சுந்தரமூர்த்தி சரிதம் நாட்டிய இலக்கியம் டாக்டர் இரா. நாகசாமி 2. பரவையின் காதல் பொருளடக்கம் | தடுத்தாட்கொண்ட வள்ளல் |
பரவை திருவாரூர்க் கோயிலில் ஆடுவது. ஆடுவாய் நீ நட்டம் அளவிற் குன்றா அவியடுவார் அருமறையோர், அறிந்தேனுன்னை பாடுவார் தும்புருவும் நாரதாதி, பரவுவார் அமரர்களும் அமரர் கோனும், தேடுவார் திருமாலும் நான்முகனும், தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும், கூடுமே நாயடியேன் செய்குற்றேவல், குறையுண்டோ திருவாரூர் குடிகொண்டீர்க்கே — இது அப்பர் தேவாரம். பரவையின் எழிலைக் கண்டு சுந்தரர் வியத்தல். பல்லவி (கரகரப்பிரியா) யார் இந்த எழிலான உருவாள் ஈடில்லை இவளுக்கு ஏந்திழை இரதியே. — யார் இந்த சரணம் அணங்கன் பயந்த அணங்கோ அலரில் அமர்ந்த அமுதோ மலரை அணைந்த அழகோ மனதை மலைக்கும் மதுவோ — யார் இந்த மானைப் பழித்த விழியாள் மதியைப் பழித்த நுதலாள் மயிலைப் பழித்த கதியாள் குயிலைப் பழித்த குரலாள் துடியைப் பழித்த இடையாள் தளிரைப் பழித்த உடலாள் — யார் இந்த தாபம் தாங்க ஒணாது பரவை நிலவைப் பழித்தது. பரவை (செஞ்சுருட்டி) வெண்ணிலவு வீசிவரும் வெண்ணிலாவே உன்னை விண்ணதனில் வைத்தவர் யார்? வெண்ணிலாவே பெண் எனது மென்மையினை வெண்ணிலாவே தண்ணொளியால் தகிப்பதும் ஏன் வெண்ணிலாவே (புன்னாகவரளி) சின்னஞ்சிறு வயதில் வெண்ணிலாவே எந்தன் பிஞ்சுக்கரம் நீட்டினேனே வெண்ணிலாவே என்ன பழி செய்து விட்டாய் வெண்ணிலாவே கொஞ்சமும் பிடிக்கவில்லை வெண்ணிலாவே சேடியுடன் கூடிநானும் வெண்ணிலாவே — உன்னை நாடியாடி மகிழ்ந்த துண்டு வெண்ணிலாவே காண மனம் நாணுவதேன் வெண்ணிலாவே இப்போ நான் அவரை எண்ணுவதேன் வெண்ணிலாவே (நாதநாமக்ரியை) கள்ளம் கபடறியா உள்ளம் அவர்பின் துள்ளி துள்ளி விம்முவதேன் வெண்ணிலாவே வள்ளியின் மனம் கவர்ந்த வேலன் போல அள்ளி என்னை கொஞ்சுவரோ வெண்ணிலாவே (சிந்துபைரவி) கோபம் என்மேல் கொண்டு நீயும் வெண்ணிலாவே குறைந்து மறைந்திடாதே — வெண்ணிலாவே தாபம் தவிர்க்க அவர் வந்தால் — நீயும் நிறை மதியாய் விளங்கிடுவாய் — வெண்ணிலாவே சுந்தர மூர்த்தி பரவையிடம் தாம் கொண்ட காதலைக் கூறல். சுந்தரர் பல்லவி (சுருட்டி) உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய் பெண்ணே உன்னதப் பண்மிகு ஆடலினால் — உள்ளத்தைக் சரணம் பாவப் பெருக்கினில் பொலிந்திடும் தாமரை முகத்தினைக் கண்டு கொண்டேன் ராக அலையினில் அலர்ந்திடும் உந்தன் அங்கையைக் கண்டு கொண்டேன் தாளப் புணர்ச்சியில் திளைத்திடும் உந்தன் தாளினைக் கண்டு கொண்டேன் மேளத் தொடரினில் மிளிர்ந்திடும் மேனி அழகினைக் கண்டு கொண்டேன் — உள்ளத்தை அண்ணலின் ஆனந்தக் கூத்தினை உந்தன் ஆடலில் கண்டு கொண்டேன் அன்னையின் பரவசப் பார்வையை உன்கண் வீச்சினில் கண்டு கொண்டேன் கண்ணைக் கவருமுன் எழிலினில் லயித்திடும் காதலைக் கண்டு கொண்டேன் எல்லையில்லாத வெளியினில் கலந்திடும் இன்பத்தைக் கண்டு கொண்டேன் — உள்ளத்தை திருநாவலூர் வள்ளலாகிய சுந்தரமூர்த்தி நங்கை பரவையை மணம் புணர்ந்தது. (குறிஞ்சி) மன்னுபுகழ் நாவலர் கோன் மங்கைதனை மணந்தார் மாதவம் புரிந்த இந்த மாநிலம் தழைக்க — வாழி! வாழி!! — மன்னுபுகழ் போகமெனும் யோகந்தனில் புண்ணியனும் திளைத்தார் ஆடல்புரி யண்ணலுடை ஆனந்த அருளால்-வாழி! வாழி!! — மன்னுபுகழ் சுந்தரர் பாடலும் பரவை ஆடலும். வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள் ! அண்ட வாணர் தொழும் அடிகள் ஆருரரைக் கண்ட வாறும் காமத்தீ கனன் றெரிந்து மெய் உண்ட வாறும் இவை உணர்த்த வல்லீர்களே (இது சுந்தரர் தேவாரப்) (இரண்டாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | தடுத்தாட்கொண்ட வள்ளல் |