pATal58 pATal57.html pATal58.html pATal59.html ஏரெழுபது மகாகவி கம்பர் 58. போர்க்களச் சிறப்பு.
பொருளடக்கம் | 57. போர்க்களம் பாடுதற் சிறப்பு. | 59. போர்செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு. | அகெடமி

நெல்லுடன் கூடிய வைக்கோலைப் போராகப்போட்டிருக்குங் களத்தின்சிறப்பு இதனாற் கூறப்படுகின்றது. 58. போர்க்களச் சிறப்பு. பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும் ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால் தேர்வேந்தர் போர்க்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர் ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவருந் தோலாரே. (இ—ள்.) ஏர் வேந்தர் பெருஞ் செல்வம் — ஏரைக்கொண்டு தொழில் புரியுந்தலைவராகிய வேளாளரின் பெருஞ்செல்வமாகிய நெல், அழிவுபடாது இருத்தலினால் — கேடடையாமல் மிகுதியாகத் தோன்றி யிருப்பத னால்தான், பார் வேந்தர் பெருஞ் செல்வம் — பூமியைக்காக்கும் மன்னவரின் மிக்க செல்வமானது, ஒருநாளும் — எப்போதும், பழுதுபடாது — தாழ்வுறாம லுள்ளது; (அன்றியும்), தேர் வேந்தர் போர்க்களத்து — இரதாதிபதிகளான மன்னவரின் போர்க்களத்திலே (செல்பவர்களில்), சிலர் வெல்வர், சிலர் தோற்பர் — சிலர்வெல்லச், சிலர்தோற்பர்: ஏர் வேந்தர் போர்க் களத்துள் — வேளாளரின் போர்க்களத்திலோ, இரப்பவரும் — பிச்சையெடுப்பவரும், தோலார் — தோல்வியை யடையமாட்டார்; போர்க்களம் — பொருதல்தொழில்செய்யும் ரணகளம், நெற் போர்க்களம் என்ற இரண்டுபொருளை யுடையது. இச்செய்யுளின், பின்னிரண்டடிகள் — தேர்வேந்தர் போர்க்களத்தினும் ஏர்வேந்தர் போர்க்களத்துக்குள்ள சிறப்பைத் தெரிவிக்கும். தேர் வேந்தரின் போர்க்களத்திற் செல்வார்க்கோ வெற்றிதோல்விகள் ஒருதலை யல்ல; ஏர் வேந்தரின் போர்க்களத்தில் இரப்போர் சென்றாலும் தோல்வியுறா ரென, ஏர்வேந்தரின் போர்க்களத்துக்குச் சிறப்புக் கூறினார்; வேற்றுமையணி. இரப்பவர் தாம் வேண்டும் தானியப் பொருளை வேளாளரிடத்தினின்றும் பெறுவ ரென்பது, “ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவருந் தோலார்” என்றதன் கருத்து. — (58)
பொருளடக்கம் | 57. போர்க்களம் பாடுதற் சிறப்பு. | 59. போர்செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு. | அகெடமி