pATal60
pATal59.html
pATal60.html
pATal61.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
60. போர்ப்படுத்தற் சிறப்பு.
நெல்லரியைக் கைகொண்ட அளவாக எடுத்து ஈரடியடித்துப் போட்டுப் பின் தடியாலும் அடித்துப் போராகக்குவித்த நெல் லோடுகூடிய வைக்கோற்போரை வாங்கிவிட்டுப் பகடுகொண்டு (மிதிப்பித்துக் கீழேயுதிர்ந்த நெல்லைப் பிரித்தெடுத்துப் பிறகு போடும் வைக்கோற்போரின் சிறப்பு இதனாற் கூறப்படுகின்றது. பகடுகொண்டு மிதிப்பித்தல் பிணையடித்த லெனப்படும். போர்ப்படுத்த லென்பதற்கு — பகடுகொண்டு மிதிப்பித்தற்காக நெல்லுடன்கூடிய வைக்கோற்போரை வாங்கிவிடுத லெனப் பொருளுரைத்த லுமுண்டு.
60. போர்ப்படுத்தற் சிறப்பு.
எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவருழு மிணைப்பகடு சில நடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே.
(இ—ள்.) அரசர்,—எடுத்த — படையெடுத்த, போர் களத்து — போர்க்களத்திலே, இணை — தம்மைத்தாமேயொத்த, சில பகடு — சிலகளிற்றுயானைகளை, நடத்தி — செலுத்தி, படுத்த — (பகைவரைக் கொன்று) வீழ்த்திய, போர் — போரானது, பயந்ததனால் — (தமக்குப்) பயனை யளித்ததனால், பார்தாங்கி — இந்நிலவுலகத்தைப் பாதுகாத்து, வாழ்வது எல்லாம்—, எடுத்த — நெற்சூட்டினா லெடுக்கப்பட்ட, போர் — நெற்போரையுடைய, உழவர் — உழவர்கள், உழும் — உழுதற்கு உதவுகின்ற, இணை பகடு சில — இரட்டை யிரட்டையான கடாக்கள் சிலவற்றை, நடத்தி — (மிதிக்குமாறு நெற்சூட்டிலே) செலுத்தி, படுத்த — பின் அடுக்கியிட்ட, போர் — வைக்கோற்போரானது, வையகத்தில் — இப்பூமியில், விளங்குகின்ற — பயனால். தன்மையாலேயாகும்; (எ - று.)
போர்செய்வார்க்கு உணவு இன்றியமையாததாதலின் இவ்வாறு கூறியது. வினைமுற்று வருவிக்க. பிணையலிட்டுத் துவைப்பித்தலால் “போருழவர்” என்றார். இதனால், பயிரிடுவோரின் தொழிலருமை விளங்கும். இணைப்பகடு — தம்மைத் தாமேயொத்த பகடுமாம். அரசரைப்போல வேளாளரும், சிறப்புற்றவராவ ரென்பார் அன்னாரை வேந்தரைக்காட்டவல்ல தொடர்மொழியாகிய “போருழவர்” என்றதனாற் குறித்தார். “உழவளரு” என்றும் பாடம். — (60)