சுந்தரமூர்த்தி சரிதம் நாட்டிய இலக்கியம் டாக்டர் இரா. நாகசாமி 1. தடுத்தாட்கொண்ட வள்ளல் பொருளடக்கம் | சுந்தரமூர்த்தி சரிதம் | பரவையின் காதல்
திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மங்கல வாத்யங்கள் இசைக்கின்றன. மகளிர் மணப் பந்தரை அலங்கரித்துக் கொண்டுள்ளனர். சுந்தரர் மாப்பிள்ளைக் கோலத்தில் நிற்கிறார். சபை நிறைந்துள் ளது. அப்பொழுது தொண்டுகிழவராக சிவபெருமான் வரும் காட்சி. பல்லவி (இராகம்: கேதாரகௌளை) தொண்டு கிழம் ஒன்று வந்தது மணப் பந்தரின் முன் மெல்ல மெல்ல — தொண்டு சரணம் தண்டொரு கைகொண்டு மறு கையிற் குடை ஏந்தி பண்டிசரி கோவணமும் அரையினி லுடுத்தி புண்ணியர் தம் மேனியினில் வெண்பொடி யணிந்து வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க — தொண்டு காதிலணி கண்டிகை வடிந்த குழை தாழ சோதி மணி மார்பிற் றிரு நூலுமே துலங்க தோளின்மிசை உத்தரிய வெண்துகில் துலங்க தாள்கள் மிகச் சோர்வு நடை தள்ளாடிக் காட்ட — தொண்டு மாப்பிள்ளைக் கோலத்தில் நிற்கும் சுந்தரமூர்த்தியிடம் கிழவர் வழக்குரைத்தல். கிழவர் மணவேள்வி வேட்க நிற்கும் மாப்பிள்ளை நம்பி முன்னமோர் வழக்குளது முடித்து நீ மணப்பாய் அக்காலம் உன் தந்தை தன் தந்தை ஈந்த ஆள் ஓலை ஒன்றுண்டு அதற்கீடு சொல்லாய் திடுக்கிட்ட சுந்தரர் கிழவரை பித்தரோ என ஏசுதலும் கிழவரின் பதிலும். சுந்தரர் (ஹம்ஸத்வனி) நல்லவழக்கிது சொல்ல விழைந்துளீர் நான்மறை கண்டவரே சொல்லறியாததோர் மூடர் சபை எனச் சொல்லவும் போந்தீரோ அந்தணர் தம்மை அடிமையராக்கிட நூன்முறை சொன்ன துண்டோ பித்தரென உமை எண்ணுகிறேன் ஐயா பேசாமற் சென்றிடுவீர் கிழவர் (குந்தலவராளி) பித்தனுமாகப் பின்னர் பேயனுமாக நீ இன் றெத்தனை தீங்கு சொன்னால் யானுமற் றவற்றால் நாணேன் அத்தனைக் கொன்றும் என்னை அறிந்திலையாகில் நின்று வித்தகம் பேசவேண்டாம் பணிசெய்தல் வேண்டுமென்றான் (இது பெரியபுராணப் பாடல்) சுந்தரர் ஓலை உண்டு என்னில் அதன் உண்மை யறிய வேண்டும் நாட்டிலுள்ளோர் யாரும் நம்ப கில்லா ஓலை ஏடறிந்தோர் யாரும் கேட்டிலாத நீதி காட்டும் ஐயா ஓலை யான் காணும் வகை என்றார் கிழவர் ஓலைகாணும் உரிமை உனக்கு முண்டோ ஏடா உடனடியே ஆளாய் பணி செய்யப் போடா ஏடா போடா என அழைக்கும் கிழவரைத் துரத்தி சுந்தரர் அவரிடமிருந்து ஓலைபற்றிக் கிழித்தல். பல்லவி (வஸந்தா ) பொல்லாத சொல்லதனைக் கேட்டார் நம்பி நல்லோர் அவைதனிலே நாணும் வண்ணம் உரைத்த — பொல்லாத அனுபல்லவி கள்ளம் கபடறியா உள்ளம் உடைய நம்பி சீறி நிமிர்ந்து நின்ற சிங்கம் எனப்பொலிய — பொல்லாத சரணம் பொல்லாத கிழவனை நில்லாமலே துரத்தி மல்லாடி ஓலைபற்றி வல்லார் முனமெடுத்து இல்லாத நெறிகூறும் இவ்வோலை என்னவென எல்லோரும் காண அதைக் கீறி எறிந்திடவே — பொல்லாது கிழவர் (முகாரி) ஆவணம் வலியப் பற்றி அழித்தனன் இவ்வடிமை ஈங்கு யாவரும் இலையோ யானும் வாழ்ந்திடும் வெண்ணெய் நல்லூர் நாவலர் கேட்பராகில் பொறுப்பரோ என்னே என்று பாவலர் பரவும் அண்ணல் பரிகசித்து உரைத்தன் மாதோ சுந்தரர் (மோகனம்) பழைய மன்றாடி போலும் இவன் பார்க்கவே கிழவன் ஐயா பிழையுறு வழக்கை இங்கே பேசுறான் யாது செய்வோம் வெண்ணை ஊர் நல்லையாகில் விரைந்து நீ அங்கே செல்வாய் விண்ணவா ஓலம் என்ன வேதியன் விளம்பலுற்றான் திருவெண்ணெய் நல்லூர் அனைவரும் செல்ல அங்கு கிழவர் வழக்காடல். கிழவர் பல்லவி (காவடிச்சிந்து மெட்டு) திருவெண்ணை நல்லூரே கேளீர் என்னைச் சரியாக அறியாத ஆரூரன் செயல் தன்னை — திருவெண்ணை சரணம் நாள்தொறும் என்வழிப்பட்டு ஆள் தொண்டு செய்தலே கடன் என்பதுண்டு மாற்றவே கீறினன் ஓலை இம்மன்றுளீர் முடித்திடிர் மாயப் பிணக்கை — திருவெண்ணை சபையோர் கேள் வியும் கிழவர் பதிலும் (காம்போதி) ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்றயலார் தங்கள் காட்சியில் மூன்றிலொன்று காட்டுவாய் என்ன முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயம் வல்லான் — இது சேக்கிழார் பாடல் ஓலை (விருத்தம்) (கானடா) அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்பால் வருமுறை மரபிலோரும் வழித் தொண்டு செய்தற் கோலை இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை என் எழுத்து — இதுவுமது சபையோர் (ஷண்முகப்ரியா) நான்மறை முனிவனார்க்கு நம்பியே நீரும் தோற்றீர் பான்மையால் ஏவல் செய்து பணிவதே இனியும் மாட்சி திருமிகு எம்முன் நின்று ஆவணம் காட்டும் ஐய்ய வருமுறை மனையும் வாழ்வும் தெரிந்திடக் காட்டும் இங்கே — இதுவுமது கிழவர் பல்லவி (பிலஹரி) என்னை அறியாது இன்னமும் நிற்கிற வெண்ணெய் நல்லூர்ச் சபையோரே தாயை அறியாது சேயெனவே நிற்கும் மாயம் தனை அறிவீரே அனுபல்லவி அண்மையில் உள்ளது அருட்டுறை ஆலயம் அங்கு உறைபவன்யான் உண்மையில் உம்முடை உள்ளமோர் ஆலயம் ஆகில் உணர்ந்திடலாம் சரணம் தொண்டு கிழம் என என்னை நினைந்து நீர் உண்மை மறந்து விட்டீர் வம்பு செய்தே இவன் வானருள் பெற்றிட வன் தொண்டன் ஆக்கி வைத்தேன் எங்கும் நிறைந்துள எந்தனுக் கேற்றது இன் தமிழ் பாடல்பிள்ளாய் இன்னமும் நிற்றியோ ஏழிசையால் என்னைப் பாடத் தொடங்கிடுவாய் சுந்தரர் (பைரவி) வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்லவந்து ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்துய்யக் கொண்ட கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் — இது சேக்கிழார் பாடல் கிழவராய் வந்த சிவபெருமான் (ஸஹானா) பண்பினில் திளைத்த நண்ப எம்மை பித்தனென் றழைத்தனை முன்னர் பின்னுமோர் பெயரும் வேண்டேன் பித்தனென் றேயெனைப் பாடுவாய் சுந்தரர் பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே ஏற்றார் புரமூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வான் நீர் ஏற்றாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் ஆற்றாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே — இவை சுந்தரர் தேவாரம் (முதல் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | சுந்தரமூர்த்தி சரிதம் | பரவையின் காதல்