pATal52
pATal51.html
pATal52.html
pATal53.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
52. அரிசூட்டின் சிறப்பு.
அறுப்பறுத்த நெல்லரிக்கட்டு அரிசூடு எனப்படும். அரிசூடு — வினைத்தொகை. அரிசூடு = அரிக்கட்டு.
52. அரிசூட்டின் சிறப்பு.
கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் றடிகின்ற
சூடுவரம் போதேற் சுருதிவரம் பேறாதே.
(இ—ள்.) கோடு — சங்குகள், வரம்பிடை — கரையோரங்களிலே, உலவும் — உலாவுகின்ற, குலம் பொன்னி — சிறந்த காவேரிந்தி பாயப்பெற்ற, திருநாடர் —அழகியசோணாட்டில் வாழுமவர்களாய், நீடு பெரும் புகழ் வளரும் — (தமது நற்குணச்சிறப்பால்) மிக்க பெரும்புகழ் (நாடோறும்) ஓங்கப்பெற்ற, நில மடந்தை திருமக்கள் — பூமிதேவியாரின் சிறந்த மக்களான வேளாளர், பீடு வரம்பு இடை வயலில் — பெருமைபெற்ற வரப்பை இடையிடையே கொண்ட கழனிகளில், பிறை வாளில் தடிகின்ற — பிறை வடிவா யுள்ள வாளினா லறுத்துச் சேர்க்கப்பட்ட, சூடு அரிச்சூடானது, வரம்பு ஏறாது ஏல் — வரம்பினின்று (களத்திற்குப்) போய்ச்சேராதாயின், சுருதி வரம்பு — வேதம் விதிக்கின்ற ஒழுக்கத்தின் எல்லையும், ஏறாது — இவ்வுலகத்திற் செல்லாது; (எ - று.)
அரிசூடு வரம்பினின்று ஏறாவிடின் உண்ண வுணவின்மையால் மானுடர் வேதவிதிக்குக் கட்டுப்பட்டு நடவாமல் தீயவழியினாலும் உணவைத் தேடமுயல்வ ரென்றவாறு. வரம்பேறாதேல் என்பதற்கு — நெற்களத்தெல்லையிற் செல்லாதாயின் எனினுமாம். நீடு பெரும் — ஒருபொருட்பன்மொழி; மீமிசைச்சொல் எனப்படும். திருநாடராகிய திருமக்க ளென்க. சூடு என்பது — அறுத்த நெற்கதிரின் கற்றை: சூடப்படுவதுபற்றி, இதற்கு இப்பெயர் வந்தது; செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்ட பெயர்: சூடுதல் — மிகச்சிறந்ததாகக் கொள்ளப்படுதல். பிறைவாள் - உவமைத் தொகை. தடிகின்ற — தடியப்படுகின்ற: செயப்பாட்டுவினைப் பொருளில்வந்த செய்வினை. — (52)