pATal64 pATal63.html pATal64.html pATal65.html ஏரெழுபது மகாகவி கம்பர் 64. பொலிதூற்றுங் கூடைச்சிறப்பு.
பொருளடக்கம் | 63. கூடைச் சிறப்பு. | 65. பொலிகோலின் சிறப்பு. | அகெடமி

64. பொலிதூற்றுங் கூடைச்சிறப்பு. வலியாற்று மன்னவர்க்கும் தேவருக்கும் மறையவர்க்கும் ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. (இ—ள்.) ஒலி ஆற்றும் பேர் உலகில் — கடலொலி தங்கிய இந்தப்பெரிய வுலகத்தில், உய்ய — (தாம்) நல்வாழ்வுபெற, வலி — (பகைவரையடக்கும்) வல்லமையை, ஆற்றும் —காட்டவல்ல, மன்னவர்க்கும் — அரசர்க்கும், மறையவர்க்கும் — அந்தணர்கட்கும், தேவருக்கும் — கடவுளர்க்கும், அமுது இடும் — சோற்றை யுதவுகின்ற, கூடை — கூடையானது, கலி மாற்றி — (உலகத்தாரது) பசியைய் போக்கி, நயந்த — (யாவரும்) விரும்பிக் கூறுகின்ற, புகழ் — கீர்த்தியைப் பெற்ற, காராளர் தம்முடைய — வேளாளரின், பொலி தூற்றும் கூடைக்கு — நெற்பொலியை(ப் பதர் பிரியும்படி) தூற்றுகின்ற பொலி கூடைக்கு, போதுவதோ — ஒப்பாகுவதோ? புகலீர் — (உலகத்தவரே! நீங்கள்) கூறுங்கள்; (எ - று.) மன்னவர், அந்தணர், கடவுளர் முதலியோர்க்கு உணவிடும் இல்லறத்தாரது கூடை, வேளாளரின் பொலிதூற்றுங் கூடையை யெதிர்பார்த் திருக்கவேண்டுதலால், இல்லறத்தாரின் அமுது கூடையினும் பொலிதூற்றுங் கூடையே மேம்பட்ட தென்பது, அறிவுடையோர் யாவர்க்குந் தெற்றென விளங்கு மென்க. அரசர்க்கும் சமயம் நேரும்பொழுது இல்லறத்தார். உணவிட வேண்டு மென்பதுபற்றி, “மன்னவர்க்கும் அமுதிடும்” என்றார். ஒலியாற்றும் — புகழொலிதங்கிய எனினுமாம். — (64)
பொருளடக்கம் | 63. கூடைச் சிறப்பு. | 65. பொலிகோலின் சிறப்பு. | அகெடமி