pATal65
pATal64.html
pATal65.html
pATal66.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
65. பொலிகோலின் சிறப்பு.
65. பொலிகோலின் சிறப்பு.
சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே.
(இ—ள்.) ஏற்றம் கொள் — பெருமை கொண்ட, வய — வெற்றி பொருந்திய, வேந்தர்க்கு — அரசர்க்கும், எ[ப்] பொருள் உம் — (அவர் வேண்டுகின்ற) எல்லாப்பொருளையும், கொடுத்து—, உலகம் போற்றும் — உலகத்தாரைப் பாதுகாக்கின்ற, சொல் பெருக்காளர் — புகழ்ச் சொல்லுடனே செல்வப் பெருக்கை யுமுடையரான வேளாளரின், பூ[ங்] கையினில் — அழகிய கையிலேயுள்ள, பொலி கோல் — நெற்பொலிக்கு முத்திரையிடுங் கோலானது, சீற்றம் கொள் — சீறிவருந் தன்மையைக் கொண்ட, கருங் கலியை — கொடிய வறுமையை, செறுக்கும் — அழிக்கின்ற, கோல் — கோலாகும்; (அன்றியும்), செக தலத்துக்கு ஊற்றம் கொள் — உலகத்தார்க்கு (உதவியாய்நின்று) உறுதிப்பாட்டை யுண்டாக்குகின்ற, மடை நெறியை — மனுதரும சாஸ்திரத்தின் முறைமையை, உண்டாக்கி — (அழியாமல்) உண்டாகச் செய்து, வளர்க்கும் — தழைத்தோங்கச் செய்கின்ற, கோல் — கோலுமாகும்; (எ - று.)
உணவு இல்லாவிடின் எவருக்குந் தீச்செயலைச் செய்யுமாறு நேருமென்னுங் கருத்தை விளக்க, பொலிகோலை “மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங் கோல்” என்றார். வறுமையின் கொடுமையை விவரிக்கவேண்டி, அதற்கு “சீற்றங் கொள், கரு” என்ற அடைமொழிகள் கொடுக்கப்பட்டன. மனுநெறி இம்மை, மறுமைகளில் மானிடர்க்கு நன்மை விளைத்தலால், “செகதலத்துக்கு ஊற்றங்கொள் மனுநெறி” என்றது. — (65)