Tamil Arts Volume33
முனைவர் இரா. நாகசாமி அவர்களுடன் எனது தொல்லியல் பயணம்
கி. ஸ்ரீதரன்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது ஓர் இனிமையான அநுபவம்.
மேலும் தொல்லியல் துறையின் இயக்குநராக பணியாற்றிய முனைவர் இரா. நாகசாமி அவர்களுடன் எனது தொல்லியல் பயணம் துவங்கியது எனது வாழ்வில் மறக்க இயலாத ஒன்று.
சென்னை பல்கலைக் கழகத்தில் தொல்லியலில் முதுகலைப்பட்டம் பெற்று தொடர்ந்து என்ன செய்வது என்ற எண்ணத்தில் இருந்தேன். தொல்லியல் துறையினரால் நடத்தப்படும் கோடைக்காலக் கல்வெட்டு பயிற்சியில் கலந்து கொள்ள இயக்குநர் திரு. இரா. நாகசாமி அவர்கள் அனுமதி அளித்தார். தொல்லியல் ஆய்வில் ஆர்வம் கொள்ள இப்பயிற்சி மேலும் ஊக்கம் அளித்தது. அப்பொழுதும் கொற்கை - (பாண்டியர் கால துறைமுகம்) அகழாய்வில் பணியாற்ற அனுமதி அளித்தார். இஃது ஓர் அரிய வாய்ப்பு.
பின்னர் நான் வேலை எதுவும் கிடைக்காததால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றச் சென்றேன். அப்பொழுதும் தொல்லியல் துறையில் நடைபெறும் வரலாறு தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்வேன். தொல்லியல், கல்வெட்டு தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தேன்.
1974-ம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பு நிறுவனத்தால், தொல்லியல் துறையில் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. பணியில் சேர்ந்தவுடன் தர்மபுரி மாவட்டம், தஞ்சை மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்தும் பணியினை அளித்தார். தமிழ்நாடு அரசு தேர்வாணையினால் பணி வரன்முறைபடுத்தப்பட்ட பிறகு சேரர் தலை நகராக விளங்கிய கருவூரில் அகழ்வாராய்ச்சியினை மேற்கொள்ள வாய்ப்பு அளித்தார் அதுதான் எனது முதல் பணி. ஆய்வு நடைபெறும்பொழுது அவ்வப்பொழுது ஆய்வினைப் பார்ததுவிட்டு ஆலோசனை வழங்கினார்.
1981-ம் ஆண்டு சோழர் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது. சோழர் அரணமனை பகுதியாக விளங்கிய மாளிகை மேடு அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது வெளிப்படுத்த மாளிகையின் அடித்தளப்பகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தின் அருகிலேயே கருத்தரங்கு, நடன நிகழ்ச்சி, வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகள் நடைபெற இயக்குநர் திரு. இரா. நாகசாமி அவர்களின் எண்ணத்தில் உதித்து அனைத்து தொல்லியல்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களிடம் தொல்லியல் ஆய்வின் சிறப்பினை இந்நிகழ்ச்சிகள் கொண்டு செல்ல பெரிதும் உதவின என்றால் மிகையில்லை.
தென்னிந்திய தொல்லியல்துறைகளால் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த தொன்மைச்சிறப்பு மிக்க கண்காட்சி 1979-ல் சென்னையில் இயக்குநர் முயற்சியால் நடைபெற்றது. மேலும் இக்காட்சி ஆந்திர மாநிலம், ஹைதராபாத், மும்பை (பம்பாய்), மதுரை போன்ற நகரங்களில் அருங்காட்சியகங்களில் நடைபெற்றபோது எங்கள் குழுவினர் அங்கு சென்று பணியாற்றவும், விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு அளித்தார். இக்காட்சி வரலாறு - தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயன்பட்டது.
திருக்கோயில் ஆய்வுகள் செய்யும் பொழுது அவர் அளித்த ஆலோசனைகள் - அறிவுரைகள் எங்களை செம்மைபடுத்திக் கொள்ள பெரிதும் உதவியது. நிலத்தை தோண்டும் பொழுது சில நேரங்களில் செப்புத்திருமேனிகள், வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும். திருவிடைமருதூர், நாமக்கல் அருகில் மணப்பள்ளி, போன்ற இடங்களில் கிடைத்த செப்புத் திருமேணிகள் கிடைத்தபொழுது அவருடன் ஆய்வுக்கு சென்றது மறக்க முடியாத அநுபவம். அதே போன்று விழுப்புரம் அருகே எசாலம் என்ற ஊரில் இராஜேந்திர சோழன் செப்பேடு கிடைத்த பகுதியிலும் ஆய்வு செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய கலையழகு மிக்க செப்புத் திருமேனிகள் கண்காட்சி நடைபெற்றது. அதனை அமைக்க அமைக்கப்பட்ட குழுவில் நாண் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பெற்றது. திரு. இரா. நாகசாமி அவர்கள் அவற்றை ஆவணப்படுத்தி நூலாக வெளியிட்டார். செப்புத்திருமேனிகள் பற்றி அறிந்து கொள்ள அப்பணி உதவி செய்தது.
அவர் பணி ஓய்வு பெற்ற வேளையில் திருச்சிராப்பள்ளி - திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி எறை கிராமத்தில் காணப்பட்ட பராமரிப்பு இன்றி காணப்பட்ட சோழர்கால கோயிலில் காணப்பட்ட வீரராஜேந்திரசோழன் கால கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருந்த "சங்கர பாஷ்யம்” பற்றிய செய்தியாக வெளியான வரலாற்றுக் குறிப்பினை படித்து கட்டுரையாக வெளியிட்டு அக்கோயிலுக்கு பெருமை சேர்த்தார். பின்னர் அக்கோயில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வரலாற்றுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டு வரலாற்றுக்கு சிறப்புச் சேர்க்கும் தொல்லியல் ஆய்வினை அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எடுத்து சென்றது அவருடைய போற்றுதலுக்குரிய பணியாக அமைந்தது. அரசுத்துறை என்றாலும், தொல்லியல் ஆய்வுககு ஒரு குழுவாக, அலுவலர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் அளித்து இத்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் முனைவர் இரா. நாகசாமி அவர்களின் பங்களிப்பு என்றும் போற்றுதலுக்குரியது! மறக்க முடியாதது! கி. ஸ்ரீதரன் (தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் - பணி நிறைவு)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.