pATal68 pATal67.html pATal68.html pATal69.html ஏரெழுபது மகாகவி கம்பர் வேறு. 68. மெய்ப்பேறு.
பொருளடக்கம் | 67. கல்லறைச் சிறப்பு. | 69. வாழ்த்து. | அகெடமி

உண்மையான பாக்கிய மென்பது, இத்தொடரின் பொருள். வேறு. 68. மெய்ப்பேறு. அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும் பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறே யல்ல பெருக்காளர் சொரியா நிற்பச் சிலர்முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து புரியா நிற்பப் பெறும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. (இ—ள்.) அரி ஆதனத்தின்மேல் — சிங்காசனத்தின்மேலே, இருந்தே — இருந்தபடியே, அம் பொன் குடைக்கீழ் — அழகிய பொற்குடை நிழல்செய்ய அதன்கீழிருந்து, அரசு இயற்றும் — அரசு புரிகின்ற, பெரியார்பக்கல் — பெருமைபெற்ற அரசரிடத்து, பெறும் — உள்ள, பேறும் — செல்வப்பேறும், பேறே அல்ல — போறாகமாட்டாது; (ஏனெனில்), சிலர் சொரியாநிற்ப — (நெல்லைக் கொணர்ந்து) சிலர் கொட்டவும், சிலர் முகந்துதூற்றா நிற்ப — சிலர் சிலர் வாரியெடுத்துத்தூற்றவும், (சிலர்), அளந்துபுரியாநிற்ப — மொண்டளந்து குவிக்கவும், பெறும் — பெறுகின்ற, பெருக்காளர் பேறுக்கு — வேளாளரின் பேற்றுக்கு, அது — அவ்வரசரின்பேறு, நேர் ஒக்கபோதாது — ஒப்பாதற்குப் போதிய பெருமை யுள்ளதாகாது; (எ - று.) ஏரெழுபது என்ற இந்நூல் வேளாளரின் பெருமையைத் தெரிவிப்பதற்காகவே வந்ததனால், உலகத்தார் சிறந்ததென்று கருதக்கூடிய அரசர்பேற்றினும் வேளாளரின் பேறே மிகச்சிறந்தது; அவ்வரசப்பேறு இவ்வேளாளரின் பேற்றை நேரொவ்வாதென வேளாளரின் சிறப்பைக் கூறிமுடித்தாரென்க. இவ்வாறு கூறியதற்குக் காரணம் — அரசரின் செல்வமும் வேளாளரின் விளைவையே நோக்கியிருக்கு மென்று கீழ்ப்பல பாடல்களிலும் நிரூபித்துக் காட்டியுள்ளமையே. அரசரிடத்துப் பிறர் அடையக் கூடிய பாக்கியத்தைவிட, வேளாளரிடத்துப் பிறர் அடையக் கூடிய பாக்கியம் மிக்கது என்று இப்பாடலுக்குக் கருத்துக் காண்பாரு முளர். இச்செய்யுள் — மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும் மற்றைநான்கும் மாச்சீர்களுமாய் நின்ற அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம். — (68)
பொருளடக்கம் | 67. கல்லறைச் சிறப்பு. | 69. வாழ்த்து. | அகெடமி