மகேந்திரவர்மனும் அரசமாதேவியரும் - ஆதிவராக மண்டபம், மாமல்லபுரம், கி.பி. 7-ம் நூற்றாண்டு
அரசமாதேவியர்:
சங்க காலத்திலிருந்தே அரசனின் மனைவி தேவி என்றழைக்கப்பட்டாள். அரசமாதேவியர் நாட்டில் சிறந்த நிலை பெற்றிருந்தனர். நல்ல எழில் வாய்ந்தவளாயும் கற்புடைய மங்கையாகவும், இன்மொழி பேசுவளாயும், தன் தலைவன் மாட்டு ஆறாக்காதல் கொண்டவளாகவும் திகழ்ந்தாள் எனப் பல சங்கப் பாடல்களிலிருந்து அறியலாம். ஊடலிலும் இளநகை அளிக்கும் தன்மையாள் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.ஆறிய கற்பின் அடங்கிய சாயல்ஊடினும் இனிய கூறும் இன்நகைமிர்து பொதி துகர்வாய் அமர்த்த நோக்கின்சுடர் நூதல் அசை நடைஉள்ளலும் உரியன்”................(பதி. பத். 6-11, 13)
களங்களாய்க் கண்ணி நார்முடிச் சேரலின் தேவி:--
......... வண்டுபடஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல் பொன்னின்இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்திவிசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்தசெம்மீன் அனையள் நின் தொல்நகர்ச் செல்வி.......................... (பதி. பத். 31, 23-28)என்று புகழப்படுகிறாள். கற்புனுக்கே விளக்கு என்றும், வானத்து விளங்கும் அருந்ததி போன்றவல் என்றும் புகழப்படுகிறாள்.சங்க காலத்தில் மன்னர்களை அவர்களது தேவியின் சிறப்பைக் கூறி அவளது கனவன் எனப் புலவர் பாடுவர். கொடுங்குழை கணவ, திருந்திழை கணவ, வாணுதல் கணவ, நண்ணுதல் கணவ, ஆன்றோள் கணவ, சேயிழை கணவ, நல்ளோள் கணவ, புதையோள் கணவ, ஒண்டோடி க்ணவ எனப் பலவாறாக சங்க நூல்கள் குறிக்கின்றன.
எழில்:
அரச மாதேவியரின் அழகு பல இலக்கியங்களிலும் சில கல்வெட்டுகளிலும் சிறப்பாகப் புகழப்பட்டுள்ளது. பல்லவ மன்னன் இராஜசிம்மன் என்பவனின் தேவி, தன் தலைவனிடத்தில் ஈடில்லாக் காதல் கொண்டவள் என்று வர்ணிக்கப்படுகிறாள். மகளிர் குலக்கொடி போல் விளங்குகிறாள் (நாரீனாம் பதாகா) என்றும் அவள் பெயர் ரங்கபதாகை என்றும் கல்வெட்டுக் கூறுகிறது. இதே மன்னனின் மற்றொரு மனைவி விலசவதி என்று பெய்ர் பெற்றவள். அவள் ஒப்பற்ற அழகியாய்த் திகழ்ந்தவள். “அழகாலும் உருவாலும் சிறந்த மகளிர்களைத் தோற்றுவிப்பதில் சிறந்த வல்லமையை நெடுங்காலமாக நான்முகன் பெற்றிருக்கிறான். அவன் ஆற்றலின் முழுமையும் எழிலாக, மென்மையாக, அன்பாக, தூய்மையாக இவள் உருவெடுத்திருக்கிறாள்” என்று கல்வெட்டுக் கூறுகிறது. நந்திவர்மன் என்னும் பல்லவ அரசனின் தேவி இராஷ்டிரகூட குலத்தில் பிறந்த சங்கா என்று பெயர் பெற்றவள். அவள் பூமிதேவியைப் போல் பொறுமையே உருவானவள். தாய்போல் உலகிடத்தில் அன்பு பூண்டவள் என்றும் வர்ணிக்கப்படுகிறாள் (பாகூர் செப். 20-21). விக்கிரம சோழனின் தேவி தரணி முழுதுடையாள் என்பவள் “மாதர் மடமயில்” என்றும் “பூதலத்து அருந்ததி” என்றும் புகழப்படுகிறாள். இரண்டாம் இராஜராஜனின் தேவி ‘அறம் புரக்கும் கருணைவல்லி’ என்று புகழப்படுகிறாள். இவனுடைய தேவி தரணி முழுதுடையாள் என்பவளின் அழகு கல்வெட்டில் மிகவும் சிறப்பாகப் புகழப்படுகிறது.பேர் படைத்த நான்முகத்தோன் பெரும்படைப்பை வளர்க்கும் பனைவையமேத் துஞ் சமந்தகமணி மாதவன் புனை கவுத்துவமணிதையலார்க்கு ஒரு சூளாமணி சதுர்வேத சிந்தாமணிபுண்ணியம் ஒரு வடிவு கொண்டு புகழென்னும் மணி புனைந்துபெண்ணியல் தனதாகப் பிறந்ததெனச் சிறந்த பேதைஎன்று அவன் மெய்க்கீர்த்தி புகழ்வதிலிருந்து இவளின் அழகும் பெருமையும் அறியலாம்.
பல தேவியர் - அரச குலப் பெண்கள்:
தமிழகத்தை ஆண்ட பண்டைய மன்னர்கள் பல தேவியரை மணந்திருந்தனர். பல தேவியரை மணப்பது அக் காலத்து அரசர்களுக்கு தேவையாயிருந்தது. அண்டை நாட்டு மன்னர்களின் பெண்களை மணப்பதால் நல்லுறவு நிலைநிறுத்த முடிந்தது. இராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். இதனால் கீழைச் சாளுக்கிய நாடும் பலம் பெற்றது. அதே போன்று முதல் இராஜேந்திரசோழன் தன் மகள் அம்மங்காதேவியை, கீழைச்சாளுக்கிய மன்னன் இராஜராஜனுக்கு மணம் செய்து கொடுத்தான். இதன் காரணமாக சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் கீழைச் சாளுக்கிய அரசுக்கு சோழர் உதவி கிடைத்து வந்தது. நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியை மணந்திருந்தான். பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன், சோழன் மகள் மங்கையர்கரசியை மணந்திருந்தான்.பல்லவ மன்னர்கள் இராஷ்டிரகூடப் பெண்களை மணந்தனர். நந்திவர்மன் மனைவி சங்கா என்பவள் இராஷ்டிரகூடப் பெண் என்று கண்டோம். அதே போல் பல்லவ குலப் பெண்களை கங்கர்களும், கங்கர் பெண்களை பல்லவர்கலும் மணந்தனர். அது மட்டுமல்ல, தாங்கள், முடிசூடும் மன்னர்குலப் பெண்களை மணப்பதே தமக்கும் தம் குலத்துக்கும் பெருமை என்று இவர்கள் கருதியது ஒரு சிறப்பாகவும்.
சிற்றரசர்களின் பெண்கள்:
மன்னர்கள் பல சிற்றரசர் பெண்களையும் மணந்திருக்கின்றனர். பல சிற்றரசர்களின் பெண்களை மணந்தால் அவர்களது உதவி மன்னர்களுக்குக் கிட்டியது. கரிகாலன் நாகூர் வேளிர் பெண்களை மணந்தான். கொடும்பாளூர் வேளிர்களும், பழுவூர் பழுவேட்டரையர்களும், பாணர்களும், கங்கர்களும், மழவரையர்களும் இன்னபிற சிற்றரசர்களும் தங்கள் பெண்களைச் சோழகுலத்தில் கொடுத்து சோழ குலப்பெண்களை தாங்களும் மணந்திருந்தனர். கண்டராதித்த சோழனின் தேவி செம்பியன் மாதேவியார். இவர் மழவரயர் மகள் என்று புகழப்படுகிறாள். “மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்ததேவர் தேவியார் மழவரையர் மகளார் பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார்” (11/19) என்று குறிக்கப்படுகிறாள். கொடும்பாளூர் வேளிர்களின் பெண்களை ஆதித்தசோழன் முதலிய பல சோழர்கள் மணந்திருந்தனர். இராஜராஜ சோழன் தேவியரில் ஒருவள் பழுவேட்டரையன் மகள் என அறிகிறோம். இரண்டாம் இராஜராஜனின் தேவி அவனிமுழுதுடையாள் என்பவள் மலாடகுலத்துப் பிறந்தவள்.சேரமன்னர்கள் தங்கள் கீழாண்ட சிற்றரசர்களின் பெண்களை மணந்திருந்தனர் என்று சங்கப் பாடல்களிலிருந்து அறியலாம். சேரலாதன் வேளாவிக்கோமான் மகள் பதுமன்தேவியை மணந்திருந்தான். உதியஞ்சேரல், வெளியன் என்பானின் மகளை மணந்திருந்தான். பாண்டியன் தேர்மாறன், கங்கராஜனுடன் சம்பந்தம் செய்து கொண்டான் என்று வேள்விக்குடிச் செப்பெடு கூறுகிறது.
மாற்றரசர்களின் பெண்கள்:
மன்னர்கள் மாற்றரசர்களை வென்று அவர்களது பெண்கலை மணப்பது தங்கள் புகழுக்கு ஏற்றமளிக்கும் என்ற காரணத்தாலும் மணந்துள்ளனர். அரசர்கள் சிற்றரசர்களின் பெண்களை மணந்ததுபோல் தங்கள் பெண்களை சிற்றரசர்களுக்கும் கொடுத்துள்ளனர். கொடும்பாளூர்வேளிர் செம்பியன் இருக்கு வேளாயின பூதி பராந்தகன் தேவி சோழப்பெருந்தேவி எனப்படுகிறாள் (646/8) முத்தரையன் மஹிமாலயனின் தேவி பாண்டிய குலத்து உதித்தவள் பஞ்சவன்மாதேவி என்று அழைக்கப்படுகிறாள் இராஜராஜனின் தமக்கை குந்தவைப் பிராட்டி வல்லவரையர் வந்தியத்தேவரை மணந்திருந்தாள். உத்தமசோழரின் தேவியரில் ஒருத்தி மழபாடி தென்னவன் மகள். மற்றொருவள் இளங்கோவேளார் மகள் வானவன்மகாதேவியென்ற பெயர் பெற்றவள். மற்றொருவள் விழுப்பரையர் மகள். நான்காமவள் பழுவேட்டரையர் மகள் எனப் பல சிற்றரசர்களின் பெண்கள் கூறப்பட்டுள்ளனர். இதுபோல் மலைநாடியர், துளுநாடியர், கருநாடியர் முதலிய பல பெண்கள் குலோத்துங்கனின் தேவியராய்த் திகழ்ந்தனர் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.
பட்டத்து அரசி:
இவ்வாறு அரசர்கள் பல பெண்களை மணந்தபோதும் அவர்களில் ஒருவளே பட்டத்தரசியாகக் கருதப்பட்டாள். அவளை அக்ரமகிஷி என்று கல்வெட்டுக் கூறுகிறது. உத்தமசோழரின் பலதேவியரில் ஓரட்டானன் சொரப்பை என்பவள் ‘அக்ரமகாதேவி’ என்று அழைக்கப்படுகிறாள் (141/19). இராஜராஜனின் தேவியரில் தந்தி சக்தி விடங்கி என்னும் லோகமகாதேவி முதலரசியாய்த் திகழ்ந்தாள். விக்கிரமசோழனுக்கு முகோக்கிழானடிகள் என்பவள் பட்டத்தரசியாய்த் திகழ்ந்தாள். அரசனின் பட்டத்தரசியாய்த் திகழ்ந்தவள் இறந்துவிடில், மற்றமனைவியருள் ஒருத்தி பட்டத்தரசியாகக் கொள்ளப்பட்டாள் என அறிகிறோம். முதல் குலோத்துங்கனின் பட்டத்தரசி மதுராந்தகி என்பவள். இவள் குலோத்துங்கனின் 26ம் ஆண்டில் இறந்திருக்ககூடும். ஆதலின் இவ்வாண்டுக்குப் பிறகு இவனின் மற்றொரு மனைவி தியாகவல்லை என்பவள் பட்டத்தரசியாகக் குறிக்கப்படுகிறாள் (பண்டாரத்தார், பி.சோ. சரி. 52) விக்கிரமசோழனின் தேவி முக்கோக்கிழானடிகள் இறந்த பின்னர் தியாகபதாகை என்பவள் பட்டத்தரசியானாள்.
அரசிக்கும் பட்டப் பெயர்:
அரசர்களின் முதல் அரசி அரசனுடன் உடன் முடிகவிழ்க்கப்டட்டாள் என்று முன்னர் கூறினோம்...........மாதரில்ஒக்க அபிடேகஞ் சூடும் உரிமைகள்தக்க தலைமைத் தனித் தேவிஎன்று குலோத்துங்கசோழன் உலாக் கூறுகிறது. அவ்வாறு முடிசூட்டப்பட்டபோது அவர்கள் புதிய பட்டப் பெயர் ஏற்றனர் என்று கொள்ள இடமிருக்கிறது. கண்டராதித்தசோழரின் தேவியின் இயற்பெயர் பிராந்தகன் மாதேவடிகள் என்பது. இதுபோன்ற பட்டப்பெயர் ஏறுகும் மரபு சங்ககாலத்திலிருந்தே திகழ்ந்ததா என்று தெரியவில்லை. பூதப்பாண்டியன் தேவி “பெருங்கோப்பெண்டு” என்று அழைக்கப்படுகிறாள். இது இயற்பெயரோ, பட்டப்பெயரா என்று தெரியவில்லை. அதே போன்று பாண்டியன் நெடுஞ்செழியனின் தேவி ‘கோப்பெருந்தேவி’ என்று சிலம்பு கூறுகிறது. இப் பெயர் பட்டப்பெயர் போல் தோன்றினும் உறுதியாய்க் கூற இயலவில்லை. அதே போன்று அந்துவன் சேரலின் தேவி “பொறையன் பெருந்தேவி” என்று அழைக்கப்படுகிறாள். ஆனால் குட்டுவன் இரும்பொறையின் தேவி அந்துவன் செள்ளை என்றும், செங்குட்டுவனின் தாய் சோழன் மணக்கிள்ளி என்றும் குறிக்கப்படுவதிலிருந்து அவர்கள் இயற் பெயராலேயே பெரிதும் சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர் என்று கொள்ளலாம்.பல்லவர் காலத்தும் சுமார் 8ம் நூற்றாண்டுவரக் தேவியரின் இயற்பெயரே பெரிதும் கிடைத்துள்ளது. 9ம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட மன்னர்களின் தேவியர் தான் “காடவன் மாதேவி”, ‘வீரமாதேவி’ (73/12) போன்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். சோழர் காலத்திலிருந்து தேவியர் பட்டப்பெயரால் அழைக்கப்படுவது சிறப்பாகக் காணப்படுகிறது. பட்டப் பெயரால் மட்டுமா அன்று இயற்பெயரும் பட்டப்பெயரும் இணைந்தோ இவர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர். “பரகேசரிவர்மர் தேவியார் சோழமாதேவியார்” (74/19) என்று பராந்தகனின் தேவி குறிக்கப்படுகிறாள். பரகேசரிவர்மனின் கல்வெட்டில் “நக்கன் தில்லை அழகியாரான சோழமாதேவியார்” என்று (260/19) குறிக்கப்படுவதும், இராஜராஜனின் தேவி ‘தந்திசக்தி விடங்கியான லோகமாதேவி” என்று அழைக்கப்பட்டது இம்மரபை ஒட்டியே.
உலக முழுதுடையாள்:
பத்தாம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து மற்றுமொரு புதிய மரபைக் கான்கின்றோம். சோழமாதேவியர் “உலக முழுதுடையாள்” என்று அழைக்கப்படுகின்றனர். இம்மரபு வீரராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளிலிருந்து காணப்படுகிறது. வீரராஜேந்திரனின் தேவியும் அவன் மகன் அதிராஜேந்திரனின் தேவியும் பின்னர் வந்த குலோத்துங்க சோழனின் தேவியும் உலமுழுதுடையாள் என அழைக்கப்பட்டனர். பின்னர் வந்த சோழர் மெய்க்கீர்த்திகளில் “புவனிமுழுதுடையாள்” ‘தரணிமுழுதுடையாள்’ ‘அவநிமுழுதுடையாள்’ என்று அதே கருத்தில் பல பெயர்கள் காணப்படுகின்றன.சோழர்களுக்கு பின் வந்த பாண்டியர்களும் சோழர் வழியைப் பின்பற்றி தங்கள் தேவியரை உலகமுழுதுடையாள் என்றும் திரைலோக்ய முழுதுடையாள் என்றும் குறித்துள்ளனர். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் தேவியும் சடாவர்மன் சுந்தரபாண்டியன், பராக்ரம பாண்டியன், ஸ்ரீவல்லபன் முதலியோரின் தேவியர்களும் உலகமுழுதுடையாள் என்று அழைக்கப்படுகின்றனர். வீரபாண்டியனின் மெய்க்கீர்த்தி அவன் பட்டத்தரசியைத் திரைலோக்ய முழுதுடையாள் என்று கூறுகிறது.
மெய்க்கீர்த்திகளில் தேவியர்:
இராஜராஜனின் காலத்திலிருந்து அரசனது புகழ் அவன் கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்தியாக எழுதப்பட்டது. இராஜராஜன், முதல் இராஜேந்திரன் அவன் மகன் முதல் இராஜதிராஜன் இவர்களில் மெய்க்கீர்த்திகளில், தேவியர் இடம் பெறவில்லை. கோயில்களுக்குத் தேவியர்கள் தான கொடுத்த இடங்களில் அவர்கள் பெயர் குறிக்கப்பட்டுள்ளனவே தவிர மெய்க்கீர்த்திப் பகுதிகளில் இல்லை. ஆனால் வீரராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளிலிருந்து தேவியும் குறிக்கப்படுகிறாள். ஆதலின் இக்காலத்திலிருந்து அரசமாதேவியர் மேலும் சிறப்பைப் பெற்றனர். அவர்களின் செல்வாக்குப் பெருகியது எனலாம்.
அரியணையில் உடனமர்தல்:
அரசன் அரியணையில் அமர்ந்திருக்கும்போது தேவியர் உடனமர்வது பண்டைய மரபு. சேரன் செங்குட்டுவன் வெள்ளிமாடத்து இளங்கோவேண்மானுடன் இருந்தான் என்று சிலம்பு கூறுகிறது (25.5). கண்ணகி வழக்குரைத்த போது பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தேவி பெருந்தேவியுடன் அரியணையில் அமர்ந்திருந்தான் என்றும் இருவரும் அரசு கட்டிலிலேயே உயிர் நீத்தனர் என்றும் சிலம்பு குறிக்கிறது.புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்அரைசு கட்டிலில் துஞ்சியபாண்டியன் நெடுஞ்செழியன்என்று (23-கட்டுரை 18) சிலம்பு கூறும். ஆதலின் சங்க காலத்திலிருந்தே தேவியர் அரியணையில் அமர்ந்திருப்பர் என்று அறியலாம். ஆயினும் கல்வெட்டுகளில் வீர ராஜேந்திரன் காலத்திலிருந்துதான் தேவி சிம்மாசனத்து உடனிருந்தான் என்று செய்தி குறிக்கப்படுகிறது. பல்லவர் கல்வெட்டிலோ, பாண்டியர் கல்வெட்டிலோ முற்காலச் சோழர் கல்வெட்டிலோ இது காணப்படவில்லை. வீரராஜேந்திரன் கல்வெட்டில் “உலக முழுதுடையாளோடும் வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய உடையார் வீரராஜேந்திர சோழர்” என்று காணப்படுகிறது. பின்வந்த சோழர் மாண்டியர் அனைவரும் இக்கருத்தைத் தங்களின் கல்வெட்டுகளில் குறிக்கின்றனர். ஆனால் பின்னால் வந்த விஜயநகரப் பேரரசர்கள் இதுபோல் அரசியரைக் குறிப்பதில்லை.
உடனமரும் பல தேவியர்:
மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்று கண்டோம். மன்னர் அரியணையில் அமரும் போது பட்டத்து அரசி மட்டும் அன்றி பிற தேவியரும் அரியணையில் அமர்ந்தனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. முதல் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தி தியாகவல்லி என்பவளும் எழிசைவல்லபி என்பவளும் அரியணையில் அமர்ந்திருந்தனர் என்று கூறுகிறது.பேரிளம் பொற்கொடி செம்பியன்கீழானடி ஒருமருங்கு உடனிருப்பஉலகமுழுதுடையாள் உடனிருப்பசெம்பொன் வீரசிம்மாசனத்து புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளியஎன்று மூன்று தேவியர் சூழ அமர்ந்திருந்ததை (598/17) இரண்டாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி கூறுகிறது. விக்கிரமசோழன் தியாகபதாகை என்னும் தேவியுடனும், தரணிமுழுதுடையான் என்னும் தேவியுடனும் உடனிருந்தான் என்று அவன் மெய்க்கீர்த்திகளால் அறிகிறோம். இவ்வாறு இரண்டு அல்லது மேற்பட்ட தேவியர் அரியணையில் உடன் அமர்ந்திருப்பதை பின்னர் வந்த பாண்டியர் மெய்க்கீர்த்திகளோ, அல்லது ‘பிற மெய்க்கீர்த்திகளோ குறிப்பதில்லை. சோழப் பேரரசர்கள் மட்டும் தங்கள் தேவியருக்குச் சிறந்த இடம் அளித்தனர் என இதனால் அறியலாம்.அரசனோடு தேவி அமர்ந்திருப்பதை கல்வெட்டுகள் இமையப் பாவையும் சிவனும் போல், அம்மை அப்பன் போல் அமர்ந்திருந்தனர் என்றும், திருமாலின் மார்பில் திருவீற்றிருப்பதுபோல், எப்பொழுதும் அரசனை பிரியாது வீற்றிருப்பவன் என்றும் குறிக்கின்றன.
தேவிக்கு ஆணை நடாத்தும் உரிமை:
அரசனோடு முடி கவிழ்க்கப்பட்ட தேவிக்கு அரச ஆணையிடுதல் போன்ற பல உரிமைகள் உடன் வந்தன என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. முக்கியமாக இரண்டாம் இராஜராஜன் ஆகிய அரசர்களின் மெய்க்கீர்த்திகள் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கின்றன. முதல் குலோத்துங்கனின் தேவி “சென்னியானையுடன் ஆணையை நடாத்தும் உரிமைத் தியாகவல்லி” என்று கலிங்கத்துப் பரணி குறிக்கிறது. விக்கிரமசோழன் உலா, பெண் சக்கரவர்த்தி என்று தேவியை அழைக்கிறது. “பேரரசு தனிநடாத்திப் பெண்ணரசாய் முடிகுடு உடன் ஆணையும், உடன் இருக்கையும், உடன் அரசும் கடனாகவே படைத்தருளி அறம் புரக்கும் கருணைவல்லி அகலாத மாதாவென்றாரணங்கள் ஒரு நான்கும் புகலவர்ந் தனியாகி” என்று இரண்டாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தி புகழ்கிறது. இதிலிருந்து தேவிக்கு ஆணையும், இருக்கையும், அரசும் உடன் கிடைத்தன என்று அறியலாம்........... அவனியில்எண் பெருமாதிரத்தும் ஏறும்உடன் ஆணைப் பெண்பெருமாள் அந்தப்புர பெருமாள்என்று இராஜராஜன் உலாக் குறிக்கிறது.இரண்டாம் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி,உடன் ஆணையும், திருவாணையும் உடன் செல்ல முடிகவித்தாள்மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம் புனை வளவனுடன்பெண்னரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள்உறையூரும் பேருரகையும் உதகையும் மதுராபுரியும்முறைமுறை ஆண்டருளி முளரிநகர் துறந்த வண்ணம்பொன் ஆசனம் சிங்கவணை பொலங்கற்பகப் பூஞ்சோலைமுன்னேவல் நித்தல் முறை முறையே பெறு முலைப் பெருமாள்”என்று குறிப்பதிலிருந்து அவன் தேவி, பல நகர்களில் அவன் அரியணையில் அமர்ந்தபோது அங்கும் உடன் அமர்ந்தாள் என்றும் அறிகிறோம். மூன்றாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தி இன்னும் சிறப்பாக,உரை சிறந்த தனி ஆணை உடன் ஆணை பெற்றுடையாள்”என்றும் ‘சக்கரவர்த்தி’ என்றும் போற்றுகின்றன. இதிலிருந்து கி.பி. 11-ம் நூற்றாண்டிலும், 12-ம் நூற்றாண்டிலும் அரசமாதேவியர் அரசில் சிறந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு.
தேவியரின் உற்றாருக்குச் செல்வாக்கு:
சங்க காலத்திலிருந்தே அரசமாதேவியரின் உற்றாரும் உறவினரும் அரசில் சிறந்த செல்வாக்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர். குட்டுவன் இரும்பொறை மையூர்க்கிழான் வேள்மான் அந்துவன் என்பவனின் மகள் செள்ளையை மணந்திருந்தான். அவள் மகன் இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சியன் மையூர் கிழான்” என்று அவனைப் பதிகம் குறிக்கிறாது. சிற்றர்சர்கள் தங்கள் பெண்களை அரசர்க்கு கொடுப்பதால் பெற்றிருந்த செல்வாக்கு முன்னரே குறிக்கப்பட்டது.அரசியின் தந்தை மட்டுமல்ல. தாயும் உடன் பிறந்தாரும் செல்வாக்குப் பெற்றிருந்தமை கல்வெட்டுகளால் அறியலாம். பராந்தக சோழனின் தேவி சோழமாதேவியின் தாய், முள்ளூர் நங்கை என்பவள் திருவையாறு, பூந்துருத்தி முதலிய பல கோயில்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்துள்ளாள் (74/19). பராந்தகனின் ஒரு தேவி சோழ சிகாமணி என்பவளின் தாயார் நங்கூரி நங்கை என்பவள் (525/5) கல்வெட்டில் குறிக்கப்படுகிறாள். பராந்தகனின் தேவி சோழமாதேவியின் தங்கை பெருமாள் திருவரங்கி என்பவள் திருவையாற்றுக் கோயிலுக்குப் பொருள் கொடுத்துள்ளாள் (524/5).
போர்க்களத்தும் தேவியர்:
அரசமாதேவியர் அரியணையில் அமரும்போது மட்டுமின்றி, வெளியூர்களுக்கு செல்லும்போது உடன் சென்றனர் என்று கண்டோம். குலோத்துங்க சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற போது அவனுடன் ஏழிசை வல்லபியும், தியாக வல்லியும் உடன் சென்றனர் என்று பரணி கூறும் (பரணி - 285, 286).அரசர்கள் போருக்குச் சென்றபோது தேவியர் உடன் சென்றனரா என்ற ஐயம் எழக் கூடும். பல நேரங்களில் அவர்கள் உடன் செல்லவில்லை. அரசன் போர்ப் புறத்தே இருக்க அரசி அரண்மனையில் தனித்து தவித்து இருந்தாள் என்னும் ‘நெடுனல்வாடை’யிலிருந்து தேவி அரசனுடன் செல்வது நியதி இல்லை என அறியலாம். ஆனால், பல சமயங்களில் அரசர்கள் தங்களுடன் பெண்டிரையும் அழைத்துச் சென்றனர் என்று அறிகிறோம். முதல் இராஜேந்திரன் உத்திரலாடத்து அரசன் மகிபாலனை ஜயித்தபோது அவன் பெண்டிரையும் பண்டாரத்தையும் கைப்பற்றினான் என்று அறிகிறோம். முதல் இராஜாதிராஜன் இலங்கை அரசன் வீரசலா மேகன் என்பானுடன் போரிட்டபோது, அவன் காதலியோடு தாயையும் பிடித்தான் என்று அறிகிறோம். இரண்டாம் இராஜேந்திரன் சாளுக்கியருடன் நடந்த போரில் அங்கு போரிட்டோர் முதல் தேவியர் “சத்தியப்பை, சாங்கப்பை’ என்பவர்களை போர்க் களத்தில் பிடித்தான் என்று “ஒப்பில் சக்தியவ்வை சாங்கப்பை என்று இவர் முதல் தேவியர் குழாமும், பாவையர் ஈட்டம் இணையன பிறவும் முனைவயிற் கொண்டு என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்து:-ஆங்கவன் திணைக்கட்டணத்து கற்பு தனக்கானாய்ஓங்குரிமை குழாம் ஒருகை திசைய் கொண்டுமூரிமணிப்பட்டங்கட்டி முடிசூட்டி மார்பில்அணைத்து வளவன் முதல் தேவியென்று பெயர்பெற்றவஞ்சிய் முதலாய் பெய்வளையார் பொங்குபுனற்கும்சப முதலாக புலவர் புகழ (431/5)மடந்தையர் ஆரமும் மார்பும் உடன் கவர்ந்தருளி என்று வரும் சுந்தர பாண்டியனின் மெய்க்கீர்த்தியிலிருந்தும் இதை அறியலாம். (459/5)
வேள்விக் கிழத்தி:
அரசர்கள் வேள்வி வேட்டனர் என்று முனர் கண்டோம். வேள்வி வேட்டபோது அவன் உரிமைத் தேவியும் உடனிருத்தல் வேண்டும். ஆதலின் அவள் “வேள்விக் கிழத்தி” என்றே அழைக்கப்பட்டாள். கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவில் வேள்விக் குண்டம் நிர்மாணித்து வேட்டான் என்று கூறும் புறப்பாட்டு கற்பில் சிறந்த மகளிரோடு வேள்வி வேட்டான் என்று கூறுகிறது. “முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரோடு ..... வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்” (புறம். 224). சேரன் செங்குட்டுவன் ராஜசூயம் செய்தான் என்றும் அவன் முதல் தேவி “வேள்விக் கிழத்தி’ உடன் இருந்தாள் என்றும் சிலம்பிலிருந்து அறிகிறோம்.ஆனால் பிற்காலத்தில் மன்னர்கள் வேள்வி வேட்பதைக் காட்டிலும், கோயில்களுக்குப் பெரும் பரிசு கொடுப்பதையே சிறப்பாகக் கருதினர். அரசனுடன் அவன் தேவியர் பலரும் கோயிலுக்குப் பெரும் பொருள் கொடுத்துள்ளனர். இராஜராஜன் தஞ்சைப் பெருங் கோயிலுக்குப் பொருள் கொடுத்தபோது அவன் தேவியரும் அவனுடன் பொருள் கொடுத்தனர் என்று அக் கல்வெட்டிலிருந்து அறியலாம். நாம் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்” என்று அவன் கல்வெட்டுக் கூறுவது இதையே.பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் துலாபாரம் என்னும் வேள்வி வேட்டுள்ளனர். இதில் தேவியர் பங்கு பெற்றனர் என்று அறிகிறோம். நிருப தொங்கவர்மன் தேவி “ஹிரண்யகருப்பமும் துலாபாரமும் புக்க பொளிவை தான் அளித்தாள் என்று அறிகிறோம் (74/12). இது இவள் தானே ஹிரணியகருப்பமும், துலாபாரமும் செய்ததை குறிக்கிறதா அன்றி அரசனுடன் செய்ததைக் குறிக்கிறாதா எனத் தெரியவில்லை.
மாமியாரிடம் அன்பு:
அரசமாதேவியர் தங்கள் தலைவரிடத்தில் ஆறாக் காதல் கொண்டிருந்தனர் என்று கண்டோம். தங்கள் மாமியாரிடம் சிறந்த அன்பு கொண்டிருந்த தேவியரைக் கல்வெட்டுக் கூறுகிறது. உத்தம சோழரின் தாய் செம்பியன் மாதேவியாரிடம், அவரின் மனைவியர் ஐவரும் பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவ்வம்மையார் செம்பியன் மாதேவியர் பிறந்த சித்திரைக் கேட்டை திருநாளன்று செம்பியன் மாதேவி என்னும் ஊரில் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்காக உத்தம சோழரின் தேவியர் பட்டன் தானதொங்கியர், மழபடி தென்னவன் மஹாதேவி, இருங்கோளார் மகன் வானவன் மகாதேவி, விழுப்பரையர் மகளார் சோழப் ப்ருமானடிகள், மழுவேட்டரையர் மகள் ஆகிய ஐவரும் அளித்தனர் (311/19). இதிலிருந்து இவர்களுக்கு தங்கள் மாமிபால் இருந்த பேரன்பு விளங்கும்.
அரசியருக்குப் பொருள் கொள்ளும் உரிமை:
அரசியர் பல இடங்களில் தாங்களே கோயில்களுக்குப் பொருள் கொடுத்திருப்பதிலிருந்து அவர்களுக்குத் தங்கள் பெயரிலேயே பொருள் கொள்ளும் உரிமை இருந்தது என அறிகிறோம். அரசமாதேவியர் தங்கள் பெயராலே நிலம் வாங்கி கோயில்களுக்குத் தானமாக வழங்கியிருப்பதைப் பல கல்வெட்டுகள் குறிப்பதிலிருந்து தங்கள் பெயரால் நிலங்கொள்ளும் உரிமையும் அரசியருக்கு இருந்தது என்று அறியலாம். செம்பியன் மாதேவியிலிருந்து கோயிலுக்கு உத்தம சோழனின் தேவி திரிபுவனமாதேவி நிலம் வாங்கி தானமாக அளித்தாள் (379/19). இராஜராஜனின் தேவி திருவையாற்றில் நிலம் விற்றதை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது (518/5) அரசமா தேவியருக்கு தனி ஆணை உண்டென்று முன்னர் கண்டோம். முதல் இராஜராஜனின் தேவி லோகமகாதேவி திருவையாற்றில் எடுத்த கோயிலுக்கு, கொடுத்த தானத்தை கல்லில் வெட்டத் தானே ஆணையிட்டான். “லோகமஹாதேவியார் திருவையாற்றுப்பால் நாம் எடுப்பித்த லோகமாதேவீச்சுரம் உடையார்க்கு கல்லில் வெட்டுவிக்க என்று அருளிச் செய்ய” என்று கல்வெட்டுக் கூறுவது (521/5) இதைத் தெளிவாக்குகிறது.அரசனின் தேவி தானே ஏலத்தில் நிலத்தை எடுத்ததை ஒரு கல்வெட்டு “இந்நிலம் முக்காலே நாலு மவரையும் கொள்வாரில்லையோ என்று முற்கூற இம்மொழி கேட்டு பொன்மாளிகைத் துஞ்சிய தேவியார் சேரமானார் மகளார் பிராந்தகன் தேவியானார் விலைக்குக் கொள்வேனென்று பிற்கூற” என்று கூறுகிறது (723/5).
அரசியருக்கு அதிகாரிகள்:
அரசமாதேவியரின் ஆணைகளை நிறைவேற்றத் தனியாக ஆண் அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் இருந்தனர். பெண் அதிகாரிகளை ‘அதிகாரிச்சிகள்’ என்று கல்வெட்டுக் கூறுகிறது. லோகமாதேவி திருவையாற்றில் கட்டிய லோகமாதேவீச்சரத்துக்கு கொடுத்த மேற்பார்வையிட கல்வெட்டு மூலமாக ஆணையிட்டாள். “கல்லிலே வெட்டுவிக்கவென்று உடன் கூற்றத்து அதிகாரம் சேய்கின்ற கோவலூருடையாள் நூற்றெண்மனையும், அதிகாரிச்சி எருதன் குஞ்சிரமல்லியையும் அருளிச் செய்ய” என்று கல்வெட்டு (521/5) கூறுகிறது. திருவையாற்றில் தென்கைலாயம் என்று ஒரு கோயில் உண்டு. அதற்கு முத்தான பொந்நங்கை என்பவள் ஒரு பொன் அணி கொடுத்தாள். இவள் இராஜேந்திர சோழனின் தேவி திரை லோக்ய முடையாளின் அதிகாரிச்சி என்று அழைக்கப்படுகிறாள் (512/5). முதல் இராஜாதிராஜனின் காலத்தில் லோகமா தேவீச்சுரத்துக்குக் கொடுத்த தானத்தை அனுத்தரப் பல்லவரையன் என்பவளும் உடன் இருந்து மேற்பார்வை பார்த்தனர் (520/5). இதுபோல் பல அதிகாரிச்சிகள் குறிக்கப்படுவதிலிருந்து அரசமா தேவியர்களுக்கு தமக்கெனத் தனியாக ஆண் அதிகாரிகளும் பெண் அதிகாரிகளும் இருந்தனர் என்றும் அவர்கள் சமஅதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் தெளிவாக அறியலாம்.இராஜராஜனின் தமக்கை குந்தவை கருந்தட்டாங் குடி கோயிலுக்கு நிலம் வாங்கி கொடுத்தாள். அந்த பிரமானத்துக்குத் தானே கையெழுத்திட்டான்இத்தேவர்க்கே உரித்தாக குடுத்தேன்பராந்தகன் குந்தவையேன்”இக் கல்வெட்டு பல வழிகளில் சிறப்புடையதாகிறது. இத்தேவியின் ஆணைப்படி அவள் அதிகாரி இப்பிரமானம் எழுதினான். மற்றொரு அதிகாரி இதற்கு கையொப்பமிட்டான் அது மட்டுமின்றி இத்தேவிக்கு தானமாக கணக்கன் ஒருவனும் கரணத்தான் ஒருவனும் இருந்தனர் என்று இக்கல்வெட்டு குறிக்கிறது.“இப்பிடிபாடு அருளிச் செய்ய எழுதினேன் இவருக்கு அதிகாரஞ் செய்கின்ற சிறு பேறுடையான் தென்னவன் எரியூர் நாட்டுவேளான். அறிவேன் இப்பிராட்டி யாருக்கு அதிகாரஞ் செய்கின்ற நறுமங்கிழான் அங்காடி சூற்றிய்யேன். இப்படிக்குடுத்தமை அறிவேன், இப்பிராட்டியார் கணக்கு பூவனூருடையான் வரகுணன். இப்பதி குடுத்தமை அறிவேன் ஆழ்வார் கரணத்தான் மருதங்குடையான் மாயிலட்டி ஆச்சனென்” (1409/5) இக்கல்வெட்டிலிருந்து அரசமாதேவியருக்குத் தனியாக ஒரு நிர்வாகத்துறையே இருந்தது என்பது தெளிவு.“திருவாணை உலகுடை முக்கொக்கிழானடிகள் ஆணை என்று இறையிலி செய்து கொடுத்து” என இரண்டாம் இராஜாதிராஜன் காலக் கல்வெட்டிலிருந்து அரசியின் ஆணை எவ்வளவு சிறப்பாகப் போற்றப்பட்டது என அறியலாம். (204/8)