pATal40
pATal39.html
pATal40.html
pATal41.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
40. துலைநீரின் சிறப்பு.
ஏற்றத்தாற் பாயும் நீரின்சிறப்பு.
40. துலைநீரின் சிறப்பு.
கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயத் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே.
(இ—ள்.) கலை இட்ட மறை வேந்தர் — அறுபத்துநான்கு கலைகளையும் தன்னுட்கொண்டுள்ள வேதத்தில் வல்ல தலைவராகிய பிராமணர், கனல் வேள்வி வளர்ப்பதுவும் — அக்கினியைக்கொண்டு யாகஞ்செய்வதும், மலை இட்டபுயத்து — மலையையொத்ததோள்களை யுடைய, அரசர், மணி மகுடம் சூட்டுவதும் — இரத்தினமிழைத்த கிரீடத்தைப் புனைவதும், தலையிட்ட வணிகர் — மேன்மைபெற்ற வைசியர், உய — (தாம்) உய்யும்படி, தனம் ஈட்டப்படுவதுவும் — செல்வத்தைச் சம்பாதித்தலும், நிலை இட்ட — நிலைமைபெற்ற [சொன்னசொல் மாறாத], வேளாளர்-, துலை இட்ட — ஏற்றத்தாற் பாய்ச்சிய, நீராலே — நீரினாலேயேயாகும்; (எ - று.)
பயிர்த்தொழிலைச் செய்யும் வேளாளர், அந்தணர்முதலிய மூன்று வருணத்தார்க்கும் உதவுமாறு மழைபெய்யாக் காலங்களிலும் துலைநீரைக்கொண்டு பயிர் விளைப்ப ரென்றவாறு. மலையிட்ட, இட்ட — உவமவுருபு. கலையிட்ட — பிரமாண நூலென்று (ஆஸ்திகரால்) அங்கீகரிக்கப்பட்ட, மறை எனினுமாம். — (40)