pATal54
pATal53.html
pATal54.html
pATal55.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
54. படுசூட்டின் சிறப்பு.
சூட்டை ஒன்றன் மேலொன்றாகப் படுப்பது படுசூடு எனப் படும்: படுத்தல் - அடுக்குதல்.
54. படுசூட்டின் சிறப்பு.
கடிசூட்டு மலர்வாளிக் காமனடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே.
(இ—ள்.) கடி சூட்டும் மலர் வாளி — நறுமணம் பொருந்திய (தாமரை முதலிய) ஐந்து மலர்களை(த் தனது) பாணமாகக்கொண்ட, காமன் — மன்மதன், அடல் சூடுவதும் — (தான்) வலிமைகொண்டு விளங்குவதும், கொடி சூட்டும் மணி மாடம் கோபுரம் — துவசங்கட்டி யலங்கரிக்கப்படுகின்ற அழகிய மாடங்களும் கோபுரங்களும், பொன் சூடுவதும் — பொன்னை யணிவதும், வய வேந்தர் — வெற்றிபெற்ற அரசர், படி — இவ்வுலகில், முடி சூட்டி — கிரீட் மணிந்து, மூ உலகும் இறைஞ்சு — மூவுலகத்தாரும் வணங்குதலினாலான, புகழ் — புகழை, சூட்டி இருப்பது (உம்) — தாங்கியிருப்பதும், எல்லாம் — (ஆகிய)யாவும், படு சூட்டின் — அடுக்கிய நெல்லரிக் கட்டினால் தோன்றிய, வலியாலே — வலிமையினாலேயே யாகும்; (எ - று.)
அடல் என்பதை ஆகுபெயராக்கி, வெற்றிமாலை யென்பாரு முளர். பொன்சூடுதல் = பொன்னாலாகிய சிகரகலசங்களைப் பெற்றிருத்தல்: அலங்காரமுறுத்தலுமாம். சூட்டியிருப்பது = சூடியிருப்பது; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி, அரசர்க்கு முடியைச்சூடுதல் பிறர்செயலாதலால் பிறவினை கூறியதெனினுமமையும். மூவுலகு மிறைஞ்சுபுகழ் என்பதை படி என்பதற்கு அடைமொழியாக்கி, மூவுலகத்தாரும் வணங்குகின்ற புகழைப் பொருந்திய இப்பூமியை, சூட்டியிருப்பதும் — தமக்கு உரிமையாக்கிக் கொண்டு ஆள்வதும் என்று உரைத்தாருமுளர்: அங்ஙனம் பொருள்கூறின், “புகழ்” என்பது, இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமுடன்றொக்கதொகையாதலால் புகழ்ப்படி என்று இரட்டித்து வரவேண்டு மென்க. இப்பொருளில், மூவுலகும் இறைஞ்சு புகழ் என்று படிக்கு அடைமொழிகொடுத்தது, இம்மை, மறுமை, வீடு என்பவற்றைப் பெறுதற்கு இந்நிலனே இடமாமாதல்பற்றி, மூவுலகத்தவரும் இப்பூமியைப் புகழ்வ ரென்பதனால். — (54)