்ற பெயரிலிருந்து அவன் ஒர் தலை சிறந்த சிற்பி என்று அறியலாம். குணமல்லன் என்ற பெயரும் சிறந்ததாக உள்ளது. பண்டைய காலத்தில் பல மக்கள் அன்றாளும் கோவின் பெயரைத் தாங்களோ, தங்கள் குழந்தைகளுக்கோ வைத்து மகிழந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உத்தம சோழ பல்லவரையன், இராஜேந்திர சோழ மூவேந்த வேளான், குலோத்துங்க சோழ மூவேந்த வேளான் முதலிய பெயர்கள் இதைத்தான் குறிக்கின்றன. தஞ்சை பெரும்கோயிலில் நாட்டியமாடிய ஒரு அழகி தன்னை இராஜராஜி என்று அழைத்துக் கொண்டாள். பல்லவ அரசர்களில் பல அரசர்கள் “மல்லன்” என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டனர். முதல் மஹேந்திரவர்கன் “சத்ருமல்லன்” என்று பெயர் கொண்டிருந்தான். முதலாம் நரசிம்மவர்மன் “மாமல்லன்” என்றும், ராஜசிம்மன் “அமித்ரமல்லன்”, “அப்பிரதிமல்லன்” என்றும் பெயர் கொண்டிருந்தனர். எனவே குணமல்லன் என்று காணப்படும் பூஞ்சேரிக் கல்வெட்டு பல்லவர் காலத்திய ஒர் சிற்பியைக் குறிக்கும் என்பதில் ஐயமில்லை. மானசாரம் என்னும் நூலில் மரச்சட்டங்ளை இழைத்து ஒருவிதமாகச் சேர்ப்பதற்கு “மல்லபந்தம்” என்று பெயர் காணப்படுவது இங்கு குறிப்பிடதக்கதாகும். மூன்றாவதாகக் காணப்படும் “பய்யமிழிப்பபான்” என்ற பெயரும் தொனிக்கும் வகையில் உள்ளது. “பய்யம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது என விளங்கவில்லை. பயம்பு என்றால் குழியைக் குறிக்கும். “பய்யம்” என்பது “பயம்பு” என்பதின் திரிபோ என ஐயம் எழும். இழிப்பான் என்றால் இடித்தெடுப்பவன் என்று பொருள்படும். பல்லவ கோப்பெருஞ்சிங்கனின் திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு “இது விதமான மிழிச்சு பதியெடுத்தபோது” என்று குறிப்பதிலிருந்து, இடித்து புதிதாகக் கட்டினான் என்று அறிகிறோம். எனவே பய்யமிழிப்பான் என்பவன் சிறந்த குடைவிப்பவனைக் குறிக்குமோ என்று தோன்றுகிறது. “கொல்லன் ஸேமன்” என்பதும் சிற்பியைக் குறிக்கும். இக்கல்வெட்டுகள் பல்லவர் காலத்தவை ஆதனால் இவை இங்கு வேலை செய்த சிற்பக் கலைஞர்களைக் குறிக்கும் என்று கொள்ளலாம். கேவாத பெருந்தச்சன் என்பவன் இவர்களுக்கு மேற்பார்வையாளனாக இருந்தான் எனவும் கொள்ளலாம்.

தஞ்சைக் கோயிலைக் கட்டிய தச்சர்கள்:

தஞ்சைப் பெருங்கோயில் (தக்ஷிண மேரு) - முதலாம் இராஜராஜ சோழன், கி.பி. 1010
தஞ்சைப் பெருங்கோயில் (தக்ஷிண மேரு) - முதலாம் இராஜராஜ சோழன், கி.பி. 1010
தஞ்சை இராஜராஜேச்வரமுடையார் கோயிலில் இராஜராஜ சோழனின் பல கல்வெட்டுக்கள் உள்ளன. இக் கல்வெட்டுகளில் கோயிலில் இருந்த செப்புத் திருமேனிகளைப் பற்றியும், கோயில் வழிபாடுகளைப் பற்றியும், மற்றும் கோயிலில் பணிபுரிந்த அனைவரையும் பற்றி குறிப்புகள் உள்ள்ன. 750-க்கும் மேற்பட்ட பணியாட்களிளை இக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவற்றில் தேவரடியார்கள், பாடுவோர், திருப்பதியம் ஓதுவோர், கெட்டி மத்தளம் வாசிப்பவர், தைய்யான் நாவிசஞ் செய்வோர் முதலிய அனைவரும் குறிக்கப்பட்டுள்ளனர்
இவ்வளவு பெயர்களும் உள்ள இக் கல்வெட்டுகளில் இம்மாபெரும் கோயிலைக் சிருஷ்டித்த சிற்பின் பெயரும் இருக்கத்தானே வேண்டும்? ஆம், அவன் தச்சாசார்யன் என்று குறிக்கப்பட்டு இருக்கிறான். அக்கல்வெட்டில் “தச்சாசார்யம் ஒன்றுக்கு பங்கு ஒன்றரையும் ஆக வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜப் பெருந்தச்சனுக்கு பங்கு மூன்று, தச்சு ஒன்றுக்கு குணவன் மதுராந்தகனான நித்தயவினோதப் பெருந்தச்சனுக்குப் பங்கு முக்கால், இலத்திச்சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சனுக்கு பங்கு முக்கால்” என்று இந்த தச்சாசார்யனுக்கும் அவன் கீழ் வேலை செய்தோருக்கும் கொடுத்த நிலப் பங்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து தச்சாசார்யன் வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சனுக்கு பங்கு முன்றும், நித்யவினோத பெருந்தச்சனுக்கு பங்கு முக்காலும், இலத்திச் சடையனான கண்டராதித்த பெருந்தச்சனுக்கு பங்கு முக்காலும் கொடுக்கப்பட்டது என அறிகிறோம். இக் கல்வெட்டை பதிப்பித்த ஆசார்யர் தச்சன் என்பவன் மரத்தொழில் செய்பவன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முன் கூறியபடி தச்சன் என்ற சொல் தமிழ்நாட்டில் சிற்பிகளைக் குறிக்கும் என்று கல்வெட்டிலிருந்து மேலே குறிப்பிட்டோம். எனவே வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் (சிற்பாசிரயன்) தச்சாசாரியனாக பணிபுரிந்து இருக்கிறான். மற்ற இருவரும் அவன் கீழ் வேலை செய்தோர் என்று அறிகிறோம். ராஜராஜேச்வரர் ஆலயத்தை எடுப்பித்த பெருந்தகையான ராஜராஜ சோழரின் பெயரையே இந்த ஆசார்யன் தானும் பூண்டுள்ளது மிகவும் பொருத்தமாக உள்ளது. இவனுடைய குஞ்சர மல்லன் என்னும் பட்டம் இவன் மிகவும் பலம் பொருந்திய சிற்பி என்பதைக் காட்டுகிறது. முன்பே நாம் குறிப்பிட்டது போல் தச்சன் மிகவும் பலசாலியாக விளங்க வேண்டும். பலவந்து என்று குறிப்பிடப்படுவது இங்கு நோக்கத் தகுந்தது. மேலும் இந்த ஆச்சார்யனுடைய பெயர் வீரசோழன் என்றும் கல்வெட்டுக கூறுவதையும் கண்டோம். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய வீரசோழனான ராஜராஜப் பெருந்தச்சனும், திருவொற்றியூர் கோயிலைக் கட்டிவித்தவனும் ஒருவரோ என்று ஐயம்கூடத் தோன்றும். ஆயினும் ஒற்றியூர் ஆலையத்தைக் கட்டியவன் ரவி என்று அழைக்கப்படுவதால் இவனினும் வேறானவன் என்று கொள்லாம். தமிழகத்தின் தலைசிறந்த சிற்பப் படைப்புகளைத் தோற்றிவித்த சிற்ப ஆசார்யர்களான மாமல்லபுரத்து “கேவாத பெருந்தச்சனும், தஞ்சைக் கோயிலைக் கட்டிய இரஜராஜ பெருந்தச்சனும்” போற்றிப் புகழத் தகுந்தவர்கள். இது போன்று தமிழகத்தின் பல கோயில்களைத் தோற்றுவித்த ஆசார்யர்கள் பற்றி கல்வெட்டுக்களில் குறிப்பு உள்ளன.

எழுத்துக்களைக் காத்துத் தந்தோர்:

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கானக் கல்வெட்டுக்கள் உள்ளன. ஒரே வரிசையாகவும், அழகாவும், சீராகவும், எழுதப்பட்டுள்ள அக் கல்வெட்டுக்கள் பார்ப்போர் மனதைக் கவரும். இதே போன்று பல பரிசுகளைச் செப்பேடுகளிலும் பொறித்து வைத்துள்ளனர் என்று அறிவோம். இவற்றைப் பொறி்த்தவர்கள் ஆச்சார்யர் என்றும், தச்சர் என்றும், சில்பி என்றும் குறிப்பிடுகிறார்கள். இது போன்று பல தச்சர்களின் பெயர்களை அறிகிறோம்.
நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனின் காசாக்குடி செப்புப் பட்டயங்களை எழுதியவன் பரமேச்வரா மகா காஷ்டாரி என்று குறிக்கப்படுகிறான். இங்கு காஷ்டாரி என்பது தச்சன் என்ற சொல்லேயாகும். பரமேச்வரப பெருந்தச்சன் என்ற பெயரே வடமொழியில், பரமேச்வர மகாகாஷ்டாரி எனக் குறிக்கபட்டுள்ளது. சிற்பிகளை “மகா தக்ஷன்” என்று பொருள்படும்படி பெரும்படி என்று பட்டம் கொடுத்து கௌரவித்தனர். பட்டத்தால் மங்கலம் என்ற ஊரில் கிடைத்த இதே மன்னனின் மற்றொரு செப்புப் பட்டயத்தை “கச்சிப்பேட்டு ஐம்பனைச் சேரி விடேல் விடுகு பல்லவப் பெருந்தச்சன் மகன் ஸ்ரீதந்தி” என்பவன் எழுதினான். அரக்கோணம் தாலுக்கா கீழ்புலம் கிராமத்தில் வைரமேகவர்மன் என்ற பல்லவ மன்னனின் கல்வெட்டு, கற்றளிப் பெருந்தச்சன் மகன் இளங்காவனால் எழுதப்பட்டது. விஜயாகம்பவர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் திருவொற்றியூர் மகாதேவர்க்கு கொடுத்த பரிசை கல்லில் வெட்டியவன் சாமுண்டாசார்யன் மகன் திருவொற்றியூர் ஆசார்யன் என்பவனாகும். இதே கல்வெட்டின் சமஸ்கிருத பகுதியில் இவன் பரமேச்வரன் என்று பெயருடையவன் என அறிகிறோம். கங்கா நதியயும் கடாரமும் கொண்டு சோழ சிங்காசனத்து வீற்றிருந்த இரஜேந்திர சோழனுடைய திருவாலங்காட்டு செப்பேடுகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இவற்றை எழுதியவர்கள் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சிற்பிகள் என்று குறிக்கப்படுகின்றனர். ஹாலந்து தேசத்தில் லெய்டன் என்ற நகரில் தற்போது இருக்கும் இரஜேந்திர சோழனுடைய மற்றொரு செப்புப் பட்டையம், நாகப்பட்டினத்தில் கடாரா தேச மன்னனால் கட்டப்பட்ட சூடாமணிவர்மன் விஹாரத்திற்கு கொடுத்த பரிசை குறிக்கிறது. இப்புகழ் வாய்ந்த செப்புப் பட்டையத்தை எழுதியவர்கள் காஞ்சியைச் சார்ந்த சிற்பிகள் ஐவர். “இச்சாஸனம் வெட்டினோம் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஸ்ரீகாஞ்சீபுரத்து ஒவியச் சி்த்ரகாரி கிருஷ்ணன் வாசுதேவனான ராஜராஜப் பேராச்சார்யன் என்றும், கிருஷ்ணன் திருவரங்கனும், கிருஷ்ணன் தாமோதரனும், வாசுதேவன் கருஷ்ணனும், அராவமிர்துவும், புருஷோத்தமனும்” என்று காணப்படுகிறது. இதே சாஸனத்தில் சம்ஸ்கிருதப் பகுதி இவர்களைப் புகழ்ந்து கூறுகிறது. பாண்டிய மன்னன் குலசேகர தேவனுடைய விக்ரம மங்கலம் கல்வெட்டில் “இவ்வெழுத்து வெட்டன இக்கோயில் சிற்பாச்சார்யன் சீயனாழ்வானான சீவல்லப ஆசார்யன் எழுத்து. என்று உள்ளதிலிருந்து ஒவ்வொரு கோயிலையும் அண்டி சிற்பாச்சார்யர்கள் வாழ்ந்தனர் என்றும், அவ்வப்போது கொடுக்கப்படும் பரிசுகளை இவர்கள் கோயிற் சுவர்களில் பொறித்தனர் என்றும் அறியலாம். இதே ஊரில் உள்ள சுந்தர பாண்டிய மன்னனின் கல்வெட்டு “இவ்வெழுத்து வெட்டினேன் ரதகாரபுரந்தரன் எழுத்து” என்று இருப்பதிலிருந்து, இரதகாரன் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பது தெளிவு. சேதுபதி மன்னரான விஜய ரகுநாத சேதுபதி அவர்களின் கி.பி. 1603-ம் ஆண்டுச் சாஸனத்தை செம்பில் வெட்டியவன் “பட்டயம் எழுதின ஆச்சாரி யிந்தபடி எழுதினேன் திருபுவனத்திலிருக்கும் பாண்டி ஆசாரி மகன் பொன்னம்பல ஆசாரி” என்று குறிக்கிறான். பண்டைய எழுத்துக்களை அழியாமல் நாம் இன்றும் அறியும் வண்ணம் கல்லில் வெட்டி வைத்தவர்கள் தச்சர்களே.

சிற்பிகளின் உருவச் சிலைகள்:

சில சிற்பிகளுடைய உருவச் சிலைகளும் பெயர்களும் கல்லில் உள்ளன. சிதம்பரம் வடக்குக் கோபுரத்தை கிருஷ்ணதேவராயர் புதுப்பித்தார். இத்திருப்பணியில் ஈடுபட்ட நான்கு சிற்பிகளின் உருவமும், அவர்களடைய பெயர்களும் அக் கோபுரத்தின் நிலையை அலங்கரிக்கின்றன. 1) விருத்தகிரியில் சேவகப் பெருமாள், 2) அவன் மகன் விசுவமுத்து, 3) திருப்பிறைக் கோடை ஆசாரி திருமகன், 4) அவன் உடன் பிறந்தான் காரனாச்சாரி என்ற நால்வரே இக்கோபுரத் திருப்பணியைச் செய்தவர்.

கம்மாளருக்கு அரசு அளித்த அந்தஸ்து:

சமுதாயத்திற்குச் சிறந்த தொண்டு செய்த கம்மாளர்களுக்கு அரசு சில அந்தஸ்த்துக்களை கொடுத்துப் போற்றி இருப்பதைச் சில கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. கொங்கு நாட்டில் கம்மாளர்களுக்கு கி.பி. 12-ம் நூற்றாண்டில் அந்தஸ்த்துகள் கொடுக்கப்பட்டன. இது பல கோயில்களில் கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது.
“தென் கொங்கில் கம்மாளர்க்கு தங்களது 15-வது ஆடி முதல் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை உள்ளிட்டன கொட்டிவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்குப் பாதரஷை கோத்துக் கொள்ளவும், தங்களது வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம்”. என்று கல்வெட்டுக் கூறுகிறது (238/5). இக்கல்வெட்டிலிருந்து சில உண்மைகள் புலனாகின்றன. கம்மாளர்கள் சமூகத்தில் மிதியடி அணிந்து கொள்ளக் கூடாது. தங்களுக்கு சாந்து பூசக்கூடாது. நன்மை தீமைகளுக்கு சங்கு ஊதிக் கொள்ளுதல், பேரிகை கொட்டிக் கொள்ளுதல் முதலிய சாதாரணமாகச் செய்து கொள்ளத் தடை இருந்தது என்றும், அரசின் அனுமதி பெயரிலேயே இவற்றை இவர்கள் செய்து கொள்லாம் என்றும் அறிகிறோம். இது கம்மாளர்களுக்கு மட்டும் இருந்த தடை என்று எண்ணிவிடக் கூடாது. இடையர்களுக்கும் இதே போன்ற அந்தஸ்து அளித்ததை வேறு ஒரு கல்வெட்டு கூறுகிறது. கீரனூர் என்னும் இடத்தில் விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டு கீழ்வருமாறு கூறுகிறது. “வீடு எடுக்கும் இடத்து இரண்டு நிலமும்.. வாசல் மிதியமும், வைத்து சாந்தும் இட்டு கொள்ளப் பெறுவார்களாகவும். நன்மைக்கு தண்டேறப் பெறுவார்கள் ஆகவும், தீமைக்கு பொடை கட்டிக் கொள்ளப் பெறுவார்கள் ஆகவும், பொடை போடுமிடத்து பச்சைப் பட்டு, புலியூர் பட்டு, பட்டாவளப் பட்டு கட்டிக் கொள்வார்கள் ஆகவும், பொடை போர்க்கப் பெறுவார்கள் ஆகவும், நன்மை, தீமைக்கு உவச்சு கொட்டப் பெறுவார்கள் ஆகவும், இடையர்கள் போதும் வரிசைகள் எல்லாம் பெற்றுப் போதுவார்கள் ஆகவும்” (283/). இதிலிருந்து மிதியடி அணிந்து கொள்ளுதல், சங்கு ஊதிக் கொள்ளுதல், பேரிகை கொட்டிக் கொள்ளுதல், வீட்டுகக்குச் சாந்து இட்டுக் கொள்ளுதல், ஆகியவற்றிற்கு அரசின் அனுமதி தேவை என்று அறியலாம்.