pATal44
pATal43.html
pATal44.html
pATal45.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு.
44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு.
கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே.
(இ—ள்.) கார் தாங்கும் — வானினால் தாங்கப்பெற்ற [வானம் மழை பொழிவதால் விடாது பெருகிவருகின்ற], காவேரிநதி — காவேரிநதியை, தாங்கும் — பயனுள்ளதாகச் செய்யவல்ல, ஏர் தாங்குவார் — உழவுத்தொழிலை மேற்கொண்டவரான, காராளர் — வேளாளர், பார் தாங்கும் மன் உயிரின் — உலகினால் தாங்கப்பெற்ற நிலைபெற்ற பிராணிகளின், பசி — பசியை, தாங்கும் — போக்கிப் பாதுகாக்கவல்ல, பைங் கூழின் — பசுமையான பயிருக்கு வேண்டிய, நீர் — நீரை, தாங்குவார் — (உரியபடி) பாய்ச்சுபவராய், நிலம் தாங்கு கின்றார் அலரோ — இந்நிலவுலகத்தையே தாங்குகின்றவர்களல்லரோ? அன்றி — அவரையல்லாமல், தாங்கவல்லார் யாவரே — (இந்நிலவுலகத்தவரைத்) தாங்கவல்லவர் யாவர்? (எ - று.)
நீர் தாங்குதல் — நீரைக்கட்டிவைத்துச் செய்க்கு வேண்டியபோது பாயச்செய்தல். கார்தாங்கும் காவேரி என்பதற்கு — (மழை வறந்து போனாலும்) அம் மழைபோல நீரையுதவித் தாங்குகின்ற காவிரி என்று உரைப்பதும் உண்டு. தாங்குதலென்ற சொல் ஒரே பொருளில் பன்முறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணி யாம். — (44)