சதாசிவரூபம் சிவமயம். சதாசிவ ரூபம் மூலமும் உரையும். திருச்சிற்றம்பலம். முகவுரை.
பொருளடக்கம் சிறப்புப்பாயிரம்

அநாதி முத்தனாகிய பெருமான் அநாதி பெத்தர்களாகிய ஆன்மாக்களின் அநாதிமலத்தை நீக்குவான் அநாதியிலேயே அநாதி சதாசிவமூர்த்தியாய் எழுந்தருளித் தனது ஈசானாதி திருமுகங்களினின்றுந் தந்த காமிகாதி இருபத் தெட்டாகமங்களு ளொன்றாய வாதுளாகமத்தினின்றும் தமிழில் சூத்திரரூபமாய் மொழிபெயர்த்துச் சதாசிவரூபம் என்னும் இந்நூலைச் சீகாழிச் சட்டநாதவள்ளலார் உலோகோபகாரமாக இயற்றியருளினர். சிவஞானபோதமாதி ஞானசாத்திரங்கள் பதினான்கினிற் பழகும் பூர்வ புண்ணிய முடையாராகிய சுத்தாத்வித சைவர்கட்கு இந்நூல் அத்தியாவசியமாய் வேண்டியிருத்தலின், இதனை வெளிப்படுத்துவான் ஆவல் கொண்டு சேகரித்த கரலிகித பிரதிகள் இரண்டில் முதற் கிடைத்ததற்கு ஆதி கண்டிலேம்; இரண்டாவது கிடைத்ததற்கு அந்தங் கண்டிலேம். ஆயினும் இரண்டினையுஞ் சேர்த்து ஒருவாறு திருத்திவருகையில், யாழ்ப்பாணம் சைவப்பிரசாரணர் ஸ்ரீமத் செந்திநாதையரவர்கள் சுத்தப் பிரதியொன்று கொடுக்க, இதனையே யாதாரமாய்க்கொண்டு ஆராய்ந்து ஆங்காங்கு ஆகம சம்பந்தமாய் நேர்ந்த சமுசயங்கள் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீமத் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகளால் நீங்கப் பெற்று அச்சிட்டு முடித்தனம். இதுபோன்ற பல சாத்திரங்கள் இன்னும் பற்பலவுள. இவற்றுட் சென்னையிலுள்ள வித்வான்களிடத்துஞ் சிற்சிலவுள. இவ் வித்வான்களோ அவற்றை யச்சிடத் துணிகின்றரில்லை. அச்சிட்டு வெளிப்படுத்தும் ஆவலுடையாருக்குங் கொடுக்கின்றாரில்லை. ஆங்காங்கு அலைந்து அரிது சம்பாதித்து ஆய்ந்து அச்சிட்டபின், அது குறை யிது மிகை யெனப் புறங்கூறிப் பூரிக்கின்றனர். அழிகின்ற திசையிலிருக்கு மரிய கிரந்தங்களை யச்சிற் கொணர்த லறிஞருக் கழகன்றோ? அந்தோ! இவ்வித்வான்கள் தங்கள் பெட்டிகளிற் சேமித்துவைத்திருக்கு மேடுகளை யெக்காலத் தெதன் பொருட்டுபயோகப்படுத்தக் கருதியிருக்கின்றனரோ அறியேம் ! அறியேம்!! இவ்வளவும் நமது கிரந்தங்களிடத்துள்ள அன்பின் மிகுதியாற் சொல்லத் துணிந்தேம். இவர்கட்கு ஈச்சுரன் கிருபை புரிவாராக. மணவழகு.
பொருளடக்கம் சிறப்புப்பாயிரம்