தமிழ் நாட்டில் முடியுடைய பெருமை வாய்ந்தவர்களாய்ச் சேர, சோழ, பாண்டியர் குடி திகழ்ந்தது என்பதையும் அவர்களே வேந்தர் எனப்பட்டனர் என்பதையும் அறிவோம். பிற்காலத்தில் பல்லவர்களும் வேந்தராய் கருதப்பட்டனர். இவர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் ஆங்காங்கு ஆண்டு சிறப்பெய்தியுள்ளனர். இவர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர். பல ஒப்பற்ற வேளிர்களை சங்க இலக்கியம் குறிக்கிறது. ‘வேந்தரும் வேளிரும்’ எனஆளும் அரசர்க்கு அடுத்து, பெருமை பெற்றவர்கள் வேளிர்கள்.
பதினென்குடி:
இவர்களில் ஆய், இருக்குவேள் முதலிய பல குடிகள் இருந்தன. இவர்கள் பதினெட்டுக் குடியைச் சேர்ந்தவர் என்றும் பதினெண் வகைக் குடியைச் சேர்ந்தவர் என்றும் நச்சினார்க்கினியார் குறிக்கிறார். இவர்களின் அந்த 18 குடிகள் எவை என நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. பதினெட்டு என்னும் எண்ணிக்கை ஒரு காலத்தில் சிறந்ததாக கருதப்பட்டுள்ளது. மாபாரதம், 18 நாட்கள் நடந்தது. கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. கூளங்கள் 18 வகைய எனப் பதினெட்டு பலவிதங்களில் சிறப்புற்றிருக்கிறது. இந்தக் கருத்தின் தொடர்பால் இவர்கள் 18 குடியைச் சார்ந்தவர் எனக் கூறப்பட்டனர் போலும். சங்க காலத்திலிருந்தே வேளிர்களில் பலர் வடநாட்டுத் தொடர்பு உள்ளவர்களாகத் தங்களைக் கூறிக் கொண்டனர். வேளிர்களையாதவர் என்றும் குறிப்பர். யதுவின் வழிவந்த 18 குடியினர் என்று மாபாரதம் கூறுகிறது. ‘ஜராசந்தன் எதிர்த்ததால் நாங்கள் 18 குலத்தோரும் இவ்வாலோசனை செய்தோம்’ எனக் கண்ணன் கூறுவதாக அது அமைகிறது. துவாரகை என்னும் துவராபதி இவர்களது தலை நகராகத் திகழ்ந்தது.இருங்கோவேளை வடபால் முனிவனின் ஓமகுண்டத்தில் (தடவினில்) தோன்றி துவராபதியாண்ட வேளிருள் 49-வது வழிவந்த வேளிருள் வேளே என சங்கப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து இவ்வேளிர் குலம் வட நாட்டிலிருந்து தமிழகம் வந்து குடியேறிய ஒன்றாக சங்ககாலத்திலேயே குறிக்கப்பட்டது காணலாம். இதே குலத்தில் வந்தவர்கள் பின்னர் கொடும்பாளூரைத் தலை நகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்டிருக்கிறார்கள். சோழப் பெருமன்னர்களிடம் பெண் கொடுத்தும், கொண்டும் பெரும் புகழ் பெற்றவர்கள். இருக்குவேள் எனப்பெயர்பெற்ற இவர்களது கல்வெட்டுகள் இவர்களை ‘யாதவர்கள்’ எனக் குறிக்கின்றன. விக்கிரகேசரியாகிய பூதியை கொடும்பாளூர்க் கல்வெட்டு யாதவன் என்று குறிக்கிறது.
கண்ணன் வழி வந்தோர்:
கோவர்த்தனகிரிதாரி (மலையைத் தூக்கும் கண்ணன்) - மாமல்லபுரம், கி.பி. 7-ம் நூற்றாண்டுவேளிர்களில் ஆய் மரபினரும் தங்களைக் கண்ணன் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஆண்ட ஆய்குல மன்னன் கோ கருநந்த டக்கன் என்பவனின் பார்த்திவ சேகரபுரம் செப்பேடுகள் அவனை யாதவ குலத்தைச் சேர்ந்தவன் என்றும், கண்ணன் வழி வந்தவன் என்றும் குறிக்கின்றன. இதே மன்னனது பாலியத்துச் சாஸனமும் இவன் விருஷ்னி (யாதவ) குலத்தைச் சார்ந்தவன் எனக் குறிக்கிறது. இச்செப்பேடு முடிசூடிவதற்கன்றே இக்குலத்தோர்களின் தலைகல் உள்ளன எனக் கூறுகிறது. இதிலிருந்து வேளிரும் முடிசூடிக் கொண்டனர் என்பது புலப்படுகிறது.அதியமான், மலையமான், திரையன், பாணன் கங்கர் முதலிய குறுநில மன்னர்களும் ஆண்டிருக்கின்றனர். இவர்கள் வேளிர் குலத்தவரா என்று சொல்லத் தகுந்த சான்றுகள் இல்லை. பொதுப்படையாகக் குறுநில மன்னர் என்ற பொருளில் ‘வேளிர்’ என்னும் சொல் வழங்கப்பட்டது. அவ்வடிப்படையில் இவர்களை வேளிர் எனலாமே தவிர இவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர் எனக் கூற இயலாது. அதியமான் உதியர்களாகிய சேரரின் வழிவந்தவன். திரையன், சோழரின் வழிவந்தவன். பாணர் என்ற சிறந்த குறுநில மன்னர்கள் மஹா பலியின் வழிவந்தோர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் பலருக்கு ‘மாவலிவாணராஜன்’ என்று பெயர் உண்டு. மகாபலியின் வழியில் வந்தவர் என இவரை மணிமேகலை கூறுகிறது. கங்கர் என்பவர் கங்க வம்சத்தில் பிறந்தோர் எனக் கூறிக் கொண்டனர். ஆதலின் இவர்கள் வேளிர் குலத்தைச் சார்ந்தவர் ஆகார்.சங்ககாலத்தில் புலிகடிமால் என்னும் ஒரு வேளிர் குறிக்கப்படுகிறான். இவனது வரலாறு பின்னர் மைசூர்ப் பகுதியை ஆண்ட போசளர்களாலும் (ஹோய்சாளர்) தங்களது மூதாதையருக்கு உரியதாக கூறப்படுகிறது. போசளர்களும் தங்களை யாதவர் என்று கூறிக் கொண்டனர்.
வேளிர் வைசியர்:
வேளிர்கள் அரச குடும்பத்தினர் அல்லர் என்று சிலர் கருதுவர். இக்கருத்து இந்தியாவின் வடலாலும் யாதவர்களுக்கும் நிலவியது. ‘யயாதியின் சாபத்தால் க்ஷத்திரியரில் தாழ்ந்து சைவ்யபிராயரான யது குலத்தில் தோன்றிய வாசுதேவர்க்கும் கோவைச்யரான நந்தகோபனுக்கும் மகனாக விளங்கிய கண்ணன் “(வேளிர் வரலாறு, பக்கம் 30) என்று குறிப்பர்.இதிலிருந்து இவர்கள் முதலில் க்ஷத்திரியர்களாயிருந்தனர் என்றும், பின்னர் அரசுரிமை இழந்தனர் என்றும் வைசியர்களாகப் பின் கருதப்பட்டனர் என்றும் தெளிவாகிறது. அரச குடிக்கும் வைசிய குடிக்கும் உள்ள தொழில்களில் இவர்கள் பாடுபட்டனர். இவர்கள் உழுதொழில், கால்நடைகள் வளர்த்தல், நூற்றல், மண்சுடுதல், போற்றொழில் முதலிய தொழில்கள் செய்தனர் என்பர் (வேளிர் வரலாறு ப. 28). அவர்கள் உழவு தொழிலில் சிறந்தவர் என்பதற்கு ‘நெற்குவியல்களுடைய முத்தூற்றுக் கூற்றத்தை உடைய வேள்’ என சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுவது சான்றாகும். ஆய் என்பவரும் யாதவரும் ஒருவரே என்றும் அவர்கள் கால் நடைகளைக் காக்கும் ஆயர்களே என்பதும் அனைவரும் அறிந்ததே. வைச்யர்களுக்கு குறிக்கப்படும் தொழில்களிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது தெளிவு.
கருத்துக் குழப்பம்:
வேளிர்கள் வரலாற்றின் தொடக்கத்தில் தங்கள் வலியால் முடிசூடியும், வலிவிழந்த நேரங்களில் பிற தொழில்களில் ஈடுபட்டும் வந்திருக்கக்கூடும். ஆதலின் இவரை அரச குடியினர் என்றும் வைசியர் என்றும் கூறும் கருத்துக் குழப்பம் மிகவும் தொன்மையான கால்த்திலேயே ஏற்பட்டு விட்டது என்றும் கொள்ளலாம். வேளிர் அனைவரும் வடநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்று கூறச் சான்றுகள் இல்லை. ஆனால் பெரும்பாலான குடியினர் வந்து குடியேறினர் என்பது திண்ணம். இருக்குவேளிர், ஆய்வேன் ஆகியோர் இவ்வாறு வந்தவர் என்பதில் ஐயமில்லை.
ஏற்றமும் ஒடுக்கமும்:
குறுநில மன்னர்கள் தமிழகத்துக்கு அருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது நடந்த உள் நாட்டுப் போர்களுக்கும் அவர்களே காரணாமாயிருந்திருகிறார்கள். சங்க காலத்தில் தமிழகத்தில் முடியுடை மன்னர் மூவர் ஆண்டனர். ஆனால் அவர்கள் தமிழகம் முழுவதையும் ஆளவில்லை. சேரர் தங்கள் பகுதியில் பெரும் பகுதியையும், சோழர் தங்கள் பகுதியையும், பாண்டியர் தங்கள் பகுதியையும், ஆண்டுள்ளனர். அவர்களே தங்கள் இளங்குடிகளைப் பல இடங்களுக்கு முடிசூட்டி ஆண்டன மூவேந்தர் குடிகளில் வலிமை மிகுந்த கரிகால் பெருவளத்தான், சேரன் செங்குட்டுவன், நெடுஞ்செழியன் ஆகியோர் தோன்றியபோது அண்டைப் பகுதிகள் மீது வெற்றி கொண்டனர். ஆயினும் விரைவில் அவை சிறுசிறு பகுதிகளாக பிரிந்தன. சங்ககாலத்தில் தமிழகத்தில் மூவேந்தருக்கும் பெரும்பகுதி அடிப்படாது இருந்தது: அவற்றில் சிறு சிறு பகுதிகளைப் பல குறுநில மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்கள் வாய்ப்புகளுக்கு ஏற்ப மன்னர்களோடு உறவு பூண்டும் மாறுபட்டும் போரிட்டுள்ளனர்.குறுநில மன்னர்கள் படிப்படியாக வெற்றி கொள்ளப் பட்டு ஒரு பேரரசின் சிற்றரசர்களாக ஆக்கப்பட்டது கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில் எனலாம். தமிழகத்தின் வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியரும் இச்சிற்றரசர்களைத் தங்களுக்கு கீழ்படியச் செய்ததால் தமிழகத்தில் இதுகாறும் காணாத ஒற்றுமை தோன்றத் தலைப்பட்டது. பின்னர் வந்த சோழப் பேரரசர்கள் துங்கபத்திரை ஆற்றிலிருந்து ஈழம்வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவர இது அடி கோலியாகத் திகழ்ந்தது. கி.பி. 10, 11, 12-ம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்கள் சோழப் பேரரசர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டிருந்ததால், தமிழகம் ஒருங்கிணைந்த ஒப்பற்ற நாடாகத் திகழ்ந்தது. சோழப் பேரரசர்களின் காலத்தில் தான் இம்மகத்தான ஆட்சித்திறனை காண முடிந்தது. 13-ம் நூற்றாண்டில் பேரர்சு வலி குன்றத் தொடங்கியதும் சிற்றரசர்கள் ஆங்காங்கே தலை தூக்கி தனித்தனி ஆட்சி நிறுவ முற்பட்டதால் நாட்டில் ஒற்றுமை குலையத் தலைப்பட்டு மாற்றாரின் படையெடுப்புக்கு இடமளித்தது. மாலிக்காபூரின் படையெடுப்பு வெற்றிபெற இதுவே காரணாமாயிற்று.இருப்பினும் விரைவில் சிதறிக்கிடந்த நாட்டுப் பிரிவுகளை ஒருமைப்படுத்தி சிற்றரசர்களை ஓர் ஆட்சிக் கீழ் விஜயநகரப் பேரரசர் நிறுவினர். சோழப் பேரரசு தமிழகம் முழுவதும் ஓராடியில் ஆண்டது இவர்களுக்கு பேருதவியாக இருந்தது. அதன் அடிப்படையில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆய நாடுகளில் பெரும்பகுதிகளை ஒன்றாக்கி, விஜய நகரப் பேரரசு ஆள முடிந்தது. இதன் பயனால் திராவிடம் ஒரு பெரும் நாடாய் இணைந்தது. ஆயினும் சோழராட்சித் திறன் விஜய நகரப் பேரரசிடம் காணவில்லை. மாபெரும் நிலப்பரப்பில் நிலவிய ஆட்சி ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாயக்கர்களின் தன்னாட்சியால் படிப்படியாக வலி குன்றி சீர் இழந்து வெளி நாட்டார் எளிதில் கைப்பற்றும் நிலையை அடைந்து விட்டது. விஜயநகரப் பேரரசு தோன்றிய காரணத்தால் இதுகாறும் தமிழகத்தில், சங்க காலம் தொட்டு வாழ்ந்து வந்த பாணர், கங்கர், அதியர் முதலிய குறுநில மன்னர்களின் குலங்கள் மறைய நேரிட்டன. பொதுவாகப் பார்க்கும் போது தமிழகத்தில் தனியாட்சி நடத்தினர். பின்னர் அவர்கள் ஒரு பேரரசுக்கு அடங்கியபோது நாடு சிறந்த வலிமை பெற்றது. மீண்டும் அவர்கள் தனியாட்சி நிலவ முயன்ற போது நாடு வலி குன்றி மாற்றான் புகும் நிலைக்கு வந்தது.கி.பி. 6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் புகழ் மிகுந்த சிற்றரசர்களைத் தங்களது ஆட்சிக்குகீழ் கொண்டு வந்தனர். இவர்களில் பாணர், கங்கர், முத்தரையர், அதியர் ஆகிய சிற்றரசர்கள் இருந்தனர். இவர்கள் சிற்றரசர்களாய் இருந்த போதிலும், போதிய அதிகாரம் பெற்றிருந்தனர்.
பாணர்
பாணர்கள் பெரும் பகுதியை பல்லவர்களின் பிரதி நிதிகளாக ஆண்டனர். கீழைக் கடற்கரையிலிருந்து வட ஆற்காடு பகுதிவரை பாணர்களது ஆட்சி பரவியிருந்தது. பாணர்கள் அரைசர் என்றும் அதிஅரைசர் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர். பல்லவர்களும் பாண்டியர்களும் தங்களை ஆதிராஜர் என்று கூறிக் கொண்டனர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ‘அதிராஜர்’ அல்லது ‘அதியரைசர்’ எனும் சொல் பேரரசன் என்னும் பொருளை உடைத்து. பாணர்கள் பல்லவர்களின் சிற்றரசர்களாக ஆண்ட போதிலும் தங்களை அதியரைசர் என்று கூறிக் கொள்வதிலிருந்து இவர்கள் ஆட்சியில் தேவையான அதிகாரம் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது.
கங்கர்
வடஆற்காட்டின் மேற்கிலும் தெற்கிலும் கங்கர் என்ற சிற்றரசர் ஆண்டனர். இவர்களும் சங்க காலத்திலிருந்தே இப்பகுதியை ஆண்டனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இவர்களும் அதியரைசர் எனக் கூறிக் கொண்டனர். ஆயினும் பல்லவர்களுக்கு அடங்கியாண்டனர். மேலைக் கடற்கரையில் கொங்கனப் பகுதியில் ஆண்ட மேலைக் கங்கர்கள் இவரே என்று வரலாற்று ஆசிரியர் கருதுவர். ஆனால் அண்மையில் கிடைத்த சான்றுகள் இரு குடியினரும் வேறு எனக் கருதும் வகையில் உள்ளன. கொங்கானத்தை ஆண்டவர் கொங்கன்யாதிராஜர் என்றும் இவர்கள் கங்கதியரைசர் என்றும் குறிக்கப்படுகின்றனர். கொங்கனியரசர்கள் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றும் கங்கர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றும் கருத இடமிருக்கிறது. இருப்பினும் கொங்கனி அரசர்களும் தங்களைக் கங்கை வம்சத்தில் பிறந்தவர் என்று கூறிக் கொள்கின்றனர்.கங்கர்கள் பாணர்களைப் போல் பல்லவருக்கு அடிபணிந்த போதிலும் பாணர்களோடு அடிக்கடி போரிட்டனர்.
முத்தரையர்
தஞ்சாவூர், செந்தலை, வல்லம் என்ற பகுதிகளை முத்தரையர் என்ற குறுநில மன்னர்கள் 6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் ஆண்டனர். இவர்கள் தமிழில் சிறந்த பற்றுக் கொண்டவர். தஞ்சையர்கோன், என்றும் நற்புகழாளன் என்றும் இம்மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர். இம்மன்னர்களைப் பற்றி ஆசிரியரிடையே பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முத்தரசர் என்ற பெயரின் மருவிய உருவே முத்தரையர் என்பதாம். தஞ்சை, திருச்சி பகுதிகளில் இன்றும் முத்து ராஜா என்னும் குடியினர் உள்ளனர். இவர்கள் முத்தரசர் குடியைச் சேர்ந்தவரே. கங்கரசர், பாணரசர் என்பது போன்று முத்தரசர் என்பது முத்து அரசர் என்பதின் திரிபே.இவர்கள் களப்பிரர் என்று குறிக்கப்படும் குடியினரே என்றும், இவர்கள் மைசூர்ப் பகுதியிலிருந்து தஞ்சைப் பகுதிக்கு குடியேறி இருக்க வேண்டுன் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவர்களை களவரகள்வர் என்று செந்தலைக் கல்வெட்டு கூறுகிறது. இதை களவர களவர் என்றும் கள்வர் கள்வர் என்றும் படிக்கலாம். களவர கள்வர் என்று படித்தால் இவர்கள் களவரர் என்னும் கருத்து ஏற்புடையதாகும். இவர்கள் களப்பிரர் என்னும் கருத்து நிலைப்படுமானால் கி.பி. 4-ம் நூற்றாண்டிலேயே முத்தரையர்கள் தஞ்சைப் பகுதியைப் கைப்பற்றிவிட்டனர் எனலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலில் புத்த தத்தர் என்னும் புலவர், அச்சுதவிக்காந்தன் என்னும் களப்பிர மன்னன் சோழ நாட்டை ஆண்டான் எனக் குறிக்கிறார். காவிரிப் பூம்பட்டினம் அவன் ஆட்சியின் கீழ் இருந்தது. பெரும்பிடுகு முத்தரையன் என்னும் அரசன் முத்தரையர்களில் சிறந்தவனாக விளங்கினான். முத்தரசர்கள் பெரும்பாலும் பல்லவர்களில் சிற்றரசர்களாகவே திகழ்ந்தனர். சில நேரங்களில் பாண்டியர்களுக்கு அடிப்பட்டும் ஆண்டனர்.தஞ்சை இவர்களால்தான் புகழ் பெற்றது. தஞ்சையை ஆண்ட இவர்களை வென்றுதான் விஜயாலயன் சோழப் பேரரசை நிறுவினான். இவர்கள் சோழர்களால் அடக்கப்பட்ட பிறகு மீண்டும் உயர் நிலையை அடையவில்லை.
இருக்குவேன்:
கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இருக்குவேளிரைப் பற்றி முன்னரே குறிப்பிட்டோம். இவர்கள் இருக்குவேள் என்றும் இளங்கோவேள் என்றும் பட்டம் ஏற்று ஆண்டனர். அரசனாக ஆண்டவர் இருக்குவேள் என்று பட்டம் ஏற்றும் மற்றவர் இளங்கோவேள் என்று பட்டம் ஏற்றும் ஆண்டனர். 6, 7, 8 நூற்றாண்டுகளில் இவர்கள் பல்லவர்களுடனும் பாண்டியர்களுடனும் தொடர்பு கொண்டு ஆண்டனர். இவர்களது உதவியால் தான் சோழப் பேரரசு நிலைநிறுத்தப்பட்டது. இவர்களது குடியில் வந்தவர்கள் சோழர்களுக்கு சிறந்த சேனாதிபதிகளாகத் திகழ்ந்து வந்ததோடு தங்கள் பெண்களைச் சோழ அரசர்களுக்கு மணம் செய்து கொடுத்தனர். இவர்கள் பாண்டியப் பெண்களையும், சோழப் பெண்களையும் மணந்தனர். கொடும்பாளூரில் இவர்களால் எடுக்கப்பட்ட கோயில் ஒன்றில் கன்னடக் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து இவர்கள் கன்னடத்தொடர்பு உடையவர்கள் என்பதும் புலப்படுகிறது. இவர்களை யாதவர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது.
பழுவேட்டரையர்:
பழுவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பழுவேட்டரையர்கள் சோழர் காலத்தில் சிறப்பெய்தியவர். இவர்களும் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்களே என்று கொள்ளலாம். இவர்கள் தங்களை மகரிஷிகோத்திரத்து க்ஷத்திரியர் எனக் கூறிக் கொண்டனர் என்று முனனரே கண்டோம். இவர்களும் சோழ மன்னர்களுக்கு உறுதுனையாக நின்றவர்கள். சுமார் 9-ம் நூற்றண்டிலிருந்து 11-ம் நூற்றாண்டின் இறுதி வரை இவர்கள் சிறப்புடனிருந்தனர்.
அதியர்:
அதியர்கள், உதியர் வழிவந்தவர் என்று முன்னரே கண்டோம். சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த இவர்களது குடி எட்டாம் நூற்றாண்டில் மீண்டும் சிறப்பெய்தியது. அதியர்களில் அதியேந்திரன் என்ற மன்னன் பல பெயர்களுடன் நாமக்கல் குகைக்கோயில்களில் குறிக்கப் பெறுகிறான். அதியர்கள் பல்லவர்களின் கீழ்படிந்து ஆண்டனர். பாண்டிய மன்னன் ஒருவன் அதியர்களோடு பல்லவரையும் வெற்றி கொண்டதை சிறப்பாகக் கூறிக் கொள்வதிலிருந்து அதியர்கள் மிக வலிமிகுந்திருந்தனர் என்பது தெளிவு. பின்னர் இவர்கள் வலி குன்றினர். மீண்டும் 13-ம் நூற்றாண்டில் அதியமான் ஒருவன் குறுநில மன்னனாக குறிக்கப் பெறுகிறான். இதன் பின்னர் இப்புகழ் வாய்ந்த குடி மங்கியது.
பிறர் வடநாட்டார்:
சோழர் காலத்திலிருந்து சில புதிய குறுநில மன்னர் குடிகள் புகழ்பெற்றன. சேதிராயர், வத்ஸராஜன், காலிங்கராயர், காங்கேயர், மழவராயர், மகதராஜன், சம்புவராயர், விராடராஜன், கடம்பராயன், காடவராயன், நிஷதராஜன், அயோத்திராஜன், முதலிய குறுநில மன்னர்களின் குடிகள் சிறந்தன. இக்குடிகளில் சேதி, வத்ஸம், கலிங்கம், மகதம், விராடம், நிஷாதம், அயோத்தி முதலிய பெயர்கள் இவர்களுக்கு வடநாட்டுடன் இருந்த தொடர்பை அல்லது ஈடுபாட்டைக் குறிக்கின்றன. இவர்களது குடிகள் அந்நாடுகளில் இருந்து தமிழகம் வந்து குடியேறியவை என்று கூறமுடியாவிட்டாலும் அந்நாடுகளிலிருந்து வந்ததாக இவர்கள் கூறிக் கொள்வதில் பெருமை கொண்டனர் என்று கொள்ளலாம்.இக்குடிகளில் காடவராயர் என்னும் குடியும், சம்புவராயர் என்னும் குடியும் 13-ம் நூற்றாண்டில் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன. காடவர்களில் சிறந்த கோப்பெருஞ்சிங்கன் என்பவனே சோழப் பேரரசுக்கு முடிவு கட்டியவன். சம்புவராயர் என்பவர்கள் தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை 13-ம் நூற்றாண்டின் இறுதியில் தனியாக ஆட்சி நடத்தினார்கள்.14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு தோன்றியதும், இக்குறுநில மன்னர்களின் குடிகள் மறைந்து போயின. விஜய நகர மன்னர்களின் பிரதிநிதிகளாக, தானைத் தலைவர்களாக வந்த நாயக்கர்கள் விரைவில் தனியாட்சி நிறுவினர்.
தனிப் படையும் தனி ஆணையும்:
சிற்றரசர்கள் பேரரசர்கட்கு உட்பட்டு ஆண்டபோதிலும், அவர்களுக்குத் தனிப்படையும் அதிகாரங்களும் இருந்தன. பல்லவர்கட்கு கீழ்படிந்த பாணர்களுக்கும் கீழ் இருந்த பல சேவர்களைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ‘பெரும்பாணதியரைசர் சேவகர் சிற்றுப் பாடி பனையனார்’ என்பனபோல வரும் பல கல்வெட்டுகளைக் இதற்குச் சான்றாக கூறலாம். சோழர் காலத்திலும் இது போன்ற சேவகர் இருந்தனர். “கருகாவூர் கிழவன் மருதம் பட்டனான சோழ வேளாந் சேவகன் நும்பன் கண்டன்” என்பவன் திருபழனம் கோயிலில் பராந்தகன் காலத்தில் குறிக்கப் பெறுகிறான் (173/19). இச்சேவர்களில் பலர் தங்கள் தலைவன் இறந்தால் அவர்களோடு தீப்பாய்ந்தனர். பழுவேடரையன் மாறவன் குமரன் இறக்க, அவனுடன் அழகியான் மறவன் என்பவன் தீப்பாய்ந்தான் (172/19). அவ்வாறு தீப்பாயும் போது கோயிலுக்கு ஒரு விளக்கு வைத்துவிட்டு அவன் தீப்பாய்ந்தான்.அரசர்களுக்கு இருந்ததுபோல் குறுநில மன்னர்களுக்குப் பல துறைகளிலும் பணிபுரிவோர் இருந்தனர். அடிகள் பழுவேடரையர் மறவன் கண்டனாருக்கு குன்றநாட்டுக் கண்டப் பெருந்தினை என்பவன் கன்மியாக இருந்தான் (273/19). நாவலூர் உடையான் கண்டன் தேவடி என்பவன் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன் என்பவனுக்கு ஸ்ரீ காரியம் ஆராய்பவனாக இருந்தான் (327/19).
மனைவியர்:
சிற்றரசர்களின் தேவியர் அரைசி என்றும், தேவி என்றும், அகமுடையாள் என்றும் அழைக்கப்படுகிறாள். ‘அரையன் மஹிமாலயன் ஆன பராந்தக முத்தரையன் அரைசியான பஞ்சவன் மாதேவி’ என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது (61/19). வன்னாடுடையார் மழநாட்டு வேளார் என்றும் வன்னாடுடையார் தேவியார் சதிரயன் உத்தம சீலியார் என்றும் மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது (255/19).வேளார்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் உண்டு. அவர்கள் அகமுடையாள் என்றும் அழைக்கப்படுவதும் உண்டு. ‘விக்கிரமசோழ மாராயன்’ என்பவன் கோவிந்தபுத்தூர் என்னும் இடத்தில் ஒரு கற்கோயிலை எடுப்பித்தான். அவனது இருமனைவியர் கோயிலுக்கு நிலம் அளித்துள்ளனர். இருவரும் ‘அகமுடையாள்’ என்று கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றனர் (333, 334/19).சிற்றரசன் இறக்க அவனுடன் மனைவியும் தீப்பாயும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. வீரசோழ இளங்கோ வேளார் என்பவர் இறக்க அவரது தேவி கங்கமாதேவி என்பவள் தீப்பாய்ந்தாள். இது கண்டராதித்த சோழர் காலத்தில் நடந்தது. அவ்வாறு அவள் தீப்பாயும் முன்னர் அல்லூர் என்னும் கோயிலில் நொந்தா விளக்கு எரிக்க பொருள் கொடுத்து பின்னர் இறந்தாள் (630/8).குறுநில மன்னர்களது குடிவந்தவர்களே வேளார் ஆவர் என்பது இளங்கோ வேளார் என்பதிலிருந்து அறியலாம். இவர்கள் சிற்றரசர்களாக இருந்ததோடன்றி பேரரசர்களின் சிறந்த சேனாபதிகளாகவும் திகழ்ந்துள்ளனர்.
சேனாபதிகள்:
பல்லவருக்கும் பாண்டியருக்கும் பலர் சேனாபதிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். சோழர்களது சேனாபதிகளி பலர் வேளிரும் வேளாரும் ஆவர். இராஜராஜனுக்கு குரவன் உலகளந்தாணன இராஜராஜ மாராயன் என்பவன் சேனாபதியாய் இருந்தான். முதல் இராஜேந்திரனுக்கு விக்கிரம சோழிய வரையன் ஆகிய அரையன் இராஜராஜன் என்பவனும், முதல் இராஜாதிராஜனுக்கு இராஜேந்திர சோழ மாவலி வாணாதிராஜன், ஜய்ங்கொண்ட சோழ வாணகோவரையன், இராஜாதிராஜ நீலங்கரையன், இராஜாதிராஜப் பல்லவரையன் முதலியோரும் சேனாபதிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதிராஜேந்திரனுக்கு இராஜராஜன் ஜெயங்கொண்ட சோழனான சேனாபதிகள் இருக்குவேளார் என்பவர் சேனாபதிகளாக இருந்தார் (754/18). இரண்டாம் இராஜராஜனுக்கு, இராஜராஜ அணிமுரி நாடாழ்வான் என்பவனும், வீரராஜேந்திரனுக்கு வீரராஜேந்திர காராணை விழுப்பரையன் என்பவனும் சேனாபதிகளாயிருந்தனர். முதல் குலோத்துங்கனுக்கு கருணாகரத் தொண்டைமானும் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்னும் நரலோகவீரனும் சேனாபதிகளாய் திகழ்ந்தது அனைவரும் அறிந்ததே. இது போன்று சிற்றரசர்களும் வேளாளர்களும் அரசனின் சேனாபதிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.சில சேனாபதிகள் சிறந்த கல்விமான்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக்குடிச் செப்பேட்டிற்கு தமிழ் பிரசஸ்தி பாடியவன் ஏனாதி சாத்தன் சாத்தன் என்னும் சேனாபதியாகும். “பிரசஸ்தி பாடினான் சேனாபதி ஏனாகி சாத்தன் சாத்தன்” என அச்செப்பேடு கூறுகிறது.
வீரருக்குக் குலப் பெயர் கொடுத்தல்:
ஒப்பரும் வீரர்களுக்கு அரசர்கள் உயர்ந்த குலம் என்னும் அந்தஸ்த்தும் பிற சலுகைகளும் செல்வாக்குகளும் அளிப்பதும் உண்டு. முதலாம் ஆதித்த சோழனுக்கு விக்கி அண்ணன் என்னும் வீரன் பேருதவி புரிந்தான். அவனுக்கு ஆதித்தன் தமிழவேள் என்னும் குலப் பெயர் கொடுத்தான். அதனுடன் ஒரு சிறந்த ஆசனமும் சாமரை வீசிக் கொள்ளும் உரிமையும், பல்லக்கும், முரசும், மாளிகையும் சிறந்த உணவும், காளமும், யானைகளும் கொடுத்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. மேலும், ஆதித்த சோழனுடன் அவனது அரும நண்பன் சேர மன்னன் இரவி என்பவனும் சேர்ந்து இவற்றை அளித்தான் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. சோழ நாட்டிலும் சேர நாட்டிலும் விக்கி அண்ணன் இச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் கருத்து போலும்.
கல்வெட்டு:
“தொண்டை நாடு பாவிய சோழன் பல் யானைக் கோக் கண்டனாயின இராஜகேசரி பன்மனாலும் சேரமான் கோட்டன் இரவியாலும் தவிசும், சாமரையும், சிவிகையும், திமிளையும், மாளிகையும், போனகமும், காளமும், களிற்று நிறையும் செம்பியன் தமிழவேள் என்ற குலப்பியரும் பெற விகி அண்ணன்” என்று கூறுகிறது. பொது வாழ்வில் சாமரம் வீசிக் கொள்ளுதல், பல்லக்கில் செல்லுதல், திமிளையும் காளமும் இசைத்துக் கொள்ளுதல் முதலிய அரசால் கொடுக்கபடும் அந்தஸ்துகள் என பிற கல்வெட்டுகளிலிருந்தும் அறிகிறோம். இக்கல்வெட்டில் போனகம் என்று குறிப்பது எதை எனத் தெளிவாகத் தெரியவில்லை. போனகம் என்பது உண்ணும் திரவப் பொருள். அரசனுடன் அமர்ந்து உண்ணும் ஒரு அந்தஸ்தை இது குறிக்கிறதோ எனத் தோன்றுகிறது மேலும் இக் கல்வெட்டு தமிழவேள் என்னும் குலப் பெயர் கொடுத்தான் எனக் குறிப்பதும் சிறப்பாகும். இதிலிருந்து பல குலப் பெயர்கள் இன்று உயர்ந்த ஜாதியாக கருதப்படுபவை, அன்று அரசனால் அளிக்கப்பட்ட பெருமைகள் என்பதில் ஐயமில்லை.