pATal42 pATal41.html pATal42.html pATal43.html ஏரெழுபது மகாகவி கம்பர் 42. புழுதிச்சிறப்பு.
பொருளடக்கம் | 41. கரம்புதிருத்தற் சிறப்பு. | 43. பைங்கூழ்ச்சிறப்பு. | அகெடமி

உழுகின்ற செய்யிற் சேடைவைத்து உழுது வித்தி விளைத்த லும், நீர்பாய்ச்சாத செய்யை யுழுது அப்புழுதிநிலத்தில்தானே வித்திவிளைத்தலும் எனப் பயிர்விளைக்கும் வகை இருவகைப்படும். புழுதியில் வித்தப் பயிர்செய்வதைப் புழுதிக்காற்பயி ரென்பர். அப்புழுதிக்காலைப்பற்றிக் கூறுவது, இச்செய்யுள். 42. புழுதிச்சிறப்பு. எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும் பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும் உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற் புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. (இ—ள்.) (நெல் விளையுமாறு வித்தப்படுகின்ற புழுதிக்காலி னால்), எழுத ஒண் மறை விளங்கும் — எழுதாக்கிளவியான வட மொழிவேதம் விளக்கத்தையடையும்; இயல் இசை நாடகம் விளங்கும் — இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் எனப்படுகின்ற முத்தமிழும் விளக்கத்தையடையும்; பழுது இலா அறம் விளங்கும் — குற்றமற்ற நீதிநூல்களும் விளக்கத்தையடையும்; பார் வேந்தர் முடி விளங்கும் — பூமியையாளும் மன்னவருடைய கிரீடமும் விளக்கமடையும்; பல சால் உழுது போக்கி — பலசால்கள் கலப்பை கொண்டு உழுதலைச்செய்து ஈரமில்லாமற்செய்து, உழவர்—, உழக்கிய — மடித்து மடித்து உழுத, வெம் புழுதி காலால் — விரும்பத்தக்க புழுதிக்காலில், விளையாத பொருள்—, உளவோ — உள்ளனவோ? (உள்ளதாயின்), புகலீர் — (நீங்களே) சொல்லுங்கள்; (எ - று.) பயிர் செவ்வனே விளையாவிடின் அந்தணர் முதலியோர்க்கு உணவுப் பொருளின்மைபற்றிப் பசிமிகு மாதலால், அவ்வந்தணரின் மறைப்பொருள் முதலியன அப்போது நடைபெறாவாகும்; புழுதியிலிடப்படும் அந்தப்பயிர் விளையுமாயிலோ மறைப்பொருளை யாய்தல் முதலியன நடைபெறும்: ஆதலால், புழுதியால் மறை முதலியன விளங்குமென்றார். பார்வேந்தர் முடிவிளங்கும் — முடி சூடி அரசர் பூமியையாட்சிபுரிவது விளக்கமுற்றுத்தோன்று மென்றபடி. புழுதிப்பயிர் விளைச்சல், கல்வி முதலியவற்றிற்குப் பரம்பரைக் காரணமாமென்றவாறு. வெம்புழுதி — காய்ந்த புழுதி யெனினும், பலசால் போக்கியுழுது — பலசாலடித்து உழுது எனினுமாம். சால் — நிலத்தை ஒருமுறையுழுகை. எவ்வளவுக்கு எவ்வளவு ஈரம் வற்றக் காய்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நிலம் பெரும் பயனை விளைக்கு மென்று கருத்துப்பட “தொடிப்புழுதிகஃசா வுணக்கின் பிடித்தெருவும், வேண்டாது சாலப்படும்” என்று திருவள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, நிலம் உழப்பெற்று நீர்வற்றக் காய்வதனை இச்செய்யு ளுணர்த்து மெனக் கொள்வாரு முளர். இலாஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம். ஒன்றாத: மரூஉவும் விகாரமும் பெற்று வந்தது. உளவோ, ஓகாரம் — வினா. புகலீரே, ஏகாரம் — ஈற்றசை. — (42)
பொருளடக்கம் | 41. கரம்புதிருத்தற் சிறப்பு. | 43. பைங்கூழ்ச்சிறப்பு. | அகெடமி