ஞானக் குழந்தை
நாட்டிய இலக்கியம்
வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி
ஞானக் குழந்தை
அங்கம் ஆறு
பொருளடக்கம் |
அங்கம் ஐந்து |
அங்கம் ஏழு
காட்சி — 10
[பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தீர்த்தல்]
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறன், சமண சமயத்தைப் பின்பற்றியிருக்கிறான். அவனது தேவி மங்கையர்க்கரசி, சோழர் குலத்து உதித்தவள். சைவ சமயத்தைப் பின்பற்றி யவள். அமைச்சர் குலச் சிறையாரும் சைவர். பாண்டிநாட்டில் சமணம் மேலோங்கி நிற்கிறது. அங்கு மீண்டும் சைவம் தழைக்கக் குலச் சிறையாரை அனுப்பிச் சம்பந்தரை மதுரைக்கு அழைக்கிறாள் மங்கையர்க்கரசி.
அங்கயற் கண்ணம்மையுடன் அமர்ந்துள்ள ஆலவாயண்ணலின் ஆலயத்துக்குச் சென்று மங்கையர்க்கரசி வணங்குகிறாள். மதுரைக்கு வந்த சம்பந்தரை அழைத்துக் கொண்டு குலச்சிறையாரும் கோவிலுக்கு வருகிறார். சம்பந்தரைக் கண்டு மனம் மகிழ்ந்து மங்கையர்க்கரசி வணங்குகிறாள். சம்பந்தர், “மங்கையர்க்கரசி” என்னும் பாடல் பாடி “அவள் வழிபடும் ஆலவாய் இதுவே” என்று சிறப்பிக்கிறார். பின்னர் இருவரும் விடை பெற்றுக் கொள்கின்றனர். சம்பந்தர், மதுரையில் ஒரு மடத்தில் தங்குகிறார்.
[ஆலவாயண்ணலின் கோயிலில் சம்பந்தர், மங்கையர்க்கரசியைச் சந்தித்துப் பாடல்.]
பண் புறநீர்மை — ஆதி
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தோறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்து
ஆலவா யாவதும் இதுவே.
காட்சி — 11
பாண்டிய மன்னன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். சமணத் துறவி ஒருவர் ஓடி வருகிறார். “சைவ சமயத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன் என்னும் பாலன் ஒருவன் வந்துள்ளான். மதுரை மக்கள் எல்லாம் திருநீறு பூசிக்கொண்டு அவன் பின் ஒடுகிறார்கள். நமது அருகர் சமயத்துக்குக் கேடு வந்து விட்டது. நாங்கள் இதைக் கண்டு முட்டு” என்று கூறுகிறார். “நானும் இதைக் கேட்டு முட்டு” என்கிறான் மன்னன்.
“நம் சமயம் சிறக்க யாது செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்கிறான் அரசன்.
[பாண்டிய மன்னனிடம் சமணர் முறையீடு.]
வசந்தா — ஆதி
சமணர்:—
பாண்டி நாடுடை மன்னனே !
நெடுமாறனே ! செவி கேட்டருள்
ஆண்டு ஓங்கிய ஆருகதர்க்கினி
காலன் வந்தனன் பாலனாய்
ஆலவாய் நகர் மாந்தரும்
திருநீறு பூசிய மேனியாய்
பாலன் பின்னரே ஏகுகின்றனர்
கண்டுமுட்டிது தென்னனே !
முடுகு
அரசன்:—
யானிதைக் கேட்டுமுட்டிது கணியரே
இனி யாது செய்யினும் ஒப்புவேன்
ஏதமில் பணிஆதரே நீர்
தாழ்தலின்றியே செய்குவீர்
காட்சி — 12
[சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ இடல்.]
சம்பந்தர் இறங்கியிருந்த மடத்துக்கு யாருமறியாமல் சமணர், தீயிட்டு விடுகின்றனர். மடத்தில் தீப்பற்றி எரிகிறது. இது அறிந்த சம்பந்தப் பெருமான், “செய்யனே திரு ஆலவாயுறை ஐயனே” எனும் பாடல் பாடி இங்கிட்ட தீ சென்று பாண்டியனையே பற்றட்டும் என்கிறார்.
பண் — கௌசிகம்
செய்யனே ! திருஆலவாய் மேவிய
ஐயனே ! அஞ்சல் என்று அருள்செய் எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியர்க்காகவே.
காட்சி — 13
பாண்டியனை வெப்ப நோய் பற்றுகிறது. தாங்க ஒண்ணாது துடிக்கிறான். மங்கையர்க்கரசியும் வருந்துகிறாள். தனது நோயைத் தீர்க்க வல்லவர்களை அழைத்துவரச் சொல்கிறான். அரன் அடியைப் பரவும் ஞானசம்பந்தரை அழைக்கலாமோ என்று பயத்துடன் வினவுகிறாள். யாராயிருந்தாலும் அழைத்து வா என்கிறான் அரசன். குலச்சிறையாரை அனுப்பிச் சம்பந்தரை அழைக்கிறாள் மங்கையர்க்கரசி.
[வெப்பநோய் தாங்காது அரசன் துடித்தல்.]
பல்லவி
சுபபந்துவராளி — ஆதி
வெந்தனலைப் போல் உடல் எல்லாம் எரிவதால்
ஆற்றிகில்லேன் பெண்ணே!
சரணம்
வெப்பம் தவிர்க்கவல்ல வல்லவர் உள்ளாராகில்
விரைந்து நீ அழைத்திடுவாய்
[மங்கையர்க்கரசி, சம்பந்தப் பிள்ளையை அழைக்கலாமோ என வினவல்.]
பல்லவி
பெகாக் — ஆதி
தேவி:—
அழைக்கலாமோ ஐயா !
அந்த அரன் புகழைப் பாடும்
ஞானக்குழந்தையை
(அழைக்க)
சரணம்
அமுதம் உலகினுக்கு அன்புவழியே
என்று அன்னையின் பாலை உண்டார்
அல்லும் பகலும் பாட
(அழைக்க)
அரசன்:—
எங்கே இருப்பினும் யாவரே ஆயினும்
இங்கே அழைத்திட ஏவிடுவாய்
[தேவி குலச்சிறையை அனுப்புதல்.]
பல்லவி
மாயாமாளவ கௌளை — ஆதி
அழைத்து வருவீர் ஐயே அந்த
ஆளுடைய பிள்ளையை
அரசின் பிணிதீர்க்க
(அழைத்து)
சரணம்
ஆலவாயண்ணலின் அருளே
மருந்தாய்க் கொண்டு
அகில உலகந் தன்னின்
ஆரா நோய் தீர்த்திட
(அழைத்து)
காட்சி 14
குலச்சிறையார் சென்று சம்பந்தரை அழைக்கிறார். சம்பந்தர் ஆலவாயப்பரை வேண்டிச் சமணர்களோடு வாது செய்யத் திரு வுள்ளம் என்று விளம்பி அருள் பெற்றுக் கிளம்புகிறார்.
நாலடிமேல்வைப்பு — பழம்பஞ்சுரம்
சம்பந்தர்:—
வேதவேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே !
ஞாலம் நின் புகழே மிக வேண்டும்,
தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே !
காட்சி 15
பாண்டியன் நோயால் துடித்துக் கொண்டிருக்கிறான். மருத்துவம் செய்யச் சமணர் வந்துள்ளனர். மங்கயர்க்கரசி அருகில் நிற்கிறாள். குலச்சிறையார் அழைத்து வரச் சம்பந்தர் வருகிறார். சிறுவராக இருக்கும் சம்பந்தர், எவ்வாறு சமணரோடு முரண்பட்டு வெல்ல முடியும் என அரசி அஞ்சுகிறாள். அது கண்டு சம்பந்தர், “மானினேர் விழி மாதராய்” எனப் பாடி நான் ஒரு பாலன் என எண்ணி அஞ்சாதே. ஆலவாய் அண்ணலின் அருள் துணை இருக்கும்போது ஆனைமாமலை முதலிய இடங்களில் அல்லல் படும் ஈனர்கட்கு நான் எளியேன் அல்லன் என்று பாடுகிறார். “யார் எனது நோயைத் தீர்க்கிறார்களோ அவரது சமயத்தை நான் சேர்வேன்” என்கிறான் மன்னன்.
சம்பந்தர், “மந்திரமாவது நீறு” என்னும் பதிகம் பாடித் திருநீறு கொண்டு அரசன் உடலில் ஒரு பகுதியில் தடவுகிறார். நோய் அப் பகுதியில் நீங்குகிறது. சமணர், மந்தரித்து நீர் தெளித்து, மயில் பீலியால் மறுபாதி உடலில் தடவுகின்றனர். நோய் இருமடங்காகப் பெருகுகிறது. அரசன், அவரை விலக்கிச் சம்பந்தரையே நோய் தீர்க்க வேண்டுகிறான். சம்பந்தர், அப்பகுதியிலும் நீறு பூசவே, நோய் அகல்கிறது. அரசன், சமணர்களைத் தண்டிக்குமாறு அமைச்சரை ஏவுகிறான். பின்னர், சம்பந்தர், ஆலவாயண்ணல் ஆலயத்துக்குச் செல்ல, அரசனும் தேவியும் சென்று பரமனை வேண்டுகின்றனர்.
பண் — கொல்லி
சம்பந்தர்:—
மானின் நேர்விழி மாதராய்
வழுதிக்கு மாபெருந்தேவி கேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவன்
என்றுநீ பரிவெய்திடேல் !
ஆனைமாமலை ஆதியாய
இடங்களில் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியே னலேன்
திருஆலவாயரன் நிற்கவே
விருத்தம் — கானடா
அரசன்:—
யார்சமயம் எமது நோயை ஒழிக்கினும்
பார் அறிய அதைத் தழுவிடுவோம்
போதரே ஆயினும் ஆதரே ஆயினும்
போற்றிடுவோம் அவர் தாளினையே
[பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீரச் சம்பந்தர், திரு நீற்றுப் பதிகம் பாடல்.]
பண் காந்தாரம் — ரூபகம்
மந்திர மாவது நீறு
வானவர்மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப்படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே
[நோயகலப் பாண்டியன், சம்பந்தனாரைப் பணிந்து சமணரைத் தண்டிக்க ஆணையிடல்.]
விருத்தம்
உம்முடைய பிழையினால் நீரே அழிந்திடுவீர்
அறமிலீர் அகன்றிடுவீர்
அமைச்சர் குலச்சிறையீர் ஆணையினை ஏற்று
உற்றதைச் செய்திடுவீர்
[சம்பந்தரும், பாண்டிய அரசனும், மங்கையர்க்கரசியும் அங்கயற்கண்ணம்மை ஆலயம் சென்று வணங்கல்.]
பண்
கௌசிகம் — ஆதி
வீடலால வாயிலாய்
விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய்
பரவநின்ற பண்பனே !
காடலால வாயிலாய்
கபாலி நின்கடிம் மதில்
கூடலால வாயிலாய்
குலாயதென்ன கொள்கையே
பொருளடக்கம் |
அங்கம் ஐந்து |
அங்கம் ஏழு