pATal51 pATal50.html pATal51.html pATal52.html ஏரெழுபது மகாகவி கம்பர் 51. அரிகதிர்வழங்குஞ் சிறப்பு.
பொருளடக்கம் | 50. சேவல்காத்தற் சிறப்பு. | 52. அரிசூட்டின் சிறப்பு. | அகெடமி

அரிகதிர்நெற்கதிர்; கைப்பிடிக்கதிர். இதனை வறியவர்க்கு வழங்குஞ் சிறப்புக் கூறுவது, இது. 51. அரிகதிர்வழங்குஞ் சிறப்பு. அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப் பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே விரிவுண்ட கடற்படியு மேகங்கண் மறுத்தாலுந் திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. (இ—ள்.)ஆதுலர்க்கு — வறியவர்க்கு, (கொடுத்த) நெற்கதிர் — அரிந்த நெல்லின் கதிர், அரிவு உண்ட பொன் கதிரை நேர் — அறுத் துச்செய்யப்பட்ட தங்கக் கதிருக்குச் சமானம்”, [என்ற] பரிவு உண்ட பெரு வார்த்தை — அன்புகனிந்த பெருமைமொழி, புதிது அன்று — புதிதாக வழங்கப்பட்டதொன்றன்று; பழைமைத்தே —பழமொழியானதே; [இங்ஙனிருப்பதால்], விரிவு உண்ட கடல் படியும் மேகங்கள் மறுத்தாலும் — விரிந்த கடலிற் படிந்து [நீர் முகந்து மேலெழும்] மேகங்கள் மழையைப்பொழிய [ஒருகால்] மறுத்தாலும், காராளர் செயலினுக்கு திரிவு உண்டோ — வேளாளர்களின் உபகாரச்செயலினுக்கு மாறுபாடும் உண்டோ; செப்பீரே — (நீங்களே) சொல்லுங்கள்; (எ - று.) “நெல்லுக்குப் பொன் [நேர்]” என்பது தொன்றுதொட்டுவந்த தோர் மொழியாகும் என்றபடி. மேகம் கண் மறுத்தாலும் எனப் பிரிப்பினுமாம். கண் மறுத்தல் நிலைகெடுதல். கைம்மாறு கருதாது மழைபொழியும் மேகம் மறுத்தாலும் காராளர் செயலில் திரியமாட்டார் என அவர் சிறப்புக் கிளந்தபடி. மறுத்தாலும் என்றவிடத்து, உம்மை — எதிர்மறை. வறியார்க்கொன்றீவதே ஈகையாதலின், பொற்கதிர்க்கொப்பான நெற்கதிரை ஆதுலர்க்கு ஈவதில் அன்னார் திரிவுபடார் எனப் பொருத்தம் காண்க. அரிவு — அரிதல்; தொழிற்பெயர். அரிவுண்ட பொற்கதிர் — தங்க ரேக்கு போன்றது. — (51)
பொருளடக்கம் | 50. சேவல்காத்தற் சிறப்பு. | 52. அரிசூட்டின் சிறப்பு. | அகெடமி