pATal57
pATal56.html
pATal57.html
pATal58.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
57. போர்க்களம் பாடுதற் சிறப்பு.
57. போர்க்களம் பாடுதற் சிறப்பு.
வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே.
(இ—ள்.) வளம் பாடும் குடை மன்னர் — வள்ளற்றன்மையைக் குறித்து(ப் புலவர்களாற்) பாடப்பெற்ற நல்லரசாட்சியைப் பூண்ட அரசர்கள், மதம் யானை பட பொருத — மதயானை இறந்து விழும்படி போர்புரிந்த, களம் — போர்க்களத்தை, பாடும் — பாடுவ தனாற்பெறுகின்ற, பெருஞ் செல்வம் — மிக்க செல்வமானது, காசினியில் — இவ்வுலகிலே, சிறந்தன்று — சிறந்ததாகாது; (பின்னை எது சிறந்த செல்வ மாகுமெனின்?-), தளம் — இதழ்களிலே, பாடும் — (வண்டுகள்) ஒலிக்கப்பெற்ற, தார் — (குவளை) மலர் மாலையையணிந்த, அகலம் — மார்பையுடைய, தாடாளர் தம்முடைய — முயற்சியையெப்போதுங் கைக்கொண்டிருப்பவரான வேளாளர்களுடைய, களம் — நெற்போர்க்களத்தை, பாடும் — பாடுவதனாற் பெறுகின்ற, பெருஞ் செல்வம் — மிக்க செல்வமானது, காசினியில் — இந்நிலவுலகத்தில், சிறந்தது — சிறந்ததாகும்; (எ - று.)
யுத்தகளத்தைக் குறித்துப் பாடும் பாடல் அமங்கலத்தைக் குறிப்பதாதலாலும் அதனாற் பெறும் பொருட்செல்வம் நேரே உணவிற்கு உதவாமையாலும், அச்செல்வம், மங்கலங்குறித்துப் பாடுவதும் நேரே உணவிற்கு உதவுவதுமாகிய ஏர்க்களம் பாடிப் பெறுகின்ற பெருஞ்செல்வம் போலாது என்றார்: ஏர்க்களம் பாடிப் பெறுஞ்செல்வம் — விளைந்த நெல்லின் வடிவமான செல்வம். சிறந்தன்று — சிறந்ததன்று என்பதன் விகாரம். பாடப்படுகின்ற போர்க்களச்சிறப்பையும், ஏர்க்களச்சிறப்பையுமே பாடும் பெருஞ்செல்வமென்றா ரென்றலும் ஒன்று. தாளாளர் என்ற சொல்லில், ளகரத்துக்கு டகரம் போலியாகி, “தாடாளர்” என வந்தது. — (57)