◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

14. அணியரங்கம் ஆடுதுமோ தோழீ

ஆடல்வல்லான் நடராஜர் - சோழர் காலம்
ஆடல்வல்லான் நடராஜர் - சோழர் காலம்

நாட்டிய மகளிர்:

தமிழக வரலாற்றில் நாட்டிய மகளிர் இன்றியமையாத நிலை வகித்து வந்தனர். அவர்களது தகுதிகளையும், குணங்களையும் சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. நாட்டிய மகளிர் அனைவரும் பொது மகளிராக வாழ்ந்தனர் என்று கூறுவதற்கில்லை. சிலர் உயர்ந்த குறிக்கோளை உடையவர்களாக, தாம் காதலித்த ஒருவருடன் வாழ்நாள் முழுவதும் உடன் வாழ்ந்த கற்புடை மகளிராக திகழ்ந்தோர் உண்டு. சிலம்பில் வரும் மாதவியும், பதியிலார் குலத்தில் பிறந்து சுந்தரமூர்த்தியை மணம் புணர்ந்த பரவையையும் இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். பலர் பொது மகளிராகவும், விலை மாதராகவும் திகழ்ந்திருக்கின்றனர் என்பதிலும் ஐயமில்லை.

ஆடலும் பாடலும் அழகும் வேண்டும்:

ஆதலிலும், பாடலிலும், அழகிலும் சிறந்திருப்பவர்களே நாட்டிய மகள் எனச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. “ஆடலும், பாடலும் அழகுமொன்றிக் கூறிய மூன்றிலொன்று குறை படாமல்” என்று குறிக்கிறது. இவர்கள் ஐந்தாவது ஆண்டிலேயே தண்டியம் பிடித்து, ஏழாண்டு பயின்று, பன்னிரண்டாம் ஆண்டில் அரங்கேற்றம் நடத்துவர் என்று சிலம்பு கூறுகிறது. திறன் பெற்ற மகளிர் அரசனுடைய அரங்கத்தில் அரங்கேற்றம் புரிவதும் உண்டு. மாதவி கரிகால் பெருவளத்தானுடைய அரங்கில் அரங்கேற்றம் நிகழ்த்திய காலை அரசனால் “தக்கோல்” அளிக்கப்பட்டு “தக்கோலி” என்றும் பட்டம் பெற்றவர். கூத்துக்களிலே “சாந்திக் கூத்து”, “வினோதக் கூத்து” என்ற இருவகைக் கூத்துக்களையும் ஆடுவர் என்று அறிகிறோம்.

கூத்துக்கள்:

தாந்தோன்றீஸ்வரர் கோயில் சுவர்ச் சிற்பம்: ஆடல் மகளிர் குழு (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
தாந்தோன்றீஸ்வரர் கோயில் சுவர்ச் சிற்பம்: ஆடல் மகளிர் குழு (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
“சாந்திக் கூத்து” சாந்தமாக ஆடிய கூத்து ஆதலின் அப்பெயர் பெற்றது என்பர். இது சொக்கம், மெய் கூத்து, அபிநயம், நாடகம் என நான்கு வகைப்படும். சொக்கம் என்பது 108 கரணங்களை உடையது. இதை சுத்தநிருத்தம் என்றும் அழைப்பர். மெய்க் கூத்து என்பது அகமார்கம் என்றும் அழைக்கப்படும். இது அகச்சுவையின் அடிப்படையிலே ஆடப்படுவது ஆதாலின் அகமார்கம் என்றும் அழைக்கப்டுகிறது. தேவார, திவ்யப் பிரபந்தங்களைப் படி தன்னை தன்னை தலைவியாகக் கொண்டு நாயகன் பால் ஆறாக் காதல் கொண்ட மகளாக ஆடும் கூத்து அகமார்க்கம் எனப்படும். இது தேசி, வடுகு, சிங்களம் என மூன்று வகைப்படும். வடுகு என்பது மார்க்கம் என்றும் அழைக்கப்பட்டது. கதையைத் தழுவாது பாட்டின் பொருளுக்கு கைகாட்டி வல்லபம் செய்வது அவபிநயம் என அழைக்கப்படும். கதையைத் தழுவி வரும் கூத்து நாடகம் எனப்படும். வினோதக் கூட்து என்பது குரவை, களிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோல் பாவை என்பவையாகும்.

கூத்துப் பயிற்சியும் அரங்கேற்றமும்:

இதிலிருந்து சற்றேறக்குறைய கி.பி. 2-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்து நாட்டிய மகளிர் தமிழ்நாட்டு கூத்துக்களிலும், வடுகு, சங்களக் கூத்துக்களிலும் சிறந்திருந்தனர் என்று அறியலாம். இவர்கள் பல்வேறு கூத்துக்களிலே சிறந்த ஆடல் ஆசார்யர்களிடத்தும், பல தேசாந்திர மொழிகளிளை அறிந்து கூத்துக்களுக்கு ஏற்ப யாழ், குழல், மிடற்றுப் பாடல் ஆகியவற்றிற்கு ஏற்ப இசை பூணும்படி அமைக்கவல்ல இசை ஆசிரியர்களிடத்தும், கவஞர்களிடத்தும, பல்வேறு இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்த, வாத்தியம் அறிந்த ஆசிரியர்களிடத்தும் பயின்றார்கள்.
முதன் முதலில் ஆடலரங்கு ஏறும் போது சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கில் வலக்காலை முன்னை வைத்து ஏறுதல் வேண்டும் என்றும், வலபக்கத் தூணின் அருகிலே சென்று நிற்க வேண்டும் என்றும் அறிகிறோம். அப்பொழுது இடது தூணின் அருகில் ஆடி முதிர்ந்த தேரிய மடந்தை நிற்பாள் என்றும் அறிகிறோம். அவள் நன்மை உண்டாகவும், தீமை நீங்கவும், வேண்டியும், தாள இயல்பு பொலிவு பெறவும், அவதாளம் நீங்கவும் வேண்டிப் பாடுவாள். தெய்வப் பாடலின் இறுதியிலே இசைக் கருவிகளெல்லாம் இசைக்கப்படும். பின்னர் நாட்டிய மகள் தேசிக் கூத்தை ஆடிப் பின்னர் வடுகுக் கூத்தை ஆடி, தாண்டவம், நிருத்தம், நாட்டியம் என்னும் மூன்று வகைப்பட்ட கூத்துக்களையும் ஆடுவாள். இவ்வாறு நாடக மகளின் அரங்கேற்றம் கண்ட அரசன் தன்னுடைய மாலையை அளித்து “தலைக்கோல்” அளிதப்பதும் மரபு. தலைக்கோல் பெற்றவள் “தலைக்கோலி” என்ற பட்டம் பெற்றாள். இதை “தலையரங்கு ஏறல்” என்று இலக்கியாம் குறிக்கிறது.

தலைக்கோல்:

பெரிய புகழுடைய மன்னன் மாற்றானை வெற்றி கொண்டு அவனது வெண்கொற்றக் குடையின் காம்பைத் தலைக்கோலாகக் கொள்வது ஒரு மரபு. மாற்றாரது எயில் புறத்தில் வெட்டிக் கொண்டு வந்த மூங்கிலையும் தலைக்கோலாகக் கொள்வதும் உண்டு. இதில் ஒவ்வொரு கண்ணிலும், நவமணிகளைக் கட்டி, இடைப்பகுதியில் தங்கத் தகட்டைப் போர்த்து தலைக்கோலாகச் செய்வர். இது ஏழு சாண் நீளம் இருக்கும் என்று பரத சேனாபதியம் என்னும் நூலிலிருந்து அறிகிறோம். அரசனினுடைய மாளிகையில் தலைக்கோலைக் காவலிலுடன் வைத்து அதை இந்திரனின் மகன் ஜெயந்தனாக நினைத்து மந்திர முறையில் வழிபடுவர். நாடக மகள் தலையரங்கு ஏறும் நாளன்று புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடத்திலே நீர் கொண்டு வந்து அதற்கு அபிஷேகம் செய்து, மலர் மாலைகள் சூட்டுவர். இதை ஆடல் ஆசிரியர் முதலானோர் அரங்கத்தில் வைத்து இவ்வாறு அபிஷேகம் செய்து மலர் மாலை என்று அறிகிறோம். பின்னர் பட்டத்து யானையின் மேல் இதை வைத்து முரசுகள் முழங்க பல வாத்தியங்கள் இசைக்க அரசன், அமைச்சர், புரோகிதர், சேனாபதி முதலிய பலர் உடன் வர தேரின் மேலே நின்று பாடுகின்ற கவிஞனது கையிலே இத்தலைக்கோலை பட்டத்து யானையால் கொடுக்கச் செய்து, நகரை வலமாக வந்து அரங்கத்தில் புகுந்து தலைக்கோலை எதிர் முகமாக வைத்து அதன் முன்னர் அரங்கேற்றம் புரிவது வழக்கம் என்று அறிகிறோம். அரங்கேற்றம் கண்ட அரசன் ஆயிரம் பொன் பரிசாக கொடுப்பதும் மரபு.
இவ்வாறு தக்கோல் பெற்ற நாட்டிய மகள், தான் அரசனிடமிருந்து பெற்ற மாலையை தன் தாதியிடம் கொடுத்தனுப்பி ஊரிலே யார் அதற்கு மிக உயர்ந்த பொருள் விலையகக் கொடுக்க இசைகின்றாரோ அவரை வரித்து வாழ்வாள். கரிகாலனிடமிருந்து மாதவி பெற்ற மாலையை கோவலன் வாங்கி மாதவியை வரித்தான்.

தக்கோலி:

தலையரங்கு ஏறி அரங்கேற்றம் செய்த நாட்டிய மகளுக்கு தலைக்கோலி எனும் பட்டம் கொடுக்கும் மரபு கி.பி. 2-ம் நூற்றாண்டில் இருந்தது என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். இம்மரபு சற்றேறக்குறைய 13-ம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்திருக்கிறது. பல நாட்டிய மகளிர் கல்வெட்டுக்களில் “தலைக்கோலி” என்ற பட்டம் பூண்டு விளங்குவதைக் காண்கிறோம். பராந்தக சோழனுடைய 11-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று (283/19) ஆரூர் தேவனார் மகள் நக்கன் பிரமாதேவியாகிய மும்முடிச்சோழ தலைக்கோலி என்பவளைக் குறிக்கிறது. வீர அணுக்க விஜயம் என்னும் நாட்டியத்தை பூங்கோயில் நாயகத் தலைக்கோலி என்பவள் ஆடினாள் என்று மற்றொரு கல்வெட்டு (593/17) கூறுகிறது. திருவொற்றியூரில் உறவாக்கின தலைக்கோலி என்பவள் அகமார்க்கம் என்னும் கூத்தை ஆட அதை சோழ மன்னன் தானே நேரிலிருந்து கண்டான் என்று அவ்வூர் கல்வெட்டு கூறுகிறது.

தேவதாசி:

பிற்காலத்தில் கோயில்களில் பணிபுரியும் தேவதாசிகளைப் பற்றியும், அவர்கள் நாட்டியம் கற்றுக்கொண்டது பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. அதிலிருந்து தேவதாசி குலத்தில் உதித்த, ஆறிலிருந்து ஒன்பது வயதுக்கு உட்பட்ட பூப்பெய்தாத கன்னிப்பெண்ணை, கோயிலில் உள்ள தெவதாசிளில் தலைமையானவள் பரிந்துரைப்பாள். நல்ல நாளில் கோயில் பணிமக்கள் முன்னிலையில் வழிபாடு செய்யும் அர்ச்சகர் அப்பெண்ணை கருவறையில் உள்ள மூலஸ்தானத்தின் முன்னர் அமர்த்துவர். அவளுக்கு கல்யாணச் சடங்குகள் முற்றிலும் செய்வித்து தெய்வத்தின் காலடியில் தாலியை வைத்து, அதையெடுத்து தெய்வத்தின் பிரதிநிதியாக அவள் கழுத்திலே கட்டுவார். பின்னர் அப்பெண் தெய்வத்தை வணங்கி அர்ச்சகரையும் வணங்கி வெளி மண்டபத்திற்கு வருவாள். அங்கு மங்கள வாத்தியங்கள் முழங்க நட்டுவரால் நாட்டியம் கற்றுத் தரப்படுவாள். இரண்டு, மூன்று நாட்களுக்கு இது விழாப்போல் நடத்தப்படும். இவ்விழாவிற்கு தேவையான ஒரு குறிப்பிட்ட தொகை கோயிலிலிருந்து கொடுக்கப்படும் என்று அறிகிறோம்.

புராணக் கதைகள்:

மிகவும் தொன்மயான காலத்திலிருந்தே நாட்டிய மகளிர், தாங்கள் தேவ குலத்திலிருந்து பிறந்தவர்கள் என்று புராணக் கடைகளைக் கூறிக்கொண்டனர் என்று அறிகிறோம். மாதவி தன் முற் பிறவியில் ஊர்வசியாகத் திகழ்ந்தவள் என்றும், அகத்திய முனிவரது சாபத்தால் மாதவியாகப் பிறந்தாள் என்றும் சிலப்பதிகாரத்தில் கதை காணப்படுகிறது. உமை அன்னைக்கு சேடியாக விளங்கிய கமலினி என்பவளே ருத்ரகணிகையாக பரவை என்ற பெயரில் ஆரூரில் பிறந்தாள் என்றும், அவளையே சுந்தமூர்த்தி புணர்ந்தார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது. இவற்றிலிலுந்து தேவரடியாளாகத் திகழ்ந்த நாட்டிய மகளிர் தாங்கள் உயர் குலத்தில் உதித்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டானர் என்று அறியலாம்.

பதியிலார், தளியிலார், தேவரடியாள்:

காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் தூணில் நீர் மற்றும் மலர்கள் கொண்டு வரும் ஆடல் மகளிர் சிற்பம்
காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் தூணில் நீர் மற்றும் மலர்கள் கொண்டு வரும் ஆடல் மகளிர் சிற்பம்
இவர்கள் பதியிலார், இஷபத்தளியார், தேவரடியாள், தளிச்சேரப் பெண்கள், கூத்திகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இவர்களிலே தத்தை, விக்ரிதை, பிருத்தியை, பக்தை, ஹிருதை, அலங்காரை, ருத்ரகணிகை என ஏழு பிரிவுகள் உண்டு என்று ஹிந்து நூல்கள் குறிக்கின்றன. தன்னைத்தானே கோயிலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவள் தத்தை என்றும், தன்னை கோயிலுக்கு விற்றுக் கொண்டவள் விக்ரிதை என்றும், கோயிலில் பணியாளராகத் தன்னை தன் குடும்ப நலத்திற்காக அர்பணித்துக் கொண்டவள் பருத்யை என்றும், பக்தியினால் கோயிலில் சேர்ந்தவள் பக்தை என்றும், பிறரால் அபகரிக்கப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டவள் ஹிருதை என்றும், அரசனாலோ அல்லது பிறராலோ கூத்தில் சிறந்தமைக்காக கோயிலுக்கு அளிக்கப்பட்டவள் அலங்காரை என்றும், கோயிலில் இருந்து ஊதியம் பெருபவள் ருத்ரகணிகை என்றும், கோபிதை என்றும் அழைக்கப்பட்டனர் என்று கூறுவர்.
இவர்கள் ஆடலில் வல்ல கலையினாலும், இசைப் பணியினாலும் கோயில்களில் பணிபுரிந்தமையாலும் சமுதாயத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டனர் என்று அறிகிறோம். “பஞ்சின் மெல்லடிப் பாவைமார்” என்றும் “சேயிழையாள்” என்றும் “அருள் மனித்தடம் பூண்முலை அரம்பையர்” என்றும் இவர்கள் நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் புகழப் பெற்றவர்கள். அப்பெரியார்களாலே பாடப்பட்டதிலிருந்தே இவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை வகித்தனர் என்பது தெளிவு. கோயில்களில் பணிபுரிபவர்களாக இவர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்க வேணடும் என்பது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் போன்ற அடியார்களின் பாடல்களிலிருந்து அறிகிறோம். கி.பி. 8-ம் நூற்றாண்டில் நந்திவர்மன் பல்லவ மன்னன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் காஞ்சீபுரத்துக் கோயிலில் பணிபுரந்த பல நாட்டிய மகளிர் குறிக்கப்படுகின்றனர். சோழப் பெருமன்னர்கள் தாங்கள் தோற்றுவித்த கோயில்களில் ஏராளமான நாட்டிய மகளிரை நியமித்து நாட்டியப் பணியில் அமர்த்தியிருந்ததை கல்வெட்டுக்களிலிருந்து அறிகிறோம். இராஜராஜன் தான் தோற்றுவித்த தஞ்சை பெரியகோயிலுக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட நாட்டிய மகளிரை நாட்டின் பல்வேறு கோயில்களிலிருந்து மாற்றி அக்கோயிலில் நாட்டியம் பணிபுரிய அமர்த்தினான். இவர்களுக்கு உரிய தகுதிகள் இருக்க வேண்டுமென்றும், தகுதியற்றவர்கள் தாங்களே தகுதி உள்ளவர்களை நியமித்து பணி புரியலாம் என்றும் பணித்தான். இவர்களில் சிலர் இறந்துபோனால் அல்லது வேறு இடங்களுக்குச் சென்றால் அவர்களுக்காக அடுத்த முறையுள்ளவர்கள் இப்பணி புரியலாம் என்றும் பணித்தான். அடுத்த முறை வருபவர்களும் நாட்டியத்தில் தகுதி பெற்றவர்களாகத்தான் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கோயில் நியாயத்தார்களே உரிய தகுதி உள்ளவிர்களை நியமிக்க வேண்டும் என்று பணித்தான். இதை அவனுடைய கல்வெட்டு சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. இதிலிருந்து சில உண்மைகள் தெரிகின்றன. தேவரடியாளாகக் கோயிலில் பணிபுரிவதற்கு, ஆடலிலும், பாடலிலும் உரிய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். மேலும், கோயிலிலே பணிபுரிந்தவர்கள் பிற இடங்களுக்குச் செல்வதும் உண்டு. ஆதலின் அவர்கள் நிரந்தர அடிமைகள் அல்ல என்பதும் அறிய முடிகிறது. இவ்வாறு அமர்த்தபட்ட தளிச்சேரிப் பெணடுகளுக்கு இராஜராஜன் வசிப்பதற்கென்றே தெருக்களை அமைத்த வீடுகளை எடுப்பித்து, ஒவ்வொன்றிலும் ஒருவர் வசிக்க வகை செய்தான். ஒவ்வொரு நாட்டிய மகளுக்கும் ஓராண்டுக்கு நூறு கலம் நெல் வரும் வகை செய்தான். இதைப் பார்க்கும்போது மற்றபணியாளர்களுக்கு என்ன ஊதியம் கொடுக்கப்பட்டதோ அதுவே இவர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்று அறிகிறோம். இந்நாட்டிய மகளிர் தங்களின் பெயரால் சொத்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். பல கல்வெட்டுகளில் நாட்டிய பணிபுரிந்த பல மகளிர் கோயில்களுக்கு ஏராளமான பரிசுகளை அளித்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது.

சாந்தி கூத்திகள்:

தாந்தோன்றீஸ்வரர் கோயில் சிற்பம்: அச்ச உணர்வை வெளிப்படுத்தும் பெண் (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
தாந்தோன்றீஸ்வரர் கோயில் சிற்பம்: அச்ச உணர்வை வெளிப்படுத்தும் பெண் (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
கோயிளில், சாந்திக் கூத்து ஆடப்பட்டும் என்று முன்னர் குறிப்பிட்டோம். சிலப்பதிகார உரையாசிரியர் சாந்திக்கூத்தை குறிப்பிட்டுள்ளது நினைவில் கொள்ளல் தகும். பிற்காலக் கல்வெட்டுக்களிலும், சாந்திக் கூத்தர் சிலர் குறிக்கப்படுகின்றனர். கி.பி. 1137-ஐச் சேர்ந்த வேதாரண்யம் கல்வெட்டு ஒன்றில் (463/17) அவ்வூரைச் சார்ந்த சாந்திக் கூத்திகள் குறிக்கப்படுகின்றனர்.
அவ்வூர் சாந்திக் கூத்திகளில் தேமாங்குடி பெருந்திருவாட்டி கயிலை கிழத்தி என்பவள் 30 வேலி நிலம் வாங்கிக் கொடுத்ததை அக்கல்வெட்டு கூறுகிறது. 30 வேலி நிலம் வாங்கி கொடுக்கும் அளவுக்கு அவள் பெரும் பொருள் பெற்றிருந்தாள் என்பது இதனால் விளங்கும்.

தேவரடியாள் கொடுத்த தானங்ள்:

தேவரடியாள் பலர் கோயிலுக்குப் பொருள் கொடுத்துள்ளதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன என்பதை முன்னர் கண்டோம். திருநெல்வேலி கோயிலில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வீராபாண்டின் காலத்தில் பதியிலார் குடுப்பத்தைச் சேர்ந்த நாட்டிய மகள் ஒருத்தி கோயிலுக்குப் பூ எடுத்துவரும் ஒருவருக்கு ஜீவனத்துக்காக நிலம் வாங்கி அளித்ததை கூறுகிறது. “இவ்வூர் பதியிலார் கூத்தன் நம்பிராட்டி ஆன செய்யபெருமாள் சிறு காலைச் சாந்திக்கு அருகும் தாளிப் பூவும் சாத்தி பறிக்கிற திருத்தொண்டர்களுக்கு ஜீவனத்துக்கு விற்று விலைப் பிரமாணம் செய்த பரிசாவது” என்று கூறுகிறது. பராந்தக சோழன் காலத்தில் மன்னார்குடி தாலுக்கா திருவிராமேச்வராம் கோயிலில் சந்தி விளக்குக்கு தேவரடியாள் உழுதன் தேவி என்பவள் இரண்டுகாசு கொடுத்ததை கூறுகிறது (228/19).
கோயில்களுக்கு மட்டுமின்றி ஊர்களின் பொது நலத்திற்காகவும் தேவரடியார்கள் பலர் பொருள் கொடுத்து உதவியுள்ளனர். சுந்தர பாண்டியன் காலத்தில் ஊர்க்குளம் உடைந்து கரை அழிந்து நாடும் பாழாகக் கிடந்ததால், குளம் வெட்டித் திருத்தி ஆக்கிக் கொள்ள தளியிலாள் நக்கன் நாச்சியாரான தனியானைவிட்ட பெருமாள் தலைக்கோலி என்பவளிடமிருந்து நக்கன் செய்யாளான காளிங்கராய தலைக்கோலி என்பவள் நிலம் வாங்கி வைத்தாள் என்று அறிகிறோம் (169/8). இவ்வாறு பொதுவாழ்வில் பெரும் பங்கு கொண்டு வாழ்ந்த தேவரடியார்கள் வழிவந்தோரும் உயர்குடியாக வாழ்ந்திருக்கின்றானர். இராஜேந்திர சோழனுடைய அனுக்கியகத் திகழ்ந்த ஜயாறன் செம்பொன் தங்கைக் கூத்தன் உத்தமசீலியார் மகன் அரையன் கடக்கங்கண்ட சோழனான இராஜராஜ அணிமூர் நாடாழ்வான் என்பவன் சேனாபதியாகவும், சிறுதனப் பெருந்தரமாகவும் பணிபுரிந்திருக்கிறான்.

தேவரடியாச் சண்டை:

தேவரடியாரில் மூன்ரு பெரும் பிரிவுகள் இருந்தன என்று அறிகிறோம். இவர்களில் பதியிலார், இஷபத்தளியிலார், தேவரடியாள் என்று மூன்று பிரிவுகள் இருந்தன. பதியிலார் என்பவர்கள் உயர்குடி பிறந்தவர் என்றும், தேவரடியாள் குடியில் தாழ்ந்தவர் என்றும், தளியிலார் இடைப்பட்டவர் என்றும் கருத்து நிலவி வந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரை மணந்த பரவை நாச்சியார் பதியிலார் குடியைச் சேர்ந்தவள் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து சிமார் 7-ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இப்பாகுபாடுகள் தோன்றியிருக்க வேண்டும் என்பது தெளிவு. தங்கள் ஆடல் திறனாலும், பலரிடம் செல்லாது ஒருவரையே விரும்பி வாழ்ந்ததாலும் பதியிலார்குடி உயர்குடியாகக் கருதப்பட்டது போலும்.
இம்மூன்று திறத்தாரும் கோயில்களிலே பணிபுரிந்திருக்கின்றனர். சிறசில சமயங்களில் இவர்களுக்குள்ளே சச்சரவு ஏற்பட்டதையும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. தெய்வத்தின் முன்னர் இன்ன நேரத்தில் பதியிலார் ஆடவேண்டும், தளியிலார் எப்பொழுது ஆடவேண்டும், தேவரடியாள் எப்பொழுது ஆடவேண்டும் என்ற நியதி இவர்களுக்குள் இருந்தது. இதன் காரணமாக இவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டு கோயிலில் இவர்கள் இரண்டு முறை வேலை நிறுத்தம் செய்ததை 15-ம் நூற்றாண்டைச் சார்ந்த திருவொற்றியூர் கல்வெட்டு கூறுகிறது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் தென்னாற்காடு மாவட்டம் ஜம்பை கிராமத்தில் கோயிலில் அவ்வூர் தேவரடியாள் பொற்றைழ்வி நாட்டிய மண்டபம் கட்ட அவளின் தம்பி ஆட்க்கொண்டான் என்பவன் தன் தலையைத் தானே அரிந்து கொண்டான். அதற்காக அவன் தம்பி அண்ணாமலை என்பவனுக்கு கோயில் தானத்தார் நிலம் அளித்தனர் (178/12).

பொது மகளிர்:

கோயில்களில் பணிபுரிந்த நாட்டிய மகளிரைத் தவிர பொது மகளிரைப் பற்றி கல்வெட்டுக்களில் ஏதும் காண்க் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்கள் இவர்களது தன்மையையும், வஞ்சகத் தொழிலையும் தெளிவாக விளக்குகின்றன. “மான் நோக்கினை உடைய அழகுமிக்க மகளிர், விளக்கினை ஏற்றித், தம்மை அழகு செய்து நயப்பவர் எவருடனும் இன்பம் துய்ப்பர். அவர் தம்மை அழகும், மணமும், மிக்க இதழ்கள் சிறந்த கழுநீர் மாலைகளால் அலங்கரித்துக் கொண்டனர், கூந்தலை விரித்துச் சந்தனத்தின் நறுமணத்தை ஏற்றுவர், அகிற் புகையினால் ஆடைகளை மணம் பெறச் செய்வர், நகரத்தின் ஆரவாரம் மிக்க அரவம் நீங்கிய பின் இன்பம் ஆய்வர், ஏழிசை பயிலப்படும் இனிமையான ஓசையை எழுப்பும் நரம்பினையுடைய யாழை எடுத்து இன்பமாகப் பாடுவர். நறுமணம் வீசும் ஒண்மையும், தண்மையும் மிக்க பூக்கொத்துக்களைக் கூந்தலில் அணிந்து கொள்வர், கைகளை அசைக்கும் போது அவர் வளையல் மின்னும், நிலைகுலைந்த அணிகளைத் திருத்தி அமைப்பர்” (தமிழர் சால்பு - 240).
இப்பொது மகளிரின் வஞ்சகத்ததையும், தொழிலையும் அதே நூல் விரிவாக எடுத்க் கூறும். “தூரத்திலிருந்து தம்மைத் தேடி வரும் இளமையும், செல்வமும் மிக்க மைந்தரை மயாப்பொய் பல கூறி மயங்க வைப்பர். காதலும், ஆதரவும் உள்ளவர் போலக் காட்டி, நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி, அவர்களது வளத்தை வாங்கிக் கொள்வர். தேனை உண்டு பூவினைத் துறக்கும் வண்டினம் போல தம்மிடம் வந்த மைந்தரைத் துறந்து அவரை வருத்தும் இயல்பினர். ஆராய்ந்த பொன்னற் செய்யப்பட்ட, பிரகாசிக்கும் தொடியையும், பாசிழையையும் அணிந்த பொதுமகளிரடம் பழத்தினை நாடும் பறவைகள் போல செல்வரும் பிறரும் வருவர். தம்மைக கண்டோருடைய நெஞ்சை வருத்தம் உறுவித்துப் பொருளைப் பறிக்கும் பண்பினர் இப்பொது மகளிர். இவர் தன்மையும், அழகும் உள்ள நீர்துறை மணலிலேயே ஆண்களுடன் சேர்ந்து ஆடுவர். தம்முடனாடிய ஆதவரை விட்டுச் சென்று தளிரையும், குவளை மொட்டுக்களையும் மாலையாகத் தொடுப்பர். மீண்டும் தம் ஏமாற்றுத் தொழிலைத் தொடங்குவதற்கு தம் இல்லங்களை நோக்கி பெயர்வர்” (தமிழர் சால்பு - 240-41). இவர்கள் பர்ததையர் என்றும், காவற்கணிகையர் என்றும், இராக்கடை வேசியர் என்றும் பூவிலை மடந்தையர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வனிகர்களும், உழவர்களும், பிற உயர்குடிகளும் வசிக்கும் பகுதிகளிலேயே தனித்தெருக்களில் இவர்கள் வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். பூம்புகார் நகரத்தில் இம்மகளிர் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்ததாக சிலம்பு கூறுகிறது.

கலையே வாழ்வு:

தாந்தோன்றீஸ்வரர் கோயில் சிற்பம்: இரு மகளிர் (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
தாந்தோன்றீஸ்வரர் கோயில் சிற்பம்: இரு மகளிர் (புகைப்படம்: சுவாமிநாதன் நடராஜன்)
நாட்டிய மகளிரது வாழ்வைப் பொதுப்படையாக நோக்கும் போது கலைக்காகவே தங்களை அர்பணித்துக் கொண்டு சற்றேறக்குறைய இன்றுவரை நாட்டியக் கலையை காத்தளித்த பெருமை இவர்களுக்கு உண்டு. இவர்களை அனைவரையும் பரத்தையர் என்றே இன்றுள்ளோர் கருதிவிடுதல் கூடாது. உயர்ந்த நோக்குடையோராக, கற்புடைய மகளிராக, கலைக்காகவே வாழ்ந்து, இறந்த ஆயிரக்கணக்கான பதியிலார்கள் இவர்களிடையே உண்டு.
கோயில்களில் தெய்வத்தின் திருமுன்பு பணிபுரிந்ததால் இவர்களது கலை அப்பழுக்கற்ற தெய்வீகக் கலையாக வளர்ந்தது என்பதில் ஐயமில்லை. வறுமையின் கொடுமையால் மனித இயில்பில் அவ்வப்போது ஏற்படும் சிறுமையால் உயர்நிலை குன்றி, உடல் விலை கூறி, பொது மகளிராக வாழ்ந்தோரும் இவர்களில் இருந்தது உண்டு. அன்றய சமுதாயம் இவர்களத் தகாதவர் என்று ஒதுக்கித் தள்ளாமல், மற்ற குடிகளுக்கிருந்த உரிமையும், உடைமையையும் இவர்களுக்கு அளித்த சமுதாயமாகத் திகழ்ந்தது.