pATal43
pATal42.html
pATal43.html
pATal44.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
43. பைங்கூழ்ச்சிறப்பு.
43. பைங்கூழ்ச்சிறப்பு.
கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத வுயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெல்லாம் நலந்திகழ நட்டாரே.
(இ—ள்.) கெட்டாரை — (தரித்திரத்தினால் நுகரும் பொருளின்றி) அழிபவரை, தாங்குதலால்—, கேடு படா — அழிவுபடாத, தொழில் — உழவுத் தொழிலைக்கொண்ட, குலத்தோர் — குலத்திற் பிறந்தவரும், ஒட்டார் என்று — பகைவரென்று, ஒருவரையும் — எவரையும், வரையாத — நீக்காத, உயர் நலத்தோர் — சிறந்த குணத்தை யுடையவருமான வேளாளர், பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் — உண்மையான நூல்களையே பயிலும் ஞானிகட்கும், பசி அகல — பசி நீங்கும்படி, பைங்கூழை நட்டாரே — பசுமையான பயிரை நட்டவரும், வையம் எல்லாம் நலம் திகழ நட்டாரே — பூமியிலுள்ளார் யாவர்க்கும் நன்மையை விளங்கும்படி நிலைநிறுத் தியவருமாவர்; (எ - று.)
வேளாளர் நடுதற்றொழில்செய்வது, உண்மை நூலை யோதும் பெரியோர்க்கும் மற்றுமுள்ள உலகத்தவர்க்கும் பசி தணியக் காரணமா மென்றவாறு. முன்னிரண்டடிகள் வேளாளர்க்கு உள்ள மேன்மையைத் தெரிவிக்கும். நட்டாரென்ற சொல் இரண்டனுள், முதலது “நடு” என்ற பகுதியினடியாகப் பிறந்த இறந்தகாலவினை யாலணையும்பெய ரென்றும், இரண்டாவது — “நள்” என்ற பகுதியி னடியாப்பிறந்த அவ்வகையான வினையாலணையும்பெய ரென்றுங் கொண்டு உரைத்தலு மொன்று. கெட்டாரைத் தாங்குவதுபற்றிப் பயிர்த்தொழிற்கு “கேடுபடாத்தொழில்” என ஒருபெயர் கொடுத் தார்: “பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்றதும் நோக்குக. “ஒருவகையும்” என்றும் பாடமுண்டு. — (43)