ஞானக் குழந்தை
நாட்டிய இலக்கியம்
வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி
முன்னுரை
பொருளடக்கம் |
அங்கம் ஒன்று
திருஞானசம்பந்தப் பெருமானுடைய வரலாற்றைச் சித்தரிப்பது இந் நாட்டிய நாடகம். இந் நாட்டியத்தை 1990 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள், 22 ஆம் நாள் சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் நடத்தப்படும் பண்ணாராய்ச்சி மாநாட்டுத் தொடக்க விழாவில் அரங்கேற்றம் செய்யும் பேறு கிட்டியமைக்கு இறையருளை வணங்குகிறேன். இவ்வரிய வாய்ப்பினை நல்கிய தமிழிசைச் சங்கத்தாருக்கு, குறிப்பாக இசைப்பேரறிஞர் மீ. ப. சோமு அவர்களுக்கும், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்கும், தமிழிசைச் சங்க ஏனைய பெரியோர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்தி மார்க்கத்துக்கு வித்திட்டுத் தமிழிசையால் அதை வளர்த்த சைவப் பெரியோர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருடைய வரலாறுகளையும் நாட்டிய நாடகமாக இயற்றி வழங்க வேண்டும் எனப் பொள்ளாச்சி வள்ளல் அருள் நெறிச் செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்பெருந்தகையாரின் விருப்பப்படி நால்வர் வரலாற்றையும் நாட்டிய நாடகமாக இயற்றியுள்ளேன். பொள்ளாச்சி வள்ளல் அவர்களின் அன்பு திருவுள்ளத்துக்கு இந்நாட்டியத்தைக் காணிக்கை மலராக்குகிறேன். அப்பர், சுந்தரர் ஆகியோரின் வரலாறுகள், ஏற்கெனவே அரங்கேற்றம் செய்யப் பெற்றுப் பல இடங்களில் நடிக்கப்பட்டுள்ளன. ஞானக் குழந்தையின் வரலாறு, முதன் முதலாக, இப்பொழுது தமிழிசைச் சங்கத்தில் அரங்கேற்றம் பெறுவதைப் பேறாகக் கருதுகிறேன்.
இந் நாட்டிய நாடகத்தில் சம்பந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகளில், அவர் பாடிய தேவாரப் பாடல்கள், அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளன. பிற பாடல்களை யான் இயற்றியுள்ளேன். சம்பந்தர் வரலாறு, நாட்டியத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய பண்முறை வழுவாது தேவாரப் பாடல்கள், இந்நாட்டியத்தில் இடம் பெறுவது ஒரு சிறப்பாகும். அவற்றைக் குடந்தைப் பண்ணாராய்ச்சி வித்தகர் திரு. சுந்தரேசனாரின் மாணவர் திரு. கோடிலிங்கம் அவர்கள், தேனினும் இனிய பண்ணிசையில் பாடுகிறார்கள். அவருக்கு எனது நன்றி. இந் நாட்டியப் பாடல்களுக்கு எனது மனைவி திருமதி பார்வதி நாகசாமி இசையமைத்துள்ளார். கால வரையறைக்கும் நாட்டிய அமைப்புக்கும் தொகுப்புக்கும் ஏற்பச் சம்பந்தர் வாழ்க்கையின் சில பகுதிகளே இடம் பெறுகின்றன. பிற, விரிவாகப் படைக்கப்படும் போது இணைத்துக் கொள்ளப்படும்.
புகழ் வாய்ந்த நாட்டியக் கலைஞர் திரு. வேங்கடாசலபதி அவர்கள், இவ் வரலாற்றிற்கு நாட்டிய வடிவு அமைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நாட்டியத்திற்குப் பெயர்பெற்ற கூச்சிப்புடி கிராமத்தில் நாட்டியப் பேராசான்கள் குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக நாட்டியக் கலையில் ஈடுபட்டுள்ள வழி வந்துள்ள இவர், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் கலாட்சேத்ரா திருமதி ருக்மணி அம்மையாரின் மாணவராக, கலைஞராகப் பணிபுரிந்தவர். இப்பொழுது தனியாக ஒரு நாட்டியப் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். 1973ஆம் ஆண்டு இந்திய அரசு, இவரது நாட்டியப் படத்தைத் தபால் தலையில் வெளியிட் டுள்ளது. பரதநாட்டியம், கூச்சுப்புடி, கதகளி ஆகிய நாட்டிய வழிகளில் சிறந்துள்ள இவர் நுணுக்கமான அடைவுகளை அமைப்பதிலும் நிருத்தங்களைப் படைப்பதிலும் ஆடுவதிலும் வல்லவர். பழகுவதற்கு இனிமையானவர். எனது வேண்டுகோளை ஏற்று இவ்வரலாற்றை நாட்டியமாக அமைத்துள்ள திரு. வேங்கடாசலபதி அவர்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி.
இந் நாட்டிய அமைப்பில் துணையாக எமக்கு உதவியவர்கள், செல்வி உமா மகேஸ்வரியும் செல்வி மீனாவுமாவர். முன்னவர், நாட்டியப் புகழ் பெற்ற பாலசரஸ்வதியின் மாணவி. இவ்விரு பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந் நாட்டியத்தில் பங்கு பெறும் பெண்கள், புகழ்வாய்ந்த நாட்டிய ஆசான்களான திருமதி பாலசரஸ்வதி, கலைமாமணி திருமதி கே. ஜே. சரசா, டாக்டர் பத்மா சுப்பிரமணியம், திரு. வேம்பட்டி சின்னசத்யம் ஆகியோ ரிடம் நாட்டியம் கற்றவர்கள். தங்கள் ஆசான்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் திறமையுடன் இதில் பங்கு பெற்றுள் ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இசைக் குழுவினர் கள் பல நாட்டியங்களுக்கு இசைத்துப் புகழ் பெற்றவர்கள். அனை வரும் பாராட்டுக்குகந்தவர்கள்.
தமிழிசை மாநாட்டில் பெருந் திரளாக வந்து இந் நாட்டியத் துக்கு ஊக்கமளிக்கும் அவைப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு படைக்கும் இப் பேரவையின்கண், இந் நாட்டியத்தைப் படைக்கும் பேற்றைப் பெறும் பேறாகக் கருதுகிறேன். இப்பேறு கிட்டியமைக்குச் சிவபர னின் திருப்பாத கமலங்களையும் காஞ்சி சங்கராசார்ய மகாப் பெரியவர் அவர்களின் திருவடிகளையும் உள்ளத்தால் உடலால் வணங்கி இந் நாட்டிய நாடகத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
கௌணியன் இரா. நாகசாமி.
கணபதி காப்பு
கட்டியக்காரன் அரங்கில் தோன்றி ஞானக் குழந்தையின் பெருங்காதை ஆட, திருயானைக் குழந்தையாகிய கணபதியின் அருளை வேண்டுகிறான்.
ஆரபி
சிவஞானங்குழைத்துச்
சிவை முலைப்பாலூட்டத்
தவஞானந் திகழ்
தமிழிசை மலர்ந்திட
வருஞானக் குழந்தை
பெருங்காதை பாட
திருயானைக் குழந்தை
திருவடி காப்புத்தானே
பொருளடக்கம் |
அங்கம் ஒன்று