ஞானக் குழந்தை நாட்டிய இலக்கியம் வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி ஞானக் குழந்தை அங்கம் மூன்று பொருளடக்கம் | அங்கம் இரண்டு | அங்கம் நான்கு
காட்சி — 5 திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தர், சிவபெருமான் மீது திருப்பதிகங்கள் பாடுகிறார் எனக் கேள்விப்பட்டு யாழ் வாசிப்பதில் சிறந்த பாணர் குலத்துதித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவி மதங்க சூளாமணியாரும் சீர்காழிக்கு வருகின்றனர். சம்பந்தர் அவர்களை அன்போடு வரவேற்கிறார். பாணர் யாழ் வாசிக்கக் கேட்டு அகம் மகிழ்கிறார். “நான் என்றும் தங்கள் உடனே இருந்து தங்கள் பாடல்களை யாழில் வாசிக்க அருள வேண்டும்” எனத் திருநீலகண்டர் சம்பந்தரை வேண்டிக் கொள்ளவே சம்பந்தரும் அதற்கு உடன்படுகிறார். அன்று முதல் சம்பந்தருடன் சென்று யாழிசைத்து வருகிறார். யாழ்ப்பாணர் வருகை பல்லவி கேதாரம் — ஆதி திருநீலகண்டத்துப் பெரும்பாணர் வந்தார் அருமான யாழேந்தி மனையாளும் சூழ —திருநீலகண்ட அனுபல்லவி பிள்ளைப் பிறைசூடி புகழ்பாடும் ஞானப் பிள்ளையின் மனைதேடி மகிழ்வோடு காண —திருநீலகண்ட சரணம் அன்போடு ஆளுடைப் பிள்ளையும் அழைத்து ஐயரே நும்வரவு சிவம்பெருக வென்ன —திருநீலகண்ட [என்று உம் பாடலுக்கு யாழிசைக்க அருள வேண்டும் எனப் பாணர் வேண்டல்.] பல்லவி சாவேரி — சாபு என்றென்றும் உந்தமது ஏந்தலே இன்கவிதை எந்தனுடைய யாழில் இசைக்க அருளல் வேண்டும் —என்றென்றும் சரணம் பந்தம் தனை அறுக்கும் பரமனின் பாதமலர் வந்தனை செய்து உடன் வரவும் இசைய வேண்டும் —என்றென்றும் காட்சி — 6 [சம்பந்தர், தில்லையில் திருக்கூத்துத் தரிசித்தல்.] பண்: காந்தார பஞ்சமம் ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாய் இடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய் மறையொடு பல்கீதமும் பல்சடை பனிகால் கதிர் வெண் திங்கள் சூடினாய் அருளாய் சுருங்க எம் தொல்வினையே காட்சி ­— 7 யாழ்ப்பாணரின் உறவினர்கள், பாணரின் புகழ் கேட்டு மகிழ்கின்றனர். யாழ்ப்பாணர், தமது யாழில் இசைப்பதால்தான் பதிகங்கள் சிறப்பெய்துகின்றன எனக் கூறுகின்றனர். இது கேட்டுப் பாணர் வருந்துகிறார். சம்பந்தரின் பாடலால்தான் யாழிற்குப் பெருமை என உலகுக்கு அறிவிக்க விரும்புகிறார். தமிழிசையால்தான் யாழிற்குச் சிறப்பெனக் காட்டப் பதிகம் பாடச் சம்பந்தரை வேண்டுகிறார். “மாதர் மடப் பிடியும்” என்ற பதிகத்தைச் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணரால் அதை யாழில் வாங்கி வாசிக்க இயலவில்லை. நொந்து யாழை முறித்து எறிய விழைகிறார். அதைத் தடுத்துச் சம்பந்தர், பரமனின் அருள் முழுவதையும் கருவிகளுள் அடக்க இயலாது என ஆறுதல் கூறு கிறார். அன்றிலிருந்து அப் பதிகம், “யாழ்மூரி” என்ற பெயர் பெற்றது. யாழ்மூரிப் பதிகம் பண்: யாழ்மூரி அடாணா — ரூபகம் மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படை சடைநெடு முடியதோர் புனலர் வேதமோடேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரைபொருது விம்மிநின்று அயலே தாதவிழ் புன்னை தயங்கும் மலர்ச் சிறை வண்டறை எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே.
பொருளடக்கம் | அங்கம் இரண்டு | அங்கம் நான்கு