pATal41 pATal40.html pATal41.html pATal42.html ஏரெழுபது மகாகவி கம்பர் 41. கரம்புதிருத்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 40. துலைநீரின் சிறப்பு. | 42. புழுதிச்சிறப்பு. | அகெடமி

கரம்பு சாகுபடி செய்யாத நிலம்; இது அனாதிக்கரம்பு, செய்காற்கரம்பு என இருவகைப்படும். 41. கரம்புதிருத்தற் சிறப்பு. மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக் காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல் மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும் காடுவெட்டி யுழுதுவருங் கலிகளைய மாட்டாரே. (இ—ள்.) மேடு வெட்டி — சிறுதிடர்களை அழித்து, காடு வெட்டி — காடுகளை அழித்து, வரம்பு நிலைநிறுத்தி — வரப்பு ஓரத்தை நிலையாக (த்திருத்தமுற] அமைத்து,மிக வளப்படுத்தி — மிகவும் வளமுறச்செய்து, உலக நெறி — உலகியலொழுக்க முறைமையை, காராளர் — வேளாளர், காத்திலர் ஏல் — காவாமலிருந்தால், குறும்பு அறுக்கும் வேல் வேந்தர் — பகைவர்களை அழிக்கும் வேலை யேந்திய மன்னர்கள், எற்றாலும் — எவ்வகையினும், மேடு வெட்டி காடு வெட்டி — சிறு திடர்களையழித்தும் காடுகளை யழித்தும், உழுது — (கரம்புதிருத்தி) உழுது பயிர்செய்து, அரு கலி களைய மாட்டார் — தாங்கற்கரிய வறுமையை யொழிக்க மாட்டாதவரே யாவர்; (எ - று.) குறும்பறுக்கும் வேந்தராயினும் கரம்பு திருத்திக் கலி களையமாட்டாரே எனக் கூறி, அவரினும் காராளர் சிறப்புத் தெரிவித்தபடி: குறும்பு — சிற்றரண்; குறுநிலமன்னர் எனவுமாம். வேல்வேந்தர் என்றது இகழ்ச்சி: அவரதுவேல் உழுதற்குப் பயனின்மை யாகலின். எனவே, உலகநெறிகாப்பார் வேளாளரே யன்றி வேந்தரல்லர் என அறிவுறுத்தியவாறு. — (41)
பொருளடக்கம் | 40. துலைநீரின் சிறப்பு. | 42. புழுதிச்சிறப்பு. | அகெடமி