ஞானக் குழந்தை நாட்டிய இலக்கியம் வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி ஞானக் குழந்தை அங்கம் ஒன்று பொருளடக்கம் | முன்னுரை | அங்கம் இரண்டு
காட்சி — 1 சீர்காழிப் பதியில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் “ஞானக்குழந்தை” பிறந்திருக்கிறது எனப் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். வீடுகளில் விளக்கேற்றி வைக்கின்றனர். ஆலத்தி தட்டேந்திப் பூர்ணகும்பங்களை வைக்கின்றனர். சிவபாத இருதய ரும் பகவதியும் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு கின்றனர். “திருமறையின் நெறிவாழத் தமிழிசையின் புகழ் வாழத் தோணிபுரத்து உதித்த செல்வனே ! அன்று, அறம் உரைத்த அண்ணலின் குமரனாய்ப் பிறந்து தமிழுரைத்தாய்; இன்று, கௌணியர் குலத்துதித்துத் தமிழிசைத்தாய் தாலேலோ” எனத் திரு அவதாரம் பாடித் தாலாட்டுகின்றனர். ஞானக்குழந்தை தாலாட்டு இராகமாலிகை—ஆதி நீலாம்பரி திருமறையின் நெறிவாழத் தமிழிசையின் புகழ் வாழ அருமறையோர் அகம் மகிழ அன்புவழி மனஞ்சேரத் திருத்தோணி புரத்துதித்த திருவே சிவமணியே சிவம பெருக வந்தகண்ணே தாலோ தாலேலோ — (1) ஆனந்த பைரவி அன்றுபுகழ் அந்தணர்க்கு அறம் உரைத்த அரனருளால் குன்றெறிந்து தமிழுரைத்த குமரனாய் வந்துதித்தாய் இன்று எங்கள் மனம்குளிர இசைத்தமிழ் எடுத்தியம்ப அன்னைஉமை அருள்சுரக்க அவதரித்தாய் தாலேலோ — (2) நாட்டைக் குறிஞ்சி மௌலிதனில் மதிபுனைந்தார் தாளினை மனத்துவைத்துக் கௌணியர்தம் குலத்தினிலே வந்துதித்த கண்கணியே சண்பைநகர் நலஞ்சிறக்கச் சீரொடும் வந்த செல்வ எந்தனுடை இன்னுயிரே ஏழிசையே கண்வளராய் — (3) காட்சி — 2 சிவபாத இருதயர் ஒருநாள் காலையில் நீராடக் கிளம்புகிறார். குழந்தையும் உடன் வருகிறான். குழந்தையைக் குளக்கரையில் அமர்த்தி நீரில் அகமர்ஷண ஸ்நானம் செய்கிறார். நீரில் அமிழ்ந்து மூழ்கியதும் தந்தையைக் காணாது குழந்தை அழுகிறான். திருத்தோணியப்பரின் ஆலயச் சிகரத்தை நோக்கித் தனது பிஞ்சுகரத்தை நீட்டி அம்மா அப்பா என்று அழுகிறான். சிவபெருமானும் உமையன்னையும் தோன்றுகின்றனர். உமையன்னை குழந்தையைத் தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு உச்சி மோந்து தனது திருமுலைப்பாலைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக் கொடுக்கிறாள். உமை தந்த பாலைக் குடித்து ஞானக்குழந்யைாகிறான். குழந்தை திருமுலைப்பால் குடித்தல் (சிவபாத இருதயர், குழந்தையை அழைத்துக் கொண்டு குளக்கரைக்கு வருதல்.) ஜோன்புரி சிவசிவசிவசிவ சங்கர சம்போ பவபவபவபவ மானஸ ஹம்ஸ ஹரஹரஹரஹர ஹரவென உன்னை அனுதினம் அடிதொழ அருள்புரி அரனே பல்லவி சாரங்கா-ஆதி நீராடினார் சிவபாத இருதயர் செழுநீர்த் திரளருளில் ஜெகமே திளைத்தெழவே — நீராடினார் சரணம் பிள்ளை தனைக் கரையில் அமர்த்தி அகல அஞ்சிப் பிஞ்ஞகன் தாளை எண்ணிப்புனிதக் குளத்திறங்கி — நீராடினார் நாளும் நியமமுடன் நாத னடிபரவும் வேளை இதுவெனவே நீரில் அமிழ்ந்து மூழ்கி — நீராடினார் [தந்தையைக் காணாது குழந்தை அழுதல்] பல்லவி ரீதிகௌளை — சாபு அழுதனன் குழந்தை அத்தனைக் காணாது அங்குமிங்கும் பார்த்து — அழுதனன் சரணம் கண்களில் நீர்ததும்பக் கரதலங்கள் பிசைந்து விண்ணகம் தனைநோக்கி விம்மிவிம்மி வாய்திறந்து — அழுதனன் நெஞ்சு நெகிழும்வண்ணம் நெடிய சிகரம் நோக்கிப் பிஞ்சுக் கரத்தை நீட்டி அம்மே அப்பா என்று — அழுதனன் [அம்மையப்பர் எழுந்தருளித் திருமுலைப்பால் கொடுத்தல்.] பல்லவி கல்யாணி - ஆதி அன்னை எழுந்தருளினாள் ஆங்கே அண்ணலுடன் அவரின் அடலேறின் மீதமர்ந்து — அன்னை சரணம் அனைத்து உலகினுக்கும் அன்பு பொழியும் அன்னை அழுதிடும் குழந்தையை அனை[ணை]த்து மடியில் கொஞ்ச — அன்னை அங்கையிற் குழந்தையை அள்ளியே உச்சி மோந்து தங்கக் கிண்ணந்தனில் தன்னுடைய பாலைப்போட்ட — அன்னை [குழந்தை ஞானப்பால் உண்ணல்.] பல்லவி மாண்டு - ஆதி ஞானப்பால் உண்டதுபிள்ளை ஞானப்பால் உண்டது நானிலம் எங்கிலும் ஆனந்தம் பொங்கிட — ஞானப்பால் சரணம் தேவாதி தேவனின் தேவி உகந்தளித்த தேனான சிவஞானம் திருவாய் வழிந்தோட — ஞானப்பால் காட்சி — 3 பாலறாவாயன் வந்தான் நீராடி நியமம் முடித்துக் கரை ஏறின சிவபாத இருதயர், குழந்தைக் கையில் கிண்ணத்தையும் வாயில் பால் வழிவதையும் கண்டு துணுக்குறுகிறார். யார் தந்த பாலை உண்டாய் என்று அருகிலிருந்த கோலை எடுத்து அதட்டுகிறார். குழந்தை ஆலயத்தைக் காட்டி, “தோடுடைய செவியன்” என்னும் பதிகம் திருவாய் மலர்ந்தருள மூன்று வயதுக் குழந்தை பாடுவதைக் கேட்டுச் சிவபெருமானின் அருளை வியந்து ஆனந்தக் கூத்தாடுகிறார். சிவபாத இருதயர். ஊர்மக்கள் இவ்வதிசயம் கேட்டு ஓடிவந்து “பாலறாவாயன் வந்தான் ஞானசம்பந்தன் வந்தான்” எனப் பாடித் திருவீதி உலாவாக அழைத்து வருகின்றனர். (கரை ஏறிய தந்தை குழந்தையின் வாயிலிருந்து பால் வழி வதைக் கண்டு “யார் தந்த பாலை உண்டாய்” என்று அதட்டல்) விருத்தம் மோகனம் பாலமுது உண்ட பாலகனைக் கண்டு பதறி எழுந்தார் தந்தை நாளும்தான் பேணிவந்தநேமம் நெகிழ்ந்ததெனக் கோபம் மிகவே சீறி யாரே அளித்தார் இந்தப்பாலை நீ சொல்வாய் என்று பாரோர் நடுங்கும் வண்ணம் கோலால் பயமுறுத்த [தோணிபுரத்துச் சிகரம் காட்டி அம்மையப்பரைக் காட்டி, “தோடுடைய செவியன்” பதிகம் பாடல்] பண் : நட்டப்பாடை நாட்டை ரூபகம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே [சிவபாத இருதயரும் ஊராரும் ஆனந்தக் கூத்திடுதல்.] மல்லாரி - ஆதி உமைதந்த பாலன் வந்தான் எமையாளும் பிள்ளை வந்தான் தமிழ்பாடும் குமரன் வந்தான் அமிழ்துண்ட அண்ணல் வந்தான் பாலறாவாயன் வந்தான் ஞானசம்பந்தன் வந்தான் சீர்காழிச் செல்வன் வந்தான் ஜெகத்தீரே வருவீரே
பொருளடக்கம் | முன்னுரை | அங்கம் இரண்டு