ஞானக் குழந்தை
நாட்டிய இலக்கியம்
வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி
ஞானக் குழந்தை
அங்கம் நான்கு
பொருளடக்கம் |
அங்கம் மூன்று |
அங்கம் ஐந்து
காட்சி 8
[சம்பந்தருக்குப் பூணூல் அணிவித்தலும் நாவுக்கரசின் வருகையும்.]
சம்பந்தருக்குச் சிவபாத இருதயர், பூணூல் அணிவித்துக் காயத்ரி மந்திரம் உபதேசிக்கிறார். அப்பொழுது அங்குக் குழுமியிருந்த மறையவர்களுக்கு, ஞானசம்பந்தர், வானவர்க்கும் அந்தணர்க்கும் அனையவர்க்கும் மந்திரம் “நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரமே என உபதேசிக்கிறார்.
பண் - காந்தார பஞ்சமம்
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓங்கிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே
சம்பந்தரின் பெருமை கேட்டுத் திருநாவுக்கரசு பெருமான் அங்கு வருகிறார். ஞானக் குழந்தையும் வாகீசப் பெருந்தகையும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு மட்டில்லா மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றனர். ஞானசம்பந்தர், “காதலாகிக் கசிந்து” என்னும் பதிகம் பாடுகிறார். சம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பர், ஆரூர்ப்பெருமான் மீது தாம் பாடிய பாடலைப் பாடுகிறார். இருவரும் வீழிமிழலைக்குச் செல்கின்றனர். சம்பந்தர் “விதிவழிமறையவர்” என்னும் பதிகம் பாடுகிறார்.
[நாவுக்கரசு சீர்காழிக்கு எழுந்தருளச் சம்பந்தர் வரவேற்றல்]
கீரவாணி - ஆதி
அண்ணலே வருக அப்பரே வருக
ஆனேறு ஊர்ந்தார் அடியினைப் பரவும்
அன்பரே வருக ஞானியே வருக
நாவுக் கரசே வருக வருகவே
[ஞானசம்பந்தர் பதிகம் பாடல்.]
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
[சம்பந்தர் வேண்டுகோளுக்கு ஏற்ப நாவுக்கரசர், தமது பதிகம் ஒன்று பாடல்.]
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடை ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகவிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
[சம்பந்தர் வீழிமிழலைப் பதிகம் பாடல்.]
விதிவழி மறையவர் மிழலை உளீர் நடம்
சதிவழி வருவதோர் சதிரே
சதிவழி வருவதோர் சதிர் உடையீர் உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே
பொருளடக்கம் |
அங்கம் மூன்று |
அங்கம் ஐந்து