யானை வீரரும், குதிரை வீரரும் போரிடும் காட்சி - வைகுந்தப் பெருமாள் கோயில், காஞ்சி, கி.பி. 8ம் நூற்றாண்டு
போர் வீரர்:
அரசர்காளிடத்தில் சிறந்த வீரா்களாகப் பணிபுரிந்தவர்கள் பலர். அவர்களில் வீரர் எனனும் சொல்லுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் மறவர் என்போர். மறவர் என்ற சொல் வீரர்களைக் குறிக்கப் பொதுப்படையாகவும் ஒரு குறிப்பிட்ட குடியைக் குறிக்கவும் வழங்கப்பட்டது. வேடர், கானவர், எயினர், குன்றவர், குறவர், மலையர் முதலிய பெயர் அனைத்தும் கண்ணப்ப நாயனார் பிறந்த குடியின் பெயராக பெரிய புராணம் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலிருந்து வேட்டுவர், மறவர், எயினர், குன்றவர் என்ற சொற்கள் ஒரே குடியைக் குறிக்கின்றன என அறிகிறோம்.
சங்க கால மறவர்:
சங்க காலத்தில் மறவர்கள் கொடுந் தொழில் புரிபராக இருந்துள்ளனர். மறவர் எனறாலே மக்கள் நடுங்குவர். மறவர், வழிவரும் புதியோரைக் கொன்று வீழ்த்தினர் (புறம் 175). நீண்ட வழிகளைக் காத்து நின்ற மறவர் கையாற் கவிக்கப்பட்ட கண்ணால் குவித்துப் பார்த்து அம்பு எய்வர். அவர்களால் வீழ்த்தப்பட்டோரது உடல்களை மூடி புதிய கற்குவைகள் காணப்படும். (புறம் 2). அவர்களுடைய கொடிய தொழிலுக்குப் பயந்து ஊர் மக்கள் குடி பெயர்ந்தனர். அவ்வூர் பீர்க்கை படர்ந்து பாழாகிக் கிடக்கும், அவ்வூர் அம்பலம் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும். வாணிகர்கள், கழுதைகளின் மேல் பொருள்களை ஏற்றி வாளேந்தி வருவர். மறவர்கள் அவர்களை மறித்துப் போரிட்டு அவர்கள் தலையை வெட்டி வீழ்த்தி அருங்கலங்களைத் திறையாக குவிப்பர். அதைத் தங்களுக்குள்ளே பிரித்துக் கொள்வர் (அகம் 89). மறவர்களது வில் தோள் வரை உயர்ந்திருக்கும். அதை வளைத்து இழுத்து அம்பு எய்வர் (அகம் 175). தொடுத்த அம்பு குறி தவறினால் வில்லைக் கவ்வும் கல்லாத அறிவினர் அவர்கள் (அகம் 214).மறவர்கள் அழகு இல்லாத தாடி உடையவர்கள். தங்கள் அம்புகளை நடுகல்லின் பக்கத்தில் தேய்ப்பர் (அகம் 297). வேங்கட மலையைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள மறவர்கள் வளைந்த வில்லையும் கொடிய பார்வையையும் உடையவர்கள். அருகில் உள்ள குன்றில் ஏறி எருதைக் கொன்று அதன் தசையை நெருப்பில் இட்டு ஊனைத் தின்று தேங்கள்ளைக் குடித்து புலால் நீங்காத வாயுடையவர்கள். அவர்கள் தங்கள் கையை கழுவ மாட்டார்கள். கடப்ப மரத்தின் கீழ் கூத்தாடுவார்கள் (அகம் 265). கூறிய அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர் தாங்கள் வேண்டுவதைக் கொண்டு மற்றவற்றை பிறருக்குப் பயனில்லாமல் ஆழித்தனர் (புறம் 23).
மறவரது வாழ்க்கை
மறவர்களது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் கண்ணப்ப நாயனார் கதையை சேக்கிழார் பெருமான் படைத்துள்ளார். (பல்வேறு தறத்து தமிழ் மக்களின் வாழ்க்கையை, சிலம்பும், சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணமும் எடுத்துக் கூறுவது போல் வேறு எந்த நூலும் கூறவில்லை). கண்ணப்பன் வரலாற்றில் வேட்டுவர் வாழ்க்கையைக் குறிக்கும் சேக்கிழார் அங்கு “கொல், எறி, குத்து” என்ற சொற்களே ஓங்கி நிற்கும் என்று கூறுகிறார். அவர்கள் அயல் புறத்திருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வாழ்வர். அவர்களது குலம் குற்றமே குணமாகக் கொண்ட குலம். பொச்சையின் நறவும் மானின் புழுக்களுமே அவர்கள் உணவாக உண்பர். கொடுமையையே தலையாகக் கொண்டவர்கள். வில்தொழிலே தொழிலாய்க் கொண்டவர்கள் என்றும் அவர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்களது குடிக்கு அரசன்போல் ஒரு தலைவன் உண்டு. கண்ணப்பனின் தந்தை அது போன்ற ஒரு தலைவனாகும்.
வேலனை வேண்டல்
மறவர்கள் மக்கட் பேற்றுக்காக முருகப் பெருமானை வழிபடுவர். இதைப் பெருவிழாவாகக் கொண்டாடுவர். சேவலையும், மயில்களையும் முருகனுக்கு விடுவர். பல மணிகள் கட்டிய தோரணங்களை எடுப்பர். கதம்பம் சாற்றி குரவைக் கூத்து ஆடி (பேரணங்கு ஆடல்) வெறியாடல் செய்து இதைப் பெருவிழாவாக நடத்துதவர். வேடர் குலத்த தலைவனும், நாகனும், அவன் மனைவி தத்தையும் முருகப் பெருமானை வழிபட்டு அதன் பயனாய் பிறந்த குழந்தையே கண்ணப்பன். தலைவானுக்குக் குழந்தை பிறந்ததும் குறவர் தங்கள் சிற்றூர்களில் பெருவிழா எடுத்தனர். பிறந்த குழந்தையை தந்தை கையில் எடுத்துப் பெயரிடுதல் மரபு. தங்கள் மறக் குடிக்கேற்பா கடவும் காப்புச் செய்வர். இளந்தளிரும், வேம்பும் கட்டித் தொங்க விடுவர். தெய்வத்தித்துக்குப் பெருமடை (பலி) கொடுப்பர். மறவச் சிறுவன் நடை பயிலும் போது புலிப் பல்லை முள்ளம் பன்றியின் முள்ளால் துளைத்து நாணில் கோர்த்து கழுத்தில் அணிவிப்பார்கள். பாசி மணிகளோடு பல மணிகளைக் கோவைகளாகக் கோத்து அரைஞாணில் காசு கோர்த்து இடுப்பில் கட்டியும், காலில் தண்டையும் காதில் குதம்பையும் அணிவித்து அலங்கரிப்பர்.
மறவக் குழவின் விளையாடல்
மறவக் குழந்தை நாயைப் பாசத்தால் பிணித்து விளையாடுவது உண்டு. ஐந்தாவது வயதிலேயே காடுகளில் சென்று விலங்குக் குட்டிகளைப் பிடித்து வந்து முற்றத்து மரத்தில் கட்டி விளையாடுவர். கண்ணப்பர் ஐந்தாம் ஆண்டில் முயல் குட்டி, காட்டுப் பன்றிக் குட்டி, புலிக் குட்டி முதலியவற்றைத் துரத்திச் சென்று பிடித்து வந்து வளர்த்தார் என்று சேக்கிழார் குறிக்கிறார்.
வில்விழா:
நன்கு வளர்ந்த மறக்குலச் சிறுவர்களுக்கு வில் தொழில் கற்றுக் கொடுப்பர். இதை சிலை பயில் பருவம் என்பர். வில் தொழிலில் சிறந்த வீரரை ஆய்ந்து நல்ல நாள் தேர்ந்தெடுத்து மற்ற மறவர்க்கெல்லாம் சொல்லி அனுப்புவர். இன்னவன் வில் பிடிக்கப் போகிறான் எனப் பறை சாற்றி அறிவிப்பர். அதைக் கேட்டு மலையில் கிடைக்கும் மணி, பொன், புலித்தோல், யானைத்தந்தம், மயிற்பீலி, தேன், நறவு, ஊண், கிழங்கு, பழங்கள், முதலிய கொண்டு வேடர் வருவர். இதை ஒரு விழாவாகவே கொண்டாடுவர். இதற்கு வில்விழா என்று பெயர். வில்லேந்தியவர் காத்து நிற்க எடுக்க வேண்டிய வில்லுக்குக் காப்புக் கட்டுவர், புலி நரம்பால் ஆக்கிய காப்பை பன்னர் மறவச் சிறுவனின் கையில் அணிவிப்பர். இச் சடங்குகள் முடிந்ததும் அனைவரும் விருந்து உண்பர். பின்னர் மறவச் சிறுவன் பசிய இலைகளினால் ஆன படலையைச் சுற்றிக்கொண்டு, பல மலர்களை தொடுத்த தொடயலைச் சூடி, காசுகள் கோர்த்த வடத்தோலைக் கட்டிக் கொண்டு பலவேறு அணிகளையும் அணிந்து கொண்டு, வெட்சி மலர் கண்ணி சூடி, ஆசிரியன் ஏந்தி நிற்கும் வில்லின் அருகில் செல்வான். அப்போது தொண்டகம், முரசு, கொம்பு, துடி முதலிய இசைக் கருவிகள் முழங்க வில்லை ஏந்திக் கொண்டு, அனைவரும் சூழ அக் குறச்சியை (குறிஞ்சி நிலக் கிராமம்) வலம் வருவார்கள். இவ் விழா ஏழு நாட்க்கள் நடை பெறும்.ஏழாம் நாளன்று சூரியன் உச்சியில் நின்றபோது மங்கல வாழ்த்துக்களும், இசைக்கருவிகளும் ஒலிக்க தங்கள் தொழிலாகிய வில்தொழிலில் சிறந்தவரிடமிருந்து வில்லைப் பிடிக்கக் கற்றுக்கொள்வான். அன்று தொடங்கி மலையின் பக்கத்தில் முன்னோர் பழகிய இடத்தில் முறைப்படி வணங்கி வில்வித்தை கற்பான். அவ்விடத்திற்கு வில் தொழில் களம் என்று பெயர். மறக்குலமகன் தனது 16-வது வயதிற்குள் வில்வித்தையும் பிற போர்ப் பயிற்சிகளும் படைக் கலைப் பயிற்சிகளும் பெறுவான்.
குலத்தலைமை கொடுத்தல்:
மறவர் குலத்தலைவன் தான் தளர்வு எய்தியதும், வயது வந்த தன் மகனுக்குக் குலத்தலைமை அளிப்பான். அதுவும் ஒரு சிறந்த விழாவாகக் கொண்டாடப்படும். அதன் சின்னமாக அவன் மகன் முதன் முதலில் வேட்டையாட அனுப்பப்படுவான். அதற்கு கன்னி வேட்டை என்று பெயர். கன்னி வேட்டை செல்வதற்கு முன் மறவர் தலைவன் தேவராட்டையை அழைத்து தன் விருப்பத்தைக் கூறி “காடு பலி” கொடுக்க வேண்டுவான். தேவராட்டி என்பவள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவளாக விளங்குவாள். அவள் வேங்கைப் பூவை கண்ணியாகச் சூடி மான் கொம்பிலிருந்து அறுத்துச் செய்த குழையை காதில் சூடி, புனுகுத் திலகம் இட்டு, மணிவடம் பூண்டு, மரவுரி தரித்து அதன்மேல் மயில் பீலி சூடி விளங்குவாள். அவளிடத்தில் மறவர் தலைவன் தன் “மகனுக்குக் குலத் தலைமை கொடுக்கப் போகிறேன்; இவன் வேடர்களைக் காக்கின்ற பொறுப்பு உரிமை புகுகின்றான். இவன் வேட்டைத் தொழிலில் என்னைக் காட்டிலும் சிறக்க வேண்டும்; வேற்றுப் புலங்களை கவர்வதிலும் என்னைக் காட்டிலும் சிறந்தவனாக வேண்டும்; அதற்காகக் காட்டில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் விரும்பி உண்ணும் காடு பலி நீ அளிக்க வேண்டும்” என்று வேண்டி அதற்குரியவற்றை அவளிடம் கொடுப்பான். அவளும் அவற்றைப் பெற்று, வாழ்த்தி, காடு பலி கொடுக்க செல்வாள். பின்னர் மறவர் தலைவன் தன்மகனை வரவழைத்து அவனை புலித்தோல் ஆசனத்தில் அமரச் செய்து, “மலயர் குலம் காவல் பூண்டு, மாற்றார்களை எறிந்து, மான் வேட்டையாடி, என்றும் உன் மரபுரிமையைத் தாங்குவாய்” என்று கூறி அதன் சின்னமாக உடைத் தோலையும், உடைவாளையும் அவனிடத்திலே கொடுப்பான். தந்தையின் கழலை வணங்கி அவற்றை ஏற்றதும் அவன் மறவர் தலைவனாகிறான். தந்தை அவனை வாழ்த்தி வேட்டைக்குச் செல் என விடை அளிப்பான்.
சாலினி:
எயினர் குடியில் வளம் குன்றுமானால் அக்குடியில் வந்த தேவராட்டி தெய்வத்துக்குப் பலி கொடாமையால்தான் இவ்வாறு ஆயிற்று என்றும் சாமி ஆடிக் கூறுவாள். அவளைத் தேவராட்டி என்றும் சாலினி என்றும் கூறுவர். அவள் கண்ணப்பன் வரலாற்றிலும் நரை மூதாட்டி என காடுபலி கொள்ள அழைக்கப்பட்டது கண்டோம். மறவர் வாழ்வில் இச்சாலினி இன்றியமையாத நிலை வகித்தாள் என்று இதிலிருந்து அறிகிறோம்.சாலினி ஊரில் மன்றில் தெய்வத் தன்மையுற்று, மெய் மயிர் சிலிர்தது மூரி நிமிர்ந்த கைகளை ஒற்றையும் இரட்டையுமாக்கி அபிநயத்தோடு கூட்டித் தாளத்திற்கு ஏற்ப ஆடுவாள். கானவர்களும் அது கண்டு வயந்து நிற்பர். “நீங்கள் முன்பு கூறியபடி தெய்வத்துக்குப் பலி கொடாமையால் எயினர்களின் மன்றுகள் பாழ்பட்டன. பகைவர்களுடைய ஊர்களில் ஆநிரைகள் நிறைந்து நிற்கின்றன. நீங்கள் கலையமர் செல்வியாகிய கொற்றவைக்கு வெற்றிக்கு விலையாக உயிர்ப் பலி கொடுத்தாலொழிய உங்களுக்கு வெற்றி கிடைக்காது. கள்ளுண்டு வாழ்வதையும், மதுவுண்டு செருக்கு மிக்க இல்வாழ்க்கையையும் நீங்கள் விரும்பினால் கொற்றவைக்கு உரிய பலியை உடனே அளியுங்கள்” என்று சாலினி கூறுவாள்.
குமரிக்கு கொற்றவைக் கோலம்:
அதைக் கேட்ட எயினர் தங்கள் குடிப்பிறந்த ஒரு குமரியை கொற்றவை போல் அலங்கரிப்பர். அவளது கூந்தலைச் சடையாகக் கட்டுவர். அதில் கொற்றவையின் முடியில் பாம்பு சுற்றி இருப்பது போல், பொன் நாணால் சுற்றிக் கட்டுவர். அதில் காட்டுப் பன்றியின் பல்லை இளநிலா என்ன சொருகுவர். கொடும் புலியைக் கொன்று அதன் பற்களை தாலியாக் கட்டி, அதன் தோலை மேகலையாக உடுத்துவர். வயிர வில்லை அவள் கையில் கொடுப்பர். அவளைக் கலைமான் மீது அமர்த்துவர். அம் மானின் கொம்பு முறுக்குண்ட கொம்பு. அவளைப் போற்றிக் கானக் கோழியும், நீலநிற மயிலையும் கொடுப்பர். வண்ணம், சுண்ணம், வாசனை பொருந்திய சந்தனமும், அவரை, துவரை முதலியவற்றின் புழுக்களையும், இரத்தம் கலந்த சோற்றையும் ஏவல் எயிற்றியர் எடுத்துப் பின்னே செல்வர். மறவர் வழிப்பறி கொள்ளும்போது கொட்டும் பறையும், சூறை கொள்ளும்போது ஊதும் சின்னமும், துத்தரி, குழல், எறிமணி முதலியவற்றை இசைத்து அக்குமரிமேல் தெய்வம் வந்ததாக கொண்டு பலிபீடத்தின் அருகில் சென்று அதன் அருகில் அவளை நிறுத்தி வாழ்த்துவர். அப்பலிபீடம் கொற்றவை கோட்டத்து முன்றிலில் இருக்கும். அம்முன்றிலில் கொற்றவையைப் போற்றி மறவர் கழுத்தை அறுத்து அதிலிருந்து பீறிட்டெழும் இரத்தம் பீடத்தின் மீது விழப் பலி கொடுப்பர். இதை எயினர் கடன் என்று கூறுவர். (சிலம்பு வேட்டுவரி).
எயினர் அளிக்கும் தலைப் பலி:
எயினர் தங்களது கழுத்தை அரிந்து கொற்றவைக்குப் பலி கொடுத்தல் மரபு என்று சங்க இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். இது வெறும் இலக்கியக் கற்பனை அல்ல, உண்மை வாழ்க்கையிலும் இவ்வாறு செய்தனர் என்பதற்கு சான்று உள்ளது. நெல்லூர் மாவட்டம் கூடூர் என்ற இடத்தில் கம்பவருமன் காலத்துக் கல்வெட்டு ஓர் உதாரணம். அதில் வீரன் ஒருவன் தன் தலையை அரிந்து கையிலே தாங்கி நிற்பதுபோல் சிற்பம் உள்ளது. அதில் உள்ள கல்வெட்டு பட்டை போத்தன் என்பவன் தன் தலையை அரிந்து படாரிக்கு பலி கொடுத்தான் என்றும், அறிந்த தன் தலையை பீடத்தின் மீது வைத்தான் என்றும் கூறுகிறது. இதை மேதவம் என்று கல்வெட்டு கூறுகிறது. அதற்காக ஊரார் அவன் வழிவந்தார்க்கு நிலம் கொடுத்தனர். அக் கல்வெட்டு நல்ல தமிழில் பின் வருமாறு குறிக்கிறது. ஸ்ரீ கம்ப வருமற்கு யாண்டு இருபதாவது பட்டை போத்தனுக்கு, ஒக்கொண்ட நாகன் ஒக்கந்திந்தன் பட்டை போத்தன், மேதவம் புரிந்ததென்று படாரிக்கு நவ கண்டங் கொடுத்து, குன்றகத் தலை அறுத்து பிடிலிகை மேல் வைத்தானுக்கு, திருவானமூர் ஊரார் வைத்த பரிசாவது என்று அது உள்ளது. இதில் இருந்து மறவர் தங்கள் தலையை அரிந்து கொற்றவைக்குப் பலியாக அளித்த உண்மையை அறியலாம்.தமிழகத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாணடிலிருந்து சுமார் 11-ஆம் நூற்றாண்டு வரை காணப்படும் கொற்றவையின் சிற்பங்களின் காலடியில் இரு மறவர்கள் காண்பிக்கப்பட்டிருப்பர். அவர்களில் ஒருவன் தன் தலையை அரிந்து கொடுப்பதாக உள்ளதை காணலாம். இஃது அன்று நிலவிய மறவர்களின் பண்பே என்பதில் ஐயமில்லை.
அறத்துக்கு புறம்பானவர் மறவர்:
சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியிலும் அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையிலும் ஒரு குறிப்பு கிடைக்கிறது.இடுமுள்வேலி எயினர் கூட்டுண்ணும்நடுவூர் மன்றத்தடி பெயர்த்தாடிக்கல்லென் பேரூர்க் கணநிறை சிறந்தனவல்லில் எயினர் மன்று பாழ்பட்டனமறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாஅறக்குடிபோல் அவிந்து அடங்கினர் எயினரும்............... (சிலம்பு 12-10,15)மறவர்கள் வளங்குன்றி அறக்குடிகள் போல் சினம் குறைந்து செருக்கு அடங்கி விட்டார்கள் என இளங்கோ குறிக்கிறார். இவர்களை மறக்குடிகள் என்றும் கூறுகிறார். இதிலிருந்து இவர்கள் அறத்துக்கு அடங்காமல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, சினம் மிக்கவராய், கொலை, களவு முதலிய தொழிலையே புரிபவரிகளாகய் காட்டுக குடிகளாக வாழ்க்கை நடத்தியதேலே மறக்குடி, மறவர் என்று பெயர் பெற்றனரோ என்று ஐயுற வேண்டியுள்ளது.இவ்வாறு மறக்குடிகளாக, கட்டுக்கடங்கா காட்டுக் குடிகளாகத் திரிந்தவர்களை வென்று, படிபடியாக பண்பு உள்ளவர்காளாகவும், பொறுப்பு உள்ளவர்களாகவும் மாற்றிய பெருமை தமிழகத்தில் வடபால் பல்லவருக்கும், தென்பால் பாண்டியர்க்கும் சேரும். இக்குடிகளை பண்படுத்தும் கி.பி. 4,5-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 9,10-ம் நூற்றாண்டுக்குள் ஓர் உயர் நிலை அடைய முடிந்தது எனலாம். இந்த நல்வழியில் சிக்காமல் தங்களது கொடுந் தொழிலையும், களவுத் தொழிலைலயும் தொடர்ந்து நடத்திவந்த ஒரு சில குறவர் போன்ற குடிகள் ஆங்காங்கே இருந்திருக்கதான் வேண்டும்.
மழவர்:
மறவர்களைப்போலவே மழவர் என்ற ஒரு குடியினரும் சங்க காலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வில்லையே ஏராக உடையவர்கள். வேலை ஏந்தியவர்கள். வேல்களின் காலில் கடையாணி இடப்பட்டிருக்கும். அவர்கள் இருமல் நீங்க மண்ணை வாயில் அடக்கிக் கொள்வர். மழவர் தங்கள் இளைஞருக்கு படைக்கலம் பயில்வித்தனர். அது அரங்கேற்றும் நாளை ஒரு பெரும் விழாவாக நடத்தினர். அதற்கு பூந்துடை விழா என்று பெயர் (அகம் 187). மறவர்கள் போல் மழவர் கொடுந்தொழில் மிக்கோர் அல்லர். அவர்களது பெயரால் மழநாடு என்று ஒரு பகுதியே இருந்தது. இதிலிருந்தே அவ்வீரர்கள் பண்புள்ள நாட்டவர்களாகத் திகழ்ந்தனர் என்று அறியலாம். திருஞான சம்பந்தரை கொல்லிமழவன் சந்தித்தான் என்று பெரிய புராணம் கூறும். பிற்காலத்தில் மழவரயர் என்ற பெயரில் பல ஒப்பற்ற வீரர்கள் இருந்துள்ளனர். சோழப் பேரரசர்கள் மழவர் குடியில் பெண் கொண்டனர். சோழ மாதேவயில் ஒப்பற்ற திலகமாக திகழ்ந்த செம்பியன் மாதேவியார் மழவரையர் மகளார் ஆவர்.
பல்வேறு படையினர்:
சங்க காலத்தில் பலவேறு படையினர் இருந்தனர் என்று அறிகிறோம். கடும்பரி கடவுவார் (குதிரைப் படை), களிற்றின் பாகர் (யானைப் படை), நெடுந்தேர் ஊருநர் (தேர்ப் படை), கடுங்கண் மறவர் (காலாட்ப் படை) ஆகியோரைச் சிலம்பு கூறுகிறது. சங்க காலத்திலேயே படைத் தலைவர்கள் படைகளை ஆராயும் வழக்கம் உண்டு (பதி. பத் 97). வேலுக்கு புலித்தோலால் ஆன உறை வைத்திருந்தனர் (பதி. பத் 24-2). இளங்கோசர்கள் என்பவர் முரக்க மரத்தாலான தூணை இலக்கமாகக் கொண்டு படைக்கலம் பயில்வர் (புறம் 169). பல்லவர் காலத்தில் படைத் தலைவர்கள் இருந்தனர். கி.பி. 3, 4-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இவர்கள் படர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற்காலப் பல்லவர் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சேவகர் என்றும் வீரர் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். பாண்டியர்களது செப்பேடுகளில் சாமந்தர், மகாசமந்தர் என்றும் கூறப்படுகின்றனர். சோழர் காலத்தில் சேனைத் தலைவர்கள், தண்ட நாயகன், மகாதண்ட நாயகன், சேனாபதி என்று ஆழைக்கப்படுகின்றனர்.
கைக்கோளப் படை:
கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து படையினரில் கைக்கோளர் என்ற பிரிவினர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் ஏன் கைக்கோளர் என அழைக்கப்பட்டனர் என்று தெளிவாக தெரியவில்லை. கைக்கோளர் என்று சொல் கைகொள்வார் என்னும் பொருளில் வந்திருக்க கூடுமோ என்று ஐயம் உள்ளது. அரசன் சிறந்த தன் வீரர்களுக்கு கை கொடுப்பது மரபு போலும். பகைவரை வெற்றி கண்ட மன்னன் தேர்த்தட்டில் தன் வீரர்களோடு கைக்கோர்த்து ஆடுவான் என்று சங்க நூல் குறிக்கின்றது. அரசனது கை கொள்ளும் பேறு பெற்றமையால் கைக்கோளர் எனப் பெயர் பெற்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.முதல் பராந்தக சோழன் காலத்தில் “ஆதித்த சோழத்தெஞ்ச கைக்கோளர்” என்ற படையினர் குறிக்கப்படுகின்றனர். இது பராந்தகனின் தந்தையாகிய ஆதித்த சோழன் பெயர் பெற்ற படை என்பது தெளிவு. பராந்தகன் பெயரால் பல கைக்கோள்ப் படைகள் இருந்தன. மதுராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர், பராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர்ல, சிங்களாந்தகத் தெரிஞ்ச கைக்கோளர் முதலிய படைகள் இருந்தன. அரிஞ்சய சோழன் காலத்தில் கரிகால சோழத் தெரஞ்ச கைக்கோளர், கோதண்டராமத் தெரிஞ்ச கைக்கோளர், தானத்தொங்கத் தெரஞ்ச கைக்கோளர், வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளர் முதலிய படைகள் இருந்தன. இராஜேந்திரனின் கல்வெட்டில் இராஜராஜனின் பெயரால் அருள்மொழி தேவர் தெரிஞ்ச கைக்கோளர் என்பவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். இப்படைகளின் பெயரில் “தெரிஞ்ச” என்ற சொல் தேர்ந்தெடுத்த என்ற பொருள்படும் போலும்!. சில கல்வெட்டுகளில் (18, 19/19) மூத்தவாள் பெற்ற கைக்கோளர் என்பவர்கள் குறிக்கப்படுகின்றனர். அரசனிடமிருந்து வாளை முதலில் பெறும் பேறு பெற்றதால் இப்பெயர் பெற்றனர் போலும்.
வலங்கை இடங்கை:
கி.பி 10-ம் நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு பிரிவை காண்கிறோம். இப்பிரிவு தமிழக வரலாற்றில் ஒரு சமூகப் புரட்ச்சியாக சற்றேறக் குறைய அண்மைக் காலம் வரை நிலவி வந்தது. இது வலங்கை, இடங்கை என்று பிரிக்கப்பட்ட குடிகளாகும். தஞ்சைப் பெருங் கோயிலில் இராஜராஜனின் பல பெயர்களால் வலங்கை வேளைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.
இராஜராஜத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
அரிதுர்க்க லங்கனத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
மூத்த விக்ரமாபரணத் தெரஞ்ச வலங்கை வேளைக்காரர்.
இரணமுகராமத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
இராஜ கண்டிவத் தெரஞ்ச வலங்கை வேளைக்காரர்.
சத்ருபுஜங்கத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
அழகிய சோழத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
க்ஷத்ரிய சிகாமணித் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
எனப் பல வலங்கை வேளைக்காரர்கள் இருந்தனர் என்று அறிகிறோம்.வலங்கை வேளைக்காரர் என்பது படை என்றும் அவற்றில் பலகுடியினர் இருந்தனர் என்றும் அறிகிறோம். இராஜராஜனின் படையில் வலங்கை வேளைக்காரனாக வெள்ளாளன் இருந்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது (238/17). இவ்வூர் இருக்கும் வெள்ளாளன் ஸ்ரீ ராஜராஜ தேவர் படை ஜநநாத தெரஞ்ச வலங்கை வேளைக்காரரில் வண்ணக்கன் ஐய்யாறானாகிய சித்திரை யாளி என்று கல்வெட்டுக் கூறுவதால் இதை அறியலாம். அதிராஜேந்திர சோழனுடைய கல்வெட்டில் (4/8) “வலங்கை இடங்கை மகமை” குறிக்கபடுகிறது. இதிலிருந்து வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு 11-ம் நூற்றாண்டிலேயே நிலைத்து விட்டது என்பது தெளிவு.
கைவகுத்தல் (வலங்கை இடங்கை தோற்றம்):
வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு எவ்வாறு தோன்றியது என்று தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும், படை அரசனின் வலக்கைப் புறத்தும், இடங்கை புறத்தும் வகுத்து நிறுத்தப்பட்டதிலிருந்து இது தோன்றியிருக்கலாம் என்று கொள்ளலாம். ஏனாதி நாதர் தனது படையை பாகுபடுத்தி நிறுத்தியதை “கை வகுத்து” என்று பெரிய புராணம் கூறுகிறது. இதிலிருந்து படை வகுப்பது “கை வகுத்தல்” எனப் பெயர் பெற்றது என்பது தெளிவு. சிறந்த திறன் மிக்க போர் புரிவோர் அரசனின் வலப்புறத்தும், அவர்களகுக் களத்தில் படைக் கலஙக்ளை நீட்டித்தருதல் முதலிய பணி புரிவோர் இடைப் புறத்தும் நிறுத்தப்பட்டிருக்க கூடும். போர் புறத்து வீரர்கள் முதலிடமும், வேல் வடித்துக் கொடுத்தல் முதலிய தொழில் புரிவோர் இரண்டாவது இடமும் பெறுவதில் வியப்பில்லை. தங்கள் உயிரை மதியாது போரிட்ட வீரர்களுக்கு உயர் இடம் அளித்தது இயல்பே. உயர் இடத்தைக் குறிப்பதற்காக வலப்புறமும். இரண்டாம் இடத்தைக் குறிக்க இடப் புறமும் கொள்ளப்பட்டன. ஆதலின் காலப்போக்கில் வலங்கையினர் இடங்கையினரைக் காட்டிலும் ஜாதியில் உயர்ந்தவர் என்று கருதிக் கொள்ளத் தலைப்பட்டனர்.எல்லா ஜாதியினரும் போர் வீரர்களாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்று முன்னரே கண்டோம். ஆதலில் எல்லா ஜாதியிலும் வலங்கை இடங்கை பாகுபாடு காணப்பட்டது. ஆனால் பிராம்மணர்களுள் இப்பாகுபாடு காணப்படவில்லைகல்வெட்டுகளில் வலங்கை இடங்கையினருக்கு பல சலுகைகள் அரசனால் அளிக்கப்பட்டவை குறிக்கப்படுகின்றன. சகவருடம் 1340-ல் (கி.பி 1418) திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை வகுக்கப்பட்டது என்றும், வலங்கைக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் என்ன என்பதும் குறிக்கப்படுகின்றன. “திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை இல்லை. திருவண்ணாமலையில் இரண்டு தெருவில் கைக்கோளாருக்கு முன்பு பூர்வம் நடந்த போந்த சங்கு, தண்டு, ஆனை, சாமரம் மற்றும் வலங்கைக்கு உரிய வரிசைகள் எல்லாம் நடக்கக் கடவதாக” என அரசன் ஆணையி்ட்டதை கல்வெட்டுக கூறுகிறது (155/8). சகவருடம் 1350-ல் (கி.பி 1428) திருவையாற்றில் வலங்கை சாதி 98-ம், இடங்கை ஜாதி 98-ம் குறிக்கபடுகின்றன. “பொய்கை நாட்டு தென்கால சபையாரும், வலங்கை 98 ஜாதியும், இடங்கை 98 ஜாதியும் நிறைவற நிறைந்து, குறைவரற குவிந்து” என்று குறிக்கிறது. இதிலிருந்து கி.பி 15-ம் நூற்றாண்டில் சற்றேறகக் குறைய 98 ஜாதிகள் வலங்கையிலும், இடங்கையிலும் இருந்ததாக அறியலாம். இதிலிருந்து ஒவ்வொரு ஜாதியிலும் வலங்கையும், இடங்கையும் இருந்தனர் என்பது தெளிவு. செல்வத்தாலும், செல்வாக்காலுமே இப்பிரிவு ஏற்பட்டுப் பின்னர் ஜாதி அடிப்படையில் அமைந்தது என்று கருதலாம். வலங்கை என்பது அரசனால் ஏற்படுத்தப்பட்டது என்பது தெளிவு.
போர்ப்படை இசைஞர்
சோழர் காலத்து படையினரைப் பற்றி கண்டோம். படையில் வீரரைத் தவிர, முரசு முழங்குவோர், குழல் ஊதுவோர், வாத்தியம் வாசிப்போர், முதலிய இசை வல்லுனர்கள் இருந்தனர். படைக்கெனத் தனி இசைக் குழு இருந்தது. இராஜராஜன் தனது படையில் சிறந்த வாத்யம் வாசிப்பாரையும், இசைஞரையும் பெரிய கோயிலில் பணிபுரிய அமர்த்தினான். இதிலிருந்து படையில் இருந்தவர் இசை வல்லமையினால் அரசனால் போற்றப்பட்டனர் என்பது தெளிவு.இராஜராஜனின் தஞ்சைக் கோயிலில் வங்கியம் வாசிக்க அமர்த்தப்பட்டவன் நிகரிலி சோழத் தெரிஞ்ச உடனிலைக் குதிரைச் சேவகரில் இருந்து வந்த தஞ்சை கணபதி என்பவன். முத்திரைச் சங்கு ஊதுபவன் யானைப்பாகரில் இருந்து வந்தவன். பக்கவாத்தியர் பலரும் காந்தர்வர்கள், (இசைப்பவர்கள்) பலரும் வலங்கை வேளைக்காரப் படைகளிலிருந்து வந்தவர்கள் என்று தஞ்சைப் பெருங் கோயிலில் கல்வெட்டுக் கூறுகிறது.
ஈழவர்:
ஈழவர் என்ற குலம் சங்க காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கி.பி. 3, 4-ம் நூற்றாண்டில் நிலைத்திருந்திருக்க வேண்டும். ஈழவர் என ஏன் பெயர் பெற்றனர் என்று தெரியவில்லை. ஈழநாட்டில் இருந்து வந்து இவர்கள் குடியேறிவர்களாக இருக்கலாம்.ஈழவர் மரம் ஏறும் தொழிலில் வல்லமை பெற்றிருந்தனர் என அறியலாம். சில கல்வெட்டுகள் கோயில்களுக்கோ அந்தணர்களுக்கோ கொடுக்கப்பட்ட நிலங்களில் ஈழவர் ஏற்க்கூடாது என்று கூறுகின்றன. தண்டந் தோட்டம் செப்பேடுகள் “இவ்வூரெல்லையில் தெங்கும், பனையும் ஈழவர் ஏறப் பெறாதாராகவும்” என்று கூறுகிறது. இதிலிருந்து கள் இறக்குவாற்காக இவர்கள் மரம் எறுவர் என்றும், இது அரசாங்கத்தின் கட்டுப்பட்டில இருந்தது என்றும் அறியலாம். கல்வெட்டுக்களில் ஈழப்பூட்சி என்னும் ஒரு வரி குறிக்கப்படுகிறது. அது இத் தொழில் மீது இடப்பட்ட வரி என அறியலாம்.இக்குடியை சாணார் என்றும் அழைப்பதுண்டு. சாணார் என்ற பெயர் சான்றார் என்ற சொல்லில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். ஏனாதி நாதர் என்னும் நாயனார் ஈழக் குலத்தைச் சாரந்தவர். அவர் ஈழகுலச் சான்றார் எனக் குறிக்கப்படுகிறார்.இக்குலத்தவர் வில் தொழிலில் சிறந்து அரசனுக்கு வில்வி்த்தை கற்றுத்தரும் சிறந்தோர்களாகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். ஏனாதி நாதர் மன்னருக்கு “வென்றி வடிவாட் படை பயிற்றும் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்தவர்”. பிறருக்கும் படைப்பயிற்சி அளித்து அதனால் பெருஞ் செல்வம் பெற்றவரும் உண்டு என ஏனாதி நாதர் வரலாற்றிலிருந்து அறிகிறோம். இது குலமுறையாகவே வருவது உண்டு. இவர்களில் பயிற்சி பெரும் பிறர் மள்ளர் என்றும் ஆழைக்ப்படுவர்.