pATal50
pATal49.html
pATal50.html
pATal51.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
50. சேவல்காத்தற் சிறப்பு.
விளைந்தபயிர்க்குக் கள்வர், விலங்கு, புள், முதலியவற்றால் அழிவு நேராமற் பாதுகாத்தல், சேவல்காத்த லெனப்படும்.
50. சேவல்காத்தற் சிறப்பு.
அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணுங் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகுந்திடினே.
(இ—ள்.) மறம் காணும் கரு கலியின் வலி தொலைத்த — தீவினையை வளர்க்கின்ற மிக்க வறுமையின் வலியை யொடுக்கிய [வறுமையைப்போக்கின], காராளர் — வேளாளர், புறம் காணும் சோறு இட்டு — உடலை வளர்க்கின்ற சோற்றினை (த் தம் ஏவலாளர்க்கு)ப்பரிமாறி, புறங்காண — (விளைவைக்கவர வரும் கள்வர், விலங்கு, புள் முதலியவைகளை) ஓட்டும்படி (சேவல்காக்க), புகுந் திடின் — தொடங்கினாரானால்,—(அப்போது), அறம் காணும் — தருமமும் விளக்கமடையும்; புகழ் காணும் — புகழும் விளங்கும்; அருமறையின் ஆகமத்தின் திறம் — உணர்தற்கரியவேதம், ஆகமம் என்ற இவற்றின் பொருட் கூறுபாடும், காணும்—; செயம் காணும் — வெற்றியு முண்டாம்; திருவளர்க்கும் நிதி காணும் — அழகை வளர்க்கின்ற செல்வமும் உண்டாகும்; (எ - று.)
பயிரைச் சேவல்காத்தலால், அறம் முதலியன தோன்று மென்க. மறையாகமத்தின் திறமாவன — ஜீவ-பரமாத்துமாக்களின் தன்மை முதலியன. திரு — பலவகையான செல்வம் என்று கூறு வாருமுளர். கருங்கலி — அறிவை யிழக்கச்செய்யும் வறுமை யெனினுமாம். மறம் — அறத்திற்கு மறுதலையானது. புரமென்ற வட சொல், புறமெனத் திரிந்து வந்தது. புறங்காணுதல் — தமது காவல்வன்மையால் முதுகுகாட்டி யோடச்செய்தல். “ஏரினு நன்றாலெருவிடுதல்கட்டபின், நீரினும் நன்றதன் காப்பு” என்றார், திருவள்ளுவ நாயனாரும். காராளர்க்கு ஏவலாளர் உண்டென்பதைக் கீழ் 59-ஆஞ் செய்யுளினாலுணரலாம். — (50)