pATal63
pATal62.html
pATal63.html
pATal64.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
63. கூடைச் சிறப்பு.
63. கூடைச் சிறப்பு.
ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டன நீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே.
(இ—ள்.) (அரசர்கள்), ஆடை ஆபரணங்கள் அணிந்து — பட்டாடைகளையும் (பொன்னினாலும், இரத்தினங்களினாலும் அமைந்த) அணிகலங்களையும் தரித்து, முடி சுமந்திடலும் — கிரீடத்தை(ச் சிரமீது) கவித்துக் கொண்டிருத்தலும், ஓடை யானை யின் — நெற்றிப்பட்டத்தினையுடைய யானையின், எருத்தத்து — பிடரியிலே, உயர்ந்து — மேலேறியிருந்து, உலகம் தாங்குதலும் — உலகத் தைப் பாதுகாப்பதும், (ஆகிய இவை), —பேடையோடு — பெண்ணன்னப்பறவையோடு, அனம் — ஆணன்னம், நீங்கா — விட்டுநீங்காது தங்கப்பெற்ற, பெருங் கழனி — பெருமைபெற்ற கழனியையுடைய, பெருக்காளர் — செல்வப் பெருக்கைக் கொண்ட வேளாளரின், கூடை யானது—, கையில் கொண்டு — கையிலே கொள்ளப் பெற்று, களம் புகுந்திடினே — களத்திற் புகுந்தால்தான், (உண்டாகும்); (எ - று.)
வினைமுற்று வருவித்துமுடிக்க. நெல் இல்லாவிடின் அரசரின் ஆட்சியும் இனிது நடவாதென்க. நெல்லை யெடுத்துச் செல்லுமாறு கொண்டுபோகுங் கூடை, இங்குக் கூறப்பட்டது. அனம் = அன்னம்: தொகுத்தல். கூடையானது என்பதில், ஆனது — பகுதிப் பொருள் விகுதி: முதல்வேற்றுமைச் சொல்லுருபு எனினுமாம். “எருத்த முயர்ந்துலகம்” என்றும் பாடம்: அதுகொளின், அத்துச் சாரியை கெட்டதென்க. — (63)