pATal55
pATal54.html
pATal55.html
pATal56.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
55. அரிமிதிகோலின் சிறப்பு.
களத்திற்சேர்த்த நெல்லரிக்கட்டை அவிழ்த்துக் கைகொண்ட அளவாகஎடுத்து ஈரடியடித்துப்போட்டுப் பின்னும் அதில் ஒட்டி யிருக்கும்நெல் வெளிப்படும்படி தடியாலடிப்பதுண்டு: அங்ஙனம் அடிக்குங்கோல் அரிமிதிகோ லெனப்படு மென்பர்.
55. அரிமிதிகோலின் சிறப்பு.
முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டிமிகுங் கருங்கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தடிந்துசெந்நெற் சூடுமிதித் திடுங்கோலே.
(இ—ள்.) முருட்டின் மிகு — மூர்க்கத்தனத்தால் மிக்குள்ள, வெம் பகைவர் — கொடிய பகைவர்களின், முரண் — மாறுபாட்டை, கெடுத்து — போக்கி,— இ உலகம் எல்லாம் தெருட்டி — (யாதோரிடை யூறும் தோன்றாதவாறு) இவ்வுலகத்தாரைப் பாதுகாத்தலாற்) சமாதானமுண்டாகச் செய்து, நெறி செல்கின்ற — தருமவழியே நடக்கின்ற, செங்கோன்மை — செங்கோலை, செலுத்தும் — நடத்துவிக்கின்ற, கோல் — கோலாவதும்,— மிகும் — (துன்பந்தருதலால்) மிக்குத் தோன்றுகின்ற, கருங் கலியை — கொடியதரித்திரத்தை, வெருட்டி — அச்சமுறுத்தி, வேரோடும் அகற்றும் — வேரோடும் போக்குகின்ற, கோல் — கோலாவதும்,—(யாதெனின்),— செந்நெல் சூடு — செந்நெல்லின் சூட்டினை, சுருட்டி — புரட்டி, மிக தடிந்து — மிகவும் அடித்து, மிதித்திடும் — (செந்நெல்லும் வைக்கோலும்பிரியத்) துகைக்கின்ற, கோலே — கோலேயாகும்; (எ - று.)
நெல்லரியைப் புரட்டி அடித்துத் துகைக்குமாறு உதவுகின்ற தடிக்கோல், அரசரைச் செங்கோலைச் செலுத்துமாறுசெய்து, உலகோரின் வறுமையைப் போக்கக் கருவியாயுள்ள தென்பதாம். அகற்றும், சுருட்டி — அகலும், சுருண்டு என்பவற்றின் பிறவினைகள். — (55)