Tamil Arts Volume33 இராமனின் அறிமுகம் இசைக்கவி ரமணன்
Contents | Introduction | Water Management | Home

படைப்பின் போக்குக்கு விரோதமாகச் செயல்படும் தீய சக்திகளே இராக்கதர்கள் எனப்படுகிறார்கள். இயக்கத்தோடு மாறுபடும் அரக்கர்களை அழிக்கவும், மானிடம் முழுமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய வாழ்நெறியை வாழ்ந்து காட்டவும், ஓர் அரசனின் சிந்தனை, சொந்த உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறத்தைக் காக்கும் முனைப்பிலேயே துலங்கவேண்டும் என்பதை நடந்து காட்டவும், திருமால், அறத்தின் உருவாரமான ஓர் மானிட வடிவில் இறங்கிவந்து வாழ்ந்து காட்டியதே இராம காதை. வாருங்கள் நம் நாயகனாம் இராமனைச் சந்திப்போம்! கம்பன், இராமனை அறிமுகம் செய்யும் காட்சியைப் பார்ப்பதற்கு முன்னால், ஒன்றை கவனிக்க வேண்டும்.  பாலகிருஷ்ணன், பாலமுருகன், பாலசுப்பிரமணியன், பால விநாயகன் என்று பல தெய்வங்களுக்கும் ஒரு பால பருவமும், பாலலீலை வருணனைகளும் உண்டு.  இராமனுக்கு மட்டும், பாலராமன் கிடையாது. கண்ணன் போல் இராமனுக்கு பால லீலைகள் சொல்லப்படவில்லை. கவிஞர்கள், மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்து இந்தப் பாத்திரத்தை இந்தத் தன்மையுடன் படைத்திருக்கிறார்கள். ‘ராமோ விக்ரஹவான் தர்மஹ’ என்பார் வால்மீகி. ‘தருமத்தின் தனி மூர்த்தி’ என்று விராதன் மூலம் சொல்வான் கம்பன். கண்ணன் வடிவிலும் திருமால்தான் தருமத்தை நிலைநாட்ட இறங்கி வந்தார் என்றாலும், மேற்கூறிய புகழுரைகள் இராமனுக்கே பிரத்யேகமானவை. அரசனுடைய பிரதிநிதியாகவும், அத்தைக் கடைபிடிப்பவனாகவும் மட்டுமே தன்னுடைய நடத்தையை இராமன் அமைத்துக்கொண்டதால் ஓர் ஒப்பற்ற சிறப்பை வெளிப்படுத்துகிறான். அதிசயங்கள் நிகழ்த்தாமல், தான் ஆண்டவனின் அவதாரம் என்று கருதாமல், அறவழி நடப்பதே தனக்கு விதிக்கப்பட்ட கடமையென்று, ஒரு மானிடனாகவே அவன் வாழ்ந்ததாலும் இந்தச் சிறப்புகளை அவனுக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள் மகாகவிகள்.  அரசன், நிர்வாக முடிவுகளில், தன்னுடைய சொந்த வாழ்க்கையின் உணர்ச்சிகள் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது என்பதே இராமனின் குணசித்திரம் நமக்குச் சொல்லும் தலையாய சேதி.  எனவே, முதல் காட்சியிலேயே இராமன் முதிர்ச்சி உடையவனாகவே காட்டப் படுகிறான். குடிமக்களிடம் அன்பு நிறைந்த ‘அரசனாக’த்தான் அவனை அறிமுகப் படுத்துகிறான் கம்பன்:  எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன், முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா, 'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்? மதி தரு குமரரும் வலியர்கொல்? எனவே இராமனும், இலக்குவனும் வசிட்டனிடம் பயிற்சியை முடித்துவிட்டுத் தெருவில் நடந்துதான் வருகிறார்கள் என்று தோன்றுகிறது! அவர்களைப் பார்த்ததும் மக்கள் மகிழ்ச்சியுடன் அருகில் வருகிறார்கள். அவர்களை முகமலர்ச்சியுடன் எதிர்கொண்டு, இராமன் கேட்கிறான், ‘எல்லோரும் நலந்தானே? துன்பமொன்றும் இல்லையே? வீட்டில் மனைவி சுகம்தானே? குழந்தைகள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’  இந்தப் பாட்டின் மூலம் இராமன் நமக்கு ஒரு முக்கியமான நடத்தையைக் கற்பிக்கிறார்: யாரையும் சந்திக்கும்போது நாம் முகமலர்ச்சியின் மூலம் நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் அவர்களுடைய, மனைவி, மக்களுடைய நலத்தை நாம் விசாரிக்க வேண்டும் நாம்தான் முதலில் நலம்விசாரிக்க வேண்டும். விசாரித்துவிட்டு, அவர்களைப் பேசவிட வேண்டும். அதைத்தான் செய்தான் இராமபிரான். அதுதான் அடுத்த பாட்டு அஃது, 'ஐய! நினை எமது அரசு என உடையேம்; இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ் மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன் உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார் ‘ஐயனே, உன்னை அரசனாகப் பெற்றுள்ள எங்களுக்கு என்ன குறை? நான்முகன் உள்ளவரை, எங்கள் உயிரோடு எங்களை நீயே ஆளவேண்டும்’ என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் மக்கள். முறையான விசாரிப்பு என்பது எப்படியிருக்க வேண்டும் என்றும், அது எப்பேர்ப்பட்ட தாக்கத்தைக் கேட்பவர்கள் மனத்தில் ஏற்படுத்துகின்றது என்பதையும் இந்த இரண்டு பாடல்களில் பார்த்தோம். ‘யதா ராஜா ததா ப்ரஜா’ ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ ராம ராஜ்ஜியம் என்பதற்குப் பொருள் இதுவே! எங்கே அரசன் அறவழியில் நிலைபெற்றவனாக இருக்கிறானோ அங்கே நடப்பது ராம ராஜ்ஜியமே. மக்கள் அரசனைத்தான் பின்பற்றுவார்கள்.  இராமனிடம் விளையாட்டுத்தனமே கிடையாதா? நம் எல்லோருக்கும் உடனடியாக கூனி முதுகில் களிமண் அம்புகளை எய்து விளையாடிய விளையாட்டு நினைவுக்கு வரும்.  அது முற்றிலும் கம்பன் படைப்பு.  இந்த பால லீலை, வால்மீகியில் இல்லை என்பதை நாம் அறிவோம். காட்டுக்குப் புறப்படும்போது, யாத்திரா தானம் அளிக்கையில், திரிஜடன் என்ற அந்தணனுக்கு தானம் வழங்குகையில், ஒரு குச்சியை எடுத்துக் கொடுத்து, ‘இதை எவ்வளவு தொலைவுக்கு வீசுகிறாயோ, அவ்வளவு தொலைவை நிறைக்கும் அளவுக்குப் பசுக்கூட்டங்களைத் தருகிறேன்’ என்று சொன்னதும், திரிஜடன், வேட்டியை இறுக்கிக் கொண்டு எறிந்த அந்தக் குச்சி, கங்கைக்கு அக்கரையில் சென்று விழுந்ததும் நாம் அறிந்ததுதான்.  நகைச்சுவை உணர்வு இப்படியும் ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க வைத்தது. இராமனின் அடிப்படைக் குணம்: வள்ளுவர் சொல்லும் கோடாமையின் வடிவமே இராமன். அதாவது சமநிலை என்று உடனே பதில் சொல்லிவிடலாம். தவம், துறவு, வேள்விகள், சாத்திரப் பயிற்சி இவற்றின் மூலம் பெருமுயற்சி கொண்டு பலரும் பெறக்கூடிய சமநிலையை, இராமன் அறத்தில் நிற்பதன் மூலமே பெற்றதே பெரும் சிறப்பு. திருவள்ளுவப் பெருமான் நடுவு நிலைமை அதிகாரத்தில் பயன்படுத்தியிருக்கின்ற தகுதி, செப்பம், நடுவு, தக்கார், கோடாமை, நன்றிக்கண் தங்கியான், சீர்தூக்கும் கோல், உட்கோட்டம் இன்மை, பிறவும் தமபோல் – ஆகிய சொற்கள், சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் இராம பிரானுக்குத்தான் எத்தனை கச்சிதமாகப் பொருந்துகின்றன! ஓர் அரசனாகவும், ஒரு மானிடனாகவும் இராமன் நடுநிலை பிறழாமல் வாழ்ந்து காட்டியதே அவனைத் தெய்வமாகக் கொண்டாட வைக்கிறதல்லவா! ஆணைக்கு உடனே அடிபணிதல்: காலை நடக்கவிருந்த ராஜ்ய பட்டாபிஷேகத்தைக் கலைத்து, காட்டுக்குச் சென்றுவிடு என்று இராமனுக்குச் சொன்னவள் கைகேயி. அதை அரசனின் ஆணையாக, ‘இயம்பினன் அரசன்’ என்று சொல்கிறாள். அதைக்கேட்டு, தனது கமல முகத்தின் மலர்ச்சி சற்றும் மாறாமல் இராமன், ‘இதை மன்னவன் சொல்லித்தான் நான் கேட்க வேண்டுமா? நீ சொன்னாலேயே நான் அதை ஏற்றுப் பணிவேனே!’ என்றல்லவா சொல்கிறான்! தன்னைப் பெற்ற மகனாகக் கருதிய தாய், ‘தீய மந்தரை இவ்வுரை செப்பலும், தேவி தூய சிந்தையும் திரிந்தது’ என்று கம்பன் சொன்னது போல, பேயாகிறாள். இராமனோ, அப்போதும் அவளைத் தன்னைப் பெற்ற தாயாகவே கருதி, அவளுடைய அன்பு மாறி விட்டாலும், தன்னுடைய அன்பு சற்றும் மாறாமல் பேசுகிறான்: மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்; மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’ இதை இப்படியும் பிரித்துப் பார்க்கலாம்: மன்னவன் பணி அன்று, ஆகின், நும் பணி மறுப்பெனோ? (தவம் செய்து பெற்ற தந்தையா என்னைக் கானகத்துக்குப் போகச் சொல்வான்?) என்பின் அவன் பெற்ற செல்வம்  அடியனேன் பெற்றது அன்றோ? (நானும் பரதனும் வேறல்லவே! அவன் பெற்ற செல்வம் நான் பெற்றதுதானே? இன்னொரு பொருள் அவன் நாடாளச் சம்மதிப்பானா? மாட்டான்! என்னைப் போலவே மரவுரியைத்தான் அணியப் போகிறான்!) கைகேயி கொடிய முடிவைச் சொன்னதும், இராமன் பதிலுரைத்ததும் பார்த்தோம். இங்கே கம்பனின் கவியுள்ளத்தைக் காண்கிறோம். இராமன் சொன்ன விடை ஒருபுறம் இருக்க, அவன் அப்போது எப்படி இருந்தான் என்று நமக்குக் காட்ட விழையும் கம்பன், தானே நமக்கு அதனைக் கண்டு சொல்கிறான்! முன் பின் மாறா முகம்: இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும் செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்; ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! ‘இது எப்போதோ நடந்துவிட்டது. என்னைப் போன்ற கவிஞர்களால், இப்போது அதைப் பற்றிச் சொல்வதென்ன எளிதா?’ என்று கேட்கிறான் கம்பன். புகழ்ந்து முடியாத அருங்குணங்கள் கொண்டவன் இராமன். ஆனால், இங்கே இன்னொரு சிறப்பை வெளிப்படுத்தினான். அந்தக் கொடிய வாசகத்தைக் கேகேயி சொல்வதற்கு முன்பு எப்படி இருந்தானோ, அப்படியேதான் அதைக் கேட்டபின்னும் இருந்தான். முன்பு – பின்பு என்னும் மாற்றமின்றி, அப்போதுதான் மலர்ந்த செந்தாமரையைக் காட்டிலும் குளிர்ச்சியும், திகழ்ச்சியும், விரிவும், அழகும் மிக்கதாய் விளங்கிற்று அவன் திருமுகம்.’ கம்பனுக்கு இது போதவில்லை. இப்படி ஒரு மனிதன் இருப்பானா என்று அவனுக்குத் தாங்கவில்லை. எனவே, இதே நிகழ்ச்சியை, அசோக வனத்தில் சீதை தனிமையில் இருந்தபோது நினைத்துப் பார்ப்பதாக அமைக்கிறான்: மெய்த்திருப்பதம் மேவு என்ற போதும் இத்திருத் துறந்து ஏகு என்ற போதும் சித்திரத்து மலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்த முகத்தை உன்னுவாள் அரச பதவியை ஏற்றுக்கொள் என்றபோதும் சரி, எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காட்டுக்குப் போ என்றபோதும் சரி, இராமனின் முகம் ஒரே மாதிரி இருந்ததாம். எப்படி? செந்தாமரை மலர்போல். அப்போது மலர்ந்த செந்தாமரை அல்ல, சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை. மண்ணில் தோன்றும் மலர் வாடிவிடக் கூடும். ஆனால், ஓவியத்தில் விரிந்து சிரிக்கும் மலர் வாடவே வாடாதல்லவா? எப்போதும் மலர்ந்தே இருக்குமல்லவா? முதலில் ‘அப்பொழுது மலர்ந்த செந்தாமரை’ என்று சொன்னது கம்பனுக்குப் போதவில்லை! அதனால் ‘சித்திரத்து மலர்ந்த செந்தாமரை’ என்று சொல்கிறான். இது மகிழ்ச்சிக் குறிப்பல்ல, வியப்புக் குறிப்பு! ஆம், கம்பன், இராமனைக் கண்டு கண்டு எழுதியது போல இருக்கின்றன இந்தப் பாடல்கள்.    ‘வஞ்சமகள் வந்தாள்’ வேறுயார், சூர்ப்பணகைதான். அவள் வந்தகதை வால்மீகியில் ஒருவிதமாகவும், கம்பனில் ஒருவிதமாகவும் காணப்படுகிறது. தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அரக்கி, இராமனைக் கேட்கிறாள். ‘நானோ திருமணமானவன். என் தம்பி அங்கே இருக்கிறான், அவனைப் போய்க்கேள்,’ என்று இராமன் விளையாடுகிறான். இலக்குவன் என்ன திருமணமாகாதவனா?! அவன் என்ன சொன்னான்? ‘நானே சேவகம் செய்துகொண்டிருக்கிறேன். நீ எனக்கு மனைவியானால், நீயும் அடிமையாகத்தான் வாழவேண்டும்,’ என்று அவளைக் குழப்புகிறான். அவள், இருவரிடமும் மாறி மாறிச் சென்று வருகிறாள்.  இந்த இடத்தில் வால்மீகி, இராமனை இவ்வாறு பேச வைக்கிறார்: ‘அதோ இலக்குவன், என் இளையோன். ஒழுக்கமானவன், அழகன், திறமைசாலி, வீரன், மனைவியில்லாமல் இருக்கிறான்.’ இராமன் பொய் சொன்னானா, இல்லை! இலக்குவன் மணமாகாதவன் என்று சொல்லவில்லை, மனைவியின்றி இருக்கிறான் என்றுதான் சொன்னான், அது உண்மைதானே! இந்த விளையாட்டைச் சற்று வேறுவிதமாகக் காட்டுகிறான் கம்பன்: ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு  தலைவன், ஊங்கில்  ஒருவனோ குபேரன், நின்னோடு  உடன்பிறந்தவர்கள்; அன்னார் தருவரேல், கொள்வென்; அன்றேல்,  தமியை வேறு இடத்துச் சார;  வெருவுவென்;-நங்கை!' என்றான்;மீட்டு அவள் இனைய சொன்னாள்: ‘உனக்கு உடன் பிறந்தவர்களில் ஒருத்தனோ மூன்றுலகையும் ஆள்பவன்.  இன்னொருவனோ குபேரன்.  அவர்கள் உன்னை எனக்குத் தருவதானால் நான் ஏற்றுக் கொள்கிறேன். இல்லையென்றால் நீ வேறிடம் சென்றுகொள்.’  இதில், ‘கொள்வேன்’ என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு பலர் இராமனைப் பலவிதமாகப் பேசுவதுண்டு.   ஆனாலும், இராமனைப் பொறுத்தமட்டில் விளையாட்டுத்தனம் அதிகமாகக் காணப்படல்லை! அறத்தைத் தவிர வேறு நினைப்பே அவனுக்குக் கிடையாது.  இராமன் அறச்சீற்ற வடிவம், கண்ணன் மோகன வடிவம் என்று காட்டுவார்கள் பெரியோர். தொலைக்காட்சியில் நாம் காணும் இராமனுக்கும் வால்மீகியும், கம்பனும் காட்டும் இராமனுக்கும்தான் எத்தனை வேறுபாடு! கம்பன் நமக்குச் செய்விக்கும் இந்த ‘இராம அறிமுகத்தை’ மனத்தில் இருத்திக் கொண்டு காவியத்தில் நுழைந்தால்தான், காவிய நாயகனின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும், ‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும், ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்கிலார்,’ என்பான் பாரதி. கம்பனைப் பொறுத்தமட்டில், அவனுடைய கவியுள்ளத்தைக் காணவேண்டுமென்றால், அது இராமனின் உள்ளத்தைப் புரிந்துகொள்வதன் மூலமே சாத்தியமாகும். கம்பனுடைய கவிதைதான் நாம் இராமனைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்! இசைக்கவி ரமணன்
Contents | Introduction | Water Management | Home