pATal56
pATal55.html
pATal56.html
pATal57.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
56. போர்செய்தற் சிறப்பு.
நெல்லுடன் கூடிய வைக்கோலைப் போராக்குவதின் சிறப்பைக் கூறுவது.
56. போர்செய்தற் சிறப்பு.
காராளுங் கரியினமும் பரியினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மெந்நாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளுங் காராளர் இவர்செய்யும் போராலே.
(இ—ள்.) செழு பொன்னி திருநாடர் — வளப்பமுள்ள காவிரி நதி பாயப்பெற்ற அழகிய சோணாட்டினரான, புகழ் விளக்கும் ஏர் ஆளும் காராளர் இவர் — புகழைத் தோன்றச்செய்கின்ற ஏரைக் கையாள்கின்ற வேளாள ரென்ற இவர், செய்யும் — செய்கின்ற, போராலே — நெற்போரினால்,— கார் ஆளும் கரி இனம் உம் — மேகத்தையொத்த யானைகளின் கூட்டத்தையும், பரி இனம் உம் — குதிரைகளின் கூட்டத்தையும், கைவகுத்து — அணிவகுத்து, போர் ஆளும் — போரைச் செய்கின்ற, முடி வேந்தர் — கிரீடாதிபதிகளான அரசர் (கொள்கின்ற), போர்க்கோலம் — போர்க்கோலமானது, எந்நாளும் — எப்போதும், சீர் ஆளும் — மேன்மைபெறும்; (எ-று.)
ஏருக்கு விளங்கும் புகழாவது பொய்யாத செல்வத்தை விளைத்தலாலாகிய புகழென்க: இத்தொடரைக் காராளர்க்கு அடைமொழியாக்கினுமாம். சீராளும் என்பதைப் பொன்னிக்கு அடைமொழியாக்கொண்டு, போர்க்கோலம் புகழ்விளக்கும் என்று முற்றாக்கிஉரைப்பினுமாம். கார் ஆளும், ஆளும் — உவமவுருபு. — (56)