5. மன்னுக பெரும நீ வாழும் நாளே
அரசனது அன்றாட வாழ்க்கை:
அரசர்களது அன்றாட வாழ்க்கையைக் குறிக்கும் சில செய்திகள் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. சிறப்பாகப் பத்துப் பாட்டிலும் மதுரைக் காஞ்சியிலும், சிலம்பில் வஞ்சிக் காண்டத்திலும் மூவர் உலாக்களிலும், இச் செய்திகள் கிடைக்கின்றன.
காலை:
மன்னன் காலையில் இனிதெழுந்து நாட் கடன் இறுத்து, மார்பில் சந்தனம் பூசி, முத்தாரங்களையும், தரித்து, கரத்தில் வீரவளை பூண்டு, கஞ்சி போடப்பட்ட துகிலை இடையில் அணிந்து தெய்வத்தை வழிபட்டு, பின்னர் படைத் தலைவர்களைக் கண்டான் என மதுரைக் காஞ்சி குறிக்கிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தன் பழைய நகரின் வாயில் புறத்து இருந்த குளிர்ந்த பொய்கையில் குளித்தான். மன்றத்தில் வேப்பந் தளிரை அணிந்து கொண்டான். முன்னே பறை ஒலித்துக் கொண்டு செல்ல, களிறுபோல் நடந்து வந்தான் என்று புறநானூறு (79) குறிக்கிறது. இதிலிருந்து மன்னர் ஆற்றிலும் பொய்கைகளிலும் குளிப்பதும் உண்டு என்று அறிகிறோம். ஆற்றில் புது நீர் வரும்போது மன்னன் உரிமைச் சுற்றத்துடனும், பிறருடனும் சென்று நீராடுதல் மரபு. இதை ஒரு விழாவாகப் பல நாட்கள் கொண்டாடுவர். இதைப் புதுப் புனல் விழா என்றே கூறுவர் (சிலம்பு. 1, 6-159-160).
வெண்மையான வலம்புரிச் சங்கமும், காலை முரசமும் ஒலித்தன (புறம் 225; சிலம்பு 14, 13-4)
மன்னன் தன் தேவியுடனே எய்திய பள்ளி இனி தெழுந்தான். பெண் சக்ரவர்த்தியுடன் எய்திய பள்ளி இனிதெழுந்து என்று விக்கிரம சோழன் உலாவிலும் உடனொக்கும் மகுடங்கவித்தாள் உடனுறை பள்ளி உணர்ந்து என்று குலோத்துங்கன் உலாவிலும் வருவது காணலாம். மன்னன் தன் மனைவியுடன் துயில் எழுந்தான் (ராஜராஜன் உலா). பின்னர் காவிரி நீராடினான். இதைப் பொன்னித் திருமஞ்சனம் ஆடல் என்றும், காவிரித் தீர்த்தத்து அபிடேகம் செய்தருளல் என்றும் குறிப்பர். நல்ல முகூர்த்தத்திலே நீராடினான் என்றும், நீராடும்போது பல முரசுகள் ஒலித்தன என்றும் அறிகிறோம். மன்னன் திருமஞ்சனம் ஆடுவதற்கென அரண்மனைகளில் தனியாக சாலைகள் இருந்தன. அவற்றை திருமஞ்சனச்சாலை எனக் கல்வெட்டுகள் குறிக்கும்.
நீராடிய பின்னர் அந்தணர்களிடமிருந்து தளிரான அருகம்பில்லைப் பெற்று வகையில் காப்பாக அணிந்து கொண்டு தன் தெய்வத்தை வணங்கினான்.
நீராடிய பின்னர், தன் மூதாதையருக்கும் (மேலைக் குரவர்க்கும்) தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் காலைக் கடவ கடன் கழித்தான் என்று இராஜராஜ சோழன் உலாக் குறிக்கிறது. இது நீரில் கொடுக்கப்படுவது, பின்னர் நெற்றியில் திருநீறு முதலியவற்றை அணிந்து கொண்டபின் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து அழகு செய்து கொண்டான்.
பவளச் சடையோன் பனித்தபடியேதவளத்ரிபுண்ற்றஞ் சார்த்திக்-குவளைபூங்கார்க்கோலம் ஆடியிற் காண்பான்........................இராஜராஜன் உலா-45, 46
பின்னர் தன் தெய்வத்தை வணங்கினான். தெய்வ வழிபாட்டின் பின்னர் மறையவர்க்கு தானங்கள் அளித்தான். நீராடி தெய்வ வழிபாட்டின்போதும், தானங்கள் செய்த போதும் மஞ்சள் நிறப் பட்டணிந்து இருப்பது வழக்கம். இவை முடிந்தவுடன் மஞ்சள் நிறப் பட்டை நீக்கி, வெள்ளையான துகிலை அணிந்து கொண்டான். இந்துகில் கஞ்சிபோடப்பட்டிருந்தது. பின்னர் பல அணிகலன்கலை அணிந்து கொண்டான். இவற்றை ‘மானக் கலன்கள்’ என உலாக் குறிக்கும். மார்பில் சந்தனச் சாந்து பூசி, பொன்னாலும், முத்தாலும், ஆன ஆரங்களையும் அரசிலை போன்ற ஆரங்களையும், மலர் மாலைகளையும் பூண்டு, காதில் மகரக் குழைகள் பூண்டு, தோளில் தோவளை (கேயூரம்) சூடி, கையில் கடகம் பூண்டு, நவரத்தினங்கள் இழைத்த கச்சை உடைவாளுடன் அரையில் உதரபந்தனமாகச் சூடி, மாலையணிந்த கிரீடத்தைப் பூண்டான் என்று உலாக்கள் வர்ணிக்கின்றன:-
......... பொய்யாதபொன்னித் திருமஞ்சனம் ஆடிப் பூசுரர் கைக்கன்னித் தளிரறுகின் காப்பணிந்து-முன்னைமறைக்கொழுந்தை வெள்ளிமலைக் கொழுந்தை மோலிப்பிறைக் கொழுந்தை வைத்த பிரானை கறைகளத்துசெக்கர் பனி விசும்பைத் தெய்வத் தனிச் சுடரைமுக்கட் கனியை முடிவணங்கி...................விக்கிரம சோழன் உலா-41, 43
கிருஷ்ணதேவராயர், காலையில் எழுந்த பின்னர் சிறிது நல்லெண்ணெய்யைக் குடித்து, உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு தேகப் பயிற்சி செய்வது நாள்தோறும் வழக்கம். பின்னர் நீராடித் தன் அரண்மனையில் உள்ள பூஜை அறையில் தெய்வங்களுக்கு அந்தணர்களின் உதவி கொண்டு பூஜை செய்து பின்னர் அரச காரியங்களைக் கவனிப்பது வழக்கம். விஜயநகர மன்னன் வீரநரசிம்மன், துயில் எழுந்தவுடன் தோத்திரங்களையும், அரசியல் நூல்களிலிருந்து சில பகுதிகளையும் படிககக் கேட்பன். பின்னர் தன் உருவைக் கண்ணாடியில் கண்டு, பின்னர் ஒரு கன்னிப் பெண்ணையும், பசுவையும் வணங்குவது வழக்கமாம்.
நாள்தோறும் கிருஷ்ணதேவராயர் இவ்வாறு தேகப் பயிற்ச்சி செய்தார் என்று குறிப்பு இருப்பதிலிருந்து தமிழகத்தை ஆண்ட மற்ற அரசர்களும் தங்கள் உடன் திடனுள்ளதாக, போர்க் காலங்களில் மாற்றார் மலைத்து மருளும்படி வலிமை உள்ளதாக வைத்துக்கொள்ள நாள்தோறும் பயிற்சி செய்தனர் என்று கொள்வதில் தவறில்லை.
பகல்:
திருமலைநாயக்கர் அரண்மனையில் ராஜராஜேச்வரி தேவிக்கும் மற்றும் பிறதெய்வங்களுக்கும் ஒரு “தேபூஜை கோயில்” இருந்தது என்றும், திருமலை மன்னன் நாள்தோறும் குளித்து, தன் தெய்வங்களுக்கு வழிபாடு செய்துவிட்டு பின்னர் அரச காரியங்களைக் கவனிப்பது வழக்கம் என்று அன்றைய குறிப்புகள் கூறுகின்றன.
மன்னன் பகல்பொழுதில் ஆள்வதிலும் இரவு வேலைகளில் வருவது குறித்து ஆலோசனை நடத்துவதிலும் கழித்தான் என (“ஞாயிற்றெல்லை ஆள்வினைக்குதவி இரவின் எல்லை வருவது நாடி”) புறநானூறு குறிக்கிறாது (புறம் 364). முப்பது நாழிகை கொண்டது பகல் என்பது மரபு. பகலை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அதில் முதல் பகுதியில் வழிபாட்டிலும் அறிவுரைகளைக் கேட்பதிலும் கழித்தான். இடைப்பத்து நாழிகை அரசாட்சி, இறை கொள்ளல், பரிசிலர்க்கு ஈதல் ஆகிய பொருள் பற்றிய செயலில் ஈடுபட்டிருந்தான். கடைப்பத்து நாழிகை இசை, இன்பம் முதலியவற்றில் கழிப்பது பண்டைய தமிழ் மரபு என்று புறநானூற்றிலிருந்து அறிகிறோம்.
“ஒருநாள் முதலான் பத்து நாழிகையும் அறத்தான் வழியொழிப், பின்பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டு, செய்த பொருளை பரிசிலர்க்குக் கொடுத்து, மகிழ்ந்திருத்தலால் கடும் பகற்றேற் வீசிருக்கை என்றார்” (புறம் 69 உரை.).
தலைமகனால் தலைநின்று ஒழுக்கப்படுவன தருமார்த்த காமம் என்பன. அம்மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கட்பத்து நாழிகை அறத்தோடுபட்டுச் செல்லும், இடையன பத்து நாழிகையும் அருத்தத் தோடு பட்டுச் செல்லும். கடையன பத்து நாழிகை காமத்தோடு பட்டுச் செல்லும். ஆதலால் தலைமகன் நாழிகையை அளந்து கொண்டு தருமத்தோடு படுவான், தலைமகளோடு படுவான். தலைமகளும் வேண்டவே தானும் வேண்டப்போந்து அத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தோடுப்பட்டுச் செல்வதும் செய்யும் நாழிகையளந்து இடையன பத்து நாழிகையும் இறையும் முறையும் கேட்டு அருத்தத்தினோடு பட்டு வாழ்வானாம்” (இறை சூ. 40 உரை)
நாளோலக்கம்:
அரசன் வழிபாடு முடித்து நாள்தோறும் அமர்ந்து அரசகாரியம் செய்யும் மண்டபத்துக்கு நாளோலக்க மாளிகை என்று பெயர். நெடுஞ்செழினன் மதுரையில் தன் அரண்மனையில் நாளோலக்கத்தில் அமர்ந்திருந்ததை மதுரைக்காஞ்சி அழகாக சித்தரிக்கிறது. மாற்றார்கள் வீழ்த்திய குதிரை வீரர்களையும், அரண்களைக் காத்து நின்ற வீரர்களையும், யானை களங்களைக்கொண்ட வீரர்களையும், மண்டலாதிபர்களையும் அறங்கூறவையத்தாரையும், பாணர்களையும் பாடினிகளையும் அழைத்து வரச்செய்து அவர்கள் அனைவருக்கும் ஏராளமான பரிசுகளையும், தான் மாற்றரசர்களிடமிருந்து கைப்பற்றிய பொருள்கள், களிறுகள், தேர்கள் முதலியவற்றையும் வாரி வழங்கினான் என்று அந்நூல் குறிக்கிறது. தமிழ் மன்னர்கள் தங்கள் நாளோலக்கங்களில் அமர்ந்து எவ்வாறு புலவர்களுக்கும், பாணர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் பொருள் வழங்கினார்கள் என்பதைப் பல புற நானூற்றுப் பாடல்களிலிருந்து அறியலாம்.
செங்குட்டுவன் அந்தி மாலையில் தந்தேவி வதுவை வேண்மாண் மங்கலமடந்தையுடன் அணியரங்கம் அடைந்தான். அங்கே ஏவல் மகளிர் இருந்தனர். வாசனைச் சாந்துகள் ஏந்திக் கூனரும் குள்ளரும் இருந்தனர். மலர் மாலைகளை ஏந்திய பேடியர் இருந்தனர். அணிகலன்களை ஏந்தி சேடியர் இருந்தனர். அணிகலன்களை ஏந்தி சேடியர் இருந்தனர். முழவும் யாழும், பண்நிறைந்த இசையும் நிரம்பியிருந்தன. செங்குட்டுவன் தன் தேவியுடன், கூத்தச் சாக்கையன் ஆடிய ஆடலைக்கண்டு களித்துப் பின்னர் வேத்தியல் மண்டபம் அடைந்தான். நீலன் முதலிய கஞ்சுகமாக்களும், மாடலன் முதலிய மறையோரும் தங்கள் வருகையை அரசனுக்கு வாயிலாளர் மூலம் அறிவித்தனர். பின்னர் உள்ளே சென்று, அரசனை வாழ்த்தி ஆலோசனை புரிந்தனர். இங்கு இரவில் முன் பகுதியில் மன்னன் ஆடல் கண்டு மகிழ்ந்தான் என உள்ளது. இது புறநானூற்றில் கூறியுள்ள மரபையே நினைவுறுத்துகிறது. (திருமலைநாயக்க மன்னன் மாலை நேரங்களில், தன் மனைவியரும் சுற்றமும் சூழத் தீவட்டி வெளிச்சத்தில் நாடக அரங்கில் ஆடல் மகளிரின் ஆடல் கண்டு மகிழ்ந்தான் என்று அறிகிறோம். இது ஒரு பொழுதுபோக்குப் போலும்.) மறவரும், எயில் உழந்த செல்வரும், குரிசிலரும், உதவி ஊக்கலரும், யானைக்கண நிறை கவர்ந்த ஆடவரும், பிறரும் யாவரும் வருக. பாணர் வருக. பாடியர் வருக. யாணர்ப் புலவரோடு வயிரியர் வருக என்று அனைவரையும் அழைத்துப் பரிசளித்தான் நெடுஞ்செழியன் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.
அரசன் சிம்மாசனம் ஏறுவது முரசு முழங்கி தெரியப்படுத்தப்பட்து. (அறை பறை எழுந்த பின், அரி மானேந்திய முறை முதல் கட்டில் இறை மகன் ஏற. சிலம்பு. 26, 1,2) ஆசானும், பெருங்கணியும், அமைச்சரும், யானைத்தலைவரும் அங்கு குழுமியிருந்தனர். மன்னன் அமர்ந்ததும் ‘மன்னர் மன்ன வாழ்க’ என்று அனைவரும் ஏத்தினர். அரசன் சினமுறுங்காலை ஆசான் அதை தணித்தனன். பெருங்கணி, பன்னிரண்டு இராசிகளையும் கிருஹ நிலைகளையும், ஐந்து கேள்விகளையும் (திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம்; நம்பு ஆட்சி, உச்சம், பகை, நீசக் கோன், ஆயவற்றை) அறிந்து முகூர்த்தத்தின் பயன் கூறினான் என்று சிலம்பு கூறுகிறது.
பல கல்வெட்டுகளில் மன்னன் அரண்மனையில் இன்ன பகுதியில் இன்ன கட்டிலில் அமர்ந்திருந்த போது ஆளும் செயலில் ஈடுபட்டு, ஊர்களுக்கு இறை விதிப்பதையும், இறை நீக்குவதையும் ஆய்ந்தான் என்று காண்கிறோம்.
“ஸ்ரீவல்லபதேவர் மதுரைக்கோயிலில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிக்கட்டில் பாண்டியராஜனில் எழுந்தருளி இருந்து செய்யத்திருவாய் மொழிந்தருளினபடி” என்று ஒரு கல்வெட்டு (223) கூறுவதிலிருந்து இது தெளிவாகும்.
குலோத்துங்கசோழன் காஞ்சியில் செம்பொன் மாளிகையில் தென்மேற்குத் திக்கில் சித்திர மண்டபத்தில் இருந்ததைக் கலிங்கத்துப்பரணி குறிக்கிறது. “வென்குடை கவித்திருந்தது. இருபுறமும் வெண்சாமரம் வீசப்பட்டது. சிம்மாசனத்தில் குலோத்துங்கன் அமர்ந்திருந்தான். அருகில் அணுக்கிமார்கள் பலர் இருந்தனர். அவர்கள் நாடகம் முதலிய நிருத்தம் அனைத்திலும், நால்வகை பண்களிலும் வல்லமை பெற்ற ஆடல் பாடல் மகளிர் ஆவர். மேலும் நின்று ஏத்துவோராகிய சூதரும், இருந்து ஏத்துவோராகிய மாகதரும், மங்கலப்பாடகரும் இவன் புகழ் பாடினர். வீணை, யாழ், குழல் முதலிய பல இசைக்கருவிகளை இசைப்போர் தங்கள் வல்லமை கேட்க வேண்டினர். குலோத்துங்கன் தாளமும் செலவும் பிழையாமல் சில இசைகளைத் தானே இயற்றிருந்தான். அவற்றைத் தன்னெதிரே பாடச்சொல்லி கேட்டான். பாணர்கள் பாக்களைப் பாட அவற்றிலும் பிழைகாணும் வகை கல்வி மிகுந்திருந்தான்.
குலோத்துங்கனிடம் தோற்ற மன்னர்கள் தங்கள் கரங்களால் வெண் சாமரம் வீசினர். மாற்றரசர்களின் தேவிமார்களெல்லாம் சேடியர்களாய் நின்றனர். தொண்டைமான் முதலிய மந்திரச் சுற்றமும், தந்திரச் சுற்றமும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது வாயிலில் மாற்றரசர்களும் மண்டலீகர்களும், திறைகொணர்ந்து காத்து நிற்பதை அரசனுக்கு “திருமந்திர ஓலை” என்னும் அதிகாரி அறிவித்தான். அரசன் அவர்களை வரச்சொல்ல ஒவ்வொருவரும் தாங்கள் கொணர்ந்த விலையுயர்ந்த பரிசுகளை எல்லாம் திறையாகச் செலுத்தினர். இன்னம் திறை கொணர்ந்தோர் உண்டோ என்று மன்னன் வினவினான். கலிங்கத்து மன்னன் இருமுறையாக திறை கொண்டு வந்த செலுத்தவில்லை என்று திருமந்திர ஓலை கணக்கு கூறினான் ஆதலின் அவன் செருக்கழிக்க படையை குலோத்துங்கன் ஏவினான் என்று ஓலக்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார் ஜயங்கொண்டார்.