நூலாசிரியர்
கோவை மாவட்டம், ஈரோடு தாலுகா, ஊஞ்சலூரில் 1930-ல் பிறந்தவர். மயிலை விவேகானந்தர் கல்லூரியில் படித்த இவர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய தத்துவங்களையும், காப்பியம், அலங்காரம், தொனி ஆகிய சாஹித்யத் துறையையும் சிறப்புப் பாடமாகக் கொண்டு சமஸ்கிருத மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். டெல்லி மாநகரில் மத்திய தொல்பொருள் ஆய்வுப் பள்ளியில் அகழ்வாய்வு, பண்டைய சின்னங்களைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். 1963-ல் பிரிட்டிஷ் கவுன்சிலின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்று அங்குத் தொல்லியல் முறைகளை நேரில் கண்டறிந்தவர். பண்டைய கல்வெட்டுகளைப் படிப்பதிலும் வரலாற்றை எழுதுவதிலும் சிறப்புப் பெற்றுள்ள இவரது மாமல்லபுர ஆராய்ச்சி உலகப்புகழ் பெற்றுள்ளது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களைப் படைத்துள்ள இவர் நூற்றுக்கும் மேற்பட்ட அராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகளில் சில அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய நாட்டுப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. டாக்டர் குரோ (Dr. Gros) என்னும் பிரஞ்சுப் பேராசிரியரும், இவரும் சேர்ந்து உத்தர மேரூரைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி, பிரஞ்சு மொழியில் நூலாக வெளிவந்துள்ளது.
இதுகாறும் நடைபெற்றுள்ள மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்குகொண்டு ஆராய்ச்சியுரைகள் வழங்கியுள்ளார். இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கிரீஸ், மலேசியா, சிங்கப்பூர், ஆகிய வெளிநாடுகளில் பயணம் செய்துள்ளார்.