pATal59
pATal58.html
pATal59.html
pATal60.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
59. போர்செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு.
59. போர்செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு.
நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்க்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே.
(இ—ள்.) நாவலோ நாவல் என — நாவலோ நாவலெனச் சொல்லி, நாடு அறிய — நாட்டிலுள்ளார் (யாவரும்) உணரும்படி, முறையிட்ட — உரத்துக்கூப்பிட்ட, ஏவலோர் — பணியாளரோடு கூடிய, போர்க்களத்தில் — நெற்போர்க்களத்திலே, முத்தமிழ் தேர் பாவலோர் — (இயல், இசை, நாடகம் என்னும்) மூன்று தமிழையும் உணர்ந்த கவிவாணரும், இசை வல்லோர் — சங்கீதம் வல்லவர்களும், பற்று உடைய — அன்பைக்கொண்டுள்ள, பதினெண்மர் — பதினெண்குடிமக்களும், காவலோர் — அரசர்களும், எல்லாரும் — ஆகிய யாவரும், கையேற்கும் பொருட்டால் — (அவ்வேளாளர் தருவதைத் தாம்) பெறும்பொருட்டு, எதிர் — (அவ்வேளாளரின்) முன்னே, நிற்பர் — வந்து நிற்பார்கள்; (எ - று.)
நாவலோ நாவலென்பது — தமதுபயிர் விளைந்து முற்றவும் நெற்போரிடும்படிற்றென்ற மகிழ்ச்சிக்குறிதோன்றப் பணியாளர் கூலிகொள்வோரை விளிக்குங் குறிப்பு. உழுநர் இங்ஙனங் கூவுவ ரென்பதை, “காவலுழவர் களத்தகத்துப்போரேறி, நாவலோஒ வென் றழைக்கும் நாளோதை - காவலன்றன், கொல் யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே, நல்யானைகோக் கிள்ளிநாடு” என்ற விடத்துங் காண்க. பணியாளர் போரிட்ட பின்பு, கூலிக்காரரை விளிக்க, தமிழுணர்ந்தோர் முதலியோர் பரிசு இறை என்பனவற்றைக் கையேற்றுப்பெறுமாறு அவ் வேளாளரின் எதிரேவந்து நிற்ப ரென்றவாறு. பதினெண் குடிமக்களாவார் — நாவிதன், குயவன், வண்ணான், ஓச்சன், ஐவகைக் கம்மாளர், மூவகை வாணியர், மாலைகாரர், பாணன், பள்ளி, வலையன், ஊரானைமேய்க்கும் இடையன், கட்டியங்காரன் என்னும் இவர் என்பர். காவலோர் பெறுவது வரியேயாயினும் அவ்விறையைப் பெறும்போது கையேற்க வேண்டியிருத்தலால், அவரையும் கவிவாணர் முதலானாரோடு சேர்த்துக் கூறினார். இசைவல்லோர் என்பதற்கு — இசையை [புகழை]ப் பாடுபவரான வந்தியர், மாகதர் எனக் கொள்வாரு முளர். பற்றுடைய பதினெண்மர் என்றது — இப்பதினெண் குடிமக்களும் உழவுத்தொழிலைச்செய்கின்ற வேளாளரைக் கிட்டிக் களப்பலியேற்று உண்ணுதலையே முக்கியமாகக் கொண்டவ ராதலின், அன்னார் இந்த வேளாளரிடத்து அன்புடைய ராயிருப்ப ரென்பது கருதியாம். — (59)